Foto afkomstig van: de Luie Motorfiets site.
நாட்டு நடப்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
சட்டங்கள் சாதாரண மனிதர்களைப் பாதுகாக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் காவல் துறைக்கு ஒரு புகார் கொடுக்கப்போனால் என்னென்ன கஷ்டங்கள் உண்டாகும் என்பது அனுபவித்தால்தான் தெரியும்.
நேற்று நான் ஒரு ரோட்டில் கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். ரோடு நல்ல அகலம். மணி காலை 11.30. ரோட்டில் டிராபிக் அதிகமில்லை. நான் 40 கி.மீ. வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஒரு கார் வலது புறம் திரும்புவதற்காக சிக்னல் போட்டு ஹெட்லைட்டையும் போட்டு விட்டான். நான் காரை நிறுத்தினேன்.
பின்புறம் டமால் என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. சரி, வம்பு வந்து விட்டது என்று கீழே இறங்கிப் பார்த்தேன். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் கீழே விழுந்து கிடக்கிறான். உடனே அங்கு கூடியவர்கள் அவனை கைத்தாங்கலாக எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள்.
என்ன நடந்திருக்கிறது என்றால், அவன் கூட இன்னொரு பைக்கில் வந்து கொண்டிருந்த தன் நண்பனுடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறான். நான் காரை நிறுத்தியதைக் கவனிக்கவில்லை. நேரே பைக்கைக் கொண்டுவந்து என் காரில் மோதியிருக்கிறான். அவன் பிரேக் கூட போடவில்லை. அவ்வளவு அஜாக்கிரதையாக பைக் ஓட்டியிருக்கிறான். ஹெல்மெட்டும் இல்லை.
நான் இந்த விபத்துக்கு எள்ளளவும் காரணமில்லை. அவன் கூட வந்தவர்கள் இதை உணர்ந்து கொண்டதாலும், அவனுக்கு இரத்தக்காயம் எதுவும் ஏற்படாததாலும், அவன் மயக்கமடையாமல் நல்ல நினைவுடன் இருந்ததாலும் என்னைப் போகவிட்டார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன்தான் காருக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பின்புற பம்பர் கழன்று விட்டது. இன்சூரன்ஸ் கிளெய்ம் போட்டு மாற்றினாலும் எனக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும். அடுத்த வருஷம் இன்சூரன்ஸில் "நோ க்ளெய்ம்" போனஸ் கிடைக்காது. அதில் ஒரு 1500 ரூபாய் போகும். ஆக மொத்தம் 2500 ரூபாய் தண்டம்.
ஆனால் நான் திருப்திப் பட்டுக்கொண்டேன். வந்த சனியன் இந்த 2500 ரூபாயோடு போயிற்றே, இல்லாமல் அந்த மடையனுக்கு தலையில் அடிபட்டு மயக்கமாயிருந்தால் நான் அந்த இடத்தை விட்டு வந்திருக்க முடியாது. போலீஸ் வரவேண்டும். அடிபட்டவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டும். ஜாமீனுக்கு ஆள் பிடிக்கவேண்டும்.
அடிபட்டவன் பிழைத்து விட்டால் ஓரளவிற்கு எனக்கு வழி பிறக்கும். அப்போதும் அவன் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் கேஸ் போடுவான். போலீஸ் அவனுக்குச் சாதகமாகத்தான் ரிப்போர்ட் எழுதுவார்கள். வருடக்கணக்கில் கேஸ் நடக்கும். நான் கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டிற்கும் நடந்து கால் செருப்பு தேய்ந்து போகும். ராத்திரியில் தூக்கம் வராது. முக்கியமாக பதிவுகள் எழுதும் ஆர்வம் போய்விடும். (பதிவுலகத்திற்கும் உங்களுக்கும் எவ்வளவு நஷ்டம்!!!!!!)
அடிபட்டவன் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டான் என்றால் அவ்வளவுதான். நான் மண்டையைப் போடும் வரைக்கும், அதன் பிறகு என் வாரிசுகளையும் இந்த ஏழரை நாட்டுச் சனி விடாது.
இந்த விளைவுகளை நினைக்கும்போது, இந்த 2500 ரூபாய் செலவு ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது.
இப்படி என்னைக் காப்பாற்றிய அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.