தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மார்ச், 2015

சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்.

                                                 Image result for fox and grapes story

நரியும் திராக்ஷைக் குலைகளும் கதையைக் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்தக் கதை ஒரு எதிர் மறைத் தத்துவத்தை எடுத்துக் காட்டத்தான் பெரும்பாலும் சொல்லப் படுகிறது.

ஏதோ நரி சொல்லத்தகாத வார்தைகளைச் சொல்லிவிட்ட மாதிரியான தொனி இந்தக் கதையில் வலியுறுத்தப்படுகிறது. இந்த மாதிரி சொல்பவர்கள் எல்லாம் கேலிக்குரியவர்கள் என்றுதான் நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருமையான வாழ்க்கைத்த் தத்துவம் இந்தக் கதையில் அடங்கியிருக்கிறது. இதை உணராமல் நாம் எல்லோரும் அந்த பாவப்பட்ட நரியை ஏளனமாகப் பார்த்து வந்திருக்கிறோம்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒருவன் நன்றாகப் படித்து நல்ல பட்டங்கள் எல்லாம் வாங்கியிருக்கிறான். அவன் பல வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறான். நேர்முகத் தேர்விற்கு பலரால் அழைக்கப்படுகிறான். அவனுக்கு ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்கான உத்திரவு கிடைக்கிறது. ஆனால் அவன் எதிர்பார்த்ததோ வேறு ஒரு கம்பெனியின் உத்திரவை.

இப்போது அவன் என்ன செய்யவேண்டும்? அவன் எதிர்பார்த்த கம்பெனியில் இருந்து உத்திரவு வரவில்லையே, என் வாழ்வு வீணாகிப் போனதே என்று புலம்பிக்கொண்டு இருந்தால் என்ன ஆகும்? அவன் வாழ்வு வீணாகித்தான் போகும்.

சரி, கிடைத்த வேலையில் சேர்வோம், அந்த வேலை என்ன பெரிய சர்க்கரைக் கட்டியா? என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு கிடைத்த வேலையில் சேர்வதுதானே புத்திசாலித்தனம்?

நரி அதைத்தானே செய்தது? அந்த திராக்ஷைப் பழம் எட்டவில்லை. அதற்காக அங்கேயே உட்கார்ந்து கொண்டு புலம்பினால் அந்தப் பழம் கிடைக்குமா என்ன? ஆகவே அது புத்திசாலித்தனமாக கிடைக்காத பழம் புளித்த பழம், நாம் இன்னொரு தோட்டத்தில் முயன்றால் நல்ல இனிப்பான பழம் கிடைக்கக் கூடும் என்று அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டது.

இது புத்திசாலித்தனமா? இல்லை அங்கேயே நின்று கொண்டு கிடைக்காத பழத்தைப் பார்த்து ஏக்கப்பட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமா? மக்களே, யோசியுங்கள். வாழ்க்கையில் நம்மால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள். நம்மால் முடியாதவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்காதீர்கள்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.



