தமிழ்நாட்டில் 1960 களில் காங்கிரஸ் கோலோச்சிக்கொண்டு இருந்தது. திமுக அப்போது அண்ணாத்துரை தலைமையில் பெரியாரின் பிடியிலிருந்து வெளி வந்த காலம். அது வரை அந்தக்கட்சியின் குறிக்கோள் சமுதாய சீர்திருத்தம் மட்டுமே. கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு, கலப்புத் திருமணங்கள் ஆகியவையே கட்சியின் பிரதானக் கொள்கைகளாக இருந்தன. அண்ணாத்துரையும் மற்ற கழகக் கண்மணிகளும் யோசித்தார்கள். நாம் இப்படியே இருந்தால் கட்சியும் வளராது, நாமும் வளரமாட்டோம் என்பதை உணர்ந்தார்கள். அரசியலில் இறங்கினால் ஒழிய கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று முடிவு செய்தார்கள்.
அரசியல் என்றால் என்ன? போராட்டம், மறியல், கடையடைப்பு, இத்தியாதிகள்தான். அண்ணாத்துரைக்கு எப்போதும் மாணவர்களின் ஆதரவு உண்டு. அவருடைய பேச்சு வன்மையில் அவர்கள் மயங்கிக்கிடந்தார்கள்.மாணவர்களை அவரால் எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். இதுதான் கட்சியின் ஒரே பலம். அது வரை காங்கிரஸ் கட்சி மாணவர்களுக்கு எந்த விதமான அரசியல் அங்கீகாரமும் தந்ததில்லை. மாணவர்களின் வேலை படிப்பதுதான். அவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற கொள்கையில் இருந்தார்கள். அப்போது மத்திய அரசு இந்திக்கொள்கையப் பரப்பிக்கொண்டு இருந்தார்கள்.
திமுக பல காலமாக இந்தி எதிர்ப்புக்கொள்கையை கடைப்பிடித்து வந்தது. இந்த இரண்டு நிலைகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திமுக தலைவர்கள் முடிவு செய்தார்கள். இதில் உள்ள மற்றொரு சௌகரியம் என்னவென்றால் மாணவர்கள் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவர்களை அரசும் போலீசும் ஒரு கருணை மனோபாவத்துடன்தான் நடத்துவார்கள். இதை நன்கு உணர்ந்திருந்த திமுக தலைமை அனைத்து கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் திமுக மாணவர் அமைப்பை ரகசியமாக ஆரம்பித்தார்கள். திமுக வரப்போகும் பொதுத்தேர்தலில் பங்கேற்கும் என்று விளம்பரம் செய்து தங்கள் கட்சியை அரசியல் கட்சியாகப் பிரகடனம் செய்தார்கள்.
திரு. பக்தவத்சலம் அப்போது தமிழ்நாட்டின் முதல் மந்திரி. அரிசிக்கு மிகவும் தட்டுப்பாடு. இதனால் மக்கள் அப்போதைய அரசின் மீது மிகவும் அதிருப்தியுடன் இருந்தார்கள். இந்த சூழ்நிலையை திமுக பயன்படுத்திக்கொண்டது. மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பித்தன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் மாணவர் அமைப்புகளே நடத்தின. ஆனால் பின்புலத்தில் திமுக வின் மூளை வேலை செய்தது.
போராட்டங்கள் வலுவடைந்தன. மாணவர் தலைவர்கள் முதல் மந்திரியைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கச் சென்றார்கள். இங்குதான் பக்தவத்சலம் ஒரு மாபெரும் தவறைச் செய்தார். சூதை சூதினால்தான் வெல்லவேண்டும். இந்த ராஜதந்திரம் அவருக்குத் தெரியவில்லை. மாணவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார். இந்த நிகழ்வு மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. திமுக இந்த மனநிலைக்கு நன்றாக எண்ணை ஊற்றி எரிய வைத்தார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. ஊரிலுள்ள அனைத்து போக்கிரிகளும் சந்தடி சாக்கில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 150 பேருக்கு மேல் இறந்தார்கள். இறந்தவர்களில் மாணவர்கள் யாரும் இல்லை. எல்லாம் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்த போக்கிரிகள்தான். கடைசியில் பக்தவத்சலம் வழிக்கு வந்து ஒருமாதிரியாகப் போராட்டங்கள் ஓய்ந்தன. ஆனால் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனப்பான்மை வளர்ந்து விட்டது.
அடுத்த வருடம் தேர்தலில் திமுக அமோக வெற்றி அடைந்தது. அண்ணாத்துரை முதல் மந்திரியானார். பக்தவத்சலம் காணாமல் போனார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்.
திமுக வின் இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம் மாணவர்களின் பங்களிப்பே. இந்த உண்மையை திமுக மறக்கவில்லை. இப்போது அதன் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அடுத்த வருடம் தேர்தல் வருகிறது. என்ன செய்யலாம் என்று பார்த்தார்கள். மக்ளுக்கு மதுவிலக்கின் பேரில் திடீரென்று ஒரு வித அபிமானம் தோன்றி விட்டது. இதுதான் நல்ல சாக்கு என்று திமுக களத்தில் இறங்கி மாணவர்களைத் தூண்டி விட்டு போராட்டங்களை ஆரம்பித்து நடத்துகிறது.
ஆளும் கட்சி இலவசங்களை மானாவாரியாக ஆரம்பித்து விட்டு நிதி நிலைமை மிகப் பற்றாக்குறையில் இருக்கிறது. மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. ஆகவே மதுவிலக்குப் போராட்டங்களை ஒடுக்கியே ஆக வேண்டும். மக்ளின் நலன்களில் ஒரு கட்சிக்கும் ஆசை இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் தங்களை கல்லாவை நிரப்பிக்கொள்ளவேண்டும். இதுதான் இந்த இரண்டு கட்சிக்காரர்களின் நோக்கம். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.