ஆடிட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடிட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூலை, 2015

ஆடிட்டர்களின் அதிகப் பிரசிங்கித்தனம் - தொடர்ச்சி

இந்தத் தலைப்பில் நான் இட்ட பதிவிற்கு திரு வெட்டிப்பேச்சு என்பவர் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதில் அவர் சில குறிப்புகள் கொடுத்திருந்தார். அந்தப் பதிவிலேயே நான் பதில்களும் கூறியிருந்தேன்.
அதில் நான் குறிப்பிட்டுள்ள சில பகுதிகள் எல்லோரும் அறிந்திருக்க வேண்டியவை. பொதுவாகப் பின்னூட்டங்களை யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால் அந்த விவரங்களை ஒரு தனிப் பதிவாகப் போடுகிறேன்.


அது சரி, இங்கே ஆடிட்டர்கள் எங்கு அதிகப் பிரசங்கித் தனம் செய்தார்கள்?

Material
receive பண்ணுவதற்கு முன்பே அது வந்ததாக நீங்கள் ஸ்டாக் எண்ட்ரி பண்ணினது எனக்குச் சரியாகப் படவில்லை.

எனக்கென்னமோ நீங்கள் சரியான ஆடிட் குரூப்பை சந்திக்க வில்லை என்றே தோன்றுகிறது.

மேலும் அவர்களுக்கு உங்கள் மேல் நல்ல மரியாதை இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் அவர்கள் உங்களை தங்கள் பாஸ் மாதிரி நடத்தியிருக்க மாட்டார்கள்.

அரசு அலுவலங்களில் நீங்கள் சொன்ன குறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நீங்கள் நல்லவராய் இருக்கப்போய் ஏதும் கோளாறு இல்லை. ஆனல் உங்களைத் தவிர சற்று கோணலான ஆள் வந்து பணம் பண்ண நினைத்தாரானால் அவருக்கு நீங்கள் குறுக்கு வழி காட்டியதாய் இருக்கக் கூடாதல்லவா?

Proceedure violation is always not advisable.

ஆனாலும் பதிவு சுவாரசியமாய் இருந்தது.
டெக்னிகல் அலுவலரை நான்-டெக்னிகல் வேலைக்குப் பயன்படுத்தினீர்கள் என்று சொல்வதற்கு ஆடிட்டர்களுக்கு அதிகாரம் இல்லை. எது டெக்னிகல் வேலை, எது நான்-டெக்னிகல் வேலை என்று பாகுபடுத்தி அலுவலர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும் பொறுப்பு அந்தந்த அலுவலகத் தலைவருக்கே உண்டு. உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் டெக்னிகல் அலுவலர்கள்தான் தலைவராக வரமுடியும். உதாரணமாக நான் (I) டெக்னிகல்லி ஒரு புரொபசர், என் வேலை வகுப்பு எடுப்பது மற்றும் ஆராய்ச்சிகளை வழி நடத்துவதுதான். ஆனால் அதற்கு உண்டான அட்மினிஸ்ட்ரேடிவ் வேலைகளை யார் செய்வார்கள்? அதை ஒரு அட்மினிஸ்ட்ரேடர் என்று ஒருவரைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால் அவர் என் வேலைகளுக்கு ஒரு முட்டுக் கட்டையாகவே இருப்பார். நான் அலுவலகத் தலைவராக இருந்தாலும் ஒரு பைசா செலவழிப்பதாக இருந்தாலும் அவரைக் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்ற நிலை உருவாகிவிடும். உலகம் முழுவதும் ஆராய்ச்சி நிறுவனங்களில் டெக்னிகல் ஆபீசருக்கு கீழேதான், அவர் ஆணைப்படிதான் அட்மினிஸ்ட்ரேடிவ் அலுவலகர்கள் வேலை செய்யவேண்டும். இதுதான் நடைமுறை.
2.   
//Procedure violation is always not advisable.//

நீங்கள் Management புஸ்தகங்களைப் படித்திருந்தால் அதில் ஒரு கொள்கையை வலியுறுத்தியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். Rules are only for guidance. An efficient Executive is one who takes sensible exceptions to the rules. Clerk will always be obstinate about rules but an Executive is not to follow the clerk.

