சனி, 13 மார்ச், 2010

ஜோசியம் இருக்கட்டுமா, வேண்டாமா?



எதிர்காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. ஜோசியம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். இனி நடக்கப்போவதைத்தெரிந்து என்ன பிரயோஜனம்? நல்ல எதிர்காலம் என்றால் சந்தோஷம் ஏற்படும். ஆனால் அந்த சந்தோஷம் மெதுவாக நீர்த்துப்போய், அந்த சம்பவம் உண்மையாக நடக்கும்போது சந்தோஷம் ரொம்பவும் குறைந்து போய்விடும்.


அதேபோல் துக்கமான எதிர்காலம் வரப்போகிறது என்றால் அன்று முதலே துக்கம் ஆரம்பித்துவிடும். ஒருவனுக்கு 6 மாதத்தில் மரணம் சம்பவிக்கும் என்றால் அவன் அதைக்கேட்ட நாள் முதல் கவலையில் மூழ்கி விடுவான். அவன் இறக்கும் நாள்வரை கவலையிலேயே இருந்து பிறகு இறப்பான்.


ஆகவே ஜோசியத்தினால் ஒருவனுடைய சந்தோஷம் குறைந்து விடுகிறது, துக்கம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த இரண்டு சூழ்நிலைகளுமே தேவையற்றதுதானே.



ஜோசியம் பொய்யென்றால் பிறகு அதைத் தெரிந்து என்ன பலன்?
ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் ஜோசியத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எதனால்? ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள். வந்தவர்களின் மனோநிலையை அனுசரித்து உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்வார்கள். ஜாதகப்பிரகாரம் ஒரு கெடுதல் நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை மிக சாமர்த்தியமாக மாற்றி ஒரு குறிப்பாக மட்டும் சொல்லிவிட்டு,எதற்கும் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் என்று சொல்வார்கள். ஜோசியர்களுடைய கணிப்பு என்னவென்றால் ஜாதகப்பிரகாரம் கெட்ட பலன் வருவதாக இருந்தாலும் அவனுடைய பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் அந்த கெடுதல் நடக்காமலும் போகலாம்.

ஆனால் ஜோசியம் பார்க்க வந்தவர்களுடைய மனது சந்தோஷப்படும்படியான பலன்களைச்சொல்வதனால் அவர்கள் தன்னம்பிக்கையும் புது ஊக்கமும் பெற்று தங்கள் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள். இது ஒரு பெரிய ஆறுதலல்லவா?

வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. மனோதைரியம் உள்ளவன் தாழ்வுகளை எதிர்கொண்டு வெற்றி அடைகிறான். மனோபலம் குறைந்தவர்களுக்கு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அந்த ஊன்றுகோல் வீட்டுப்பெரியவர்களின் ஆறுதலாக இருக்கலாம், கடவுள் பக்தியாக இருக்கலாம், சாமியார்களின் அருளுரைகளாக இருக்கலாம். நித்தியானந்தரும் அதைத்தான் செய்து வந்தார். அவருடைய விதி ரஞ்சிதா ரூபத்தில் வந்து அவரைப் புரட்டிப்போட்டு விட்டது.

அமெரிக்காவில் வீதிதோறும் மனோதத்துவ நிபுணர்கள் கடை விரித்து வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் செய்யும் கவுன்சிலிங்கை நம்மூர் ஜோசியர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். ஆகவே ஜோசியம் நிஜமா, பொய்யா என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு அதனால் மனித சமுதாயத்திற்கு நன்மை இருந்தால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே.

24 கருத்துகள்:

  1. "ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள். வந்தவர்களின் மனோநிலையை அனுசரித்து உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்வார்கள். ஜாதகப்பிரகாரம் ஒரு கெடுதல் நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை மிக சாமர்த்தியமாக மாற்றி ஒரு குறிப்பாக மட்டும் சொல்லிவிட்டு,எதற்கும் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் என்று சொல்வார்கள். ஜோசியர்களுடைய கணிப்பு என்னவென்றால் ஜாதகப்பிரகாரம் கெட்ட பலன் வருவதாக இருந்தாலும் அவனுடைய பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் அந்த கெடுதல் நடக்காமலும் போகலாம்."

