விபத்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஜூன், 2017

14. பஸ்களும் விபத்துக்களும்

                                           Image result for பஸ் விபத்து

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் போக்கு வரத்து தேவைகளும் அதிகரித்து விட்டன. பஸ்கள், லாரிகள், மினிபஸ்கள், வேன்கள், கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஸகூட்டர்கள் என்று பல விதமான வாகனங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்த வாகனங்கள் அதிகரிப்புக்கு ஈடாக ரோடுகள் அதிகரிக்கவில்லை. அதனால் அடிக்கடி ரோடுகளில் விதவிதமான விபத்துக்கள் நடக்கின்றன.

வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தனியாக ஸ்பெஷல் லைசன்ஸ் வேண்டும். இப்படியெல்லாம் சட்ட புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யாரும் பார்க்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியே?

குறிப்பாக அரசு நடத்தும் பஸ் நிறுவனங்களில் இருக்கும் பஸ் டிரைவர்கள் பெரும்பாலும் அனுபவம் குறைந்தவர்கள். அவர்களிடம் ஒரு பெரிய பஸ்ஸைக்கொடுத்து ஓட்டச்சொன்னால் அவர்கள் அவர்களுடைய திறனுக்குத் தக்கவாறுதான் ஓட்டுவார்கள். சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் செய்யும் தவறுகளினால்தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களோ ரோடு முழுவதும் அவர்களுக்காகவே இருக்கிறது என்ற எண்ணம். பின்னால் வரும் கனரக வாகனங்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. மேலும் இந்த வாகனங்களில் எவ்வளவு பேர் போகமுடியும் என்ற உணர்வும் கிடையாது. ஒரு TVS 50 மொபட் வண்டியில் தன் குடும்பம் முழுவதையும் (5 பேர்) ஏற்றிக்கொண்டு போகிறார்கள். வண்டி இழுக்கமாட்டேன் என்கிறது. முக்கி முனகிக்கொண்டு மேட்டில் ஏறும்போது பின்னால் வேகமாக வரும் பஸ் அல்லது லாரி இந்த மொபட்டின் மேல் லேசாகப்பட்டால் போதும். மொபட்டில் போகிறவர்கள் அந்த லாரியின் முன்னால் விழுந்து.... பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் தினமும் பேப்பரில் பார்க்கிறோம்.

ஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு இருக்கிறது. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

கோவையில் மட்டும் கடந்த மாதம் தெரு விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 என்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருந்தது. இது தமிழ்நாட்டிலேயே அதிக பட்ச இறப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்களுக்கு காரணம் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான். நல்ல சேவை.

இந்த விபத்துக்களை செய்தித்தாள்களில் காலையில் படித்து மாலையில் மறந்து போகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைப் பற்றி நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ரோடில் செல்லும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நாமும் ஒரு நாள் இந்த மாதிரி செய்தியாகலாம்.

வேகம், வேகம், வேகம். இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம். எதிலும் வேகம். எல்லாவற்றிலும் வேகம். யமலோகத்திற்கு போவதற்கும் வேகம். என்ன செய்ய முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

புதன், 11 மே, 2016

கட்டுப்பாட்டை இழந்து .....

                                     Image result for car accidents

வாகன விபத்துச் செய்திகளை பிரசுரிக்கும் தமிழ் பத்திரிக்கைகள் ஒரு வார்த்தையைத் தவறாது உபயோகிப்பதைப் படித்திருப்பீர்கள். அது என்னவென்றால் "வாகனம்,  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" விபத்து ஏற்பட்டது என்று எழுதுவார்கள்.

