அந்தக் காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் சொன்னது: "கோயமுத்தூர் ஏழைகளின் உதகமண்டலம்". இது அன்று உண்மையாக இருந்தது. நான் ஹைஸ்கூலில் படித்த காலத்தில் கோடை விடுமுறையின் போது பகல் முழுவதும் நண்பர்களுடன் வெளியில்தான் சுற்றிக்கொண்டு இருப்போம்.
அப்போதெல்லாம் வானம் மேகமூட்டமாகவே இருக்கும். வெயிலின் தாக்கமே தெரியாது. அவ்வப்போது கோடை மழை பெய்யும். காடை மழை என்றால் அன்று பகல் முழுவதும் கொஞ்சம் வெயில் கடுமையாக இருக்கும். மாலை நான்கு அல்லது நான்கரை மணி வாக்கில் வானத்தில் மேகங்கள் கருகும்மென்று சேர்ந்து விடும். சடசடவென்று பலத்த மழை வரும். ஒரு அரை மணி நேரம் பெய்யும். பிறகு சடாரென்று நின்று விடும். வானம் வெளுத்து நிர்மலமாகி விடும்.
ஒவ்வொரு சமயம் ஆலங்கட்டி மழையும் பெய்யும். சமீப காலத்தில் ஆலங்கட்டி மழையையே நான் பார்க்கவில்லை. என் பேரன்களுக்கெல்லாம் ஆலங்கட்டி மழை என்றால் எப்படியிருக்கும் என்றே தெரியாது.
அப்போது ஒரு தென்றல் வீசும் பாருங்கள். குளுகுளுவென்று, அப்படியே சொர்க்க லோகம் போல் இருக்கும். வீதிகளில் மழைத் தண்ணீர் ஆறு போல ஓடும். அதில் காகிதக் கப்பல்கள் விடுவோம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் எல்லாம் சுத்தமாக வடிந்து விடும். மழை நீர்க்கால்வாய்கள் அப்படிப் பராமரிக்கப்பட்டு இருந்தன.
எப்போது கோயமுத்தூர் கோவை என்றாகி, உதகமண்டலம் உதகை என்றாகியதோ அப்போதிலிருந்து கோடை மழை பெய்வது நின்று விட்டது. கோடை காலத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக ஆரம்பித்தது. மழை குறைந்து விட்டது.
ஆனால் இந்த வருடம் அதிசயமாக கோவையில் கடந்த 20 நாட்களாக தினமும் மழை வருகிறது. அந்தக்காலத்துக் கோடை மழை மாதிரி இல்லை. மான்சூன் மழை மாதிரி சிணுங்கிக்கொண்டே இருக்கிறது. சில சமயம் பலமாகப் பெய்கிறது. ஆனால் பெரும்பாலும் தூறல்தான். எப்படியோ கோவை இப்போது குளுகுளுவென்று ஊட்டி மாதிரி இருக்கிறது. வெள்ளைக்கார்ன் வார்த்தை பலிக்கிறது.
மழை பலமாகப் பெய்தால் கோவையில் பல ரோடுகளில் ஆறுகள் ஓடுகின்றன. மழை நீர்க்கால்வாய்கள் அவ்வளவு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. என்ன செய்வது?
பகலிலேயே குளிருகிறது. சட்டை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரவில் போர்வை போர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது கத்திரி வெயில் காலம். மற்ற ஊர்களில் வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால் கோவையில் நாங்கள் ஊட்டியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உட்டியில் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. ரோடுகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பாதைகள் பல மணி நேரம் அடைக்கப்படுகின்றன.
ஊட்டியில் மழை பெய்தால் மனிதன் அங்கே இருக்கமுடியாது. அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லாம் யார் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் எல்லாம் காட்டு வாசிகள். அவர்களுக்கு வெயிலும் ஒன்றுதான் மழையும் ஒன்றுதான். அவர்கள் ஒரு போர்வையை மடித்து தலைக்குப் போட்டுக்கொண்டு அவர்களின் வழக்கமான வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பாரகள். நாம் போனால் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு ரூமிலேயே அடைந்து கிடக்கவேண்டியதுதான்.
ஆகவே இந்த வருடம் ஊட்டிக்கு புரொக்ராம் போட்டிருந்தவர்கள் எல்லோரும் கோவைக்கு வந்து விடவும். உங்கள் சௌகரியத்திற்காக ஊட்டியையே கோவைக்கு வரவழைத்திருக்கிறோம்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி சார்.
கோவை அளவு இல்லா விட்டாலும் சென்னையிலும் கத்தரி வெயில் அந்த அளவு இல்லை. எனினும் ஜூன் மாதத்தை நினைத்துக் கவலையாய் இருக்கிறது. உண்மையான கத்தரி வெயில் சில வருடங்களாக ஜூனில்தான் வறுத்தெடுக்கிறது!
