அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் வந்திருந்தனர். அவர்களை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் புதிய அலுவலகத்தின் வரவேற்பறையில் சந்தித்தோம்.
அரசு கொடுத்த மான்யத்தில் கிறுக்கர்கள் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு அலுவலகம் ஏற்பாடு செய்தது பதிவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு சதுர அடி பரப்பில் நகர மத்தியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். லிப்ட் வசதி உண்டு. வாடகை வெறும் 50000 ரூபாய் மட்டுமே. மின்கட்டணம், அலுவலக பராமரிப்பு ஆகியவைகளுக்குத் தனியாக 5000 ரூபாய்.
அலுவலகத்திற்கு வேண்டிய மேஜை, நாற்காலிகள் இத்தியாதிகள் வாங்க 10 லட்சம் ஆனது. தலைவர், உபதலைவர், காரியதரிசி ஆகியோருக்கு தலா 50000 ரூபாயில் ஆப்பிள் ஸ்மார்ட் போன் கொடுக்கப்பட்டது. அலுவலகத்திற்கு தனியாக ஒரு லேண்ட்லைன் போன், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர், பிரின்டர் இத்தியாதிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கம்ப்யூட்டரைப் பராமரிக்க மற்றும் மற்ற அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு இளம் தமிழச்சியை அலுவலக உதவியாளராக மாதம் 10000 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தினோம்.
இன்டீரியர் டெக்கரேட்டர் ஒருவரைப்பிடித்து அலுவலகத்திற்குள் சிலபல டெக்கரேஷன்கள் ஒரு 10 லட்சம் ரூபாயில் செய்தோம். ஆங்காங்கே செயற்கைச் செடிகள் பொருத்தமாக வைக்கப்ப்ட்டன. அலுவலக உபயோகத்திற்காக ஒரு ஏசி கார் 20 லட்சம் ரூபாயில் வாங்கினோம். இந்தக் காரை ஓட்டுவதற்கு ஒரு நல்ல ஓட்டுனரை ஏற்பாடு செய்தோம். ஓட்டுனர் சம்பளம் மாதம் 15000 ரூபாய்.
இவை எல்லாம் வீண் செலவுகள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் இனம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஓர் இனத்தை முன்னேற்ற விரும்பும் ஒரு சங்கத்தின் அலுவலகம் எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்கவேண்டாமா? அதற்காகத்தான் இந்த செலவுகள் செய்தோம்.
சங்க ஆபீஸ் தடபுடல்களைப் பார்த்த அம்மா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவரும் கூட வந்த உதவிப்பேராசிரியர்களும் மலைத்துப்போய் விட்டார்கள். அவர்களை ஆசுவாசப் படுத்த குளிர் பானங்கள் கொடுத்து குடிக்கச்செய்தோம். பிறகு எங்களது செயல் திட்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம்.