நானும் இந்த சொற்றொடரை பலமுறை படித்திருக்கிறேன். அது எப்படி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்கும் என்று யோசித்திருக்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு வாகனம் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

அப்படி யோசிக்கும் போது சில சிந்தனைகள் என் மனதில் உருவாகின. அவைகளை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு வாகனம், கார் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒருவர் ஓட்டும்போது அது அவருடைய எண்ணங்களுக்கு இசைந்தவாறு ஓடுகிறது. வேகமாகப்போக வேண்டுமானால் ஆக்சிலரேடரை அழுத்தினால் வேகமாகப்போகிறது. இடதுபுறம் திரும்ப ஸ்டியரிங்கை இடது புறம் திருப்பினால் காரும் இடது புறம் திரும்புகிறது. காரை நிறுத்தவேண்டுமானால் பிரேக்கை அழுத்தினால் கார் நிற்கிறது.

இப்படித்தான் காரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்க்காரின் குணாதிசியங்களை நன்கு அறிந்தவர்கள் காரை தன் கட்டுப்பாட்டில் வைத்து விபத்தில்லாமல் ஓட்டுவார்கள். ஆனால் அந்தக் காரின் சக்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளாத ஒருவன் அதை ஓட்டும்போது ஒரு கட்டத்தில் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் நிலை நிறுத்த முடிவதில்லை.

உதாரணமாக அந்தக் கார் 150 கிமீ வேகத்தில் போகக்கூடும். அந்த வேகத்தில் போகும்போது அதை வளைவுகளில் சுலபமாகத் திருப்ப முடியாது. அப்படி திருப்பும்போது அந்தக் கார் ஓட்டுனர் நினைக்காத திசையில் போகும். அப்போது விபத்து ஏற்படுகிறது. அதே போல் அந்த வேகத்தில் போகும் காரை அவசரமாக நிறுத்தவேண்டும் என்று சடன்பிரேக் போட்டால் கார் குட்டிக்கரணம் அடிக்கும்.

இந்த தன்மைகளை இளைஞர்கள் உணருவதில்லை. அதனால்தான் பல விபத்துகள் ஏற்படுகின்றன. அனுபவப்பட்ட ஓட்டுனர்கள் கூட சோர்வாக இருக்கும்போது இந்த உண்மைகளை மறந்து விடுகிறார்கள். அவர்களும் விபத்து உண்டாக்குகிறார்கள். தவிர சோர்வுடன் கார் ஓட்டும்போது அவர்களின் விவேகம் குறைந்து விடுகிறது. தூரத்தில் நிற்கும் லாரி நிற்கிறதா அல்லது ஓடிக்கொண்டிருக்கிறதா என்பதை அவர்களால் உணர முடிவதில்லை.

வெகு சமீபத்தில் வந்தவுடன்தான் நிலைமை புரிகிறது. அப்போது பதட்டத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் விபத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் எல்லோருக்குத் சாதாரண சமயத்தில் நன்கு தெரியும். ஆனால் வாகனத்தில் ஏறி அந்த சீட்டில் உட்கார்ந்தவுடன் அவர்கள் வேறு மனிதனாக மாறிப்போகிறார்கள். தாங்கள் கற்றவற்றை மறந்து போகிறார்கள். "நான் எவ்வளவு அனுபவப்பட்ட ஓட்டுனர், என் வண்டிக்கு விபத்து எப்பொழுதும் ஏற்படாது" என்ற மமதையுடன் காரை ஓட்ட முற்படுகிறார்கள்.

இந்த மமதைதான் விபத்துகளை ஏற்படுத்துகிறது. மக்கள் எப்போது திருந்துவார்க்ள என்று தெரியவில்லை.

சனி, 8 ஆகஸ்ட், 2015

ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு



இந்த வசனத்தை கிராமங்களில் உள்ள வயசானவர்கள் அடிக்கடி சொல்வார்கள். ஏனென்றால் இந்த வயசில் உள்ளவர்கள் எந்த விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்கள் செய்வார்கள்.

அது என்ன வயசு என்று கேட்கிறீர்களா? 16 முதல் 22 வரையிலான வயசுதான் ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு.

செய்தித் தாள்களில் இப்போது இருவகையான விபத்துகள் அடிக்கடி வருகின்றன. ஒன்று இருசக்கர வாகனங்களின் விபத்து. இன்னொன்று தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களைப் பற்றிய செய்தி.

