விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 செப்டம்பர், 2015

பட்டறிவு இல்லையே, ஏன்?

                                           Image result for knowledge symbol

அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று உயிரினங்களுக்கு இயற்கையாக இருக்கும் அறிவு. இன்னொன்று அனுபவத்தின் மூலமாகப் பெறப்படும் அறிவு. மனிதனும் உயிரினங்களில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. குழந்தை கொஞ்சம் பெரிதானதும் நடக்க ஆரம்பிக்கிறது. அப்படி நடக்க ஆரம்பிக்கும்போது அது நிலை தடுமாறி பல தடவை கீழே விழும். பிறகுதான் கீழே விழாமல் நடக்கப் பழகி விடுகிறது.

இதுதான் பட்டறிவு. தானே பட்டு அதாவது அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளும் அறிவு. ஒவ்வொரு அனுபவத்தையும் தானே அனுபவித்துத் தெரிந்து கொள்வது என்பது ஒரு முட்டாளின் செயல். மற்றவர்களின் அனுபவத்திலுருந்தும் பாடம் கற்றுக்கொள்பவனே புத்திசாலி. இந்த ஞானம் இயற்கையாகவே இருக்கவேண்டும்.

தன்னுடைய அனுபவத்திலிருந்தே பாடம் கற்றுக் கொள்ளாதவர்களை எதில் சேர்த்துவது? மிகவும் கஷ்டமான காரியம்தான்.

சரி, இந்த பீடிகை எல்லாம் எதற்காக என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. காது கொஞ்சம் தகறாருதான். இருந்தாலும் இதெல்லாம் துல்லியமாகக் கேட்டுவிடும்.

தினமும் செய்தித்தாள்களில் சாலை விபத்துச் செய்திகளைப்பற்றிப் படித்து   சலித்து விட்டது. வாகனம் ஓட்டும் அனைவரும் இச்செய்திகளைப் படிக்கிறார்கள். ஆனாலும் விபத்துகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொருவரும் இச்செய்திகளைப் படிக்கும்போது, தான் மிகவும் தேர்ச்சி பெற்றவன், நான் இப்படிப்பட்ட விபத்துகளை ஏற்படுத்த மாட்டேன் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் பல நண்பர்களுக்கு இரு சக்கர, நாற்சக்கர வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். கற்றல் முடிந்த பிறகு அவர்களுக்கு நான் கடைசியாகச் சொல்லும் அறிவுரை என்னவென்றால்-

நீங்கள் ஓட்டுவது ஒரு சக்தி வாய்ந்த இயந்திரம். அதை கவனமாக ஓட்டினால் அதற்கு நீங்கள் எஜமானர். கொஞ்சம் கவனம் தப்பினால் கூட அது உங்களுக்கு எஜமானனாகி விடும். அது எஜமானனாகும்போது என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. உங்கள் உயிருக்கே கூட ஆபத்து விளையலாம். ஆகவே வாகனம் ஓட்டும்போது முழுக் கவனமும் வாகனம் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டும்.

இதுதான் என் முடிவான அறிவுரையாக அமையும்.

ஆனால் இப்போது செய்தித்தாள்களில் வெளிவரும் பெரும்பான்மையான விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவினாலேயே ஏற்படுவதுதான் வேதனைக்குரிய விஷயம்.

சென்னையில் இருக்கும் ஒரு வியாபாரி திருநெல்வேலியில் இருக்கும் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்குப்போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த உறவினர் இவர் மாதிரி வியாபாரத்தில் இருக்கும் எல்லோருடைய சௌகரியத்திற்காகவும் அந்த விசேஷத்தை ஞாயிற்றுக்கிழமை வைத்திருக்கிறார்.

