டாய்லெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாய்லெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜனவரி, 2013

கால் கழுவுவது எப்படி?

இந்தியன் டைப் அல்லது வெஸ்டர்ன் டைப், இதில் எதில் நீங்கள் காலைக் கடனைக் கழித்தாலும் "கால் கழுவ" வேண்டும். "கால் கழுவுதல்" என்றால் என்ன என்று புரியும் என்று நினைக்கிறேன். புரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நேரடி டெமான்ஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்படும்.


இந்தியன் டைப் டாய்லெட் உபயோகப்படுத்திய பின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். வலது கையில் "மக்" கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பின்புறம் கொண்டு சென்று அந்த நீரை முக்கிய இடத்தில் மெதுவாக ஊற்றி, இடது கையால் அந்த பாகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவது முறையும் இதே மாதிரி செய்யலாம். அது நல்லதே. ஒரு முக்கிய குறிப்பு. இவ்வாறு நீங்கள் கால் கழுவும்போது அந்த தண்ணீர் முழுவதும் டாய்லெட் பேசினுக்குள் விழுமாறு கழுவ வேண்டும். இது முக்கியம். பாத்ரூம் முழுவதையும் அசிங்கப் படுத்தி விடக்கூடாது.  இதற்குப் பிறகு மக்கில் தண்ணீர் எடுத்து டாய்லெட் சீட்களை கழுவி விடவும்.

எனக்கு முன்னாடியே ஒரு அன்பர் இந்தப் பிரச்சினையை அலசி, ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் செய்திருக்கிறார். அந்தக் கோணொளியைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=dKkryfdtMNQ

இதன் பிறகு நம் ஆட்கள் செய்வதுதான் கொடுமையின் உச்ச கட்டம். இந்தக்காரியம் முடிந்தபின் அப்படியே அல்லது இடது கையை வெறும் தண்ணீரில் கழுவிவிட்டு மற்ற வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். மனிதக் கழிவில் எவ்வளவு நோய்க் கிருமிகள் இருக்கின்றன என்ற அறிவு இல்லாததால் அவர்கள் செய்யும் காரியம் இது. கால் கழுவிய பின், இரு கைகளையும் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கழுவிய பின் ஒரு சுத்தமான துவாலையில் கைகளை ஈரம் போகத் துடைக்கவேண்டும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தினம் ஒரு முறைதான் இதைச் செய்யவேண்டி வரும். அதற்குக் கூட சோம்பல்பட்டால் உங்கள் சுகாதார உணர்வை என்ன சொல்லி, எப்படித் திருத்துவது? வட இந்தியாவில் ஒவ்வொருவரும் டாய்லெட் உபயோகிக்கச் செல்லும்போது தவறாமல் சோப்பு டப்பாவை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் இரண்டு கையாலும் சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு இந்த முன்ஜாக்கிரதை அவசியம்.

அடுத்து வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டில் நம் காரியத்தை முடித்தபின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். இதற்கு பல வழிகள் இருக்கின்றன.

முதல் வழி - டாய்லெட் பேப்பர் உபயோகிப்பது. இது நம் ஊருக்கு சரிப்பட்டு வராது. ஆகையால் அதை விட்டு விடுவோம். 

இரண்டாவது வழி - இந்தியன் டாய்லெட்டில் கடைப்பிடிப்பது போலவே, மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கால் கழுவுவது. இதற்கு நீங்கள் டாய்லெட் சீட்டில் சிறிது முன் நகர்ந்து உட்காரவேண்டும். கால் கழுவும் தண்ணீர் முழுவதும் பேசினுக்குள்ளேயே விழ வேண்டும். பின்பு டாய்லெட்டை மற்றுமொரு முறை பிளஷ் செய்யவேண்டும். பின்பு எழுந்து டாய்லெட்டை மூடிவிட்டு, கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்ளவேண்டும்.

மூன்றாவது வழி - "பிடெட்" உபயோகிப்பது. 


இதை எடுத்து பின்புறம் கொண்டுபோய் அந்த லிவரை அழுத்தினால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். நாம் கழுவ வேண்டிய பகுதிக்கு தண்ணீர் செல்லுமாறு சிறிது நேரம் பிடித்துக்கொண்டு இருந்தால் அந்தப் பகுதி நன்றாகச்சுத்தமாகிவிடும்.
நம் கை அசுத்தமாகாது. ஆகவே இது மிகுந்த சுகாதாரமானது. இது மாதிரியே டாய்லெட்டுடன் சேர்ந்தே இருக்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய்களும் உண்டு.

