இலவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 மே, 2014

இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க !


கண்காட்சிகளைப் பார்த்திருப்பிர்கள். ஒரு இடத்தில் நாலு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தால் உடனே அங்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அங்கு என்னவோ நடக்கிறது, அதில் நாமும் சேர்ந்து கொள்ளலாமே என்ற மனப்பான்மை மனிதர்களுக்கு இயற்கையாகவே வேறூன்றி இருக்கிறது.

இலவசம் அல்லது சும்மா கிடைக்கிறது என்றால் அதற்காக உயிரைப் பயணம் வைத்து அதைப் பெற்றுக்கொள்ள அடித்துக் கொள்வார்கள். இத்தகைய நிகழ்வுகள் நம் தங்கத் தமிழ்நாட்டில் பலமுறை அரங்கேறியுள்ளன.

உங்கள் பணம் 100 நாளில் இரட்டிப்பாகும் அல்லது மூன்று மடங்காகும் என்றால் முன்பின் யோசிக்காமல் பணத்தைக் கொண்டுபோய் கொட்டுபவர்களில் தமிழர்களை மிஞ்ச யாரும் இல்லை. நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு என்று அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல சீட்டுகள் நடக்கும். எல்லாம் ஏமாற்று வேலைகள்தான்.

இந்த வகையில் தற்போது தோன்றியிருப்பது "இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்" என்ற கோஷம். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பல பதிவுகள் இதை ஊக்கப்படுத்துகின்றன. இணையத்தில் பதினைந்து நிமிடங்கள் செவழித்தால் போதும். மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று தடாலடியாக எழுதுகிறார்கள்.

நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் என்பது ஒருவன் தன் உழைப்பைக்கொட்டி சம்பாதிக்க வேண்டும். அதுதான் உண்மையான சம்பாத்தியம். கானல்நீரைக்கண்டு ஏமாந்து போகாதீர்கள்.

புதன், 19 டிசம்பர், 2012

இலவச கம்ப்யூட்டர் மென்பொருட்கள்

இலவசம் என்றாலே மக்களுக்கு ஒரு ஆர்வம் வந்து விடுகிறது. அது தேவையோ இல்லையோ, வாங்கிக்கொள்வார்கள். அதிலும் ஒன்றுடன் திருப்தி அடையமாட்டார்கள். இரண்டு, மூன்று என்று எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவிற்கும் ஆசைப்படுவார்கள். ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கொடுக்கப்படும் இலவச பைகளை இன்னொன்று என்று கேட்டு வாங்காதவர்கள் அபூர்வம். (நானும் அப்படித்தான்). இலவச சேலைகளுக்கு ஆசைப்பட்டு கூட்டத்தில் சிக்கி உயிர்த்தியாகம் செய்த பெண்மணிகளின் கதைகள் தமிழ்நாட்டில் அநேகம்.

கம்ப்யூட்டருக்கான பல இலவச மென் பொருட்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இவைகளைப் பற்றி நம் பதிவுலகத் தோழர்களும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள். இந்த மென்பொருட்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

பல மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதன் காரணம் அந்த தளங்கள் விளம்பரங்களை வெளியிடுகின்றன. அதிலிருந்து வருமானம் கிடைத்து விடுகிறது. இந்த இலவச மென்பொருட்கள்,  தங்கள் தளத்தை அதிக வாசகர்கள் பார்க்கட்டும் என்பதற்காகத்தான்.

சில தளங்கள் தங்கள் இலவச மென்பொருட்களுடன் வேறு சில புரொக்ராம்களையும், உங்களுக்குத் தேவை இல்லாவிட்டாலும் கொடுத்து விடுவார்கள். அந்த புரொக்ராம் ஆபத்தில்லாமலும் இருக்கலாம், சில சமயம் ஆபத்துடனும் இருக்கலாம். ஆகவே இலவச மென்பொருட்களைத்  தரவிறக்கும்போது இந்த கூடுதல் மென்பொருட்களும் சேர்ந்து வராமலிருக்க ஜாக்கிரதையாக இருக்கவும்.

உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மற்றும் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தனிப்பட்ட விவரங்கள் பல கம்பெனிகளுக்கு பல காரணங்களுக்காகத் தேவைப்படுகின்றன. இந்த மாதிரி விவரங்களைச் சேகரிப்பதற்காகவும் பல இலவச மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

பெரிய மென்பொருள் தயாரிக்கும் கம்பெனிகள் கூட அவர்களின் லீகல் வெர்ஷனை உபயோகிக்கிறார்களா இல்லை பைரேடட் வெர்ஷனை உபயோகப்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிக்க இலவசமாக சில மென்பொருட்களைக் கொடுப்பார்கள். அவைகள் இந்த உளவு வேலையையும் செய்யும்.

தவிர இந்த மென்பொருட்களை விளம்பரத்திற்காகவும், 30 நாட்கள் அல்லது 60 நாட்களுக்கு இலவசமாகக் கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்திப் பார்ப்பவர்களில் ஒரு சதம் நபர்கள் அந்த மென்பொருளை விலைக்கு வாங்கினாலும் அவர்களுக்கு லாபமே.

ஆகவே இலவச மென்பொருட்களைத் தரவிறக்குமுன் யோசியுங்கள்.

1. அந்த மென்பொருள் உங்களுக்கு அவசியமா?

2. அந்த வேலையைச் செய்யும் மென்பொருள் உங்களிடம் ஏற்கெனவே இல்லையா?