இந்த இருவகை விபத்துகளிலும் உயிரிழப்பவர்களின் வயதைப் பார்த்தால் இந்த ஒடுகிற பாம்பை மிதிக்கும் வயசாகத்தான் இருக்கிறது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இவ்வாறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் இந்த இளைஞர்களுடைய பெற்றோரின் நிலை எப்படியிருக்கும்?

ஏன் இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பயமாக இருக்கிறது.


Father and son on an antique motorcycle; both dressed in shorts and T-shirt
Foto afkomstig van: de Luie Motorfiets site.

நாட்டு நடப்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.

சட்டங்கள் சாதாரண மனிதர்களைப் பாதுகாக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் காவல் துறைக்கு ஒரு புகார் கொடுக்கப்போனால் என்னென்ன கஷ்டங்கள் உண்டாகும் என்பது அனுபவித்தால்தான் தெரியும்.

நேற்று நான் ஒரு ரோட்டில் கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். ரோடு நல்ல அகலம். மணி காலை 11.30. ரோட்டில் டிராபிக் அதிகமில்லை. நான் 40 கி.மீ. வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஒரு கார் வலது புறம் திரும்புவதற்காக சிக்னல் போட்டு ஹெட்லைட்டையும் போட்டு விட்டான். நான் காரை நிறுத்தினேன்.

பின்புறம் டமால் என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. சரி, வம்பு வந்து விட்டது என்று கீழே இறங்கிப் பார்த்தேன். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் கீழே விழுந்து கிடக்கிறான். உடனே அங்கு கூடியவர்கள் அவனை கைத்தாங்கலாக எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள்.

என்ன நடந்திருக்கிறது என்றால், அவன் கூட இன்னொரு பைக்கில் வந்து கொண்டிருந்த தன் நண்பனுடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறான். நான் காரை நிறுத்தியதைக் கவனிக்கவில்லை. நேரே பைக்கைக் கொண்டுவந்து என் காரில் மோதியிருக்கிறான். அவன் பிரேக் கூட போடவில்லை. அவ்வளவு அஜாக்கிரதையாக பைக் ஓட்டியிருக்கிறான். ஹெல்மெட்டும் இல்லை.

நான் இந்த விபத்துக்கு எள்ளளவும் காரணமில்லை. அவன் கூட வந்தவர்கள் இதை உணர்ந்து கொண்டதாலும், அவனுக்கு இரத்தக்காயம் எதுவும் ஏற்படாததாலும், அவன் மயக்கமடையாமல் நல்ல நினைவுடன் இருந்ததாலும் என்னைப் போகவிட்டார்கள்.

வீட்டிற்கு வந்தவுடன்தான் காருக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பின்புற பம்பர் கழன்று விட்டது. இன்சூரன்ஸ் கிளெய்ம் போட்டு மாற்றினாலும் எனக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும். அடுத்த வருஷம் இன்சூரன்ஸில் "நோ க்ளெய்ம்" போனஸ் கிடைக்காது. அதில் ஒரு 1500 ரூபாய் போகும். ஆக மொத்தம் 2500 ரூபாய் தண்டம்.

ஆனால் நான் திருப்திப் பட்டுக்கொண்டேன். வந்த சனியன் இந்த 2500 ரூபாயோடு போயிற்றே, இல்லாமல் அந்த மடையனுக்கு தலையில் அடிபட்டு மயக்கமாயிருந்தால் நான் அந்த இடத்தை விட்டு வந்திருக்க முடியாது. போலீஸ் வரவேண்டும். அடிபட்டவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டும். ஜாமீனுக்கு ஆள் பிடிக்கவேண்டும்.

அடிபட்டவன் பிழைத்து விட்டால் ஓரளவிற்கு எனக்கு வழி பிறக்கும். அப்போதும் அவன் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் கேஸ் போடுவான். போலீஸ் அவனுக்குச் சாதகமாகத்தான் ரிப்போர்ட் எழுதுவார்கள்.  வருடக்கணக்கில் கேஸ் நடக்கும். நான் கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டிற்கும் நடந்து கால் செருப்பு தேய்ந்து போகும். ராத்திரியில் தூக்கம் வராது. முக்கியமாக பதிவுகள் எழுதும் ஆர்வம் போய்விடும். (பதிவுலகத்திற்கும் உங்களுக்கும் எவ்வளவு நஷ்டம்!!!!!!)