ஒரு மாவட்டத்தில் கலெக்டர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வழக்கமாக எல்லா வேலைகளும் ரூல் பிரகாரம்தான் நடக்கும். ஒரு ஊரில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளம் வரும் வழியைத் தடுத்து வெள்ளத்தை ஆற்றுக்குத் திருப்பவேண்டும். அப்போது அவர் ரூல் பிரகாரம் டெண்டர் விட்டுத்தான் அந்த வேலையை முடிக்கவேண்டும் என்று நினைத்தால் என்ன ஆகும்? உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று ஏகப்பட்ட சேதங்கள் ஏற்படும். அந்த மாதிரி இயற்கை சீற்றங்களைச் சமாளிப்பதற்காக அந்தக் கலெக்டர் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செலவு செய்யலாம். இந்த மாதிரி சமயங்களில் செய்யப்படும் செலவுகளுக்கு ஆடிட் கிடையாது என்பது பலருக்குத் தெரியாது.

அவர் அப்படி நிவாரண வேலைகள் செய்யாவிட்டால்தான்  அவர் தன் கடமையிலிருந்து தவறியவராகக் கருதப்படுவார்.

நான் ரூல் பிரகாரம் செய்யவில்லை என்று என் பேரில் குற்றம் சுமத்தினால் நான் ஏன் ஆவ்வாறு செய்தேன், அதன் அவசியம் என்ன என்று காரணங்களைச் சொல்லி என் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் தன்னம்பிக்கை இருந்ததால்தான் அவ்வாறு செய்தேன். அவ்வாறு செய்வதை நான் தனிப்பட்ட முறையில் மேலதிகாரிகளிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.
3.   
//Material receive பண்ணுவதற்கு முன்பே அது வந்ததாக நீங்கள் ஸ்டாக் எண்ட்ரி பண்ணினது எனக்குச் சரியாகப் படவில்லை.//

இந்த மாதிரி செய்வது வருடக் கடைசியில் எல்லா அலுவலகங்களிலும் நடப்பதுதான். இந்த மாதிரி பட்டியல்களுக்கு Proforma Invoice என்று பெயர். அந்த வருடத்திய பட்ஜெட் காலாவதியாகாமலிருக்க இந்த மாதிரி செய்வது வழக்கம்தான். நான் இந்த வழக்கத்தைத்தான் கடைப்பிடித்தேன்.


செவ்வாய், 7 ஜூலை, 2015

ஆடிட்டர்களின் அதிகப் பிரசிங்கித்தனம்- பாகம் 1

                               Image result for barbed wire fence

நான் தஞ்சாவூரில் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக 1985ல் இருந்த காலம். அந்த ஆராய்ச்சிப் பண்ணைக்கு வேலி இல்லை. சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் தரிசாக இருந்த போதும் எங்கள் பண்ணையில் ஆராய்ச்சிக்காக கொஞ்சம் பயிர் செய்திருப்போம். பக்கத்திலுள்ள தரிசு நிலங்களில் மாடுகள் மேய்ப்பார்கள். மாடு மேய்ப்பவர்கள் கொஞ்சம் அசந்தபோது அந்த மாடுகள் பச்சையாகத் தெரியும் எங்கள் பண்ணைக்குள் புகுந்து விடும். ஆராய்ச்சிக்காக போட்டிருக்கும் பயிர்களைத் தின்று விடும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பண்ணையைச் சுற்றி முள்கம்பி வேலி போடுவதுதான். நான் மேலதிகாரிகளுக்கு இந்தப் பிரச்சினையைப் பற்றி விவரமாக எழுதி, முள்கம்பி வேலி போடவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். முள்கம்பி வேலி போட்டுக்கொள்ளச் சொல்லி அனுமதி வழங்கி விட்டார்கள்

