ஆனந்தம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனந்தம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஏப்ரல், 2013

நான் சைக்கிள் ஓட்டின கதை


சைக்கிள் என்றால் முழு சைக்கிள் இல்லை. அந்தக் காலத்தில் முழு சைக்கிள் என்பது என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு எட்டாக்கனி. என் சித்தப்பா ஒரு சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருந்தார். அங்கு பழைய சைக்கிள் டயர் கிடைக்கும். அதுதான் அந்தக் காலத்தில் என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு சைக்கிள்.

அந்த பழைய டயரை ஒரு குச்சியால் லாகவகமாக அடித்தால் அது உருண்டு ஓடும். அதன் கூடவே நாமும் ஓடினால் சைக்கிள் ஓட்டுவதாக எண்ணம். அப்படி கற்பனை செய்து கொள்ள வேண்டும். நம்மால் ஓடமுடிந்த அளவு வேகத்தில் அந்த டயரை ஓட்டுவது நாளாவட்டத்தில் பழக்கமாகி விடும்.

சிலர் இந்த டயரை சைக்கிள் ரிம்முடன் சேர்து ஓட்டுவார்கள். அது லக்சரி எடிஷன். எல்லோருக்கும் கிடைக்காது. தவிர அதை ஓட்டுவது கொஞ்சம் சிக்கலானது.


நொங்கு சாப்பிட்ட பிறகு மிச்சமாயிருக்கும் பனம்பழத்துண்டுகள் இரண்டை எடுத்து அவைகளை ஒரு முக்கால் அடி குச்சியால் இணைத்து, ஒரு நீண்ட குச்சி, அதன் நுனியில் ஒரு கொக்கி மாதிரி அமைப்பு, இவைகளை வைத்தும் இந்த மாதிரி ஓட்ட முடியும். சிலர் ஒரு இரும்பு வளையத்தை இந்த மாதிரி ஒரு குச்சி வைத்து ஓட்டுவார்கள். ஆனால் இரும்பு வளையம் எல்லோருக்கும் கிடைக்காது. பனம்பழம் எப்போதும் கிடைக்காது. சைக்கிள் டயர்தான் எப்போதும் சுலபமாக கிடைக்கும். ஆகவே அதுதான் பாப்புலர்.

பள்ளிக்கூடத்திற்கு இந்தச் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போக முடியாது. ஏனெனில் பார்க்கிங் பிராப்ளம். பள்ளியில் இந்த சைக்கிளை பார்க் பண்ண முடியாது. யாராவது தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக இந்த சைக்கிளில் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்த பிறகுதான் மற்ற வேலைகள்.

வீட்டுக்கு ஏதாவது சில்லறை சாமான்கள் வாங்குவதற்கு அந்தக் காலத்தில் சின்னப் பசங்களைத்தான் அனுப்புவார்கள். நாங்களும் சைக்கிள் விட ஒரு சான்ஸ் கிடைத்தது என்று ஆர்வத்துடன் இந்த சைக்கிளை ஓட்டிக்கோண்டு போய் அந்த சாமானை வாங்கி வருவோம். ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு அடுத்த கையால் இந்த டயரை ஓட்டிக்கொண்டு வருவது ஒரு நுண்கலை.

சிலர் இந்த சைக்கிளை ஓட்டும்போது வித விதமான சவுண்டு கொடுத்துக் கொண்டு ஓட்டுவார்கள். சில சமயம் இந்த பழைய சைக்கிள் டயர், காராகவும், சில சமயம் ஏரோப்ளேன் ஆகவும் கூட மாறும். அதற்குத் தகுந்த மாதிரி வேகமும் சவுண்டும் மாறும். அவ்வப்போது பாதசாரிகளுக்கு எச்சரிக்கையாக ஹாரனும் அடிக்கவேண்டும். ஏரோப்பிளேனில் போகும்போது இந்த ஹாரன் அவசியமில்லை.

இந்த சைக்கிள் ஓட்டும்போது அனுபவித்த ஆனந்தத்தை, பிற்காலத்தில் நிஜ சைக்கிள் ஓட்டினபோதோ அல்லது ஸ்கூட்டர் ஓட்டினபோதோ அல்லது கார் ஓட்டினபோதோ கூட அனுபவித்ததில்லை. இளம் வயது அனுபவங்களே அலாதியானவை.

இப்போது சிறுவர்கள் இந்த மாதிரி சைக்கிள் ஓட்டி நான் பார்த்ததில்லை. வாழ்க்கையில் எத்தனை ஆனந்தங்களை இன்றைய நம் சிறுவர்கள் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்க மனது வேதனைப்படுகின்றது.