புதன், 22 ஏப்ரல், 2015

என் மூன்றாவது ராணியின் பிரலாபம்

                                    Image result for queen
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆசைகள், தேவைகள், இத்தியாதிகள் உண்டு. ஒவ்வொன்றையும் நிறைவேற்ற ஒவ்வொருவனும் படும் பாடு இருக்கிறதே அது சொல்லில் அடங்காது. இரண்டு பெண்டாட்டிக்காரன் படும் சங்கடங்களே பொறுக்க முடியாது என்று சொல்கிறார்கள். நான் ஐந்து பெண்டாட்டிகளை (ராணிகளை) வைத்துக்கொண்டு படும் அவஸ்தைகளை யாரிடம் சொல்லி ஆறுதல் பெறமுடியும். பதிவர்களாகிய உங்களிடம்தான் சொல்ல முடியும். என் மூன்றாவது ராணிக்கு ஊடல் வந்து விட்டது.

சரி. சீரியசாக விஷயத்திற்கு வருவோம். இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று அந்தக்காலத்தில் சொல்லிப் போனார்கள். அந்தக்காலத்தில் கணினி கண்டு பிடிக்கப்படவில்லை. கணினி கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் "மவுஸ் பிடித்தவன் கையும் சும்மா இருக்காது" என்று சேர்த்திருப்பார்கள்.

நான் ஒரு பரிசுத்தவாதி. தமிழர்களுக்கு எதையும் இங்கிலீஷில் சொன்னால்தான் நன்றாகப் புரியும். அதாவது நான் ஒரு Perfectionist. அனைத்தும் எப்பொழுதும் ஒரு ஒழுங்கிலேயே இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன். இது ஒரு வகையான வியாதி என்று ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார்.  அதாவது இதற்குப் பெயர் obsessive compulsive disorder - OCD என்று சொல்வார்களாம். இதற்கு வைத்தியம் இல்லையாம். இதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமாம்.

சரி செய்ய முடியாததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற விதிப்படி இதை ஏற்றுக்கொண்டேன். இதன் விளைவுகளைத்தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள். இப்போதுள்ள இணையத்தின் நிலையை அனைவரும் அறிவீர்கள். பல மென்பொருட்களை இலவசமாகத் தருகின்றார்கள். ஆனால் உலகில் எதுவும் இலவசம் கிடையாது. அம்மாவே இந்த வார்த்தையை மாற்றி "விலையில்லா" என்று சொல்ல ஆரம்பித்திருப்பது எல்லோரும் அறிந்ததே.

கூகுள் குரோம் பிரவுசரைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். ஒரு நல்ல பிரவுசர். கூகுள்காரன் இலவசமாகக் கொடுக்கிறான் என்று பலரும் உபயோகிக்கிறார்கள். ஆனால் தற்போது கூகுள்காரன் தன் சாம்ராஜ்யத்தை பல மடங்கு விரிவுபடுத்தியுள்ளான். அதனால் கஜானா காலியாகிவிட்டது போல் தெரிகிறது. ஆகவே தன் கஜானாவை நிரப்ப பல பெரிய கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விளம்பரங்களையோ அல்லது அவர்களின் விலைபோகாத மென்பொருட்களையோ தன்னுடைய மென்பொருள்களுடன் சேர்த்து அனுப்புகிறான்.

ஆனால் இப்படி உபயோகிப்பவர் சம்மதம் இல்லாமல் விளம்பரங்களையோ, வேறு மென்பொருட்களையோ இலவச இணைப்பாக அனுப்புவது சட்டப்படி குற்றம். அதனால் அவன் அனுப்பும் மென்பொருளை நிறுவும்போது சந்தடி சாக்கில் இதையும் வாங்கிக் கொள்ளுங்களேன் என்று சின்ன எழுத்தில் கேட்பான். நாம்தான்  இலவசமாக எது கிடைத்தாலும் எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லித்தானே பழக்கம். அதனால் இதையும் கூர்ந்து கவனிக்காமல் சரி என்று டிக் அடித்து விடுவோம். சீதேவியுடன் மூதேவியும் வந்து நம் கணினியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும். இப்படி எனக்கு நேர்ந்து விட்டது.

