கர்ம வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்ம வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மே, 2013

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)