\\கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. \\ இந்த பிரபஞ்சத்தில் உள்ளதில் கண்ணாலோ, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அறியக் கூடியது வெறும் 4 % மட்டுமே, மீதமுள்ள 96 % [ Dark Energy, Dark Matter] நம்மிடமுள்ள எதற்கும் சிக்காது என்று இன்றைய விஞ்ஞானமே சொல்கிறது. நிலைமை இப்படி இருக்க, கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பது நியாயமா சார்??!! அப்ப, எதற்கும் சிக்காத Dark Energy , Dark Matter இருப்பதாக எப்படி சொல்கிறார்கள்? Galaxy - களில் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தை கொண்டு சுற்றி வருகின்றன, Galaxy - யின் மையப் பகுதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைய வேண்டும், ஆனால் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தார்கள், கண்ணுக்குத் தெரிந்து எல்லாத்தையும் கூட்டிப் பார்த்தாலும் கணக்கு வரவில்லை, ஆகையால் Dark Matter இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். ஆக, நேரடியாக 'பார்க்க' முடியாவிட்டாலும், விளைவை வைத்து பின்னால் சென்று அதற்க்கான root cause கண்டு பிடிப்பதும் அறிவியல்தான். அப்படியானால், இங்கே கடவுள் இருப்பதாக முடிவுக்கு வருவது எதை வைத்து என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒன்று செய்யுங்கள், ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அவர்கள் எல்லோரிடமும் காட்டி இதை யாரும் செய்யவில்லை தானாகவே களிமண் மீது நெருப்பு பிடித்து பானையாகி விட்டது என்று சொல்லுங்கள். லட்சம் பேரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஒருத்தராவது, [அவர் மனநிலை தவறியவராக இருக்கக் கூடாது] நீங்கள் சொல்வதை நம்புகிறாரா என்று பாருங்கள். மண் சட்டியின் Complexity எவ்வளவு என்று பாருங்கள், அப்படியே மனிதனின் கண்கள், இதயம், கிட்னி, மூளை இதெல்லாம் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது, செயல் படுகிறது என்று பாருங்கள், அவற்றின் Complexity யையும் பாருங்கள். ஒரு மண் சட்டியே தானாக வந்ததாக யாரும் நம்பவில்லை அதன் பின்னால் ஒரு குயவன் இருந்தே தீருவான் என்றால் இவ்வளவு Complexity யையும் கொண்ட உடலுறுப்புகள் தானாக வருமா, அவை ஒருங்கிணைத்து செயல் படுமா, இவற்றின் பின்னால் யாரும் இருக்க வேண்டியதில்லையா என்று நீங்களாகவே கேள்வி கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உடலுறுப்புகள் மட்டுமல்ல, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் கூட அதன் complexity அது நீங்கள் வசிக்கும் நகரின் complexity யை விட அதிகம். அணுவில் இருந்து, பேரண்டம் வரைக்கும் ஒவ்வொன்றும் அதிசயம், அற்ப்புதம், தானாக வர வாய்ப்பே இல்லை. படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான். It is as simple as that.
===================================================================


மேலே உள்ளது நண்பர் ஜெயதேவ் தாஸ் அவர்கள் என்னுடைய "கடவுள் இருக்கிறாரா இல்லையா" என்ற பதிவிற்குப் போட்ட பின்னூட்டம். இதில் நல்ல கருத்துகள் இருப்பதால் அது பின்னூட்டத்தில் மட்டுமே இருந்தால் பலருடைய கவனத்திற்கு வராது என்பதால் ஒரு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தத்துவ விசாரணை அதாவது ஆராய்ச்சிக்கு என்றும் முடிவு இல்லை.

நன்றி, வணக்கம்.

செவ்வாய், 5 ஜூன், 2012

இறைவன் எங்கே இருக்கிறான்?


காலம் காலமாக கேட்கப்பட்டு புளித்துப் போன கேள்வி. இருந்தாலும் அவ்வப்போது புளி போட்டுத்தேய்த்து புதிது பண்ணிக்கொள்ளவேண்டும்.

இறைவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆராய்வதற்கு முன் இறைவன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது. சின்னவயதில் கடவுள் மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். நீ நல்லது செய்தால் உனக்கு சுகத்தைக் கொடுப்பார். தீமை செய்தால் கஷ்டத்தைக் கொடுப்பார் என்று பெரியவர்கள் சொல்லி சொல்லி, கடவுளைக் கணக்குப்பிள்ளை என்று நம்பி வந்தோம். பிற்காலத்தில் விவரம் தெரிந்த பிறகு, அவர் எல்லோருக்கும் கணக்கு வைப்பதில்லை, சாதாரண மனிதர்களுக்குத்தான் கணக்கு வைக்கிறார் என்று புரிந்தது.

அவர் கணக்கு வைத்துக்கொள்ள ஒரு பெரிய ஆபீசே நடத்துகிறார். சித்திரகுப்தன்தான் அதற்கு எக்சிக்யூடிவ் டைரக்டர். ஆனால் அவரும் வேலைப்பளு காரணமாக சிலரது கணக்குகளை விலக்கிவிட்டார். இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரிந்தது என்றால், சாதாரண மனிதர்களுக்கு விதித்துள்ள விதியான, நல்லது செய்தால் நல்லது விளையும், கெட்டது செய்தால் கெட்டது விளையும் என்ற விதி அநேகம் பேருக்கு விதிவிலக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் விஷயத்தில் அவர்கள் கெட்டதே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக மிக நன்றாக, சுகபோக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று யோசித்தபோதுதான் இந்த ஞானோதயம் ஏற்பட்டது. அதாவது அவர்களுக்கெல்லாம் சித்திர குப்தன் கணக்கு வைப்பதில்லை என்ற விஷயம். ஏனென்றால் அவர்களுக்கு கணக்கு வைக்க ஏகப்பட்ட குமாஸ்தாக்கள் தேவைப்பட்டன. ஏறக்குறைய ஒவ்வொருவருக்கும் ஒரு குமாஸ்தா தேவையாயிருந்தது. யமதர்மனிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொன்னபோது அவன் சிம்பிளாக இந்த வழியைச் சொன்னான். அதாவது அவர்களுக்கெல்லாம் கணக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