இந்த மூதேவியை விரட்ட எந்த கம்ப்யூட்டர் கொம்பனாலும் முடியாது. அப்படி கட்டமைக்கப்பட்ட மென்பொருட்கள் அவை. சரி, அது ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டால் சில நாளில் அது தன் பரிவாரங்களையும் வரவழைத்து பெரிய குடித்தனமே போட்டுவிடும். பிறகு கொஞ்ச நாளில் முதலுக்கே மோசம் வந்து உங்கள் கம்ப்யூட்டரை மொத்தமாக முடக்கி விடும். தவிர அடிக்கொரு தடவை ஏதாவது விளம்பரம் வந்து உயிரை எடுத்தது.

இதற்கு ஒரே வழி, கம்ப்யூட்டரில் இருப்பவைகளை சுத்தமாக அழித்து விட்டு ஆபரேட்டிங்க் சிஸ்டம் மென்பொருளை மீண்டும் நிறுவுவதுதான். இதை நானே வழக்கமாகச் செய்து விடுவேன். ஆனால் இந்த முறை பல நாட்களாகச் சேர்ந்திருக்கும் குப்பைகளையும் வெளியில் கொட்டி விடுவோமே என்று எண்ணி, ஹார்டு டிஸ்க்கை முழுமையாக பார்மேட் செய்ய முயற்சித்தேன். ஹார்டு டிஸ்க்கை பார்மேட் செய்வது என்பது மனிதனின் மூளையில் ஆபரேஷன் செய்வது மாதிரியாகும். கரணம் தப்பினால் மரணம்தான். இதில் முன் அனுபவம் இல்லாததினால் நான் செய்த ஆபரேஷனால் கம்ப்யூட்டர் முழுவதுமாக முடங்கி விட்டது.

அரோகரா. இனி டாக்டரைக் கூப்பிடாமல் வேலை நடக்காது என்பது புரிந்தது. டாக்டருக்குப் பல வேலைகள். கூப்பிட்ட உடனே வருவாரா? அப்படி கூப்பிட்ட உடனே வந்து விட்டால் அவருடைய மதிப்பு என்ன ஆவது? இரண்டு நாட்கள் கழித்து வந்தார். நான் பிரச்சினையைச் சொன்னேன். எனக்கு இந்த ஹார்டு டிஸக்கை பார்மேட் பண்ணி பார்ட்டிஷன் பண்ணிக் கொடுத்துவிடுங்கள். மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன்.

அவரும் ஏதோ மந்திரம் மாயம் செய்து அதைச் செய்துவிட்டு, அந்த விண்டோஸ் சிடி யைக் கொடுங்கள், இன்ஸ்டால் செய்து விடலாமே என்றார். நானும் விண்டோஸ் 8 சிடியைக் கொடுத்தேன். அதைப் போட்டு ஒரு முக்கால் மணி நேரம் இன்ஸ்டால் செய்தார். எல்லாம் முடிந்த பிறகு அது என்ன சொல்லிற்று என்றால், விண்டோஸ் 7 எங்கே என்றது.

இந்த கம்ப்யூட்டர் டாக்டர்கள் எல்லாம் பைரேட்டட் மென்பொருட்களையே வைத்துப் பழக்கப்பட்டவர்கள். ஒரிஜினல் மென்பொருட்களில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்கள். அதனால் அவருக்கு இந்த நுணுக்கம் தெரியாமல் போயிற்று. அதாவது நான் விண்டோஸ் 7 ஒரிஜினல் சிடி முதலில் வாங்கினேன். அதன் பிறகு அதன் மேல்தான் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவினேன். அதன் மேல் விண்டோஸ் 8.1 ஐ நிறுவினேன்.

