இப்படி நான் கொடுங் கோலோச்சிக் கொண்டிருக்கையில் எனக்கு பதவி உயர்வு வந்தது. என்னை ஆசிரியர் பிரிவிலிருந்து மாற்றி ஆராய்ச்சிப் பிரிவில்
கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாக நியமனம் செய்தார்கள். அந்தக் காலத்தில் கெஜட்டட் ஆபீசர் என்றால் மதிப்பு வாய்ந்த பதவி. இன்று ஆபீஸ் அட்டெண்டர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கெஜட்டட் ஆபீசர்கள்தான். ஒரு வருடம் கழித்து நானாக கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் ஆசிரியப் பிரிவிற்கு மாற்றல் வந்தது.
இப்போது நான் விரிவுரையாளர் என்ற பதவியில் இருந்தேன். பாட வகுப்புகள் எடுப்பது, செயல்முறை வகுப்புகளை மேற்பார்வை செய்வது ஆகியவை என் பணிகள். அந்தக் காலத்தில் விவசாயக் கல்லூரிகளுக்கென்று தனியாக அச்சிட்ட பாட புத்தகங்கள் இல்லை. லைப்ரரி புத்தகங்களைப் பார்த்து விரவுரையாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் கொண்டு வரும் நோட்டுப் புத்தகங்களில் அந்தக் குறிப்புகளை எழுதிக் கொள்வார்கள்.
ஆகவே யாரும் கவனக்குறைவாக வகுப்புகளில் இருக்க முடியாது. நான் எடுத்த பாடம் மண்ணியல் பாடம்.
முதல் வகுப்பில் மாணவர்களுக்கு சில பொதுவான விஷயங்கள் சொல்வேன்.
முதலில் மாணவர்கள் மிகப் பழைய காலத்திலேயே எப்படி வகைப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வேன். அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட நன்னூல் சூத்திரத்தைச் சொல்வேன்.
அன்னப்பறவை பாலையும் நீரையும் கலந்து குடிக்கக் கொடுத்தாலும் நீரை விட்டு விட்டு பாலை மட்டும் குடிக்கும் திறன் வாய்ந்தது. அதே போல் பசுமாடு (ஆ) தின்பதற்கு கொடுக்கும் வைக்கோலையும் தவிட்டையும் நாம் உண்ணக்கூடிய பாலாக மாற்றித் தருகின்றது. அது போல் மாணவர்கள் ஆசிரியர் கூறும் சொற்களிலிருந்து சாரத்தை மட்டும் பிரித்து மனதில் பதிக்கவேண்டும். அவன்தான் முதல் மாணாக்கனாவான்.
மண்ணையும் கிளியையும் அவைகளின் குணங்களைத் தெரிந்து இங்கு உவமானமாக நன்னூலில் அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பதை காணும்போது அந்தக்காலத்து தமிழர்களின் நுண்ணிய அறிவை நாம் பாராட்டவேண்டும். மண்ணில் நாம் என்ன போடுகிறோமோ அதுதான் விளையும். இதில் நாம் போடும் உரங்களும் அடக்கம். அது போல் கிளி நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தான் திருப்பிச்சொல்லும்.
அது போல் சில மாணாக்கர்கள் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை மட்டுமே நினைவில் கொள்வார்கள். அதன் உட்பொருளை மனதில் கொள்ளமாட்டார்கள். அவர்களை இடை மாணாக்கர்கள் என்பார்கள். மண்ணியல் என்பது எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்.
இல்லிக்குடம் = ஓட்டைக்குடம் இதில் எதுவும் நிற்காது.
நெய்யரி = பன்னாடை. தென்னை மரத்தில் மட்டைகளை மரத்தோடு இணைத்துப் பிடித்திருக்கும் ஒரு நார் வலை. இதை அந்தக் காலத்தில் நெய்யை வடிகட்ட ஒரு சல்லடை போன்று உபயோகித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சல்லடை என்ன செய்யும்? சாரத்தை எல்லாம் கீழே விட்டு விட்டு கசடுகளை மட்டும் தன் மேல் நிறுத்திக்கொள்ளும்.
ஆடு கண்டதை எல்லாம் தின்னும். எருமைக்கு மந்த புத்தி. எப்போதும் சோம்பித் திரியும்.
இந்தக் குணங்களைக் கொண்டவர்களை கடை மாணாக்கர்கள் என்று அந்தக் காலத்திலேயே வர்ணித்திருக்கிறார்கள்.
இவைகளை விளக்கி விட்டு நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிப்பேன்.
தொடரும்.