பதிலளிநீக்குஆலங்கட்டி மழை சமீபத்தில் பெங்களுருவில் பெய்ததாக என் உறவினர் வாட்சப்பில் படம் அனுப்பி இருந்தார். ஜி எம் பி ஸார் இருக்கும் ஏரியாவில் கூட ஆலங்கட்டி மழை பெய்திருக்கலாம்!
இப்போது பொள்ளாச்சி, கோவையின் இடத்தைப் பிடித்து ஏழைகளின் ஊட்டி என்றாகிவிட்டது என நினைக்கிறேன். சீசனை அனுபவிக்க கோவைக்கு வர சொல்லியிருக்கிறீர்கள். வர முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குநல்லது ஐயா... என்ஜாய்...
பதிலளிநீக்குசெல்வந்தர்களின் கோவை என்று ஊட்டியைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. கிடைத்த இனிமையை அனுபவியுங்கள். முப்பது வருடங்களுக்கு முந்தைய கோவை ஊட்டியை விட மேலாகவே தோன்றியது .
பதிலளிநீக்குகோவைக்கு அழைத்துள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது.
பதிலளிநீக்குஇன்றைய தேதியில் தங்களையும் சேர்த்து எனக்குத்தெரிந்து மூன்று நல்லோர் கோவையில் இருப்பதால் மழை பெய்து வருகிறது. நினைக்கவே மனதுக்கு குளுகுளுவென்றும் ஜிலுஜிலுவென்றும் உள்ளது. உங்கள் மூவர் தயவால் திருச்சி வரையிலும், மற்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. தங்கள் மூவருக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.
கத்தரிக்கு முன்பு சென்னையில் வெயில் அதிகம்! இப்போது கொஞ்சம் குறைவுதான்! ஸ்ரீராம் ஐயா சொன்ன மாதிரி ஜுனில் வறுத்தெடுக்குமோ என்னமோ? கோவை ஊட்டியானதில் மகிழ்ச்சி! நன்றி!
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி ஐயா உடன் வருகிறேன்.
பதிலளிநீக்குஇந்த வருடம் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் மே மாதத்தில் நல்ல மழை. சீசன் மாறுகிறதோ என்று சந்தேகம். பெரிய பெரிய ஆலங்கட்டிகள் மழையாய்ப் பெய்தது.
பதிலளிநீக்குகோவைக்கு வரலாம்தான்!
பதிலளிநீக்குஉங்களின் முகவரியைக் கொடுக்க மறந்துவிட்டீர்கள்!!!
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை. இங்கு திருச்சியிலும் நல்ல மழை. அக்கினி நட்சத்திரம் ஆதிக்கம் இல்லை. கோவை பணக்காரர்களின் ஊர் என்றுதான் கேள்விப் பட்டு இருக்கிறேன். கோவை கிருஷ்ணன், ஜி.டி.நாயுடு மூளைகளைப் பற்றியும் கேள்வி ஞானம் உண்டு.
பதிலளிநீக்குஐயா இந்த வருடத்தில் சென்னையில் கூட கத்திரி வெயில் சற்று குறைவாக உள்ளதோ என்று தோன்றுகின்றது. வெயில் அடித்து வேர்த்தாலும் இப்போது இங்கும் மழை சிறிதாவது பெய்து இரவு ஏசி போடாமல் பால்கனி கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கினால் (எங்கள் வீட்டுக்கு அடுத்த கட்டிடம் போலீஸ் ஸ்டேஷன் என்பதும் அடிஷனல் தகவல்...) மிக மிக இதமாக இருக்கின்றது. சென்னையும் கூட கோயம்புத்தூருக்குப் போட்டி போடுகின்றதோ....கோவை ஊட்டியானால்....சென்னை கோவையாகுமா?!!!!!! எஞ்சாய் ஐயா! ம்ம்ம் ஜூன் எப்படி இருக்கப் போகுதோ? சென்னையிலும் ஆலங்கட்டி மழை பெய்ததுண்டு ஐயா.....
பதிலளிநீக்கு-கீதா
துளசி: எங்கள் ஊர் நிலம்பூர் கேரளாவில் கொஞ்சம் வெயில் அடித்தாலும் பின் மழைதான்..அதுவும் ஊட்டி எங்கள் ஊரிலிருந்து 31/2 மணி நேரப்பயணம் தான்....அதனால் அங்கு மழை என்றால் எங்கள் ஊரிலும் மழை பெய்யும். மலை ஊர் இல்லையா...அதனால்...வெயிலின் தாக்கம் சற்றுக் குறைவுதான்....
1980களில் தாங்கள் கூறியுள்ள பருவ கால நிலையை அனுபவித்துள்ளேன். மிதமான குளிர் மனதிற்கு இதமாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐயா நன்றி
பதிலளிநீக்குகுடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
தம +1