வியாழன், 18 ஏப்ரல், 2013

நான் சைக்கிள் ஓட்டின கதை


சைக்கிள் என்றால் முழு சைக்கிள் இல்லை. அந்தக் காலத்தில் முழு சைக்கிள் என்பது என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு எட்டாக்கனி. என் சித்தப்பா ஒரு சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருந்தார். அங்கு பழைய சைக்கிள் டயர் கிடைக்கும். அதுதான் அந்தக் காலத்தில் என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு சைக்கிள்.

அந்த பழைய டயரை ஒரு குச்சியால் லாகவகமாக அடித்தால் அது உருண்டு ஓடும். அதன் கூடவே நாமும் ஓடினால் சைக்கிள் ஓட்டுவதாக எண்ணம். அப்படி கற்பனை செய்து கொள்ள வேண்டும். நம்மால் ஓடமுடிந்த அளவு வேகத்தில் அந்த டயரை ஓட்டுவது நாளாவட்டத்தில் பழக்கமாகி விடும்.

சிலர் இந்த டயரை சைக்கிள் ரிம்முடன் சேர்து ஓட்டுவார்கள். அது லக்சரி எடிஷன். எல்லோருக்கும் கிடைக்காது. தவிர அதை ஓட்டுவது கொஞ்சம் சிக்கலானது.


நொங்கு சாப்பிட்ட பிறகு மிச்சமாயிருக்கும் பனம்பழத்துண்டுகள் இரண்டை எடுத்து அவைகளை ஒரு முக்கால் அடி குச்சியால் இணைத்து, ஒரு நீண்ட குச்சி, அதன் நுனியில் ஒரு கொக்கி மாதிரி அமைப்பு, இவைகளை வைத்தும் இந்த மாதிரி ஓட்ட முடியும். சிலர் ஒரு இரும்பு வளையத்தை இந்த மாதிரி ஒரு குச்சி வைத்து ஓட்டுவார்கள். ஆனால் இரும்பு வளையம் எல்லோருக்கும் கிடைக்காது. பனம்பழம் எப்போதும் கிடைக்காது. சைக்கிள் டயர்தான் எப்போதும் சுலபமாக கிடைக்கும். ஆகவே அதுதான் பாப்புலர்.

பள்ளிக்கூடத்திற்கு இந்தச் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போக முடியாது. ஏனெனில் பார்க்கிங் பிராப்ளம். பள்ளியில் இந்த சைக்கிளை பார்க் பண்ண முடியாது. யாராவது தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக இந்த சைக்கிளில் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்த பிறகுதான் மற்ற வேலைகள்.

வீட்டுக்கு ஏதாவது சில்லறை சாமான்கள் வாங்குவதற்கு அந்தக் காலத்தில் சின்னப் பசங்களைத்தான் அனுப்புவார்கள். நாங்களும் சைக்கிள் விட ஒரு சான்ஸ் கிடைத்தது என்று ஆர்வத்துடன் இந்த சைக்கிளை ஓட்டிக்கோண்டு போய் அந்த சாமானை வாங்கி வருவோம். ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு அடுத்த கையால் இந்த டயரை ஓட்டிக்கொண்டு வருவது ஒரு நுண்கலை.

சிலர் இந்த சைக்கிளை ஓட்டும்போது வித விதமான சவுண்டு கொடுத்துக் கொண்டு ஓட்டுவார்கள். சில சமயம் இந்த பழைய சைக்கிள் டயர், காராகவும், சில சமயம் ஏரோப்ளேன் ஆகவும் கூட மாறும். அதற்குத் தகுந்த மாதிரி வேகமும் சவுண்டும் மாறும். அவ்வப்போது பாதசாரிகளுக்கு எச்சரிக்கையாக ஹாரனும் அடிக்கவேண்டும். ஏரோப்பிளேனில் போகும்போது இந்த ஹாரன் அவசியமில்லை.

இந்த சைக்கிள் ஓட்டும்போது அனுபவித்த ஆனந்தத்தை, பிற்காலத்தில் நிஜ சைக்கிள் ஓட்டினபோதோ அல்லது ஸ்கூட்டர் ஓட்டினபோதோ அல்லது கார் ஓட்டினபோதோ கூட அனுபவித்ததில்லை. இளம் வயது அனுபவங்களே அலாதியானவை.

இப்போது சிறுவர்கள் இந்த மாதிரி சைக்கிள் ஓட்டி நான் பார்த்ததில்லை. வாழ்க்கையில் எத்தனை ஆனந்தங்களை இன்றைய நம் சிறுவர்கள் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்க மனது வேதனைப்படுகின்றது.

                                 

18 கருத்துகள்:

  1. Sir
    You missed the part, when rim alone is can be used. In that case we don’t need to hit with the stick. Just keep the stick in the groove of the rim, we have to keep running to apply the force. One thing, it is not from the game alone we get the joy, it was in conjunction with the age only we received such happiness. Thanks, nicely written.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Packirisamy,
      Thank you for your comments.
      You correctly found out what I have missed. That means you have also enjoyed these things. Great.
      As you said, it is the age that gave us the pleasure.

