அறிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜனவரி, 2018

36. யூட்யூப் விடியோ டவுன்லோடெர்

Youtube Downloader என்று ஒரு புரொக்ராம் யூட்யூபிலிருந்து விடியோக்களை டவுன்லோடு செய்ய மிகவும் உபயோகமாக இருந்தது. நான் அதை உபயோகித்து பல பாடல்களை டவுன்லோடு செய்து சேகரித்து வைத்திருக்கிறேன்.

இரண்டு நாட்களாக இந்த புரொக்ராம் சரியாக வேலை செய்வதில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 15 நவம்பர், 2017

23. புத்தகம் படிக்கும்போது கண் சொருகுதல்


 இதே போல புத்தகம் படிக்க முடியாமல் கண்கள் கனமாவதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தால் அந்தக் குற்ற உணர்வும் நீங்கும்.

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் புத்தகம் படிக்கும் போது கண்கள் கனமாவது அதாவது கண்கள் சொருகுவது பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார். கேளுங்கள், கொடுக்கப்படும் என்பதுதானே நம் கொள்கை. அதன்படி இதோ விளக்கங்கள்.

நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களினால் ஆக்கப்பட்டது என்று அறிந்திருப்பீர்கள். இந்த உயிரணுக்களின் ஆயுள்காலம் மூன்று வாரங்கள்தான். ஆனால் எல்லா உயிரணுக்களும் இவ்வாறு மூன்று வாரத்தில் அழிந்து போவதில்லை. சில மாதக்கணக்கிலும் அழியாமல் இருக்கும். குறிப்பாக மூளையின் உயிரணுக்கள் ஒருவனின் ஆயுட்காலம் முழுவதும் அழிவதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

எது எப்படிப் போனாலும் நம் உடலில் உள்ள உயிரணுக்களினால்தான் நாம் வாழ்கிறோம். அவைகள் செயல்படுவதினால்தான் நாம் உயிருடன் இருக்கிறோம். ஆனாலும் இந்த உயிரணுக்கள் நாள்பட நாள்பட தங்கள் செயல் திறனை இழக்கின்றன. நாம் இளமையில் ஐந்து நிமிடத்தில் செய்த வேலையை வயதானபின் செய்ய ஒரு மணி நேரம் தேவைப் படுகிறது.

முக்கியமாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மாற்றம் சீக்கிரமே ஏற்பட்டு விடுகிறது. குளிர் பிரதேச நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த மாற்றம் மெதுவாகவே நிகழ்கிறது.

வயதானவர்கள் இந்த மாறுதலை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. 80 வயதான ஒருவர் நான் 80 வயது வாலிபன் என்று மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறார். இருக்கலாம். மனதளவில் அவர் வாலிபனாகவே இருந்து கொள்ளட்டும். ஆனால் அவரது உடல் அவர் மனதுடன் ஒத்துழைக்காது.

எந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தாலும் சில மணித்துளிகளிலேயே உடல் ஆயாசமடைந்து விடும். அப்படியே புத்தகம் படிப்பதுவும். புத்தகம் படிப்பது என்பது மூளை செய்யும் ஒரு வேலையே. வயதானபின் மூளையும் சீக்கிரத்தில் சோர்வடைந்து விடும். அப்படி மூளை சோர்வடைந்தால் முதலில் கொட்டாவி வரும். அடுத்ததாக கண்கள் தானாக மூடிக்கொள்ளும். தூக்கம் தன்னையறியாமல் வரும்.

இது எல்லாம் வயதாவதின் விளைவுகள் என்று அறிந்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதை விட்டு விட்டு பழைய நினைப்பில் முடியாத வேலைகளுக்குத் தலைப்படாதீர்கள்.

                                              Image result for வயதானவர்கள்

வியாழன், 9 நவம்பர், 2017

22. மூட நம்பிக்கைகள் - சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது

                                          Image result for sleeping beauty
சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்துத்தான் தூங்கவேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். இவ்வாறு பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். அநேகமாக நீங்களும் படித்திருக்கலாம். இதைப்போன்ற அபத்தமான ஒரு மூட நம்பிக்கை இவ்வுலகில் இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்று பார்ப்போம்.

''உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு'' என்ற பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் கருத்தை ஆழமாக யாரும் சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.