சென்னை வியாபாரி என்ன திட்டம் போடுகிறார் என்றால், சனிக்கிழமை வியாபாரத்தை மாலை 10 மணிக்கு முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு கிளம்பினால் காலை 7 அல்லது 8 மணிக்கு திருநெல்வேலி போய்விடலாம். அன்று பகல் முழுவதும் விசேஷ வீட்டில் இருந்து விட்டு மாலை சாப்பிட்டுவிட்டு 8 மணிக்கு கிளம்பினால் திங்கட்கிழமை விடிவதற்குள் சென்னை வந்து விடலாம். திங்கள் காலை 10 மணிக்கி வியாபாரத்தைக் கவனிக்க சென்று விடலாம்.

அவருடைய கார் ஓட்டுனர் இந்த திட்டத்தை ஆமோதிப்பார். எனக்கு இரவு நேரங்களில் கார் ஓட்டும் அனுபவம் நன்றாக இருக்கிறது. இது ஒன்றும் கஷ்டமேயில்லை. மாலையில் திருநெல்வேலி போனதும் நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். நிங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள். அன்று இரவு புறப்படுவதற்குள் நான் முழு ஓய்வு எடுத்துவிடுவேன். அதனால் திரும்பும்போது நான் புத்துணர்ச்சியுடன் இருப்பேன் என்று தைரியம் சொல்லி விடுவார்.

கார் முப்பது லட்சம் போட்டு வாங்கினது. ஆக்சலரேட்டரில் கால் வைத்தால் வண்டி 100 கிமீ வேகத்தில்தான் புறப்படும். நெடுஞ்சாலையில் சர்வ சாதாரணமாக 150 கிமீ வேகத்தில் போகும்.  ஓட்டுனர் நியாயமாக சனிக்கிழமை பகல் முழுவதும் ஓய்வு எடுத்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருக்கமாட்டார். பகலில் முதலாளி கொடுக்கும் சல்லரை வேலைகளைக் கவனித்திருப்பார். இரவு 11 மணிக்குப் புறப்பட்டுப் போகும்போது காலை 5 மணிக்கு அவரை அறியமால் கண் சொருகி வரும். அப்போது கொஞ்ச நேரம் நிறுத்தி ஓய்வு எடுப்பாரா? மாட்டார். அப்படி ஓய்வு எடுத்தால் அந்த ஓட்டனரின் தன்மானம் என்ன ஆவது?

ஆகவே அப்படியே சமாளித்துக்கொண்டு ஓட்டுவார். ரோடு எங்கே போகிறது, வண்டியின் வேகம் என்ன என்ற உணர்வுகள் அற்ற மோன நிலையில் அவர் அப்போது இருப்பார். வண்டியில் சவாரி செய்யும் முதலாளியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். ஓட்டுனரின் நிலைமையைப் புரிந்து கொள்ள யாரும் விழித்திருக்கமாட்டார்கள்.

ஓட்டுனர் ஒரு நொடி கண்ணயர்ந்து விட்டால் 150 கிமீ வேகத்தில் போகும் வாகனம் சுமார்  40 மீட்டர் ஓட்டுனரின் கவனமில்லாமல் சென்று விடும். அந்த தூரத்திற்குள் ஏதாவது லாரி நின்று கொண்டிருக்கலாம். அல்லது ரோடு வளைவு இருக்கலாம். இதனால் விபத்து ஏற்படலாம். 150 கிமீ வேகத்தில் போகும் ஒரு வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் அதில் பயணம் செய்யும் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள் என்று யோசியுங்கள்?

ஏன் இவ்வளவு ஆபத்தை ஒவ்வொருவரும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது எனக்குப் புரியாத ஒன்று. விபத்துகள் என்பது அடுத்தவர்களுக்கு ஏற்படுவது. நமக்கு விபத்து என்றும் ஏற்படாது என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான் இதற்குக் காரணம்.

வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் எந்த நொடியும் விபத்து ஏற்படலாம் என்ற ஜாக்கிரதை உணர்வுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும், எப்போது அவர் எனக்கு விபத்து ஏற்படாது என்று நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் வாகனத்திற்கு விபத்து ஏற்படும்.