      நீக்கு
  2. நாங்கள் ஒரு இரும்பு வளையத்தை பனம் மட்டையால் (அளவாக வெட்டியது) தட்டிக் கொண்டு ஓடுவோம். ஆனால் நாங்கள் ஓடியது காராக்கும் (car) :-)

    பதிலளிநீக்கு
  3. இதே மாதிரி நிறைய முறை சைக்கிள் ஓட்டி இருக்கேன்... அந்த அலாதியே தனி சுகம் தான்..

    பதிலளிநீக்கு
  4. இக்கால பிள்ளைகள் இவைகளையெல்லாம் இழந்துவிட்டார்கள் என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு அடுத்த கையால் இந்த டயரை ஓட்டிக்கொண்டு வருவது ஒரு நுண்கலை...


    riding on bicycle - என்றொரு ஆங்கில மனப்பாடப்பகுதி கவிதை நினைவு வருகிறது ..

    பதிலளிநீக்கு
  6. அரைக்கால் ட்ரவுசரோடு ஆடையில்லா மேனியில் உச்சிவெயிலில் நானும் வண்டி ஒட்டி இருக்கிறேன் .அது அந்த காலம்

    பதிலளிநீக்கு
  7. ...ம்... அந்த சந்தோசமே தனி... இனிய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  8. ரிம் வைத்த சைக்கிள் லக்சுரி எடிஷன் என்றால் பழைய காலத்து சைக்கிள் கடைகளில் மூன்று சக்கர சைக்கிள்கள் வாடகைக்கு கிடைக்கும். அதை ஓட்டியவனாக்கும் நான். அந்த நினைவுகள் இன்றும் மனம் முழுக்க சந்தோஷத்தை நிரப்புகிறது.
    15 நிமிடத்திற்கு 10 பைசா. 1/2 மணிக்கு 15 பைசா ஒரு மணி நேரத்திற்கு 25 பைசா என்று வாடகை. அது அன்றைய அம்பானி குழந்தைகளால் மட்டுமே முடியும். நாமெல்லாம் ஏக்கத்தோடு பார்க்க வேண்டியதுதான்.
    ஒரு மாதம் தீனி வாங்க கொடுக்கும் பைசாக்களை (ஒரு நாளைக்கு 2 பைசா அல்லது 3 பைசா) கொஞ்சம் தீனிக்கு கொஞ்சம் சைக்கிளுக்கு என்று பங்கிட்டு சேர்த்து வைத்தால் மட்டுமே ஒரு 1/2 மணி நேரம் நாம் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி கொஞ்ச நேரத்துக்கு அம்பானி மகனாக/மகளாக ஆகலாம்
    அன்றெல்லாம் அந்த தெருவுக்கு நான்தான் ராஜா

    பழைய நினைவுகளை கிளறி சந்தோஷபடுத்தியதற்கு மிக்க நன்றி

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  9. நான்......நான்........நான்.... நானும் ஓட்டியிருக்கிறேன்! ரிம் மட்டும் வைத்தும் ஓட்டுவார்கள்/ஓட்டியிருக்கிறேன். கம்பால் / கம்பியால் அதை வளைவில் திருப்பும்போது ஒரு சத்தத்தோடு அது கீழே விழாமல் சாய்ந்து திரும்பும் அழகு... கொசுவர்த்தி!

    பதிலளிநீக்கு

  10. எல்லா வயோதிகர்களின் நினைவலைகளையும் மீட்டி விட்டீர். உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு அந்த அனுபவம் கிடையாது.

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் சொல்வதுபோல இந்தக் காலச் சிறுவர்கள் நிறைய மிஸ் பண்ணுகிறார்கள். பழைய நினைவுகள் எப்போதுமே இனிக்கும்.

    பதிலளிநீக்கு
  12. நுங்கு சக்கர வண்டி நானும் ஒட்டியிருக்கேன், அதில் நகை ஸ்டியரிங் வீலாகவும் பயன்படுத்துவோம், சைக்கிள் டயரையும் உருட்டியிருக்கேன்........it is unfortunate these days those things have disappeared.

    பதிலளிநீக்கு
  13. இதில் இருந்த இன்பம் வேறெதில். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் ஆனந்தத்தை தந்த பதிவு. நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  15. உண்மை நானும் சைக்கிள் ஓட்டிஇருக்கிறேன் நுங்கு வண்டி ஆஹா ஞாபகப்படுத்திவிட்டீர்களே ம்ம் இன்றைய சிறுவர்களுக்கு இதைபோன்ற ஆனந்தம் இனிமேலும் கிடைக்குமா? மலரும் நினைவு










    பதிலளிநீக்கு
  16. ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்று அய்யன் செப்பியது வழூவோ என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு