ஊட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மே, 2015

ஏழைகளின் ஊட்டி

           
                      Image result for ஊட்டி சுற்றுலா இடங்கள்

அந்தக் காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் சொன்னது: "கோயமுத்தூர் ஏழைகளின் உதகமண்டலம்". இது அன்று உண்மையாக இருந்தது. நான் ஹைஸ்கூலில் படித்த காலத்தில் கோடை விடுமுறையின் போது பகல் முழுவதும் நண்பர்களுடன் வெளியில்தான் சுற்றிக்கொண்டு இருப்போம்.

அப்போதெல்லாம் வானம் மேகமூட்டமாகவே இருக்கும். வெயிலின் தாக்கமே தெரியாது. அவ்வப்போது கோடை மழை பெய்யும். காடை மழை என்றால் அன்று பகல் முழுவதும் கொஞ்சம் வெயில் கடுமையாக இருக்கும். மாலை நான்கு அல்லது நான்கரை மணி வாக்கில் வானத்தில் மேகங்கள் கருகும்மென்று சேர்ந்து விடும். சடசடவென்று பலத்த மழை வரும். ஒரு அரை மணி நேரம் பெய்யும். பிறகு சடாரென்று நின்று விடும். வானம் வெளுத்து நிர்மலமாகி விடும்.

ஒவ்வொரு சமயம் ஆலங்கட்டி மழையும் பெய்யும். சமீப காலத்தில் ஆலங்கட்டி மழையையே நான் பார்க்கவில்லை. என் பேரன்களுக்கெல்லாம் ஆலங்கட்டி மழை என்றால் எப்படியிருக்கும் என்றே தெரியாது.

அப்போது ஒரு தென்றல் வீசும் பாருங்கள். குளுகுளுவென்று, அப்படியே சொர்க்க லோகம் போல் இருக்கும். வீதிகளில் மழைத் தண்ணீர் ஆறு போல ஓடும். அதில் காகிதக் கப்பல்கள் விடுவோம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் எல்லாம் சுத்தமாக வடிந்து விடும். மழை நீர்க்கால்வாய்கள் அப்படிப் பராமரிக்கப்பட்டு இருந்தன.

எப்போது கோயமுத்தூர் கோவை என்றாகி, உதகமண்டலம் உதகை என்றாகியதோ அப்போதிலிருந்து கோடை மழை பெய்வது நின்று விட்டது. கோடை காலத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக ஆரம்பித்தது. மழை குறைந்து விட்டது.

ஆனால் இந்த வருடம் அதிசயமாக கோவையில் கடந்த 20 நாட்களாக தினமும் மழை வருகிறது. அந்தக்காலத்துக் கோடை மழை மாதிரி இல்லை. மான்சூன் மழை மாதிரி சிணுங்கிக்கொண்டே இருக்கிறது. சில சமயம் பலமாகப் பெய்கிறது. ஆனால் பெரும்பாலும் தூறல்தான். எப்படியோ கோவை இப்போது குளுகுளுவென்று ஊட்டி மாதிரி இருக்கிறது. வெள்ளைக்கார்ன் வார்த்தை பலிக்கிறது.

மழை பலமாகப் பெய்தால் கோவையில் பல ரோடுகளில் ஆறுகள் ஓடுகின்றன. மழை நீர்க்கால்வாய்கள் அவ்வளவு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. என்ன செய்வது?

பகலிலேயே குளிருகிறது. சட்டை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரவில் போர்வை போர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது கத்திரி வெயில் காலம். மற்ற ஊர்களில் வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால் கோவையில் நாங்கள் ஊட்டியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உட்டியில் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. ரோடுகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பாதைகள் பல மணி நேரம் அடைக்கப்படுகின்றன.

ஊட்டியில் மழை பெய்தால் மனிதன் அங்கே இருக்கமுடியாது. அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லாம் யார் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் எல்லாம் காட்டு வாசிகள். அவர்களுக்கு வெயிலும் ஒன்றுதான் மழையும் ஒன்றுதான். அவர்கள் ஒரு போர்வையை மடித்து தலைக்குப் போட்டுக்கொண்டு அவர்களின் வழக்கமான வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பாரகள். நாம் போனால் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு ரூமிலேயே அடைந்து கிடக்கவேண்டியதுதான்.

ஆகவே இந்த வருடம் ஊட்டிக்கு புரொக்ராம் போட்டிருந்தவர்கள் எல்லோரும் கோவைக்கு வந்து விடவும். உங்கள் சௌகரியத்திற்காக ஊட்டியையே கோவைக்கு வரவழைத்திருக்கிறோம்.