கோவையில் கடந்த வாரம் நடந்த, தினத்தாள்களில் பிரசுரமான ஒரு நிகழ்வைப் பற்றிப் பாருங்கள்.
கோவைக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து ஒரு ஆண், அவனுடைய அக்கா, அவனுடைய தாய் ஆகிய மூவரும் கோவை புறநகர் பகுதியிலுள்ள ஒரு வங்கிக்கு வந்து அங்குள்ள சேமிப்பு அறையிலிருந்து 100 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டார்கள். கூடவே அவர்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாயும் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் குடும்பத்தில் ஏதாவது விசேஷங்கள் வரவிருக்கலாம்.
100 பவுன் நகை குறைந்த பட்சம் 20 லட்சம் மதிப்பு இருக்கும். பணம் 6 லட்சம். மொத்தம் 26 லட்சம். எப்படிப்பட்ட கோடீஸ்வரனுக்கும் இது ஒரு பெரிய தொகையாகும். நகைகளையும் பணத்தையும் ஒரு பையில் போட்டு, அவர்கள் வந்திருந்த காரில் ஏறி நகரத்திற்குள் வருகிறார்கள். நகைகளை மாற்றிச் செய்யவோ அல்லது அவைகளுக்கு மெருகு பூசவோ எதற்கென்று தெரியவில்லை.
வரும் வழியில் ஒரு சந்தடி மிகுந்த ஒரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக தாங்கள் வந்த காரை நிறுத்திப் பூட்டிவிட்டு உணவகத்திற்குள் சென்று விட்டார்கள். நகைகளும் பணமும் வைத்திருந்த பை காருக்குள்ளேயே இருக்கிறது. பூட்டிய கார்தானே என்ற நினைப்பு.
உணவகத்தில் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது காருக்குள் இருந்த பையைக் காணவில்லை. காரின் கதவுகளை பலவந்தமாக திறந்த தற்கான அறிகுறிகளும் இல்லை. பையை மட்டும் காணவில்லை. பிறகு என்ன? வழக்கமாக நடக்கும் புலம்பல்கள், போலீஸ், இத்தியாதிகள்.
இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் வேதனைகளை அனுபவித்தவர்-களுக்குத்தான் அந்தக் கஷ்டம் புரியும். போலீஸ்காரர்களினால் என்ன செய்ய முடியும்? இந்த மாதிரி தினம் பத்து திருட்டுகள் நடக்கின்றன. எதையென்று தேடுவது?
இதில் எனக்குப் புரியாதது என்னவென்றால் 26 லட்சம் ரூபாய் என்பது அவர்களுக்கு அவ்வளவு அலட்சியமாகத் தோன்றியதா? இல்லை அது பூட்டிய காரில்தானே இருக்கிறது, என்ன ஆகிவிடும் என்ற அசட்டுத் தைரியமா? என்னவென்று புரியவில்லை. உணவகத்திற்குள் செல்லும்போது இவ்வளவு தொகையைக் காருக்குள் விடக்கூடாது, கையில் எடுத்துக்கொண்டு போகலாம் என்று ஏன் தோன்றவில்லை? கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்தால்தானே அதனுடைய அருமை தெரியும்.
கோயமுத்தூர்ல ஏதோ பாட்டன் பூட்டன் சம்பாதித்து விட்டுப்போன, "ஒடக்கான் கூட மொட்டு வைக்காத பொட்டல்காடு" எல்லாம் இன்றைக்கு ஒரு ஏக்கர் பல கோடிகளுக்கு விற்பதால் வந்த மமதைதான் இது என்று எனக்குத் தோன்றுகிறது. கார், பங்களா, நகை, நட்டு, பாங்கில் கணக்கு, கணிசமான கையிருப்பு இவையெல்லாம் இந்த பணத்தினால் வந்தவையாக இருக்கும். பத்துப் பதினைந்து லட்சம் ரூபாய் போட்டுக் கார் வாங்கியிருப்பார்கள். இதை யார் எப்படித் திறக்க முடியும் என்ற அதீத நம்பிக்கை.
உங்களுக்கு என்ன தோன்றுமோ, தெரியவில்லை?
நிச்சயம் ரொம்ப வேண்டியவர்கள்தான் செய்திருக்க வேண்டும். பணம், நகை எடுக்கப் போகிறார்கள் என்று முன்னரே தெரிந்தவர்களாக இருக்கும். காருக்கு சாவி ரெடி செய்திருப்பார்கள். அல்லது இவர்கள் ஏதோ இன்கம்டேக்ஸ் காரணத்துக்காக பொய் சொல்ல வேண்டும். :))))
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் காரணங்கள் சரியாகப் படுகின்றன.