உணவு உண்டவுடன் அது இரைப்பைக்கு செல்கிறது. அங்கு அந்த உணவு ஜீரணமாவதற்குத் தேவையான பல அமிலங்களும் என்சைம்களும் சுரந்து அந்த உணவை ஜீரணிக்க உதவுகின்றன. இதற்கு இரைப்பைக்கு அதிக ரத்தம் தேவைப் படுகின்றது. உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்ற ரத்தத்தைக் குறைத்து இரைப்பைக்கு அதிக ரத்தம் வருகிறது. இந்த நிகழ்ச்சி இயற்கையாக நடக்கும் ஒன்றாகும்.

இப்படி நடக்கும்போது மூளைக்குச் செல்லும் இரத்தமும் குறைகிறது. அதனால் மூளை தன் வேலைப்பாட்டை குறைத்துக்கொள்கிறது. இதே போல் மற்ற அவயவங்களும் தங்கள் தங்கள் வேலையைக் குறைத்துக்கொள்கிறது. இந்த செயல்களால் மொத்த உடலும் ஒரு வகை சோர்வுக்கு உள்ளாகிறது. இதைத்தான் உண்ட மயக்கம் என்கிறோம்.

இந்த மயக்கம் தெளிய ஒரு மணி நேரம் ஆகலாம். இந்த நேரத்தில் தூங்கினால் தூக்கம் சுகமாக வரும். இரவு சாப்பிட்டபின் தூங்கினால் சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இது இயற்கையுடன் ஒத்து வாழும் வழி.

இதை விடுத்து சாப்பிட்ட உணவு ஜீரணமானவுடன்தான் தூங்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால் அப்போது உடலின் எல்லா அவயவங்களும் தயார் நிலையில் இருக்கும். மூளைக்கு ரத்தம் நல்ல நிலையில் சென்று கொண்டிருப்பதால் மூளை விழிப்புடன் இருக்கும். அப்போது தூங்கச்சென்றால் தூக்கம் வருவதற்கு நேரமாகும். உடல் அசதி இருந்தால்தான் தூக்கம் வரும். இல்லாவிட்டால் தூக்கம் வராது.

ஏன் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும்? தூக்கம் வரும்போது தூங்குவதை விட்டு விட்டு தூக்கம் வராத வேளையில் எதற்கு தூங்கச் செல்ல வேண்டும்? மக்களே, இது ஒரு விஞ்ஞானத் தத்துவம். சரியாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள். நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இவ்வாறுதான் தூங்குகிறேன். இப்போது எனக்கு 83 வயது ஆகிறது. நன்றாகத்தான் இருக்கிறேன்.

ஆகாவே இந்த 'சாப்பிட்வுடன் தூங்கக்கூடாது' என்கிற மூட நம்பிக்கையிலிருந்து விடுபடுங்கள்.

ஞாயிறு, 21 மே, 2017

6. பொது சேவை-1

                                                   Image result for உலகம் உள்ளங்கையில்                                             

ஆகவே எப்படியாவது இந்த சமூகத்தை சீர்திருத்தி விடுவது என்று தீர்மானம் செய்தாகிவிட்டது. அதை எப்படி செய்யலாம் என்று யோசித்தபோது இந்த வலைத்தளத்தை அதற்கு பயன்படுத்தலாமே என்ற எண்ணம் உதித்தது. உடனே அதை நடைமுறைப்படுத்துகிறேன்.

ஆனால் உலகத்தில் நடைமுறை எப்படியென்றால் யாரும் அடுத்தவர் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில்லை.நேற்றுப்பிறந்த குழந்தை முதல் நாளை சாகப்போகும் கிழவன் வரை யாரும் பிறர் சொல்வதை, அது நன்மையே பயக்குமென்றாலும் கேட்பதில்லை. தான் நினைத்ததுதான் சரி, எனக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறார்கள். இது மனிதனின் இயற்கை குணம். இதை யாராலும் மாற்ற முடியாது.

பிறகு ஏன் எல்லோரும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முற்படுகிறார்கள் என்றால் தனக்கு மற்றவர்களை விட அறிவு அதிகம் என்று காட்டிக் கொள்ளத்தான். அவன் சொல்வதை அடுத்தவன் கேட்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ஏன் அறிவுரை கூற முற்படுகிறான் என்றால் பின்னால் மற்றவன் ஒரு கஷ்டம் என்று சொல்லும்போது ‘’ நான் அன்றே சொன்னேனே கேட்டியா?’’ என்று குத்திக் காட்டுவதற்காகத்தான்.

