ஜாக்கிரதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாக்கிரதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 பிப்ரவரி, 2015

அஜாக்கிரதையால் ஏற்படும் இழப்புகள்.

                                       Image result for கார்

கோவையில் கடந்த வாரம் நடந்த, தினத்தாள்களில் பிரசுரமான ஒரு நிகழ்வைப் பற்றிப் பாருங்கள்.

கோவைக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து ஒரு ஆண், அவனுடைய அக்கா, அவனுடைய தாய் ஆகிய மூவரும் கோவை புறநகர் பகுதியிலுள்ள ஒரு வங்கிக்கு வந்து அங்குள்ள சேமிப்பு அறையிலிருந்து 100 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டார்கள். கூடவே அவர்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாயும் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் குடும்பத்தில் ஏதாவது விசேஷங்கள் வரவிருக்கலாம்.

100 பவுன் நகை குறைந்த பட்சம் 20 லட்சம் மதிப்பு இருக்கும். பணம் 6 லட்சம். மொத்தம் 26 லட்சம். எப்படிப்பட்ட கோடீஸ்வரனுக்கும் இது ஒரு பெரிய தொகையாகும். நகைகளையும் பணத்தையும் ஒரு பையில் போட்டு, அவர்கள் வந்திருந்த காரில் ஏறி நகரத்திற்குள் வருகிறார்கள். நகைகளை மாற்றிச் செய்யவோ அல்லது அவைகளுக்கு மெருகு பூசவோ எதற்கென்று தெரியவில்லை.

வரும் வழியில் ஒரு சந்தடி மிகுந்த ஒரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக தாங்கள் வந்த காரை நிறுத்திப் பூட்டிவிட்டு உணவகத்திற்குள் சென்று விட்டார்கள். நகைகளும் பணமும் வைத்திருந்த பை காருக்குள்ளேயே இருக்கிறது. பூட்டிய கார்தானே என்ற நினைப்பு.

உணவகத்தில் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது காருக்குள் இருந்த பையைக் காணவில்லை. காரின் கதவுகளை பலவந்தமாக திறந்த தற்கான அறிகுறிகளும் இல்லை. பையை மட்டும் காணவில்லை. பிறகு என்ன? வழக்கமாக நடக்கும் புலம்பல்கள், போலீஸ், இத்தியாதிகள்.

இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் வேதனைகளை அனுபவித்தவர்-களுக்குத்தான் அந்தக் கஷ்டம் புரியும். போலீஸ்காரர்களினால் என்ன செய்ய முடியும்?  இந்த மாதிரி தினம் பத்து திருட்டுகள் நடக்கின்றன. எதையென்று தேடுவது?

இதில் எனக்குப் புரியாதது என்னவென்றால் 26 லட்சம் ரூபாய் என்பது அவர்களுக்கு அவ்வளவு அலட்சியமாகத் தோன்றியதா? இல்லை அது பூட்டிய காரில்தானே இருக்கிறது, என்ன ஆகிவிடும் என்ற அசட்டுத் தைரியமா? என்னவென்று புரியவில்லை. உணவகத்திற்குள் செல்லும்போது இவ்வளவு தொகையைக் காருக்குள் விடக்கூடாது, கையில் எடுத்துக்கொண்டு போகலாம் என்று ஏன் தோன்றவில்லை? கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்தால்தானே அதனுடைய அருமை தெரியும்.

கோயமுத்தூர்ல ஏதோ பாட்டன் பூட்டன் சம்பாதித்து விட்டுப்போன, "ஒடக்கான் கூட மொட்டு வைக்காத பொட்டல்காடு" எல்லாம் இன்றைக்கு ஒரு ஏக்கர் பல கோடிகளுக்கு விற்பதால் வந்த மமதைதான் இது என்று எனக்குத் தோன்றுகிறது. கார், பங்களா, நகை, நட்டு, பாங்கில் கணக்கு, கணிசமான கையிருப்பு இவையெல்லாம் இந்த பணத்தினால் வந்தவையாக இருக்கும். பத்துப் பதினைந்து லட்சம் ரூபாய் போட்டுக் கார் வாங்கியிருப்பார்கள். இதை யார் எப்படித் திறக்க முடியும் என்ற அதீத நம்பிக்கை.

உங்களுக்கு என்ன தோன்றுமோ, தெரியவில்லை?