நீக்குஉண்மையில் நம்பத்தான் முடியவில்லை. ஆனாலும் சில சமயங்களில் உண்மைகள் புனைவுகளை விட விசித்திரமானவை
பதிலளிநீக்குகாரணம் என்னவாக இருந்தாலும் கவனம் முழுமையாக இருக்கவேண்டும். கவனக்குறைவே இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.
பதிலளிநீக்கு// கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்தால் தானே...? // என்பதும் சரி தான்...
பதிலளிநீக்குஅஜாக்கிரதையால் பலர் உயிரையே இழக்கிறார்கள் தினமும்! பணம் போனால் அரசாங்கம் அச்சடித்துவிடும்... எனவே கவலை தேவையில்லை!
பதிலளிநீக்கு"ஒடக்கான் கூட மொட்டு வைக்காத பொட்டல் காடு" அருமையான சொலவடை. இப்படி நிலங்களின் விலை அதிகமாக காரணம் என்னவென்றே புரியவில்லை. திடீரென்று ஒரு 10 வருடங்களாகத்தான் இந்த விலை உயர்வு. ஸ்ரீரங்கத்தில் ஒரு சதுர அடி 400 ரூபாய் என்று 2000ல் சொல்லும்போது அது அதிகம் என்று தெரிந்தது. ஆனால் இன்று அதே இடம் சதுர அடி 4000-5000 என்று சொல்லும் போது ஏனடா வாங்கிபோடவில்லை என்று மனது கிடந்தது அடித்துக்கொள்கிறது. ஒருபக்கம் "என்னதான் விளக்கெண்ணெய் உடம்பு முழுக்க பூசிக்கொண்டு பீச் மணலில் உருண்டு புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்" என்று மனது சமாதானம் செய்தாலும் இன்னொரு பக்கம் இப்படி வாழ்ந்துவிட்டோமே என்று கஷ்டமாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குசேலம் குரு
நமக்கு எது பிராப்தமோ அதுதான் வாய்க்கும்.
நீக்குஇது ஒரு நாடகமோ என்று தோன்றுகிறது. அம்பானியாகவே இருந்தாலும் 26 லட்சத்தை காரில் வைத்துவிட்டுப்போகமாட்டார்.
பதிலளிநீக்குசில நாட்களில் உண்மை வெளியே வந்துவிடும் பாருங்கள்.
திருச்சி அஞ்சு
ஒரு ஏக்கர் பல கொடிகள் இல்லை. சாய்பாபா காலனியில் ஒரு பிளாட் வைத்திருந்தால் போதும் ஒரு கோடிக்கு மேல். இன்னும் கோவையின் முக்கியமான இடங்களில் ( பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் அருகே) இன்னும் அதிகம்.
பதிலளிநீக்குகாயத்ரி மணாளன்
http://tamilmanam.net/forward_url.php?url=http://kalachakkarangal.blogspot.com/2015/02/blog-post_9.html&id=1359623
பதிலளிநீக்குஇந்த மாதிரி நேரத்திலெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதி நேரங்களில் வங்கிகளில் இப்படி லாக்கர் அறைக்கு நாம் செல்வதை கண்காணிக்கவே (வங்கி ஆட்கள் அல்ல. இந்த மாதிரி கொள்ளை அடிக்க) ஒரு சில கும்பல் வங்கியை சுற்றி நோட்டம் இட்டுக்கொண்டே இருக்கும். எனவே அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். லாக்கர் செல்கிறோம் என்பது நமக்கே கூட தெரிந்துவிடக்கூடாது என்னும் அளவு ஜாக்கிரதை தேவை.
பதிலளிநீக்குதிருச்சி அஞ்சு
//உணவகத்திற்குள் செல்லும்போது இவ்வளவு தொகையைக் காருக்குள் விடக்கூடாது, கையில் எடுத்துக்கொண்டு போகலாம் என்று ஏன் தோன்றவில்லை? கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்தால்தானே அதனுடைய அருமை தெரியும்.//
பதிலளிநீக்குகேட்க கஷ்டமாக இருந்தாலும் முற்றிலும் உண்மை. ஒரு வேளை உணவகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. இவ்வளவு பெரிய பையையோ பெட்டியையோ யாராவது பார்த்தால் தேவையில்லாமல் தொந்திரவை வரவழைத்துக்கொள்வோம் என்ற பயமும் இருக்கலாம். காரில் ஒருவரை உட்காரவைத்துவிட்டு மீதி பேர் சாப்பிட்டு விட்டு பிறகு இவரை சாப்பிட அனுப்பியிருக்கலாம்.