    என்னங்க இது?

    நல்லா சொல்றிங்க விளக்கம்! நீங்க சொல்றதப் பார்த்தா ஜோசியக்காரனுக்கு உங்களுக்கு நடக்கப் போறது
    எல்லாம் தெரியும். ஆனால் உங்களுக்கு தேவையான நல்லது மட்டும் சொல்லி டாக்டர் தொழில் பார்கிறார்கள் என்று சொல்வது போல்?

    ஜோசியர்கள் ஏமாற்றுகாரர்கள் என்பதை இப்படிக் கூட சொல்வின்களோ ?

    பதிலளிநீக்கு
  2. "நாளும் நலமே விளையட்டும்" சொன்னது

    //நல்லா சொல்றிங்க விளக்கம்! நீங்க சொல்றதப் பார்த்தா ஜோசியக்காரனுக்கு உங்களுக்கு நடக்கப் போறது
    எல்லாம் தெரியும். ஆனால் உங்களுக்கு தேவையான நல்லது மட்டும் சொல்லி டாக்டர் தொழில் பார்கிறார்கள் என்று சொல்வது போல்?//

    ஏறக்குறைய அப்படித்தான் என் மனதிற்கு படுகிறது. டாக்டர்கள் உடம்பிற்கு மருந்து கொடுக்கிறார்கள். ஜோசியர்கள் மனதிற்கு மருந்து கொடுக்கிறார்கள்.

    உண்மையோ, பொய்யோ, மருந்து வேலை செய்து நோய் குணமானால் அது நல்லதுதானே. "Pacebo" என்பது டம்மி மாத்திரை. சில பேருக்கு டாக்டர்கள் இந்த மாத்திரை கொடுப்பார்கள். அதை சாப்பிடுபவன் இரண்டு நாள் கழித்து அவனுடைய நோய் சரியாகிவிட்டதாக உணர்வான்.
    பல்லியை விழுங்கியதாக நம்பிய ஒருவனுக்கு ஒரு நாட்டு வைத்தியர் செய்த வைத்தியம் பற்றிய கதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அது மாதிரிதான் இதுவும்.

    நாளும் நலமே விளையட்டுமே :)

    பதிலளிநீக்கு
  3. "ஆனால் ஜோசியம் பார்க்க வந்தவர்களுடைய மனது சந்தோஷப்படும்படியான பலன்களைச்சொல்வதனால் அவர்கள் தன்னம்பிக்கையும் புது ஊக்கமும் பெற்று தங்கள் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள். இது ஒரு பெரிய ஆறுதலல்லவா? "
    திறனாய்வு ஓகே ஆனால் ஜோசியம் என்னும் விசத்தை நம்ப மனம் மறுக்கிறது

    அடுத்த பதிவு எதை பற்றி

    கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழை வராமல் தடுக்குமாமே? எனவே அந்த மரத்தை பற்றி உங்களிடம் பதிவு எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. ஐயா!
    வேண்டாமென்பேன். ஆனால் விட்டு விடுவார்களா? இது பிழைப்பல்லா?
    இத்தனை போலிச் சாமியார் மாட்டியும், தொழில் படுத்ததா? நாம் பார்த்ததெல்லாம்
    பக்தையின் சேவையாமே!!! இது எந்த வகைச் சேவை ,பெரியவர் உங்களுக்காவது
    புரிகிறதா? நித்தியானந்தனுக்கு, உடல் நலமில்லாதபோது,ரஞ்சிதா ஒரு பக்தையாகச் செய்த சேவையாம் அது,
    உடல் நலத்துக்கு இப்படியெல்லாம் சேவையிருக்கா? (இன்று திருவாய் மலர்ந்துள்ளார்)

    பதிலளிநீக்கு
  5. எங்க ஊர்ல யாராச்சுக்கு சீக்கு வந்துட்டா மொதல்ல ஜோசியர்கிட்டத்தான் போவாங்க. ஜோசியர் ஜாதகத்தெ பாத்துட்டு "வைத்தியம் பண்ணினா பொழச்சுக்குவார்" னு சொன்னாத்தான் அப்புறம் டாக்டர் கிட்ட போவாங்க.