சர்க்கார் மற்றும் பொது நிறுவனங்களில் இந்த மாதிரி வேலைகளை இரண்டு வகைகளில் செய்யலாம். ஒன்று டெண்டர் விடுதல் என்ற முறை. இதுதான் பொதுவாகக் கடைப் பிடிக்கப்படும் முறை. இதில் பல சௌகரியங்கள் உண்டு. அனுபவப்பட்டவர்களுக்கு இந்த சௌகரியங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அப்படித் தெரியாதவர்கள் அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது "டிபார்ட்மென்ட் முறை". இந்த முறையில் அந்தந்த ஆபீசில் இருப்பவர்களே எல்லாக் கட்டுமானப் பொருட்களையும் வாங்கி, அதற்குண்டான ஆள் வைத்து வேலையைச் செய்து முடிப்பது. அதில் வேலையின் தரத்தை நாம் நன்றாக கண்காணிக்க முடியும். சிமென்ட் குறைவாகப் போடுதல், சரியானபடி க்யூரிங்க் செய்யாமை போன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். சிறிய வேலைகளை இவ்வாறு செய்வதுதான் வழக்கம். ஆனால் அந்த ஆபீசில் ஒரு இஞ்சினீயர் இருப்பது அவசியம்.

இந்த முள்வேலி போடும் வேலை ஒரு சிறிய வேலை. இதற்கு டெண்டர் விட்டால் டெண்டர் விட்டால் டெண்டர் எடுப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். தவிர எங்கள் ஆபீசில் இத்தகைய வேலைகள் எப்போதாவதுதான் நடக்குமாதலால் எங்கள் ஆபீசுக்கென்று டெண்டர் எடுக்க யாரும் இல்லை.
ஆகையால் இந்த வேலையை டிபார்ட்மென்ட் முறையில் செய்து விடலாம் என்று முடிவு செய்து அதற்கான பிளானை மேலதிகாரிகளுக்கு அனுப்பி பர்மிஷன் வாங்கினேன்.

இதற்கு ஒரு வருடம் முன்பு எங்கள் யூனிவர்சிடியில் உள்ள வேறொரு பண்ணையில் இந்த மாதிரி கம்பிவேலி போடுவதற்காக முள்கம்பி வாங்கினதில் ஒரு முறைகேடு நடந்து விட்டது. அதனால் முள்கம்பி வேலி போட பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். அதில் முக்கியமானது முள்கம்பி வாங்குவது. இதை பல கம்பெனிகளிடமிருந்து கொட்டேஷன் வாங்கி அதில் விலை குறைவாகவும் தரம் நன்றாகவும் இருக்கும் கம்பியை வாங்கவேண்டும்.

இப்படி கொட்டேஷன்களை நீங்கள் நேரில் போய் வாங்கக் கூடாது. அந்த மாதிரி முள்கம்பி விற்கும் கடைகளின் விலாசத்திற்கு உங்கள் ஆபீசிலிருந்து தபாலில் கொட்டேஷன் கேட்டு ஒரு கடிதம் போகவேண்டும். அதற்கு அந்த கம்பெனிக்காரர்கள் தங்கள் கொட்டேஷன்களைத் தபாலில் அனுப்பவேண்டும். அந்தக் கொட்டேஷன்களை எல்லாம் ஒரே சமயத்தில் பிரித்துப் பார்த்து எந்தக் கம்பெனி விலை குறைவாக கொட்டேஷன் கொடுத்திருக்கிறதோ, அந்தக் கம்பெனியில்தான் முள்கம்பி வாங்கவேண்டும்.

இந்த நடைமுறை ஏட்டில் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்றபடி இது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனென்றால் கடைக்காரர்களுக்கு ஆயிரம் வேலை. கொட்டேஷன் அனுப்புவது வெட்டி வேலை என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒரு வகையில் அவர்கள் நினைப்பதுவும் நியாயமே. கொட்டேஷன் அனுப்பினால் ஆர்டர் வரும் என்று சொல்ல முடியாது.

