ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆசைகள், தேவைகள், இத்தியாதிகள் உண்டு. ஒவ்வொன்றையும் நிறைவேற்ற ஒவ்வொருவனும் படும் பாடு இருக்கிறதே அது சொல்லில் அடங்காது. இரண்டு பெண்டாட்டிக்காரன் படும் சங்கடங்களே பொறுக்க முடியாது என்று சொல்கிறார்கள். நான் ஐந்து பெண்டாட்டிகளை (ராணிகளை) வைத்துக்கொண்டு படும் அவஸ்தைகளை யாரிடம் சொல்லி ஆறுதல் பெறமுடியும். பதிவர்களாகிய உங்களிடம்தான் சொல்ல முடியும். என் மூன்றாவது ராணிக்கு ஊடல் வந்து விட்டது.
சரி. சீரியசாக விஷயத்திற்கு வருவோம். இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று அந்தக்காலத்தில் சொல்லிப் போனார்கள். அந்தக்காலத்தில் கணினி கண்டு பிடிக்கப்படவில்லை. கணினி கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் "மவுஸ் பிடித்தவன் கையும் சும்மா இருக்காது" என்று சேர்த்திருப்பார்கள்.
நான் ஒரு பரிசுத்தவாதி. தமிழர்களுக்கு எதையும் இங்கிலீஷில் சொன்னால்தான் நன்றாகப் புரியும். அதாவது நான் ஒரு Perfectionist. அனைத்தும் எப்பொழுதும் ஒரு ஒழுங்கிலேயே இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன். இது ஒரு வகையான வியாதி என்று ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது இதற்குப் பெயர் obsessive compulsive disorder - OCD என்று சொல்வார்களாம். இதற்கு வைத்தியம் இல்லையாம். இதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமாம்.
சரி செய்ய முடியாததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற விதிப்படி இதை ஏற்றுக்கொண்டேன். இதன் விளைவுகளைத்தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள். இப்போதுள்ள இணையத்தின் நிலையை அனைவரும் அறிவீர்கள். பல மென்பொருட்களை இலவசமாகத் தருகின்றார்கள். ஆனால் உலகில் எதுவும் இலவசம் கிடையாது. அம்மாவே இந்த வார்த்தையை மாற்றி "விலையில்லா" என்று சொல்ல ஆரம்பித்திருப்பது எல்லோரும் அறிந்ததே.
கூகுள் குரோம் பிரவுசரைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். ஒரு நல்ல பிரவுசர். கூகுள்காரன் இலவசமாகக் கொடுக்கிறான் என்று பலரும் உபயோகிக்கிறார்கள். ஆனால் தற்போது கூகுள்காரன் தன் சாம்ராஜ்யத்தை பல மடங்கு விரிவுபடுத்தியுள்ளான். அதனால் கஜானா காலியாகிவிட்டது போல் தெரிகிறது. ஆகவே தன் கஜானாவை நிரப்ப பல பெரிய கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விளம்பரங்களையோ அல்லது அவர்களின் விலைபோகாத மென்பொருட்களையோ தன்னுடைய மென்பொருள்களுடன் சேர்த்து அனுப்புகிறான்.
ஆனால் இப்படி உபயோகிப்பவர் சம்மதம் இல்லாமல் விளம்பரங்களையோ, வேறு மென்பொருட்களையோ இலவச இணைப்பாக அனுப்புவது சட்டப்படி குற்றம். அதனால் அவன் அனுப்பும் மென்பொருளை நிறுவும்போது சந்தடி சாக்கில் இதையும் வாங்கிக் கொள்ளுங்களேன் என்று சின்ன எழுத்தில் கேட்பான். நாம்தான் இலவசமாக எது கிடைத்தாலும் எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லித்தானே பழக்கம். அதனால் இதையும் கூர்ந்து கவனிக்காமல் சரி என்று டிக் அடித்து விடுவோம். சீதேவியுடன் மூதேவியும் வந்து நம் கணினியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும். இப்படி எனக்கு நேர்ந்து விட்டது.
இந்த மூதேவியை விரட்ட எந்த கம்ப்யூட்டர் கொம்பனாலும் முடியாது. அப்படி கட்டமைக்கப்பட்ட மென்பொருட்கள் அவை. சரி, அது ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டால் சில நாளில் அது தன் பரிவாரங்களையும் வரவழைத்து பெரிய குடித்தனமே போட்டுவிடும். பிறகு கொஞ்ச நாளில் முதலுக்கே மோசம் வந்து உங்கள் கம்ப்யூட்டரை மொத்தமாக முடக்கி விடும். தவிர அடிக்கொரு தடவை ஏதாவது விளம்பரம் வந்து உயிரை எடுத்தது.