அடிபட்டவன் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டான் என்றால் அவ்வளவுதான். நான் மண்டையைப் போடும் வரைக்கும், அதன் பிறகு என் வாரிசுகளையும் இந்த ஏழரை நாட்டுச் சனி விடாது.

இந்த விளைவுகளை நினைக்கும்போது, இந்த 2500 ரூபாய் செலவு ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது.

இப்படி என்னைக் காப்பாற்றிய அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். 

செவ்வாய், 20 நவம்பர், 2012

இருசக்கர வாகனங்களும் விபத்துகளும்.

செய்தித்தாள்களைப் படித்தால் அனுதினமும் தவறாமல் கண்ணில் படும் செய்தி என்னவென்றால் இரு சக்கர வாகன விபத்துகள்தான். இரண்டு அல்லது மூன்று விபத்துகள் தவறாமல் நடக்கின்றன.

நான் ரோட்டில் போகும்போது இந்த இருசக்கர வாகன ஓட்டிகள் எவ்வாறு ஓட்டுகிறார்கள், விபத்துகள் ஏன் நடக்கின்றன என்று கவனிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அப்படிக் கவனித்ததில் எனக்குப்பட்ட சில குறிப்புகளை இங்கு கொடுக்கிறேன்.

கல்லூரி செல்லும் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் ரோட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது ரோடு "ரேஸ் டிராக்" மாதிரி தெரியும் போல. அவர்கள் வைத்திருக்கும் வாகனம் அதிக பட்சமாக  என்ன வேகத்தில் போகும் என்று டெஸ்ட் செய்வார்கள். கூடவே போட்டிக்கு இன்னும் இரண்டு வண்டிகள் இருக்கும். ஒவ்வொரு வண்டியிலும் மூன்று மூன்று பேர் இருப்பார்கள். பாம்புகள் நெளிந்து ஓடுகிற மாதிரிதான் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். இவர்கள் வண்டிகளெல்லாம் நேர்க்கோட்டில் போகாது என்று நினைக்கிறேன்.

போதாததிற்கு எல்லோரும் சோமபானம் அருந்தியிருப்பார்கள். ஹெல்மட் போடமாட்டார்கள். விபத்திற்கு வேறு காரணங்கள் வேண்டுமா?

அடுத்த ஜாதி, இருசக்கர வண்டி எவ்வளவு பேர்களைத் தாங்கும் என்று டெஸ்ட் செய்பவர்கள். இவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்யாணம் ஆகி  இரண்டு குழந்தைகள் இருக்கும். நான்கு பேரும் வண்டியில் போகும்போது வண்டியின் சக்தி குறையும். பேலன்ஸ் கிடைக்காது. ஆனால் அதைக் கவனிக்காமல் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். பெரிய வண்டிகளில் மோதி விபத்து ஏற்படுத்துவார்கள்.

இன்னொரு ஜாதி. ரோட்டின் ஓரத்தில் போய்க் கொண்டிருப்பார்கள். சைடு மிர்ரரைக் கவனிக்க மாட்டார்கள். பின்னால் ஏதாவது பெரிய வண்டி வந்து கொண்டிருக்கும். அதைப் போக விடமாட்டார்கள். அந்த வண்டி மகவும் பக்கத்தில் வந்த பிறகு பயந்து போய் வேகத்தைக் குறைப்பார்கள். பெரிய வண்டியின் இடது மூலை இரு சக்கர வாகனத்தை லேசாகத் தொடும். வாகனம் கவிழ்ந்து வாகனத்தில் செல்பவர்கள் தலை குப்பர விழுவார்கள். தலையில் அடிபட்டு பரலோகம் போவார்கள்.