நடந்த பிறகு இவ்வளவு யோசனைகள் வருகின்றன. இதை முன்பே யோசித்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
திருச்சி தாரு
//அவர்கள் குடும்பத்தில் ஏதாவது விசேஷங்கள் வரவிருக்கலாம்.//
பதிலளிநீக்குஅது கல்யாணத்திற்காக என்று இருந்தால் இது ஒரு அசுப சகுனமாகவே கருதப்படும். அதவும் இவர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களாக இருந்தால் அவ்வளவுதான். அந்த மணப்பெண்ணை ராசியில்லாத பெண் என்று கரித்துக்கொட்டிவிடுவார்கள். இவர்கள் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, பாவம் அந்த பெண் மேல் ராசியில்லை என்று பழி விழும்
துளசி மைந்தன்
//இதை யார் எப்படித் திறக்க முடியும் என்ற அதீத நம்பிக்கை.//
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "நம்புங்கள் ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள்" என்று.
பதினைந்து லட்ச ரூபாய் காரை யாரும் திறக்க முடியாது என்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால் உள்ளே இருப்பது 26 லட்சம். எனவே ஜாக்கிரதையாக இருந்திருக்கத்தான் வேண்டும்.
திருச்சி அஞ்சு
அய்யா அவர்களே தொடரட்டும் உங்கள் பதிவுலகப்பணி.
பதிலளிநீக்குசென்ற 2012ல் 208 பதிவுகள் இட்டுள்ளீர்கள். தற்போது இரண்டு மாதம் முடிவதற்குள் 37 பதிவுகள் வந்துவிட்டன. இதே வேகத்தில் சென்றால் 250 பதிவுகள் வந்துவிடும் என்று நினைக்கிறேன். தங்களின் 2015ம் ஆண்டின் 250 வது பதிவுக்கு முன்கூட்டியே எங்களது வாழ்த்துக்கள்
சேலம் குரு
பழனி கந்தசாமி ஐயா...
பதிலளிநீக்குநானும் இந்த செய்தியினைப் படித்தேன். கோவையை சொந்த ஊராகக் கொண்ட எனக்கு ஒரே வியப்பு. எப்படி இவ்வளவு தங்க நகை மற்றும் பணத்தினை அசட்டு தைரியத்துடன் காரில் வைத்து விட்டு உணவகத்திற்கு சென்று நிம்மதியுடன் சாப்பிடமுடியும்? கையிலே எடுத்துக்கொண்டு உணவகம் செல்வது கூட ஆபத்தாக முடியலாம்.
இந்த அக்கா தம்பிக்கு கூட விவரம் புரியாமல் (பணத்தினைப் பற்றிய) இருக்க கூடும். ஆனால் அந்த தாய்? அவருக்கு தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பு நன்றாக தெரிந்து இருக்க வேண்டுமல்லவா?
கலிகாலம் முற்றிக்கொண்டே வருகிறது.
அன்புடன்,
சங்கர நாராயணன்.தி
ஆம்ஸ்டர்டாம்.
பிறருக்கு ஏற்படும் அசம்பாவிதங்ளுக்கு மனம் வருந்துவதை,விட்டு அதற்குரிய காரணங்களை இப்படிஇருக்கலாமோ,அப்படி இருக்கலாமோ என்றெல்லாம் 'கற்பனை' செய்து பார்க்க மனம் அஞ்சுகிறது
பதிலளிநீக்குமாலி.
எது அதிஜாக்கிரதை எது அஜாக்கிரதை என்பதே புரிவதில்லை. பூட்டிய காருக்குள் இருக்கும் பை போகும் என்று யார் நினைப்பார்கள். on hind sight ஸ்ரீராம் சொல்வது போலும் இருக்கலாம்
பதிலளிநீக்குகவனம் மிக மிக தேவை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குமலர்
நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது தான் சரியென்று நினைக்கின்றேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் தாமிரபரணி 6
அலட்சியம்தான்!
பதிலளிநீக்குஅய்யா, தாங்கள் தான் முதல் பிரபல பதிவாளராக எனது வலை மனையை பார்த்து கருத்துக்கள் இட்டமைக்கு மிக்க நன்றி. தங்களது கருத்துக்களும், அறிவுரைகளும் என்னை போன்ற புதிய பதிவருக்கு மிக மிக முக்கியம்.
பதிலளிநீக்குதங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை. வாழ்க வளமுடன்.
நேற்று தான் வலைத்தளம் தொடங்கி எனது கன்னி முயற்சியாக முதல் இரண்டு பதிவுகளை பதிவுசெய்தேன்.