மைக்ரோசாஃப்ட்காரன் படு கொம்பனல்லவா?  இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறுவினால்தான் அவை ஒழுங்காக இன்ஸ்டால் ஆகும்படி தன் மென்போருளை அமைத்திருக்கிறான். மாற்றி இன்ஸ்டால் செய்தால் வேலை செய்யாது. பிறகு, டாக்டரிடம் நான் சொன்னேன். இந்த வேலை எனக்குத் தெரியும், இது மிகவும் நேரம் எடுத்துக்கொள்ளும் சமாச்சாரம், அதனால் நானே செய்து கொள்ளுகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு, வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இன்ஸ்டால் செய்தேன். ஒரு நாள் முழுசாக ஆகியது. எல்லாம் சரியாக அமைந்து விட்டது.

இதை ஏன் இவ்வளவு விரிவாக இங்கே சொன்னேன் என்றால் பதிவர்கள் யாராவது ஒரிஜினல் சிடி வைத்திருந்தால் அவர்கள் ரீஇன்ஸ்டால் செய்யும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இதனால் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் இலவசம் என்பதற்காக எதையும் நன்றாகக் கவனிக்காமல் தரவிறக்கவேண்டாம். கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு உன்னிப்பாக கவனித்து செயல்படவும்.
                              Image result for satan

15 கருத்துகள்:

  1. சுருக்கமா சொல்லனும்னா, இந்த ராணிகிட்ட கேர்புல்லா இருக்கோணும். இல்லைணா கூப்பிட்ட பொழுது அம்முணி தனியாக வராம கூடவே எவனையாவது கூட்டி வந்து கும்மாளம் போடுவாள் என்கிறீர்கள்...புரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. நான் ஒரு ஆஸ்தான கணினி மருத்துவரைப் பெற்றிருக்கிறேன். அவ்வப்போது அவர் வரும்போது பார்த்து விட்டுச் செல்வார். என்றாலும் சிக்கல்களும் அவர் சென்ற உடன்தான் வரும்! மர்ஃபி விதி போல!

    பதிலளிநீக்கு
  3. ஏதேதோ எனக்குப் புரியாத விஷயங்களாக இருப்பினும், ஏதோ கொஞ்சம் புரிவது போல இருப்பினும், மிகவும் பயனுள்ளவைகளாகவே இருக்கும்போலத் தோன்றுகிறது ..... வேறு சிலருக்காவது.

    நான் என்னிடம் உள்ள ராணிகளுக்கு ஏதேனும் மிகச்சிறிய தலைவலி, காய்ச்சல், இருமல், தும்மல் என்றாலும் உடனே இங்குள்ள சின்ன டாக்டரிடம் செல்வேன். அவராலும் முடியாவிட்டால் சற்றே பெரிய டாக்டரிடம் செல்வேன். அவராலும் குணப்படுத்த முடியாவிட்டால் யாராவது ஸ்பெஷலிஸ்ட்டிடம் என்று போவது வழக்கம். நானே கை வைத்தியங்கள் பார்க்கும் வழக்கமே இல்லை. ;)

    பதிலளிநீக்கு
  4. aiyaa

    That is why I recommended Linux also. If you have asked the doctor he would have brought Linux in pendrive which can be booted from USB port and operated. And if you wanted you could install the same in another partition of your computer along with Windows. No problem. If you find Linux difficult you can learn from tamillinux blog site or download from freetamilebooks.com site.

    And I bet you will certainly bring another Rani, atleast அம்மாவின் விலையில்லா மடிக்கணினி.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I firmly believe that known devil is better than unknown angel. I will die with windows. Anyhow lot of thanks for your kind suggestion.

      Lap Top ராணி வருவாள்.

      நீக்கு
  5. //இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது .//

    மீசை வைத்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் சொல்வது தங்களின் வட்டார வழக்கு என நினைக்கிறேன்.