அப்புறம் இந்த செல்போன்கள் இருக்கிறதே, அதை யமதர்மன்தான் கண்டுபிடித்து இந்த உலகிற்கு அனுப்பியிருப்பான் என்று நம்புகிறேன். செல்போன் பேசும்போது புற உலகில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்குத் தெரியுமா?

இந்த மாதிரி விபத்துகள் நடந்த பிறகு அவர்களின் தாய் தகப்பனின் நிலை எப்படியிருக்கும் என்று இவர்கள் ஒரு நொடியாவது சிந்தித்தால் இப்படி விபத்துகள் நடக்குமா?

இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்களோ?

(படங்கள் கூகுள் உதவி)

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டு யோசிக்க வைக்கும் செய்திகள்.


ஒன்று.

திருநெல்வேலி ஆலங்குளம் அருகே ஒரு காரும் லாரியும் மோதினதில் எட்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு பேர் சீரியசாக இருக்கிறார்கள். மிகவும் பரிதாபமான செய்தி. படிப்பதற்கே கஷ்டமாக இருந்தது.

இந்தக் கஷ்டம், பரிதாபம் இவைகளை விட்டுவிட்டு செய்தியை அலசினால் தெரியக்கூடிய கருத்துகள்.
  
  1. ஒரு குடும்பத்தினர் பணத்தை மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இன்னொரு உறவினர் வந்த வாடகைக் காரில் ஏறியிருக்கிறார்கள். கார் சக்திக்கு மீறிய அதிக பாரத்தை ஏற்றியிருக்கிறது.
  2.   கார் கொண்டு வந்த உறவினர், எல்லோரும் ஏறினால் இட நெருக்கடி ஏற்படும் என்று சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
  3.   கார் டிரைவர் 22 வயதுப் பையன். அவன் இப்படி அதிக பாரம் ஏற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவில்லை.
  4.   கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும், காரில் அதிக பாரம் இருக்கும்போது காரை ஓட்டுவதும் வளைப்பதுவும் எவ்வளவு கடினம் என்று.
  5.   டிரைவருக்கு இரவு சீக்கிரம் ஊர் போய்ச் சேரவேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். ஆகவே வேகமாக காரை ஓட்டியிருக்கிறார்.
  6.   அதிக பாரத்தினாலும், அதிக வேகத்தினாலும் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வண்டிக்கு இடம் கொடுக்க முடியவில்லை.
  7.   லாரிக்காரனும் அதே மாதிரி வளவில் இடம் கொடுக்காமல் வந்திருக்கலாம்.
  8.   விபத்து நடந்துவிட்டது. 8 உயிர்கள் நஷ்டம். எத்தனை அழுது புரண்டாலும் உயிர்கள் மீளப்போவதில்லை.

காரில் போகும்போது சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர் ஓட்டினாலும் கூட செல்பவர்கள் கண்காணிப்பாக இருந்து செயல்படவேண்டும். அதிக வேகம் போகும்போது டிரைவரை கண்டிக்கவேண்டும். அதற்கு தைரியம் இல்லாவிடில் காரில் போகக்கூடாது. அதிக பாரம் ஏற்றுவதில் கண்டிப்பு வேண்டும். தயவு தாட்சண்யம் கூடாது. விபத்து ஏற்பட்டபின் வருத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை.

இரண்டு.

வேளச்சேரியில் மனித உரிமைக் கழகத்தினரை பொது மக்கள் நன்றாக மட்டம் தட்டியிருக்கிறார்கள். எப்போதும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. திருட்டுக் கொடுத்தவனுக்கு ஒன்றும் சொய்ய மாட்டார்கள். திருடனைப் பிடித்து தண்டித்தால் இவர்களுக்கு உடனே மனித நேய உணர்வு பொங்கிக்கொண்டு வரும்.

கொலை நடந்துவிட்டால் கொலையுண்டவனின் குடும்பத்தைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். கொலைகாரனுக்காக பரிந்து பேசிப் போராட்டம் நடத்துவார்கள். இவர்களை எல்லாம் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைக்கவேண்டும்.