    பதிலளிநீக்கு
  6. யோகன் பாரிஸ் சொன்னது

    //இத்தனை போலிச் சாமியார் மாட்டியும், தொழில் படுத்ததா? நாம் பார்த்ததெல்லாம்
    பக்தையின் சேவையாமே!!! இது எந்த வகைச் சேவை ,பெரியவர் உங்களுக்காவது
    புரிகிறதா?//

    உலகத்திலே வெற்றிகரமாக பிழைக்க ஒரு முக்கியமான யுக்தி என்னவென்றால்- ஒருவன் ஒரு தவறு செய்து (நம்ம நித்தி மாதிரி) மாட்டிக்கொண்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். "நான் அப்படி செய்யவேயில்லை, எல்லோரும் வேண்டுமென்றே என் மீது பழி சுமத்துகிறார்கள்" என்று சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

    இதற்கு என்ன அர்த்தம் என்றால் - "ஆமாம் ஐயா, நான் அந்த தவறைத்தெரியாமல் செய்துவிட்டேன், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் (அப்படி செய்தாலும் மாட்டிக்கொள்கிற மாதிரி செய்யமாட்டேன்)ஆளைவிடுங்க" என்று அர்த்தம்.

    மாறாக ஆமாம், "ஆமாம், நான் அந்த தவறைச்செய்தேன்" என்று உண்மையைச் சொன்னால் என்ன அர்த்தம் என்றால் அந்த தவறை இரண்டாவது முறை செய்ததாக அர்த்தம். இதுதான் உலக நியதி.

    ஆகவே "ஸ்வாமிகள்" சொல்வது உலக நியதிக்கு உட்பட்டதே.இதை சும்மா ஊதி ஊதி பெரிது பண்ணக்கூடாது. அவர் என்ன நம் அரசியல்வாதிகள் செய்யாததையா செய்துவிட்டார்?

    பதிலளிநீக்கு
  7. அரும்பாவூர் சொன்னது

    //திறனாய்வு ஓகே ஆனால் ஜோசியம் என்னும் விசயத்தை நம்ப மனம் மறுக்கிறது//

    கடைல ஸவீட் வாங்கி சாப்பிடுகிறோம். செந்தில் பண்ணினமாதிரி யாரும் பூச்சி மருந்து அடித்திருக்க மாட்டார்கள் என்று நம்ம்ம்ப்ப்ப்பித்தானே சாப்பிடுகிறோம். நமக்கு ஒன்றும் ஆகாவிட்டால் சரி, ஒருவரும் மருந்து அடிக்கவில்லை என்று தெரிந்து கொள்கிறோம்.

    ஆகவே பலனிலிருந்துதான் நம்பிக்கை பிறக்கும்.

    பதிலளிநீக்கு
  8. Subbulakshmi said

    //ஜோசியர் ஜாதகத்தெ பாத்துட்டு "வைத்தியம் பண்ணினா பொழச்சுக்குவார்" னு சொன்னாத்தான் அப்புறம் டாக்டர் கிட்ட போவாங்க.//

    ஆமாங்க, நெஜம்தானுங்க. இனி புதுசா ஆஸ்பத்திரி கட்ற டாக்டர்களெல்லாம் ஜோசியருக்குன்னு ஒரு ரூம் கட்டவேண்டி வரலாம்! :)

    பதிலளிநீக்கு
  9. nala paathivu jothidam and jothidar are different
    awarness and indulectuval thoughts never grow by jothidam
    jothidam turn us to belive fate law it kills creativityness
    bharathi says jothidam thanai eekal with love



    balu

    பதிலளிநீக்கு
  10. ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையும்,தைரியமுமே வெற்றியை தரும்..!
    அது ஜோதிடம் மூலம் கிடைத்தால், கிடைத்து விட்டு போகட்டுமே

    பதிலளிநீக்கு
  11. அய்யா.
    தயவு செய்து தொழில் முறை ஜோசியக் காரன் போல் பேசாதீர்கள்.
    எதோ ஒரு நேரத்தைப் பார்த்தவுடன் ஜோசியக்கரனுக்கு எல்லாமே தெரியும்.
    அவன் உங்களுக்கு வேண்டிய நன்மை எல்லாம் செய்வான் என்று நம்புவதை
    விட முட்டாள் தனம் வேறு எது?