அப்படிப்பட்ட பாக்கியவான்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதல்லவா? சொல்லிவிடுகிறேன். அரசு சம்பத்தப்பட்ட அனைத்து நபர்களும் இந்த விதிவிலக்கின் கீழ் வருகிறார்கள். நம் நாட்டை எடுத்துக் கொண்டால், ஜனாதிபதியிலிருந்து ஊர் பேர் தெரியாத பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் வரை அரசு சம்பத்தப்பட்டவர்கள்தான். எம்.பி., எம்.எல்.ஏ., பஞ்சாயத்து மெம்பர், எல்லாரும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. வட்டம், மாவட்டம், எடுபிடிகள் இவர்களும் இவர்களுள் அடக்கம்.

இவர்களுக்கு இந்த விதி, அதாவது நல்லது, கெட்டது என்கிற விதி இல்லை. இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சித்திரகுப்தன் கணக்கு வைக்கமாட்டான். இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அவனுக்கு அவன் குடும்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கே நேரம் போதாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போது இதையெல்லாம் கவனிக்க எப்படி முடியும்? 

திங்கள், 21 மே, 2012

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்


ஒரு நரி ஒரு நாள் ஒரு திராட்சைத்தோட்டம் வழியாகப் போய்ட்டு இருந்ததாம். அந்த திராட்சைத் தோட்டத்தில திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாக் காய்ச்சு தொங்கிட்டு இருந்ததாம். அதைப் பார்த்த நரிக்கு வாயில் எச்சில் ஊறினதாம். தோட்டத்திற்குள் எப்படியோ நுழைஞ்சு, அந்த திராட்சைக் கொலைகளைப் பறிக்க எம்பி, எம்பி (நம்ம எம்.பி. இல்லைங்க) குதிச்சுப் பார்த்ததாம். திராட்சைக் கொலையைப் பறிக்க முடியவில்லையாம். கொஞ்ச நேரம் கழித்து அது தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு போய்விட்டதாம்.

இந்தக் கதையைப் பொதுவாக ஒருவரைக் கேலி செய்வதற்காகச் சொல்வதுதான் வழக்கம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்தக்கதையின் உள்ளர்த்தம் விளங்கும்.

உதாரணத்திற்கு, நீங்கள் குடும்பத்துடன் ஒரு சினிமா பார்க்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அன்று அந்தப் படத்திற்கு ஏகப்பட்ட கூட்டம். திருட்டு டிக்கெட்தான் கிடைக்கும். உங்கள் நாலு பேருக்கும் டிக்கெட்டுக்கே ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். பிறகு ஓட்டல் செலவு, ஆட்டோ எல்லாம் சேர்த்தால் உங்கள் பர்ஸ் போண்டியாகிவிடும். அந்த மாதம் குடும்ப வண்டியை ஓட்ட கடன் வாங்கவேண்டும். அதை எப்போது கட்ட முடியமோ தெரியாது. இந்த நிலையில் அந்தப் படம் வேண்டாம், பீச்சுக்குப் போய்விட்டு, சுண்டலைச் சாப்பிட்டு விட்டு பஸ்சில் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுப்பதுதான் சிறந்த முடிவு.

அப்போதுதான் நரி தத்துவம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த சினிமா புளிக்கும் என்று உங்கள் குடும்பம் ஒத்துக் கொண்டால் அது ஆரோக்கியமான குடும்பம். உங்களுக்கு மன வேதனை வராது. இல்லாமல் ஐயோ, இந்த சினிமா பார்க்க முடியவில்லையே என்று புலம்ப ஆரம்பித்தால் வீண் வருத்தம்தான் மிஞ்சும்.

