கடவுளைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை. அதனால் அதைவிட்டுவிட்டு என் சொந்தக்கதையை ஒரு பதிவாக எழுதலாம் என்று இதை எழுதுகிறேன். முதலில் நான் வேலைக்கு சேர்ந்த கதையில் ஆரம்பிப்போம். நண்பர் அரும்பாவூர் அவர்களும் ஆசைப்பட்டார்கள்.
நான் கோயமுத்தூரில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலை பார்த்து, ஓய்வு பெற்று, வாழ்ந்து கொண்டிருப்பவன். நான் பிறந்தது சாதாரண, ஏழ்மைக்கு சற்றே மேம்பட்ட குடும்பம். மூன்று வேளை சாப்பாடு, இரண்டு செட் டிரஸ் உண்டு. அதற்கு மேல் ஒன்றும் கிடைக்காது. ஒன்றாம் கிளாஸ் முதல் பிஎச்டி வரை எல்லாம் உள்ளூரிலேயே படித்து முடித்து விட்டேன். காரணம் வெளியூர் படிப்பு என் வீட்டு நிலைமையில் சாத்தியப்படாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இளநிலை பட்டப்படிப்பு வரை படிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் படிப்பு செலவு அன்று அதிகம் இல்லை. முனிசிபல் ஆரம்ப பள்ளி, முனிசிபல் ஹைஸ்கூல், கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ், கவர்மென்ட் அக்ரி காலேஜ் என்று எல்லாம் சலீசாக இருந்தன. தவிர எல்லாம் வீட்டிலிருந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தன. போக்குவரத்து சுலபம். இதைவிட முக்கியமான காரணம், நான் எந்த வகுப்பிலும் பெயில் ஆகாமல் படித்தேன். ஏதாவது ஒரு வகுப்பில் பெயிலாகி இருந்தால் உடனே என் தந்தையார் என்னை ஒரு வொர்க் ஷாப்பில் சேர்த்துவிட்டிருப்பார். கோயமுத்தூரில் அப்போது புதிது புதிதாக வொர்க் ஷாப்புகள் தொடங்கிக்கொண்டு இருந்தன. (அப்படி நடந்திருந்தால் ஒருக்கால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேனோ என்னவோ? இப்பவும் ஒண்ணும் பெரிசா குறைவில்லை).
மத்த படிப்பையெல்லாம் விவரிக்கவேண்டியதில்லை. கடைசியாகப் படித்த விவசாயப் படிப்புதான் நான் இப்போது ஏதோ ஓரளவுக்கு மானத்துடன் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.
தொழில் கல்வி என்று சொல்லப்படுபவை, அன்றும் இன்றும், நான்கு. மருத்துவம் (5 வருடம்), கால்நடை மருத்துவம், பொறியியல் (இரண்டும் 4 வருடம்), விவசாயம் (3 வருடங்கள்). எத்தனை வருடப் படிப்பு என்பதை வைத்துத்தான் அந்தப் படிப்புக்கு மதிப்பு. அப்படிப் பார்க்கும்போது மருத்துவம்தான் முதல் ரேங்கில் இருந்தது. மேலும் அது உயிர்காக்கும் பணி என்பதால் அது தனி சிறப்புடன் விளங்கியது. அடுத்து பொறியியலும் கால்நடை மருத்துவமும். நான்காண்டுகள் படிப்பதால் அவை இரண்டும் மருத்துவத்திற்கு ஒரு படி கீழாகவும் ஆனால் விவசாயத்தை விட மேலானதாகவும் கருதப்பட்டன. விவசாயப்படிப்பு நாட்டின் முக்கியமான, எல்லோருக்கும் உணவு வழங்கக்கூடிய துறையைச் சார்ந்திருந்தாலும் தொழில் கல்வியில் கடைநிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.
விவசாயக்கல்லூரியில் நாங்கள் தோட்டவேலை செய்முறை பயிற்சிக்கு போகும்போது மம்முட்டி (மலையாள நடிகர் மம்முட்டியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) எடுத்துக்கொண்டு போவோம். இதனால் விவசாயக்கல்லூரிக்கு “மம்முட்டி காலேஜ்” என்று மற்ற தொழில் கல்லூரி மாணவர்கள் கேலி செய்வதுண்டு. நாங்களும் “மம்முட்டி இல்லைன்னா உங்களுக்கு சோத்துக்கு லாட்டரி” என்று பதில் கேலி செய்வோம்.
நான் படித்த கால கட்டம்தான் (1953-56) விவசாயத்தில் பசுமைப்புரட்சியின் ஆரம்ப கட்டநிலை. விவசாயம் நிலைப்பட்டால்தான, நாடு வளமாக இருக்கமுடியும் என்று நேரு தலைமையிலான அரசு, கொள்கை ரீதியில் முடிவு எடுத்து நாடு முழுவதிலும் பல விதமான விவசாய முன்னேற்றத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதனால் விவசாய இலாக்காவிற்கு அதிக அளவில் விவசாயப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் நான் விவசாயப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு கோயமுத்தூரை நண்பர்களுடன் சர்வே (J) எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு மாதத்தில் ரிசல்ட் வந்தது. நான் பாஸ். சரி, அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. திறந்து பார்த்தால்.....(கொஞ்சம் பொறுங்க)