 இவ்வளவு பேசும் நீ எதற்காக இப்போது அறிவுரை கூற முற்பட்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கோ வேறு வேலை இல்லை, மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால  சந்ததியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான்.

ஊதற சங்கை ஊதி வைத்தால் விடியும்போது விடியட்டும் எனகிற பரந்த நோக்கில் இந்த தளத்தைப்பயன்படுத்துகிறேன்.

தொடரும்.....

திங்கள், 18 ஜூலை, 2016

கல்யாணம் செய்து கொள்வது அவசியமா?


                               Image result for south indian marriage photography

ஒரு மனிதன் எதற்காக கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்? பழங்காலத்தில் மனுதர்மத்தில் சொன்ன கிரகஸ்தாசிரமத்தைப் பேணவா? கிரகஸ்தன் என்பவன் சந்நியாசிகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டியது தர்மம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இன்றுள்ள சந்நியாசிகள் ஆயிரக்கணக்கான கிரகஸ்தர்களுக்கு அன்றாடம்  அன்னதானம் செய்யுமளவிற்கு வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இதற்காக கிரகாஸ்திரமம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.

அடுத்ததாக சந்தான விருத்திக்காக கிரகாஸ்திரமம் தேவை என்று சொல்லப்படுகிறது. சந்தானம் எதற்கு. ஏதோ கடைசி காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்றுவார்கள் என்பதற்காக சொல்லப்பட்டது. இன்றுள்ள சந்தானங்கள் முக்கால்வாசிப்பேர் அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா என்று தங்கள் பிழைப்பைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். அவர்கள் எங்கே வயதான காலத்தில் பெற்றோர்களைப் பராமரிக்கப் போகிறார்கள்? இதுவும் ஒரு காரணமில்லை.

வாழ்கிற காலத்தில் ஒரு துணை வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். அது ஒரு அவசியம்தான். ஆனால் அதற்காக கல்யாணம் என்ற கால் விலங்கு அவசியம்தானா? காலம் மாறிக்கொண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணமில்லாமலேயே ஒன்றாக வாழலாம் என்ற கலாச்சாரம் வளர்ந்து வருகின்றது.

இந்தக் கலாச்சாரம்தான் சிறந்தது. மனதிற்குப் பிடித்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லையா, எந்தச் சிக்கலும் இல்லாமல் பிரிந்து விடலாம். ஆகவே இனி வரும்காலத்தில் கல்யாணம் என்பது ஒரு அவசியமில்லாத சடங்காக மாறப்போகிறது. இந்த மாற்றத்திற்கு அனைவரும் தயாராகிக்கொள்ளுங்கள்.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஆண்களுக்கான சில அறிவுரைகள்.

                                             

பொதுவாக ஆண்கள் யாரும் அடுத்தவர்கள் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். இருந்தாலும் ஏன் இந்தப் பதிவை எழுதுகிறேன் என்றால் பெண்களுக்கான அறிவுரைகள் சொன்னீர்களே, எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என்று சில ஆண்கள் கேட்டதால்தான். இந்தப் பதிவைப் பெண்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

1. ஆண்கள் என்றால் ஏதாவது ஒரு உத்தியோகம் செய்து வருமானம் ஈட்டவேண்டும். அது மாதச் சம்பளமாகவோ அல்லது வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ இருக்கலாம்.

2. வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் "ஒன் ஸ்டெப் பேக்". உங்களுக்கான அறிவுரை கடைசியில் இருக்கிறது.

3. சம்பளக்காரர்கள் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே முழுவதையும் மனைவி கையில் கொடுத்து விட்டு அவ்வப்போது தேவைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.

4. வீட்டில் அனைத்து முடிவுகளையும் ஆண்கள்தான் எடுக்கவேண்டும். ஆனால் முதலில் இல்லாளிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும்.

