நானும் என் நண்பர்கள் சிலரும் இவ்வாறுதான் வருடா வருடம் செய்து வந்தோம். வருமான வரி படிவத்திற்கு என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. வருமான வரி ஆபீசில் கேட்டால் தாராளமாக கொடுப்பார்கள். இரண்டு மூன்று படிவங்கள் என் பைலில் எப்போதும் இருக்கும்.
போன வருடம் இந்த மாதிரி வழக்கம்போல் ஒரு படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து வருமானவரி ஆபீசுக்கு சென்றோம். அவர்கள் இந்த பழைய படிவங்கள் செல்லாது, புதிய படிவங்கள் இன்டர்நெட்டில் இருக்கிறது, டவுன்லோடு செய்து அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து கொண்டு வாருங்கள் என்றார்கள். நீங்களே படிவங்கள் தருவீர்களே, அந்த முறை என்ன ஆயிற்று என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், நாங்கள் கொடுப்போம், இப்பொழுதுதான் படிவங்களை அச்சாபீசுக்கு கொடுத்திருக்கிறோம், அவை வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும், உங்களுக்கு அவசரமில்லையென்றால் காத்திருங்கள் என்றார்கள். எங்களுக்கு இந்த சனியன் பிடித்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டால் ஒரு தொல்லை தீருமே என்ற எண்ணம்.
வீட்டிற்கு வந்து இன்டர் நெட்டில் தேடி அந்தப் படிவத்தைக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து ஜீராக்ஸ் சென்டருக்குப் போய் பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து, வருமானவரி ஆபீசில் சேர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.
இந்த வருடமும் அவ்வாறே மார்ச் 31 க்குள் வரி முழுவதையும் கட்டிவிட்டு பழைய படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து எடுத்துக் கொண்டு வருமானவரி ஆபீசுக்குப் போனோம். அங்கே இந்தப் படிவம் வாங்கும் கவுன்டரில் இரண்டு பேர் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களிடம் இந்த மாதிரி வருமானவரி படிவம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அவர்கள் எங்கள் படிவங்களை ஏறெடுத்தும் பாராமல், இந்த வருடம் புது படிவம் வரப்போகிறது, அதில்தான் நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்யவேண்டும் என்றார்கள். சரி, புது படிவங்கள் எப்பொது கிடைக்கும் என்று கேட்டோம். மூன்று மாதங்களில் அநேகமாக கிடைக்கும் என்றார்கள், அதாவது ஜூன் மாதக் கடைசியில் வரும் என்றார்கள்.
இன்டர்நெட்டில் இப்போது கிடைக்குமா என்று கேட்டதற்கு, இன்டர்நெட்டிலும் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்றார்கள். இப்போது தினம் இன்டர்நெட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.
அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பிய கேள்வி வாய் வரையில் வந்து விட்டது. இருந்தாலும் அதைக்கேட்கவில்லை. அந்தக்கேள்வி- வருமானவரிப் படிவங்கள் வருவதற்கு இன்னும் மூன்று மாதம் ஆகும். அதுவரையில் நீங்கள் என்ன செய்து கிழிக்கப்போகிறீர்கள்? சேரைத் தேய்ப்பதற்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்? இடம், பொருள், ஏவல் கருதி அந்தக் கேள்விகளை அப்படியே விழுங்கி விட்டு வந்தேன்.
இந்த மேட்டரில் எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் வருமானவரித்துறை மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஏப்ரல் 1 ம் தேதியானால் வருமானவரி ரிடர்ன் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பது இந்த மடச்சாம்பிராணி டிபார்ட்மென்டுக்கு நன்றாகத்தெரியும். ஒரு மாதம் முன்பே இந்தப் படிவங்களை தயார் செய்து வைத்தால் என்ன?
வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?