    // தமிழர்களுக்கு எதையும் இங்கிலீஷில் சொன்னால்தான் நன்றாகப் புரியும். //

    உங்களுக்கே உரித்தான பாணியில் தமிழர்களை கிண்டல் செய்திருக்கிறீர்கள். எவ்வளவு சொன்னாலும் நம்மவர்களுக்கு இது உறைக்காதே. என் செய்ய!
    கணினியில் கோளாறு ஏற்பட்டால் நிபுணர்களை அழைப்பதுதான் என் வழக்கம். இருப்பினும் தங்களது அறிவுரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. Windows Update செய்வது நீங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  7. இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.
    நன்றி அய்யா!
    த ம 4

    பதிலளிநீக்கு
  8. மூன்றாவது ராணியின் பிரலாபம் சக்களத்தி ராணிகளுக்கு தொந்தரவு தரவில்லையே.

    பதிலளிநீக்கு
  9. மூன்றாவது ராணியை வந்த வேகத்தில் துரத்திவிட்டீர்கள் போலுள்ளது. கணினி பயன்படுத்துபவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியதைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //சீதேவியுடன் மூதேவியும் வந்து நம் கணினியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும்//

    ஹாஹா ஹாஹா

    நம்ம லேப்டாப் ஒன்னு இப்படித்தான் படானபாடு படுத்துது! எதைக் கிளிக்கினாலும் விஷ்ணு சக்கரம் சுத்த ஆரம்பிச்சுரும். நிக்கவே நிக்காது. மூணு முறை எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு ஃபார்மேட் செஞ்சாச்சு. 10.1 ஸ்க்ரீன் சைஸ் என்பதால் எங்காவது பயணம் போகும்போது கனமில்லாமக் கையிலே கொண்டு போகலாமேன்னு வாங்குனது. இப்ப.... இப்படி:(

    பதிலளிநீக்கு
  11. தலைய மூணு சுத்து சுத்தி எங்கயாவது கடாசீட்டு புதுசு வாங்கிடுங்க.

    பதிலளிநீக்கு
  12. இப்படித்தாங்க நாமளா விரும்பாட்டாக் கூட சில சமயம் நம்ம சுண்டெலி இருக்காரே அவருக்கு சும்மா இருக்கப் பிடிக்காம ஓடித்தானே பழக்கம் அப்படி ஓடி எதையாவது வாய் வைத்துவிட்டு வந்துவிடுவார்.....அப்புறம் பிள்ளையாருக்கு எத்தனைத் தோப்புக் கரணம் போட்டாலும் விடாது கண்டம்.. பிள்ளையாரோட தலைல குட்டி மெமரிலருந்து வேண்டாத குப்பை எல்லாம் எடுத்துக் கடாசிட்டு....டாக்டரைக் கூப்பிட வேண்டிய நிலைமை வராம சரியாயிடுச்சு. அப்புறம் இதுவரை பிரச்சினை இல்ல...சுண்டெலியும் நல்லா மேஞ்சுக்கிட்டுருக்காரு....நம்ம கன்ட்ரோல்ல....

    யாரோ ஒருவர் லினெக்ஸ் பற்றிச் சொல்லியிருக்கிறார்...துளசியின் வீட்டில் லினெக்ஸ் ஐயையோ ரொம்பக் கஷ்டம்..தமிழ் எனக்குப் பிடிக்காத மொழின்ற மாதிரி (கேரளாவுல இருக்கறதுனாலயோ என்னமோ) டவுன் லோட் பண்ணவே விடாது ஃபான்ட....அப்புறம் ப்ளாக் எல்லாம் கன்னா பின்னானு வரும்.....அதுவும் உபண்டு...தாங்கல.......இங்க தலைமையகத்துல (கீதா வீட்டுலருந்துதான் எல்லாம் அப்லோட்) விண்டோஸ் தான் நிரந்தர ராணி....பிஎஸெனெல் இணைப்பு....ராணி சுகமாக பவனி வந்துகொண்டிருக்கின்றாள்....