இதற்கு ஒரே வழி, கம்ப்யூட்டரில் இருப்பவைகளை சுத்தமாக அழித்து விட்டு ஆபரேட்டிங்க் சிஸ்டம் மென்பொருளை மீண்டும் நிறுவுவதுதான். இதை நானே வழக்கமாகச் செய்து விடுவேன். ஆனால் இந்த முறை பல நாட்களாகச் சேர்ந்திருக்கும் குப்பைகளையும் வெளியில் கொட்டி விடுவோமே என்று எண்ணி, ஹார்டு டிஸ்க்கை முழுமையாக பார்மேட் செய்ய முயற்சித்தேன். ஹார்டு டிஸ்க்கை பார்மேட் செய்வது என்பது மனிதனின் மூளையில் ஆபரேஷன் செய்வது மாதிரியாகும். கரணம் தப்பினால் மரணம்தான். இதில் முன் அனுபவம் இல்லாததினால் நான் செய்த ஆபரேஷனால் கம்ப்யூட்டர் முழுவதுமாக முடங்கி விட்டது.
அரோகரா. இனி டாக்டரைக் கூப்பிடாமல் வேலை நடக்காது என்பது புரிந்தது. டாக்டருக்குப் பல வேலைகள். கூப்பிட்ட உடனே வருவாரா? அப்படி கூப்பிட்ட உடனே வந்து விட்டால் அவருடைய மதிப்பு என்ன ஆவது? இரண்டு நாட்கள் கழித்து வந்தார். நான் பிரச்சினையைச் சொன்னேன். எனக்கு இந்த ஹார்டு டிஸக்கை பார்மேட் பண்ணி பார்ட்டிஷன் பண்ணிக் கொடுத்துவிடுங்கள். மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன்.
அவரும் ஏதோ மந்திரம் மாயம் செய்து அதைச் செய்துவிட்டு, அந்த விண்டோஸ் சிடி யைக் கொடுங்கள், இன்ஸ்டால் செய்து விடலாமே என்றார். நானும் விண்டோஸ் 8 சிடியைக் கொடுத்தேன். அதைப் போட்டு ஒரு முக்கால் மணி நேரம் இன்ஸ்டால் செய்தார். எல்லாம் முடிந்த பிறகு அது என்ன சொல்லிற்று என்றால், விண்டோஸ் 7 எங்கே என்றது.
இந்த கம்ப்யூட்டர் டாக்டர்கள் எல்லாம் பைரேட்டட் மென்பொருட்களையே வைத்துப் பழக்கப்பட்டவர்கள். ஒரிஜினல் மென்பொருட்களில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்கள். அதனால் அவருக்கு இந்த நுணுக்கம் தெரியாமல் போயிற்று. அதாவது நான் விண்டோஸ் 7 ஒரிஜினல் சிடி முதலில் வாங்கினேன். அதன் பிறகு அதன் மேல்தான் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவினேன். அதன் மேல் விண்டோஸ் 8.1 ஐ நிறுவினேன்.
மைக்ரோசாஃப்ட்காரன் படு கொம்பனல்லவா? இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறுவினால்தான் அவை ஒழுங்காக இன்ஸ்டால் ஆகும்படி தன் மென்போருளை அமைத்திருக்கிறான். மாற்றி இன்ஸ்டால் செய்தால் வேலை செய்யாது. பிறகு, டாக்டரிடம் நான் சொன்னேன். இந்த வேலை எனக்குத் தெரியும், இது மிகவும் நேரம் எடுத்துக்கொள்ளும் சமாச்சாரம், அதனால் நானே செய்து கொள்ளுகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு, வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இன்ஸ்டால் செய்தேன். ஒரு நாள் முழுசாக ஆகியது. எல்லாம் சரியாக அமைந்து விட்டது.
இதை ஏன் இவ்வளவு விரிவாக இங்கே சொன்னேன் என்றால் பதிவர்கள் யாராவது ஒரிஜினல் சிடி வைத்திருந்தால் அவர்கள் ரீஇன்ஸ்டால் செய்யும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
இதனால் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் இலவசம் என்பதற்காக எதையும் நன்றாகக் கவனிக்காமல் தரவிறக்கவேண்டாம். கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு உன்னிப்பாக கவனித்து செயல்படவும்.