5. எந்தக் காரியமும் வெற்றியடைந்தால் புகழை மனைவிக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும். தோல்வியடைந்தால் பழியை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

6. ஆண்களுக்குப் பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்ய பெண்களே பொருத்தமானவர்கள். ஆகவே உங்கள் உடைகளை அவர்கள் வாங்குவார்கள். அதைக் குறை சொல்லாமல் போட்டுக்கொள்வது உங்கள் கடமை.

7. வெளியில் செல்லும்போது நீங்கள்தான் குடும்பத்தலைவர் என்று காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் எந்த முடிவுகளையும் நீங்களாக எடுக்கக் கூடாது.

8. நண்பர்கள் வந்தால் காப்பி கொண்டு வரச் சொல்லக்கூடாது. அப்படி அவருக்குக் காப்பி கொடுக்கவேண்டுமானால் வெளியில் கூட்டிக்கொண்டு போய் நல்ல காப்பிக்கடையில் காப்பி வாங்கிக் கொடுக்கவும். அப்படியே நீங்களும் ஒரு நல்ல காப்பி குடித்துக் கொள்ளலாம்  இதற்காக அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

9. மனைவி சமைக்கும் சாப்பாட்டில் எந்தக் குறையும் சொல்லக்கூடாது. உப்பு இல்லாவிட்டால் அப்படியே சாப்பிட வேண்டுமே ஒழிய உப்பு இல்லை என்று சொல்லக் கூடாது..

10. கடைசியாக வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டான ஆலோசனை. உங்கள் வியாபாரம் அல்லது தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதா? அப்படியானால் மேற்கண்ட எந்த யோசனைகளையும் கடைப்பிடிக்காதீர்கள்.

11. தொழிலோ அல்லது வியாபாரமோ சரியாக இல்லையா? மனைவியிடம் யோசனை கேட்டு அதன்படியே செய்யுங்கள். ஆறு மாதத்தில் தொழில் அல்லது வியாபாரம் முடிவுக்கு வந்து விடும். பிறகு மாதச்சம்பளத்தில் சேர்ந்து இங்கு சொன்ன அனைத்து அறிவுரைகளையும் கடைப்பிடிக்கவும்.

இன்னும் நிறைய யோசனைகள் கைவசம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இவ்வளவுக்குத்தான் பர்மிஷன் கிடைத்தது.

                                       

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அடுத்தவர்களுக்கு அறிவுரைகள் கூறுவது வீண்மனிதர்களுடைய குணங்கள் அவர்களுடைய மரபணு தொகுப்பினால் ஆக்கப்பட்டவை என்று பார்த்தோம். இந்த குணங்களினால் சிலர் சமூகத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயல்கள் எந்நாளும் தீயவைகளையே கருவாகக் கொண்டிருக்கும். அவர்களுடைய தோழர்களும் இதே மாதிரியான குணங்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக் கிடையேதான் நெருக்கம் ஏற்படும். இது அவர்களின் மரபணுக்கள் ஏற்படுத்தும் குணங்கள்.

அவர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களைத் திருத்தும் நோக்கோடு கற்றவர்கள் கூறும் அறிவுரைகளை எந்நாளும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் மரபணுக்களின் குணம் அவர்களை இவ்வாறு ஆக்கியிருக்கிறது. நல்ல பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள்தான் முளைத்து, வளர்ந்து பலன் கொடுக்கும். கட்டாந்தரையில் விதைக்கும் விதைகள் முளைக்க மாட்டாது.

இவர்கள் கட்டாந்தரையைப் போன்றவர்கள். இவர்களைச் சீர்திருத்தம் செய்ய முயலுவது, கானல் நீரைப் பருக ஆசைப்படுவது போலத்தான் அமையும். சூழ்நிலை மாற்றங்களைச் சந்திக்க இவர்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதிர்மறையாகவே இருக்கும். பல குடும்பங்கள் கெட்டுப்போவதற்கு இவர்களின் இந்தக் குணங்களே காரணம்.

விதி அல்லது கர்மவினை என்பதை பலர் இவர்களின் நிலைக்குக் காரணமாகக் காட்டுவார்கள். சோதிடர்கள் அவர்களின் கிரக நிலை அவர்களை இப்படி ஆட்டுவிக்கிறது என்பார்கள். விஞ்ஞானிகள் அவர்களின் மரபணுக்கூறுதான் இதற்கு காரணம் என்பார்கள். எப்படியானாலும் அவர்களின் நிலை மாறப்போவதில்லை.