    உங்கள் 3 வது ராணியின் பிரலாபம் மிகவும் உபயோகமாகத்தான் இருக்குது....ஐயா! நல்ல நகைச் சுவை உணர்வு ஐயா....

    பதிலளிநீக்கு
  13. விண்டோஸ் ஒரிஜினல் சி.டி வைத்திருப்பவர்கள் கூட அதன் அருமை அறியாமல் ஏதாவது ரிப்பேர் செய்யும்போது அதனை ரிப்பேர் செய்ய வருபவரிடம் கொடுப்பதில்லை. பைரேட்டேட் விண்டோஸ் தான் இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    பார்மெட் ஓ.எஸ் Installation என்று முயற்சித்துப் பார்க்கும் ஒரே மூத்த பதிவர் நீங்கள்தான். இன்னும் சொல்லப் போனால் இவற்றை I.T துறையில் இருக்கும் இளைஞர்கள் கூட இதை செய்வதிலை ரேம் HARD டிஸ்க் சி.டி டிரைவ் போன்றவற்றை மாற்றுவதற்குக் கூட SERVICE காரர்களை அணுகுகிறார்கள்.
    சில நேரங்களில் பார்மேட்டைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை ஒட்டிக்கொண்டு வரும் மால்வேர்களும் ஆட்வேர்களும் சேர்ச் இன்ஜின்களும் உருவாக்கி விடும்
    தனபாலன் சொல்வது போல விண்டோஸ் ஒரிஜினல் பயன்படுத்தும் மிக சிலரில் நீங்களும் ஒருவர். உங்கள் நேர்மைக்கு பாராட்டுகள்.
    பைரேட்டேட் வெர்சனில் அப்டேட் செய்தால் கண்டுபிடித்துவிடும்/ NASCOM RAID செய்தால் 90 சதவீத கணினிகளில் விண்டோஸ் ஐ நீக்க வேண்டி இருக்கும்.பெரிய அளவு கமர்சியல் அல்லாத கணினிகளை எம்.எஸ். கண்டு கண்டுகொள்வதில்லை. ஸ்மார்ட் போன்கள் விண்டோசின் ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளன. நெருக்குதல் கொடுத்தால் விண்டோஸ் பயன்பாடு இன்னும் குறைந்து விடும். M.S. மென்பொருட்களின் விலை மிக அதிக மாக உள்ளது. குறைந்தபட்சமே 7000 .ஆட்டோக்காரர்கள் போல ஒரே சவாரியிலே அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று M.S. நினைக்கிறது ரூ2000அளவில் இருந்தால் எல்லோருமே ஒர்ஜினல் பயன்படுத்துவார்கள் .
    உங்கள் கணினி அறிவு வியக்க வைக்கிறது ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைரேட்டட் புரோக்ராம்களைப் போட்டுப் பார்த்து சலித்து விட்டுத்தான் என்ன ஆனாலும் ஆகட்டும் என்று இந்த லீகல் புரொக்ராம்களை வாங்கினேன். இந்தக் கணினியை நான் வாங்கி உபயோகப்படுத்துவதே என் மூளை துருப்பிடிக்காமல் இருக்கட்டும் என்றுதான். சும்மா இருந்தால் மனது கெட்டுவிடும்.

      விண்டோஸ் 8.1 கூடவே விண்டோஸ் டிபெண்டர் என்று ஒரு ஏன்டி வைரஸ் கொடுக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு கெட்டி இல்லை என்று என் கம்ப்யூட்டர் டாக்டர் சொன்னார். அவர் சிபாரிசின் பேரில் "இசெட்" என்று ஒரு ஏன்டிவைரஸ் அஃபிசியல் 750 ரூபாய் ஒருவருடம் வாங்கிப்போட்டிருக்கிறேன்.

      உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு