லஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 டிசம்பர், 2012

கடவுள் வாங்கும் லஞ்சம்.


எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை தமிழாக்கம் செய்து போட்டிருக்கிறேன்இந்தியாவில் லஞ்சம் என்பது மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போயிருக்கிறது. லஞ்சத்தை இந்தியர்கள் தவறாகவே நினைப்பதில்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒரு விஷயம்.

இந்தியர்கள் லஞ்சம் வாங்குபவர்களை சகித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களை ஒருபோதும் திருத்த முயலுவதில்லை. எந்த மனிதனும் பிறக்கும்போது லஞ்ச எண்ணத்துடன் பிறப்பதில்லை. அவன், தான் வாழும் கலாசாரத்திலிருந்துதான் லஞ்சத்தை கற்றுக்கொள்கிறான்.

இந்தியர்கள் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலாவதாக அவர்களின் மதம், பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் கடவுளுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு முறை தவறிய சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். இந்த பேரத்தில் தகுதியில்லாதவர்களும் பரிசினைப் பெற வழி உண்டாகிறது.

பணக்காரர்களும் பதவியில் இருப்பவர்களும், கடவுளுக்கு பணமாகவும் தங்கமாகவும் அள்ளிக்கொடுக்கிறார்கள். எதற்காக? கடவுள் தங்கள் பதவியையும் பணத்தையும் காப்பாற்றுவார் என்பதற்காகத்தானே? அப்போது அது லஞ்சம் அல்லவா?

இப்படி கடவுளுக்கே லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதினால், கோவிலுக்கு வெளியேயும் அதே முறையைக் கையாளுவதில் தவறு இல்லை என்று நம்புகிறார்கள்.

2009 ஜூன் மாதம் ஜி.ஜனார்த்தன ரெட்டி என்பவர் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரத்தினாலான கிரீடத்தை திருப்பதி கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். ஏழைகளுக்கு இம்மாதிரி கொடுப்பதை வீண் என்று இத்தகையோர்கள் கருதுகிறார்கள். இந்தியாவின் கோவில்களில் சேர்ந்துள்ள அளவுக்கதிகமான செல்வங்களை என்ன செய்வதென்று கோவில் நிர்வாகத்திற்கு தெரியவில்லை. கோடிக்கணக்கான செல்வங்கள் கோவில்களில் புழுதி படிந்து கிடக்கின்றன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டினார்கள். இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போனபோது கோவில்கள் கட்டினார்கள்.

அடுத்ததாக இந்தியர்களின் தனி மனித தார்மீகக் கொள்கை கேள்விக்குரியது. இந்திய வரலாற்றில் பல ராஜ்யங்கள் அந்த நாட்டு சேனைத் தலைவர்களுக்கு கையூட்டு கொடுத்து கைப்பற்றப் பட்டவைதான். இது இந்தியாவிற்கே உள்ள தனிப்பட்ட குணம். கிரீஸ் மற்றும் ஐரோப்பாவில் நடந்துள்ள வீரம் மிக்க யுத்தங்களைப் பார்க்கும்போது, இந்தியாவில் யுத்தங்கள் எப்படி லஞ்ச லாவண்யத்தால் முடிவு செய்யப்பட்டன என்பது கேவலமாக இருக்கிறது.

இந்தியாவில் யுத்தங்களில் சண்டை போடவேண்டிய அவசியமே இல்லை. அனைத்து போர்களும் லஞ்சத்தினால்தான் முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு ராஜாவிடம் எவ்வளவு படைகள் இருந்தாலும் பணத்தினால் அவைகளை வெல்லமுடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பிளாசி யுத்தத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதினால் இந்திய வீரர்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இன்றும் பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய சிப்பாய்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு காஷ்மீருக்குள் வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கிளைவ் வெறும் மூவாயிரம் சிப்பாய்களை வைத்துக்கொண்டு மீர் ஜாபருக்கு லஞ்சம் கொடுத்து முழு வங்காளத்தையும் வெற்றி கொண்டதாக சரித்திரம் கூறுகிறது.

இந்தியக் கோட்டைகள் அனைத்தும் தகுந்த ஆட்களுக்கு பணம் கொடுத்தே பிடிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன் இந்தியர்கள் மட்டும் இவ்வாறு இருக்கிறார்கள்?

இந்தியர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் நியாயமாக நடந்தால் எல்லோரும் முன்னேறலாம் என்ற கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள். (ராஜா அண்டாவில் பால் ஊற்றச் சொன்ன கதையை நினைவில் கொள்ளவும்.)

ஏனென்றால் அவர்கள் மத நம்பிக்கையில் இந்த ஒற்றுமையைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. அவர்களுடைய ஜாதிகள் அவர்களை தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கிறது. எல்லோரும் சமம் என்று அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர்களுக்குள் பேதங்கள் ஏற்பட்டு பல மதங்களாக, சீக்கியர், பௌத்தர், சைனர் என்று பிரிந்தார்கள். பலர் கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினார்கள். இதனால் இந்தியாவில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை.

இந்தியாவில், இந்தியர்கள் யாரும் இல்லை. இந்துக்கள், கிறித்தவர்கள், முஸலிம்கள் ஆகியோர்தான் இருக்கிறார்கள். இந்த வேறுபாடுகள் ஒரு மோசமான கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. இதே வேறுபாடுகள்தான் லஞ்சம் மிகுந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொருவரும் அடுத்தவனுக்கு எதிரி – கடவுளைத்தவிர, ஆனால் அவருக்கும் காரியம் நிறைவேற லஞ்சம் கொடுக்கவேண்டும். 

செவ்வாய், 2 அக்டோபர், 2012

லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதுவும் குற்றம்


மகாத்மா காந்தி நினைவுப் பதிவு

இந்த இரண்டும் குற்றமே இல்லை. போலீசில் மாட்டிக் கொள்வதுதான் குற்றம். நன்கு படித்த ஆசிரியர் சொல்லும் வார்த்தையா இது என்று பலரும் நினைக்கலாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இப்படி அடுக்கு மொழியில் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் நம் நாட்டின் நடைமுறையில், நான் மகாத்மா காந்தி மாதிரி சத்தியம் மட்டும்தான் பேசுவேன் என்று வாழும் தைரியம் எனக்கு இல்லை. ஒன்று மட்டும் என்னால் முடிந்தது. என் வாழ் நாளில் நான் எதற்கும் லஞ்சம் வாங்கியதில்லை. அப்படி வாய்ப்புள்ள வேலையில் நான் இருக்கவில்லை என்பதுதான் முழு உண்மை.

நான் பல இடங்களில் லஞ்சம் கொடுத்திருக்கிறேன். அதைப் பெரிய சாதனையாகவோ, கெட்டிக்காரத்தனமாகவோ நான் கருதவில்லை.   அதை நான் நியாயப் படுத்தவும் இல்லை.  என்னால் நேர்வழியில் சென்று அந்தக் காரியத்தை முடிக்க இயலவில்லை. அது என் கையாலாகத்தனம். அதை ஈடுகட்ட இந்த உபாயத்தைக் கையாண்டேன். அவ்வளவுதான்.

உதாரணத்திற்கு ஒரு காரியம். அந்தக்காலத்தில் கவர்ன்மென்ட் வேலை எதுவென்றாலும் அதற்குரிய பீஸை டிரஷரியில் கட்டி அந்த செலானைக் கொடுக்கவேண்டும். இந்த மாதிரி செலான் மூலம் பணம் கட்டியிருப்பவர்களுக்கு அதன் நடைமுறைகள் தெரியும்.

செலான் பாரம் வாங்குவதே ஒரு கலை. அதைப் பூர்த்தி செய்து உள்ளே கொடுத்தால் ஒரு மணி நேரம் கழித்து அதற்கு ஒரு நெம்பர் போட்டுக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுபோய் ஸ்டேட் பேங்கில் பணம் கட்டவேண்டும். ஏகப்பட்ட பேர் இருப்பார்கள். பணம் கட்டவே ஒரு மணி நேரம் ஆகும். பின் செலான் வர மாலை ஐந்து மணி ஆகும். கட்டாயம் ஒரு நாள் ஆகும்.

இந்த வேலையை முடித்துக்கொடுக்க புரோக்கர்கள் உண்டு. அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பணமும் கமிஷனும் கொடுத்துவிட்டு மறுநாள் போனால் செலான் ரெடியாக இருக்கும். இங்கு நான் சட்டப்பிரகாரம்தான் நடப்பேன் என்றால் வெட்டி அலைச்சல்தான் மிஞ்சும்.

ஆகவே என்னுடைய சுயநலத்திற்காக மனச்சாட்சிக்கு எதிராக செயல்பட்டிருக்கிறேன். இது சரியா இல்லை தவறா என்ற விவாதத்திற்கு முடிவே இருக்காது.

மகாத்மா காந்தியே இன்று உயிருடன் இருந்தாலும் நம் நாட்டின் தலைவிதியை மாற்ற அவரால் முடியாது என்பதுதான் உண்மை.