எனக்கு அர்ஜென்டாக வேலி போட்டு ஆகவேண்டும். ஆபீஸ் நடைமுறையைப் பின்பற்றினால் வேலை முடிய மாதக் கணக்கில், ஏன், வருடக்கணக்கில் கூட ஆகலாம். என் மூளை எப்போதும் குறுக்காகத்தானே வேலை செய்யும்? நான் என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில்......

வியாழன், 25 ஜூன், 2015

நான் ஆடிட்டரை ஏமாற்றிய கதை

                                   Image result for ஜீப்

ஆடிட்டர்களுடைய தலையாய குணம் என்னவென்றால் நாம் எதை எப்படி ரூல்படிச் செய்திருந்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதுதான். இது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த யூகத்தின் அடிப்படையில் நான் ஒரு முறை ஆடிட்டர்களை வகையாக ஏமாற்றினேன். அது எப்படி என்று பாருங்கள்.

அரசு அலுவலகங்களில் உள்ள வாகனங்கள் அந்த அலுவலக உயர் அதிகாரி அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை ஆகும். ஆனால் இதை சொந்த வேலைகளுக்காகப் பயன்படுத்துபவர்கள் அதிகம். பெண்டாட்டி ஷாப்பிங்க் போவதற்கும் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்கும் உபயோகப்படுத்துபவர்கள் உண்டு.

இதனால் வாகனங்கள் இருக்கும் அலுவலகங்களில் இந்த ஆடிட்டர்கள் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு வெகு கவனமாகப் பார்ப்பார்கள். எனக்கு இது நன்றாகத் தெரியும். நான் தஞ்சாவூரில் ஆபீசராக இருந்த போது எனக்கு இந்த மாதிரி ஒரு வாகனம் கொடுத்திருந்தார்கள். நான் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு போகாததினால் தனியாக இருந்தேன். சொந்த உபயோகம் என்று ஏதும் வந்ததில்லை.

ஒரு சமயம் என் குடும்பத்தினருக்கு தஞ்சாவூரிலும் பக்கத்து ஊர்களிலும் உள்ள கோவில்களைக் காட்டலாமே என்று நினைத்து அவர்களை வரவழைத்தேன். ஆபீஸ் வாகனத்திலேயே கூட்டிக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்தேன். இம்மாதிரி சொந்த உபயோகத்திற்கு ஆபீஸ் வாகனத்தை மேலதிகாரியின் முன் அனுமதியுடன் உபயோகித்துக் கொள்ளலாம். அப்படி உபயோகித்த அளவிற்குண்டான பணத்தைக் கட்டவேண்டும். இப்படி ஒரு விதி உண்டு.

நான் முன்னேற்பாடாக என் மேலதிகாரிக்கு விண்ணப்பம் எழுதி அனுப்பிவிட்டேன். குடும்பத்தினர் வந்தார்கள். ஆபீஸ் வாகனத்தில் ஏறி  எல்லா ஊரையும் பார்த்தார்கள். திரும்பிப் போய்விட்டார்கள். சில நாட்கள் கழித்து நான் அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று ஆர்டர் வந்தது. நானோ வாகனத்தை உபயோகித்தாகி விட்டது. வாகனத்தின் லாக் புஸ்தகத்திலும் சொந்த உபயோகம் என்று எழுதியாகி விட்டது. இனி அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

என் மேலதிகாரி எனக்கு நன்றாகப் பழக்கப்பட்டவர். என்பேரில் தனி அபிமானம் கொண்டவர். அதனால் நான் இந்த ஆர்டரைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை. அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது இந்த சமாச்சாரத்தை மெதுவாகச் சொன்னேன். அவர் உன் சொந்த வேலையென்றால் உபயோகித்துக் கொள்ளவேண்டியதுதானே, அதை எதற்கு கணக்கில் காட்டுகிறார் என்று என்னைக் கோபித்துக்கொண்டார்.

நான் சொன்னேன், அப்படி நான் என் சொந்த உபயோகத்திற்காக ஆபீஸ் கணக்கில் அந்த வாகனத்தை உபயோகித்தால் ஆபீசில் வேலை செய்யும் எல்லோருக்கும் அது தெரிந்து விடும், பிறகு எனக்கு அங்கு மரியாதை கிடைக்காது. ஆகவே நான் ஏற்கனவே உபயோகித்து விட்டேன். அதை என் சொந்த உபயோகம் என்றும் லாக் புக்கில் எழுதிவிட்டேன். இனி மாற்ற முடியாதே, என்று சொன்னேன். அவர், சரி, நீ ஒரு கிறுக்கன், சொன்னால் கேட்கமாட்டாய், திரும்பவும் அந்த விண்ணப்பத்தை அனுப்பு, நான் சேங்க்ஷன் செய்து விடுகிறேன் என்றார்.

அப்டியே அந்த விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அனுப்பினேன். மேலதிகாரியின் ஒப்புதல் ஆர்டர் வந்து விட்டது. அதை நான் வாங்கி தனியாக என்னுடைய அலமாரியில் வைத்து விட்டேன். ஆபீசில் உள்ளவர்களுக்கு இந்த ஒப்புதல் ஆர்டர் வந்த விவரம் தெரியாது.

அந்த வருட ஆடிட் பார்ட்டி வந்தது. ஆபீஸ் வாகனத்தின் லாக் புக்கை ஆடிட் செய்தபோது நான் சொந்த வேலைக்காக உபயோகித்த விவரம் அவர்கள் கண்ணுக்குப் பட்டது. இதற்கு மேலதிகாரியின் ஒப்புதல் வாங்கியிருக்கிறதா என்று ஆபீசில் உள்ளவர்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் விண்ணப்பம் போட்டு அது சேங்க்ஷன் ஆகாமல் திரும்பி வந்தது வரைக்கும்தான் தெரியும். மறுபடி நான் அதை திரும்பவும் அனுப்பி சேங்க்ஷன் வாங்கிய விவரம் அவர்களுக்குத் தெரியாது. நான்தான் அந்த ஆர்டரை என் அலமாரியில் வைத்திருக்கிறேனே?

அவர்கள் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். ஆபீசர் விண்ணப்பம் அனுப்பினார், ஆனால் அது அப்ரூவல் ஆகவில்லை என்று சொல்லவிட்டார்கள். ஆடிட்டர்களுக்கு கன சந்தோஷம். அது வரையில் பெரிதாக எந்த தவறுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆஹா, இந்த ஆபீசர் வசமாக மாட்டிக்கொண்டார் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு விலாவாரியாக இந்த சமாச்சாரத்திற்கு கை கால், வாய், மூக்கு, கண் எல்லாம் வைத்து, இந்த ஆபீசர் விதிகளுக்குப் புறம்பாக இந்த மாதிரியான குற்றம் செய்து அரசுக்கு இவ்வளவு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறார், இவரை உடனடியாக கழுவில் ஏற்றவேண்டும் என்று இரண்டு பக்கத்திற்கு நோட்ஸ் எழுதி வைத்துக் கொண்டார்கள். (உண்மையில் இப்படி நடந்திருந்தால் நான் கழுவில் ஏறித்தானாக வேண்டும்.)

ஆடிட் எல்லாம் முடிந்தது. ஆடிட் வழக்கம் என்னவென்றால் அவர்கள் எழுதியுள்ள ஆடிட் நோட்ஸை என்னிடம் காட்டி என் கையெழுத்து வாங்கவேண்டும். அப்போதுதான் அது செல்லுபடியாகும். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து நோட்ஸைப் பார்த்துக்கொண்டே வந்தோம். அப்படிப் பார்க்கும்போது என்னைக் கழுவில் ஏற்றச் சொல்லி எழுதியிருக்கும் குறிப்பு வந்தது. அப்போது நான் ஒரு டிராமா போட்டேன்.

ஆபீஸ் சூப்பிரன்ட்டைப் பார்த்து "நாம் இதற்கு மேலதிகாரியின் அனுமதி வாங்கவில்லையா?" என்று கோபமாகக் கேட்டேன். அவர் பவ்யமாக, அப்ளை செய்தோம் சார், ஆனால் அதை ரிஜெக்ட் பண்ணி விட்டார்கள் என்றார். அப்புறம் மறு பரிசீலனைக்கு எழுதவில்லையா என்றேன். எழுதினோம் சார், ஆனால் இதுவரை பதில் வரவில்லை, சார் என்றார். என்ன ஆபீஸ் நடத்துறீங்க, பதில் வரலைன்னா ரிமைண்டர் போட்டிருக்கணும், இல்லைன்னா எங்கிட்டயாவது சொல்லியிருக்கணும், இப்ப ஆடிட்டுக்கு என்ன பதில் சொல்றது என்று கேட்டு விட்டு, தலையைச் சொறிகிற மாதிரி பாவனை செய்து, ஆங். இப்ப ஞாபகம் வருது, ஆர்டர் வந்துதே  ஐயா, அதை உங்க கிட்ட கொடுக்கலியா என்று ஒரு புருடா விட்டேன். சார் எங்க கிட்டே வரலியே சார் என்று பரிதாபமாக முனகினார்கள்.

நான் திரும்பவும் தலையைச் சொறிந்து கொண்டு, ஆமாம் அது பத்திரமாக இருக்கட்டும் என்று என் அலமாரியில் வைத்தேன், இருங்கள் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு அலமாரியைத் திறந்து தேடுகிற மாதிரி பாவனை செய்து விட்டு அந்த ஆர்டர் இருக்கும் பைலை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பார்த்த ஆடிட்டர்களுக்கு முகம் தொங்கிப் போயிற்று. அந்த ஆர்டரைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்கள். ஒரு குற்றமும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்புறம், சார் இதற்கு பணம் கட்டவில்லையே என்றார்கள்.

நான் உடனே சூப்பிரன்ட்டிடம் இதற்கு எவ்வளவு கட்டவேண்டும் என்றேன். அவர் கிலோ மீட்டருக்கு மூன்று ரூபாய் சார் என்றார். எத்தனை கிலோ ஓடியிருக்கிறது என்றேன். நூற்றி இருபது கிலோ ஓடியிருக்கிறது என்றார். அப்படியா, இதோ 360 ரூபாய், இப்பவே ரசீது போட்டுக்கொண்டு வந்து ஆடிட்டர் சாரிடம் காட்டு என்றேன். சார் பட்டம் கொடுத்தவுடனே ஆடிட்டருக்கு உச்சி குளிர்ந்து போனது. ஐந்து நிமிடத்தில் ரசீது வந்து விட்டது. அதைப் பார்த்து விட்டு எழுதி வைத்திருந்த கழுவேற்று நோட்ஸை அடித்து விட்டார்.

நான் இப்படிச் செய்யாமல் முதலிலேயே அந்த ஆர்டரையும் பணம் கட்டின ரசீதையும் ஆடிட்டர்களுக்குக் கொடுத்திருந்தால் வேறு ஏதாவது வகையில் ஒரு குறை கண்டுபிடித்து எழுதியிருப்பார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கடினமாக இருந்திருக்கும். நான் போட்ட டிராமாவினால் மேட்டர் சிம்பிளாக முடிந்து விட்டது.

வேறு ஒரு சமயம் அப்படி ஒரு குறையும் கிடைக்காமல் போனபோது அவர்கள் அநியாயமாக வேண்டுமென்றே எழுதிய ஒரு ஆடிட் குறிப்பைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.