சினிமா மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும். வெற்றியைக் கண்டு அதீத மகிழ்ச்சி அடைவதும், தோல்வியைக் கண்டு அதிகம் துவண்டு போவதும் வாழ்க்கைக்கு உகந்ததல்ல. அப்படி இருந்தீர்களென்றால் எப்போதும் நீங்கள் புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைத் தொலைத்தவராகி விடுவீர்கள்.

சர்வ மதப் பிரார்த்தனை ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.

"கடவுளே, இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய
மன வலிமையையும், இந்த இரண்டையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எனக்கு அருள்வாயாக".

இந்த வாழ்க்கை நமக்கு வாய்த்தது இறைவன் அருள். அதை மகிழ்ச்சியாக வாழத் தேவையான புத்தியையும் அவனே கொடுத்திருக்கிறான். அதைவிட்டு நான் புலம்பிக்கொண்டுதான் இருப்பேன் என்றால் அதறகான சுதந்திரத்தையும் அவனே கொடுத்திருக்கிறான். எப்படி வாழப்போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

மனமென்னும் குரங்கு



எந்த ஒரு சிக்கலான தத்துவத்தையோ பொருளையோ நன்கு புரிந்து கொள்ளவேண்டுமானால், அதை அதன் எளிய பகுப்புகளாகப் பிரித்துத்தான்  புரிந்து கொள்ள இயலும். நான் யார் என்பது ஆன்மீக மார்க்கத்தில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. நான் ஒரு மனிதன் என்று உடனே கூறிவிடலாம். ஆனால் அது சரியல்ல. மனிதன்  என்பவன் உடல், மனம், புத்தி, ஆன்மா என்கிற இவை நான்கும் சேர்ந்த கலவைதான் என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள். இவைகளை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

உடல் எது என்பதில் யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. ஆனால் ஆன்மாவைப் பற்றி எப்பொழுதும் ஒரு குழப்பமான நிலையே நிலவுகிறது. சாதாரண மனிதர்களாகிய நாம் தற்போதைக்கு ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்று என்று வைத்துக்கொள்வோம். அப்போது உடல் என்பது ஜடமாகவும் ஆன்மா என்பது சக்தியாகவும் அமைகிறது. ஆன்மா இல்லையென்றால் உடலை சவம் என்று சொல்லி அதை அடக்கம் செய்கிறோம்.

இப்போது மீதம் இருப்பது மனம், புத்தி, இரண்டும்தான்.
முதலில் மனம் என்றால் என்ன என்று பார்ப்போம். எண்ணங்களின் தொகுப்புதான் மனம் என்று அடையாளம் காணப்படுகின்றது. எண்ணங்கள் மனிதனின் மூளையில்தான் தோன்றுகின்றன. உண்மையில் மனம் என்று ஒரு பகுதி மூளையில் கிடையாது. நாம் நம் புரிதலுக்காக இந்த அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

ஒருவன் பிறந்தவுடன் எண்ணங்கள் தானாகத் தோன்றுவதில்லை. மரபணுக்கள், சுற்றம், சூழ்நிலை, இவைகளின் கூட்டுத் தாக்கத்தினால்தான் ஒருவனின் எண்ணங்கள் உருவாகின்றன. எண்ணங்கள் செயல்களைத் தோற்றுவிக்கின்றன. செயல்களினால் அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஒருவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் மீண்டும் எண்ணங்கள் உருவாக காரணமாய் அமைகின்றன. இப்படி சுழற்சியாக ஏற்படும் அனுபவங்களும் எண்ணங்களும்தான் மூளையில் நினைவுகளாகப் பதிகின்றன.

காலப்போக்கில் இந்த நினைவுகளின் அடிப்படையில் அவனுடைய புத்தி உருவாகிறது. புத்தி என்பது ஒருவனுடைய நினைவுகளின் அடிப்படையில் உண்டாகும் மூளையின் ஒரு நிலை. இதுதான் மனிதனின் எந்தவொரு செயலுக்கும் வழி காட்டுகிறது. இந்தப் புத்திதான் ஒருவனுடைய நடைமுறை வாழ்க்கையை வழி நடத்துகிறது. இந்தப் புத்தி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கிறதா என்றால் இல்லை. ஏன் என்று யோசிப்போமா?