இப்படியாக நாம் கால் கழுவும் படலத்தை முடித்தோம். ஏதாவது குறிப்புகள் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் மக்களுக்கு உபயோகப்படும். 

அடுத்த பதிவில் "வாஷ் பேசினை" உபயோகிப்பது பற்றியும் மற்ற குளியல் விஷயங்களையும் பார்ப்போம்.

புதன், 16 ஜனவரி, 2013

நவீன டாய்லெட்களை உபயோகிப்பது எப்படி?அதி நாகரிக சுந்தரர்கள் - சுந்தரிகள், மற்றும் மென்மையான இருதயம் படைத்தவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம். அவர்கள் இதில் எழுதப்பட்டிருக்கும் விளக்கங்களைப் படித்து அருவருப்படைவார்கள். ஏனெனில் அவர்கள் தேவலோகத்திலிருந்து நேரடியாக பூமிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி காலைக் கடன்களுக்கு அவசியம் இல்லை.

இந்தப் பதிவு, காலைக் கடன்களில் அதிமுக்கியமானதைப் பற்றியது. இதைப் பற்றிய தெனாலிராமனின் வேடிக்கைக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவில் அந்தக் கதையை போட்டிருக்கிறேன்.

உங்கள் சொந்த வீடானாலும் அடுத்தவர் வீடானாலும் இந்த செயலில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் ஒன்றே.

நெ.1 மற்றும் நெ.2 என்று மறைபொருளாகக் குறிப்பிடப்படும் இந்த "வெளிக்குப் போதல்" என்ற காலைக் கடனைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கின்றன. "லண்டனுக்குப் போய்ட்டு வரேன்" என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு.

காலை பொழுது விடிவதற்கு முன் எழுந்து காலாற கம்மாய்க் கரைக்குப் போய் "உட்கார்ந்து" விட்டு கம்மாயில் "கால் கழுவி" விட்டு, வரும் வழியில் ஒரு வேப்பங்குச்சியை முறித்து வாயில் வைத்துக் கொண்டு எதிரில் வருபவர்கள் எல்லோருடனும் ஊர் வம்பு, வழக்கு பேசிவிட்டு, வீட்டிற்கு வந்து வாய் கொப்பளித்து விட்டு, கால்கை கழுவிவிட்டு, காப்பி குடிக்கும் அனுபவமே தனி சுகம். சொர்க்கத்தில் கூட இத்தகைய சுகம் கிடைக்காது என்று சத்தியம் செய்யும் பெரிசுகள் இன்றைக்கும் நம் கிராமங்களில் உண்டு.

ஆனால் இன்றைய நகர (நரக) வாழ்க்கையில் இந்த சுகத்திற்கு இடம் இல்லை. "டாய்லெட்" என்று நாகரிகமாக அழைக்கப்பெறும் நவீன கக்கூஸ்கள் தவிர்க்க முடியாதனவையாக ஆகிவிட்டன.


இவைகளில் "இந்தியன் டைப்" எனப்படுபவை இந்திய பாணிக்காக வடிவமைக்கப்பட்டவை. குத்துக்காலிட்டு உட்காரும் வழக்கத்திற்கேற்ப உள்ளவை. வெட்டவெளியில் காலைக்கடனைக் கழிப்பது போன்றது. என்ன, இது நாலு சுவர்களுக்குள் இருக்கும். இவைகளில் நம் காரியம் முடிந்து வெளியில் வரும்போது தண்ணீர் விட்டு கிளீன் செய்து விட்டு வெளியில் வரவேண்டும். (இப்போதெல்லாம் தானியங்கி பிளஷ்கள் வந்து விட்டன). ஆனாலும் அவைகளை இயக்குவதற்கு உண்டான பட்டனை அழுத்தவேண்டும் அல்லது செயினை இழுக்கவேண்டும்.


இங்குதான் நம் "கனவான்கள்" சொதப்பும் இடம். தண்ணீர்விட்டு பேசினை கழுவ மாட்டார்கள். வெட்ட வெளியில் வெளிக்குப் போனபின் எழுந்து நடையைக் கட்டுவது போலவே இங்கும் போய்விடுவார்கள். அடுத்து அங்கு செல்லும் நபர் என்ன பாடுபடுவார் என்று சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இந்த நிலை மறதியால் ஏற்படுவது அல்ல. அறியாமையினால் ஏற்படுவது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. பல பொது இடங்களில் இதைப் பற்றிய ஒரு அறிவிப்பு வைத்திருப்பார்கள். "டாய்லெட்டை உபயோகித்தபின் பிளஷ்ஷை உபயோகியுங்கள்" என்று அறிவிப்பு இருக்கும். பலர் அந்த அறிவிப்பு தங்களுக்குத்தான் என்று உணராமல் டாய்லெட்டை உபயோகித்த பின் அப்படியே வந்து விடுவார்கள். இதைப் போன்ற கொடுமை வேறு இல்லை.


அடுத்தது "வெஸ்டர்ன் டைப்" டாய்லெட்டுகள். WC என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். வெளி நாடுகளில் இந்த சௌகரியம் உள்ள பொது இடங்களில், இதை Comfort Room, Rest Room என்று பலவாறாக அழைப்பது உண்டு. Rest Room என்றால் ஏதோ ஓய்வு எடுப்பதற்கான இடம் என்று தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம்.


இதை உபயோகப் படுத்துவதில் உலகம் முழுவதும் கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே, குளறுபடிகள் உண்டு. இந்தப் படத்தைப் பார்க்கவும்.


நாகரிகமடைந்த மேலை நாடுகளிலேயே இப்படி படம் போட்டு விளக்க வேண்டியிருக்கிறது என்றால், நம் நாட்டைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

டாய்லெட்டில் உட்காருவதற்கு முன், அதன் அமைப்பை சற்று பாருங்கள்.


1 = டாய்லெட் மூடி
2 = டாய்லெட் சீட்
3 = டாய்லெட் பேசின் (மேல் பாகம் மட்டும் காட்டியிருக்கிறது)


டாய்லெட் சாதாரண நிலையில் இப்படி இருக்கும்.நீங்கள் டாய்லெட்டை உபயோகிக்கு முன் டாய்லெட் கவரை மேலே தூக்கி விடவேண்டும். இந்த நிலையில் டாய்லெட் மேல் உட்கார்ந்து கொண்டு, வெளிக்குப் போவதும் சிறுநீர் கழிப்பதும் செய்யலாம். எக்காரணம் கொண்டும் இந்த நிலையில் ஆண்கள், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது. டாய்லெட் சீட்டில் சிறுநீர் பட்டு அதை அசுத்தம் செய்தால் அடுத்து வருபவர்கள் எப்படி அதன் மேல் உட்கார முடியும்? பொது கழிப்பறைகளில் இந்த சீட்டில் உட்காரும் முன், இந்த சீட்டை தண்ணீரால் நன்கு கழுவிவிட்டு பின்பு உட்காருவது நல்லது.ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதானால், டாய்லெட் சீட்டையும் மேலே தூக்கி வைத்து விட்டு உபயோகிக்க வேண்டும். இந்த நிலையில் வெளிக்குப் போகும் அன்பர்கள் டாய்லெட் பேசின் மேல் நேரடியாக உட்காருவது ஏற்படலாம். அது மகாத் தவறு.

இதன் பிறகு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. (அடுத்த பதிவில்)

இந்த டாய்லெட்டை உபயோகப் படுத்திய பின் தவறாமல் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டும். பிளஷ் செய்த பின் டாய்லெட் பேசின் சரியாக சுத்தமாய் விட்டதா என்று பார்த்து, ஏதாவது அசுத்தம் இருந்தால் பிரஷ் உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு டாய்லெட் சீட்டையும் கவரையும் கீழ்நோக்கி தள்ளி டாய்லெட்டை மூடி விட்டு வரவும்.

வெளிநாடு செல்லும் அன்பர்களுக்காக இன்னொரு குறிப்பு. எல்லா ஊர்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிப்பறைகள் உண்டு. குறிப்பாக விமான நிலையங்களில். இந்தக் கழிப்பறைகளுக்கு உண்டான அடையாளங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதில் தவறு ஏற்பட்டால் பெரும் சங்கடங்கள் ஏற்படும். இந்தப் படத்தைப் பாருங்கள்.

பெண் ஆண்

இந்தப் படத்திலும் சந்தேகம் ஏற்பட்டால், யாராவது டாய்லெட்டை உபயோகிக்க வரும் வரையிலும் காத்திருந்து அவர்கள் பின்னால் போகவும்.

பதிவு நீளமாகி விட்டதால் அடுத்த பகுதியில் பாக்கியை விளக்குகிறேன். பாக்கி எது என்பதை யூகித்து வைக்கவும்.