    இனியாவது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ஜோசியம் பொய் என்பதை.
    என்னால் ராமாயணம் ஏற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் அது எனக்கு சம்பந்தம் இல்லாக் கட்டுக் கதை,
    என்னைப் பற்றிக் கதைக் கட்டுபவனை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

    அறிவியலை நல்லதற்கு உபயோகம் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  12. நாளும், கோளும் நல்லவர்கட்கில்லை.

    தெளிந்த சிந்தையும் ,திடமான மனமும் .செயலில் நேர்மையும் இருந்தால் எங்கும் யாருக்கும் குழப்பமில்லை.

    மனதில் , செயலில் தூய்மை உள்ள வர்களுக்கு இது சாதாரணம்.

    குழம்பிய சிந்தையும், அல்லாடும் மனமும், செயலில் நேர்மையின்மையும் இருந்தால் அதனை அணுகும் போது குழம்பும். செய்வதறியாது தம்மை தாங்கி பிடிக்க, அதற்க்கு வழி சொல்ல துணை தேடும்.

    ஜோசியம், ஜாதகம், குறி சொல்லுதல், வேண்டுதல்,அருள் வாக்கு, சாமி ஆடுதல்,வாஸ்த்து,குபேரன் பொம்மை எல்லாம் வரும்,பின்னர் மருத்துவரும் வேண்டும்.

    மேலாக இங்கு படித்து கிழத்து மேல் நிலையில் உள்ளவர்களே ஜோசியம்,ஜாதஜம்,கண்திருஷ்டி பூசணிக்காய் என்று ஓடும் நிலையில் படிப்பறிவில்லா பாமர ஏழைகளின் நிலை இன்னும் மோசம்.

    தெய்வ நம்பிக்கை வேறு,மேலே சொன்ன அவலங்கள் வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவை இல்லை.

    தெய்வ நம்பிக்கை இருந்தால் மேல் சொன்னவைகளை நம்ப வேண்டும் என்று என்ன கட்டாயம்?

    ஆனால் அப்படி ஆக்கி வைத்துள்ளோம்.

    எத்தர்களின் கட்டில் பண மழை!!

    //கற்றூணில் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

    நற்றுணையாவது நமச்சிவாயமே //

    மணிவாசகருக்கு இந்த நம்பிக்கையே அசுர பலமாக இருந்தது. அவர் பயந்து ஓட வில்லை, மன்னனுக்கு பணியவில்லை, ஜாதகம், ஜோசியம் பார்க்க ஓடவில்லை. வருவது வரட்டும் என்று திடமான நம்பிக்கையில் இருந்தார்.ஆழ் கடலும் , சுண்ணாம்பு கால்வாயும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.மன்னனே இறுதியில் வீழ்ந்து வணங்கினான். அல்லவா?

    பதிலளிநீக்கு
  13. க்கஃகு-மாணிக்கம்,

    திடமான தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு ஜோசியம் தேவையில்லை, அது உண்மையாகவே இருந்தாலும் கூட. ஏனென்றால் எல்லாம் கடவுள் எண்ணப்படி நடக்கும், நடப்பதை ஏற்றுக்கொள்வோம் என்கிற மன திடம் அவனுக்கு இருக்கும்.

    உண்மையில் நான் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எந்த ஜோசியனிடமும் போனதில்லை. யாரும் போகத்தேவையுமில்லை என்பதே என் கருத்து. ஆனால் இந்த உலகம் வேறுவிதமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? முடிந்தவரை இந்தக்கருத்துகளை பரப்புவோம்.

    பதிலளிநீக்கு
  14. நாளும் நலமே விளையட்டும் சொன்னது

    //தயவு செய்து தொழில் முறை ஜோசியக் காரன் போல் பேசாதீர்கள்.
    எதோ ஒரு நேரத்தைப் பார்த்தவுடன் ஜோசியக்கரனுக்கு எல்லாமே தெரியும்.
    அவன் உங்களுக்கு வேண்டிய நன்மை எல்லாம் செய்வான் என்று நம்புவதை
    விட முட்டாள் தனம் வேறு எது?//

    உங்களுடைய தார்மீக கோபத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி. நான் யாரும் ஜோசியனிடம் சென்று ஏமாறுவதை விரும்பவில்லை. ஆனால் மக்கள் உண்மையைப்புரிந்து கொள்ளவேண்டும். இந்த ஜோசியர்களால் எத்தனை கல்யாணங்கள் தடைப்பட்டு நிற்கின்றன?

    இதைப்பற்றி இன்னொரு பதிவு போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. //மேலாக இங்கு படித்து கிழத்து மேல் நிலையில் உள்ளவர்களே ஜோசியம்,ஜாதஜம்,கண்திருஷ்டி பூசணிக்காய் என்று ஓடும் நிலையில் படிப்பறிவில்லா பாமர ஏழைகளின் நிலை இன்னும் மோசம்.

    தெய்வ நம்பிக்கை வேறு,மேலே சொன்ன அவலங்கள் வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவை இல்லை.

    தெய்வ நம்பிக்கை இருந்தால் மேல் சொன்னவைகளை நம்ப வேண்டும் என்று என்ன கட்டாயம்?

    ஆனால் அப்படி ஆக்கி வைத்துள்ளோம்.

    எத்தர்களின் கட்டில் பண மழை!!//

    கக்கு மாணிக்கம்

    //உண்மையில் நான் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எந்த ஜோசியனிடமும் போனதில்லை. யாரும் போகத்தேவையுமில்லை என்பதே என் கருத்து. ஆனால் இந்த உலகம் வேறுவிதமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? முடிந்தவரை இந்தக்கருத்துகளை பரப்புவோம்//

    Dr. P. Kandaswamy.

    குழம்பிய குட்டையில் மீன்கள் நிறைய கிடக்கும். மூட நம்பிக்கைகள் நிறைந்த இனத் இடமே எத்தர்களுக்கு வாழ வழி.

    நமக்கு வைத்துள்ள சமூக ஜாதி, மத்த அமைப்புக்களில் குட்டை குழப்பவும், அதில் மீன் பிடிப்பவர்கள் நிறைய இருக்கவும் தான் வழி வகைகள் உள்ளது.

    முடிந்தவரை இக்கருத்துக்களை பரப்புவோமே - செய்கிறோமே !!

    பதிலளிநீக்கு
  16. //அடுத்த பதிவு எதை பற்றி

    கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழை வராமல் தடுக்குமாமே? எனவே அந்த மரத்தை பற்றி உங்களிடம் பதிவு எதிர்பார்க்கிறேன் //

    ஹாய் அரும்பாவூர் சொன்னது



    இது என்ன சார் புது கதை? யார் அவிழ்து விட்டார்கள்?

    இதை விளக்க பல பதிவுகள் போட வேண்டும். இதற்கு நம் டாக்டர் சார் எதற்கு?

    நானே சொல்லிவிடுவேனே?

    இதற்கு சிறிதளவு இயற்கையியல் அல்லது உயிரியல்/தாவரவியல்(BOTANY) தெரிந்தால் போதுமே!

    அதைப்பற்றி பார்க்கும் முன்னர் ஒருவார்த்தை

    இயற்கையினால் உண்டான எதுவும் அந்த இயற்கைக்கு எதிரானது அல்ல, மனிதர்களை தவிர!

    கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் மட்டுமல்ல சப்பாத்தி, கள்ளி மற்று பல பாலை தாவரங்கள் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவது உண்மைதான்.

    ஆனால் அவைகள் மழைவராமல் தடுக்கும் காரணிகள் அல்ல.

    மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  17. //கற்றூணில் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

    நற்றுணையாவது நமச்சிவாயமே //

    மணிவாசகருக்கு இந்த நம்பிக்கையே அசுர பலமாக இருந்தது.// அன்பர் கக்கு- மாணிக்கம் அவர்கட்கு!இவ்வரிகள் திருநாவுக்கரசு நாயனாரது.

    பதிலளிநீக்கு
  18. //இவ்வரிகள் திருநாவுக்கரசு நாயனாரது//
    - யோகன் பாரிஸ்


    மன்னிக்கவும் தவறுக்கு, தாங்கள் கூறியது சரிதான். அவ்வரிகள் நாவுக்கரசரின்
    தேவாரமே!
    சுட்டிக்காட்டியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. உங்கள் பதிவைப் பார்த்தாவது சிலரது மூட நம்பிக்கைகள் விலகட்டும்.

    பதிலளிநீக்கு
  20. Dr.எம்.கே.முருகானந்தம் அவர்களுக்கு,

    பெரியார் காலத்திற்குப் பின் இந்தக்கருத்துக்களைப் பரப்ப ஒரு தலைவர் வராதது பெரிய இழப்பு.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ஜோசியம் பொய் என்று முழுசாக நிராகரிக்கவும் முடியாமல், நிஜமென்று நம்பி முயற்சிகளே இல்லாமலும் இருக்காமல் இருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நான் அந்த ஜாதி. ஜோசியங்கள் பொய்ப்பது ஜாதகக் கணிப்பில் இருக்கும் பிழைகளால்தான் என்பதை ஓரளவு என்னால் ஏற்க முடிகிறது. ஜோசியம் ஒருவகை விஞ்ஞானம் என்பதை என்னால் முழுதுமாக நிராகரிக்க முடியவில்லை.

    நீங்கள் சொல்லும் நம்பிக்கைகள் சகுனங்களில் இருக்கின்றன.

    கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்று நம்பி ஒரு காரியத்தில் இறங்கும் போது அது தோற்கிற மாதிரி இருந்தாலும் மனசுக்குள் இது ஜெயிக்கப் போகிற காரியம் என்பது இருக்கிறது. ஆகவே இன்னும் ஒரு முயற்சி செய்தால் ஜெயித்து விடும், இன்னும் கொஞ்சம் முயன்றால் வெற்றி என்கிற மாதிரி உந்துதல்கள் கிடைக்கின்றன.

    பூனை குறுக்கே போய் விட்டால், கிடைக்காத விஷயத்தைத் துரத்துவானேன் என்கிற மனப்பான்மை முயற்சிகளை அதைரியப் படுத்தி விடுகிறது

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  22. நண்பர் ஜவஹர் அவர்களுக்கு,

    ஜோசியத்தைப்பற்றி என்னுடைய பெரும்பான்மையான கருத்துக்கள் என்னுடைய சித்தப்பா மூலமாக ஏற்பட்டது. அவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை ஜோசியம் பார்த்தே கழித்தார். வேறு எந்த சுயமுயற்சியும் எடுக்காமல் வாழ்க்கையை வீணாக்கினார்.

    ஜோசியத்தை ஒரு வழிகாட்டி என்கிற அளவில் வைத்துக்கோண்டு அதற்கு அடிமையாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.அதுதான் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  23. டாக்டர்சார் நான் இந்த விளையாட்டுக்கு வரலை. ஏன்னா எனக்கு இறைவன்மேல் மட்டும்தான் முழுநம்பிக்கை. அடுத்ததாக என்மேல்..சரிதானே டாக்டர்..

    பதிலளிநீக்கு
  24. அன்புடன் மலிக்கா சொன்னது:

    //டாக்டர்சார் நான் இந்த விளையாட்டுக்கு வரலை. ஏன்னா எனக்கு இறைவன்மேல் மட்டும்தான் முழுநம்பிக்கை. அடுத்ததாக என்மேல்..சரிதானே டாக்டர்..//

    இதுதான் தன்னம்பிக்கை. இந்த மன உறுதி என்றும் நிலைக்க என் வாழ்த்துக்கள்.

    என் வாழ்க்கையில் எனக்காக இதுவரை ஜோசியரிடம் போனதில்லை.

    பதிலளிநீக்கு