தொடரும்…

ஞாயிறு, 1 மே, 2011

காலமும் கவலையும்

காலம் ஒன்றுதான் நித்தியமானது. அது மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. யாருக்காகவும் அது நிற்பதில்லை. அது முடிவற்றது. மனித வாழ்வில் நிகழும் அனைத்துக் காரியங்களும் காலத்தின் நியதியால்தான் நடக்கிறது. அவனுடைய முடிவும் காலத்தினாலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலத்தை வென்றவர் ஒருவருமிலர்.  அந்தந்த காலங்கள் வரும்போது அந்தந்த விளைவுகளும் வந்து சேரும். இதை யாராலும் தடுக்க முடியாது.

புத்திசாலிக்கு கவலை இல்லை. அவன் துன்பத்தைக் கண்டு கவலைப்படமாட்டான். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்ததேயாகும். இன்பம் வரும்போது அதிக சந்தோஷமும் துன்பம் வரும்போது அதிக துக்கமும் அடைவது அறிவாளியின் குணம் அல்ல. அவன் இரண்டையும் சமமாகவே ஏற்றுக்கொள்வான்.

வெள்ளி, 25 மார்ச், 2011

பெயர்க் காரணம்.





அன்னு அவர்கள் என்னுடைய  "பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்"   பதிவில் போட்டுள்ள பின்னூட்டம்.
{ ஹெ ஹே... ஏன் இப்படி???

அடுத்தடுத்து வரப்போற டிப்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஹெ ஹெ :))

கந்தஸ்வாமி சார், உங்களை ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். வழக்கம் போல கோவை லோலாயுடன் கலாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். }
இந்த “ஹெ ஹே” வுக்கு அர்த்தம் தெரியாமத்தான் முளிச்சிகிட்டு இருக்கேன். நல்ல பாராட்டா இல்லை நக்கலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தொடர் பதிவுன்னு அழைப்பு வந்த பிறகு சும்மா இருந்தா நம் (தன்மைப்பன்மை – Royal We) சுயமரியாதை என்ன ஆவது? ஆகவேதான் ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தாலும் திருமதி அன்னுவிற்காக இன்னொரு பதிவு. 
இப்போது இருக்கும் பதிவின் தலைப்பு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஏறக்குறைய ஒரு முப்பது வருடம் தப்பு, தப்பு, முப்பது நாள் சீ, இதுவும் தப்பு, முப்பது நிமிஷம் ஆயுசில முப்பது நிமிஷம் எதையும் யோசித்ததே இல்லை, முப்பது செகண்ட் யோசித்து எடுத்த தலைப்பு ஆகும். ஏன்னா முப்பது செகன்ட்டுக்கு மேல நம்ம மூளை வேலை செய்யாது.
இதுக்கு முன்னால பல தலைப்புகளை யோசித்து வைத்திருந்தேன். அவைகளை ஏன் கைவிட்டேன் என்பதற்கான விளக்கம்.
மசக்கவுண்டன் கிறுக்கல்கள்:  நீ எழுதறது எல்லாமே கிறுக்கல்கள்தான். அதைத் தனியா வேற சொல்லோணுமாக்கும் என்று நண்பர்கள் சொல்லவே அதைக் கைவிட்டேன்.
பயித்தயக்காரன் பிதற்றல்: பதிவுலகத்தில ஒருத்தரும் நிஜப்பேரை வைப்பதில்லை. நீ மட்டும் ஏன் உன்னுடைய நிஜப்பேரை வைக்கிறே, பயித்தக்காரா ? என்று நண்பர்கள் இதையும் நிராகரித்து விட்டார்கள்.
முட்டாள் பையன், ரெட்டை மண்டை, அழுகுணி, பல்லவராயன் (என்னுடைய பல் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் வந்த காரணப்பெயர்), இப்படி பல பெயர்களை நான் சொல்லச் சொல்ல நண்பர்களும், வீட்டு அம்மணிகளும் நிராகரிக்க, கடைசியில் யாரையும் கேட்காமல் நானே இப்போது இருக்கும் பெயரை முப்பது செகன்ட் யோசித்து வைத்துவிட்டேன். இதுதான் இந்தப் பதிவின் பெயர்க்காரணம்.
அம்மணி அன்னு, தொடர் பதிவு போட்டுவிட்டேன். இதற்கு மேல் மூளை வேலை செய்யாததால் இத்துடன் முடிக்கிறேன்.