நான் பிராட் பேண்ட் கனெக்ஷன் வாங்கி ஆறு வருடத்திற்கு மேல் ஆகிறது. அப்போது ஒரு மோடம் சொந்தக் காசு கொடுத்து வாங்கியிருந்தேன். இரண்டு மாதத்திற்கு முன்னால் அந்த மோடம் பொசுக்கென்று உயரை விட்டு விட்டது. பிஎஸ்என்எல் காரரிடம் புகார் சொன்னேன். "மோடம் உங்க கிட்டதானே வாங்கினேன். இப்படி உயிரை விட்டு விட்டதே" என்றேன்.
அவர் "தான்" வந்து பார்க்கிறேன் என்று சொல்லி அடுத்த நாள் வந்தார். மோடம் வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு என்று கேட்டார். நான் ஆறு வருடம் ஆயிற்று என்றேன். அவர் ஒரு மோடம் சாதாரணமாக ஐந்து வருடம்தான் வேலை செய்யும். உங்களுக்கு ஆறு வருடம் உழைத்திருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் என்றார். மோடத்தை மேலும் கீழும் திருப்பியும் பார்த்தார். இது உயிரை விட்டு விட்டது உண்மைதான் என்றார்.
அடுத்தது என்ன பண்ணுவது என்றேன். இதை அடக்கம் பண்ணி ஈமக்கடன்களை முடித்து விட்டு, நான் சொல்லும் போன் நெம்பருக்குப் போன் செய்யுங்கள். அவர்கள் வந்து வேறு மோடம் வைத்து விடுவார்கள், என்றார். முந்தியெல்லாம் பிஎஸ்என்எல் காரர்களே இந்த மோடம் சப்ளை பண்ணுவார்கள். இப்போது சிஸ்டத்தை மாற்றி விட்டார்கள். இதற்கென்று ஒரு தனி ஏஜென்ட் இருக்கிறார். அவரிடம் சொன்னால் உடனே புது மோடம் கொண்டு வந்து மாட்டி செட்டிங்க்ஸ் எல்லாம் செய்து விட்டுப் போவார்.
அப்படியாக அவருக்குப் போன் பண்ணி புது மோடம் வாங்கி கனெக்ஷன் கொடுத்தேன். இப்போது ஒரு புது ராணி (கேலக்சி டேஃப்) என் அந்தப்புரத்திற்கு வந்தாள் என்று சொன்னேன் அல்லவா? அந்த ராணிக்கு இந்தப் பழைய ராணிதான் இன்டர்நெட்டை வைஃபி மூலம் தானம் பண்ணவேண்டும். இரண்டு பேருக்குமிடையில் ஏதோ சக்களத்திச் சண்டை மூண்டு விட்டது. டேஃபில் வைஃபி வேலை செய்யவில்லை. நான் எனக்குத் தெரிந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு பிஎஸ்என்எல் போர்ட்டல் உள்ளே போய் எதையோ நோண்டினேன். அவ்வளவுதான். இன்டர்நெட் மொத்தமாக அம்பேல்.
மோடத்தில் உள்ள மூன்றாவது லைட் பச்சையாக எரியவேண்டியது சிகப்பாக எரிந்தது. ஆஹா, வந்தது வினை என்று முடிவு செய்தேன். இனி நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆண்டவனைச் சரண்டைவது தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து பிஎஸ்என்எல் காரருக்குப் போன் செய்தேன். அவர் வழக்கமாக வருகிறவர்தான். நல்ல மனுஷன்தான். ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட பிடுங்கல்கள்.
ஒரு வழியாக இன்று காலை வந்து என்னென்னமோ செட்டிங்க்ஸ்களை மாற்றியமைத்தார். இன்டர்நெட் வர ஆரம்பித்தது. இனி ஒன்றும் பிரச்சினை இல்லை சார், அந்த மோடம் சப்ளை செய்தவர் சரியாக செட்டிங்க்ஸ்களை செட் பண்ணவில்லை. நான் எல்லாவற்றையும் சரியாக அமைத்திருக்கிறேன். இனி மேல் எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் அதை முழு மனதாக நம்புகிறேன்.
இன்டர்நெட் வந்தவுடன் அதை நண்பர்களுக்குச் சொல்லவேண்டாமா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.