தங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
www.kalachakkrangal.blogspot.com
நான் பிரபல பதிவர் என்று எப்போதும் என்னைக் கருதுவது இல்லை. நானும் உங்களைப்போல் சாதாரணமானவன்தான். உங்கள் தளம் வளர என் வாழ்த்துக்கள்.
நீக்குஉழைத்து சம்பாதித்து இருந்தால் அதன் அருமை புரியும்.நண்பர் ஒருவர் பைக்கின் பெட்டியில் பெரிய தொகையை வைத்து விட்டு கடையில் பொருள் வாங்கிவிட்டு திரும்ப வந்து பார்த்தால் பணம் அபேஷ் செய்யப்பட்டு விட்டது!எவ்வளவு பட்டாலும் மக்கள் திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களே!அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்! மனசு கஷ்டமாக இருக்கிறது!
பதிலளிநீக்குஇது போன்ற நிகழ்வுகள் நடப்பதை ஊடகங்கள் தெரிவித்தும், நம்மில் பலர் விலை மதிப்புள்ள பொருட்களை வாகனங்களில் அஜாக்கிரதையாய் வைத்துவிட்டு கடைகளுக்கோ அல்லது உணவகங்களுக்கோ சென்றுவிட்டு பின்னர் அவை களவாடப்பட்டது அறிந்து புலம்புவது ஏன் எனத் தெரிவில்லை.
பதிலளிநீக்குஅஜாக்கிரதை மனிதனுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும், பொருள் மட்டுமல்ல சிலசமயங்களில் உயிருக்கு கூட ஊரு விளைவிக்கும். நல்ல பதிவு
பதிலளிநீக்கு26 லட்சத்தை இப்படியா வைத்துச் செல்வார்கள்.
பதிலளிநீக்கு"ஒடக்கான் கூட மொட்டு வைக்காத பொட்டல் காடு" - இப்போது தான் இதைக் கேள்விப்படுகிறேன்....
பதிலளிநீக்குஇப்படிக்கூடவா அஜாக்கிரதையாக இருப்பார்கள்...... :(
"ஒடக்கான் கூட மொட்டு வைக்காத பொட்டல் காடு" ஒன்றுக்கும் உதவாத தரிசல் பூமியை கோயமுத்தூர்ப் பக்கம் இப்படித்தான் சொல்வார்கள். உங்கள் மனைவிக்கு இந்த சொற்பிரயோகம் பரிச்சயம் இருக்கலாம்.
நீக்குஇது விதி, அது வலியது.
பதிலளிநீக்குஎவ்வளவோ அவதானமாக வாழ்ந்தும் , மிகப் புகழும், திறனும் மிக்க வைத்தியரிடம்
காண்பித்தும் சில உயிர்கள் பிரிந்து விடுகின்றனவே!
சிலர் பின்னூட்டத்தில் அவர்கள் இப்பணத்தை முறையாகச் சம்பாதிக்கவில்லையோ அதனால் தொலைத்து விட்டார்கள், உடல் வருத்தி சம்பாதிக்காததால் அதன் அருமை தெரியவில்லை எனக் குறிப்பிடுகிறார்கள்.
அப்படியெல்லாம் நாம் முடிவுக்கு வரக்கூடாது.
அனுபவத்தால் கூறுகிறேன். நான் உழைக்கத் தொடங்கிய காலம் முதல் என் மனச் சாட்சிக்கு விரோதமாக ஒரு சதம் சம்பாதிக்கவில்லை.
ஆனால் கோயபுத்தூர் ஆளிடம் சுமார் 30 லச்சம் ஏமாற்றப்பட்டேன். மிக மிக அவதானமாக இருந்தும், நம்பிக் கெட்டேன். ஆரம்பத்தில் கவலை இருந்தது, பின் தேறி விட்டேன். விதியென விட்டு விட்டேன்.
30 ஆண்டு வெளிநாட்டு வாழ்வில் அதிகம் படிக்காத நான், உணவகத்தில் உண்ட கோப்பை கழுவியும் சம்பாதித்தேன்.
என்ன செய்வது போகவேண்டுமெனும் பலன். நான் தளரவில்லை, அத் தைரியத்தை இறைவன் எனக்குத் தந்தான்.
அந்த தொலைத்தவர்களுக்கு மனத் தைரியத்தை இறைவன் கொடுக்க வேண்டும்.
உண்மைதான் நண்பரே. விதி வலியதுதான். ஆனால் அதை ஏற்றுக்கொண்டு வாழ மிகுந்த மன தைரியம் தேவை. அது உங்களிடம் இருப்பதைக் கண்டு மனமாரப் பாராட்டுகின்றேன்.
நீக்கு