3. அந்த மென்பொருளை உங்கள் நண்பர்கள் யாரேனும் உபயோகப்படுத்தி பயனடைந்திருக்கிறார்களா?

4. உங்கள் கம்ப்யூட்டரில் நல்ல ஆன்டிவைரஸ் புரொக்ராம் நிறுவியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்ற பதில் வந்தால் அந்த மென்பொருளைத் தரவிறக்குங்கள்.

இலவசமாக கிடைக்கிறது என்பதால் எனக்கு ஒன்று, எங்க ஆத்தாளுக்கு ஒன்று என்று ஆசைப்பட வேண்டாம்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

இலவசக் கலாச்சாரம் ஏன்?


இலவசம்னு சொல்லக்கூடாதாம், "விலையில்லா" என்று சொல்லணுமாம். அம்மாவின் லேடஸ்ட் அறிவுறுத்தல். "விலையில்லா" என்றால் மதிப்பில்லாதது என்றே என் களிமண் மூளை சிந்திக்கிறது. அதனால் இலவசம் என்றே நாம் கூறுவோம். இலவசம் என்றாலும் மதிப்பில்லாததுதான். ஆனாலும் இந்த வார்த்தை பழகிப்போனதால் அவ்வளவு கேவலமாகத் தெரியவில்லை.

என் பாட்டி ஒரு கதை சொல்லும். ஒருத்தன் சாப்பிட்டுட்டு இருந்தானாம். அப்போது வீதியில் ஒருத்தன் "யானை வாங்கலியோ யானை, யானை கடனுக்கு விற்கிறோம்" அப்படீன்னு கூவிட்டுப் போனான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, வாயைத்திறந்து பேச முடியவில்லை. இடது கையினால் ஐந்து என்று ஜாடை காட்டினானாம். ஆகவே மக்கள் கடனில் கிடைக்கிறது என்றால் யானையைக்கூட ஐந்து வாங்க விரும்புகிறார்கள். கடனும் இலவசமும் ஒன்றுதான் என்று என்னுடைய போன பதிவைப் படித்தவர்களும்முத் தெரியும்.

ஏன் ஒவ்வொரு அரசும் பதவி ஏற்றவுடன் இலவசங்களை அறிவிக்கிறார்கள் தெரியுமா? ரஷ்யப் புரட்சி பற்ற அறிந்தவர்களுக்குத் தெரியும். அந்தப் புரட்சி சமுதாயத்தின் அடித்தள மக்கள் பட்டினியினால் அவதிப்பட்டதால் வந்தது. இதை நம் அரசியல்வாதிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அடித்தள மக்கள் பட்டினியால் வாடாமலிருக்க தேவையான இலவசங்களைக் கொடுத்து அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களும் நாம் மயங்கிக்கிடக்கிறோம் என்ற உணர்வில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் சொந்தக் காசிலிருந்தா இந்த இலவசங்களைத் தருகிறார்கள்? எல்லாம் மக்கள் வரிப்பணத்திலிருந்துதானே நடக்கிறது. அப்படி வரிப்பணம் போதாவிட்டால் கடன் வாங்குகிறார்கள். எங்கிருந்து வாங்குகிறார்கள்? இதற்காகத்தானே உலக வங்கி போன்ற நிறுவனங்க்ள இருக்கின்றன.

சரி, கடன் வாங்கினால் எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கேட்கிறீர்களா? சுத்த விவரங்கெட்ட ஆளா இருக்கிறீங்களே? என்னுடைய பதிவுகள்ப் படிப்பதில்லையா? இப்பத்தானே ஒரு பதிவு போட்டேன். கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை என்று. இந்தக் கொள்கைக்கு அரசுதான் வழிகாட்டி. இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.

இலவசங்களுக்கு வருவோம். சாப்பாட்டுக்கு இலவச அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க என்ன செய்வது? அதற்குத்தான் இலவச டி.வி. யும் இலவச மின்சாரமும். இதெல்லாம் சரி, அப்பப்ப "கிக்" வேண்டுமே, அதற்கென்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் வேலை வாய்ப்புத்திட்டம். ஒரு தாளைக்குப் போய் புளிய மரத்தடியில் நான்கு மணி நேரம் உட்கார்ந்து கொண்டு ஒரு தூக்கம் போட்டால், தூங்கி எழுந்தவுடன் ஒரு குவார்ட்டருக்குத் தேவையான காசு கொடுக்கப்படும்.

வெயில் கடுமையாக இருக்கிறதா? இதோ ஃபேன். ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி கை வலிக்கிறதா? இதோ கிரைண்டர். குழம்புக்கு ஆட்டவேண்டுமா? இதோ மிக்சி. என்ன இல்லை நம் தாய்த்திரு நாட்டில்? சரி, நம்ம தோஸ்த் கூடப் பேசணுமே? என்ன பண்றதுன்னு யோசனையா? இதோ செல் போன் வந்து கொண்டே இருக்கிறது.

எல்லாம் சரி, தினசரி வெளிக்கி வருதே, அதுக்கு என்ன பண்றதுன்னு கேக்கப்படாது. இந்தியாவில பொறந்த ஒவ்வொருத்தனுக்கும் இதுக்கு என்ன பண்ணனும்னு தெரியும். ஊரு நாத்தமடிக்குதே? அதப்பத்தி நீ ஏனய்யா கவலைப் படறே? உன் காரியம் ஆச்சா? உன்வேலையைப் பார்த்தமான்னு இரு.


ஞாயிறு, 24 ஜூலை, 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.

இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!  எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.