திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 2

                               

இப்படி நான் கொடுங் கோலோச்சிக் கொண்டிருக்கையில் எனக்கு பதவி உயர்வு வந்தது. என்னை ஆசிரியர் பிரிவிலிருந்து மாற்றி ஆராய்ச்சிப் பிரிவில்
கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாக நியமனம் செய்தார்கள். அந்தக் காலத்தில் கெஜட்டட் ஆபீசர் என்றால் மதிப்பு வாய்ந்த பதவி. இன்று ஆபீஸ் அட்டெண்டர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கெஜட்டட் ஆபீசர்கள்தான்.  ஒரு வருடம் கழித்து நானாக கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் ஆசிரியப் பிரிவிற்கு மாற்றல் வந்தது.

இப்போது நான் விரிவுரையாளர் என்ற பதவியில் இருந்தேன். பாட வகுப்புகள் எடுப்பது, செயல்முறை வகுப்புகளை மேற்பார்வை செய்வது ஆகியவை என் பணிகள். அந்தக் காலத்தில் விவசாயக் கல்லூரிகளுக்கென்று தனியாக அச்சிட்ட பாட புத்தகங்கள் இல்லை. லைப்ரரி புத்தகங்களைப் பார்த்து விரவுரையாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் கொண்டு வரும் நோட்டுப் புத்தகங்களில் அந்தக் குறிப்புகளை எழுதிக் கொள்வார்கள்.

ஆகவே யாரும் கவனக்குறைவாக வகுப்புகளில் இருக்க முடியாது. நான் எடுத்த பாடம் மண்ணியல் பாடம்.

முதல் வகுப்பில் மாணவர்களுக்கு சில பொதுவான விஷயங்கள் சொல்வேன்.

முதலில் மாணவர்கள் மிகப் பழைய காலத்திலேயே எப்படி வகைப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வேன். அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட நன்னூல் சூத்திரத்தைச் சொல்வேன்.




அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்


அன்னப்பறவை பாலையும் நீரையும் கலந்து குடிக்கக் கொடுத்தாலும் நீரை விட்டு விட்டு பாலை மட்டும் குடிக்கும் திறன் வாய்ந்தது. அதே போல் பசுமாடு (ஆ) தின்பதற்கு கொடுக்கும் வைக்கோலையும் தவிட்டையும் நாம் உண்ணக்கூடிய பாலாக மாற்றித் தருகின்றது. அது போல் மாணவர்கள் ஆசிரியர் கூறும் சொற்களிலிருந்து சாரத்தை மட்டும் பிரித்து மனதில் பதிக்கவேண்டும். அவன்தான் முதல் மாணாக்கனாவான்.

மண்ணையும் கிளியையும் அவைகளின் குணங்களைத் தெரிந்து இங்கு உவமானமாக நன்னூலில் அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பதை காணும்போது அந்தக்காலத்து தமிழர்களின் நுண்ணிய அறிவை நாம் பாராட்டவேண்டும். மண்ணில் நாம் என்ன போடுகிறோமோ அதுதான் விளையும். இதில் நாம் போடும் உரங்களும் அடக்கம். அது போல் கிளி நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தான் திருப்பிச்சொல்லும்.

அது போல் சில மாணாக்கர்கள் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை மட்டுமே நினைவில் கொள்வார்கள். அதன் உட்பொருளை மனதில் கொள்ளமாட்டார்கள். அவர்களை இடை மாணாக்கர்கள் என்பார்கள். மண்ணியல் என்பது எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்.

இல்லிக்குடம் = ஓட்டைக்குடம் இதில் எதுவும் நிற்காது.

நெய்யரி = பன்னாடை. தென்னை மரத்தில் மட்டைகளை மரத்தோடு இணைத்துப் பிடித்திருக்கும் ஒரு நார் வலை. இதை அந்தக் காலத்தில் நெய்யை வடிகட்ட ஒரு சல்லடை போன்று உபயோகித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சல்லடை என்ன செய்யும்? சாரத்தை எல்லாம் கீழே விட்டு விட்டு கசடுகளை மட்டும் தன் மேல் நிறுத்திக்கொள்ளும்.

ஆடு கண்டதை எல்லாம் தின்னும். எருமைக்கு மந்த புத்தி. எப்போதும் சோம்பித் திரியும்.

இந்தக் குணங்களைக் கொண்டவர்களை கடை மாணாக்கர்கள் என்று அந்தக் காலத்திலேயே வர்ணித்திருக்கிறார்கள்.

இவைகளை விளக்கி விட்டு நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிப்பேன்.

தொடரும்.

18 கருத்துகள்:

  1. உங்கள் வகுப்புகள் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு

  2. வேளாண் வேதியலை சுவாரஸ்யமாய் நடத்தியிருக்கிறீர்கள். எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை தங்களின் மாணாக்கனாக இருக்க. எனக்கு கோவை வேளாண் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேராததற்கு இப்போது வருந்துகிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்னூல் சூத்திரத்தை மேற்கோள் காட்டிய விதம் நன்று. மாணவர்களிடமே நீங்கள் பொறுப்பை விட்டுவிடும் நிலையில் உங்களது பாணி வித்தியாசமாக இருப்பதைக் காணமுடிந்தது.

    பதிலளிநீக்கு
  4. தகவல்கள் அருமையாக செல்கிறது தொடர்கிறேன்
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  5. நன்னூல் விளக்கம் அருமை! ஆசிரியப்பணி உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது போலும்!

    பதிலளிநீக்கு
  6. உங்களைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் சுவாரசியம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்னூலிலிருந்து விளக்கம் - நன்று.

    உங்களிடம் படித்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

    பதிலளிநீக்கு
  8. நன்னூல் சொன்ன மாணாக்கர்கள் பற்றிய உங்கள் விளக்கம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அப்படியே நன்னூல் சொன்ன நல்லாசிரியர் குணங்கள் மற்றும் ஆசிரியர் ஆக மாட்டாதவர்கள் பற்றியும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த சிலவில் எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள். நான் மாட்டேன்.

      நீக்கு
  9. ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அருமையான உதாரணங்கள்.

    அருமை.

    God Bless YOu

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. இல்லைங்க, இங்கிலீஷ் மீடியம்தான்.

      நீக்கு
    2. அப்படியென்றால் தமிழில் நன்னூல் எப்படி? வேறு மொழி மாணவர்கள் இல்லையா?

      நீக்கு
    3. நான் விவசாயக் கல்லூரியில் படிக்கும்போது (1953-56) சென்னை மாகாணம் மிகவும் விரிவானதாக இருந்தது. இன்றைய ஆந்திராவில் பெரும்பகுதி, கேரளாவில் சில மாவட்டங்கள், இன்றைய கர்னாடகாவைச் சேர்ந்த மங்களூர் மாவட்டங்கள் எல்லாம் சென்னை ராஜதானியைச் சேர்ந்த பிரதேசங்களாக இருந்தன. அப்போது என் வகுப்பில் கணிசமான எண்ணிக்கையில் கேரளாக்காரர்களும் கன்னடக்காரர்களும் படித்தார்கள். பின்பு 1957 ல் பொட்டி ஸ்ரீராமுலு நாயுடு மொழிவாரி மாகாணத்திற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்த்தியாகம் செய்தது அனைவரும் அறிந்ததே. உடனே இந்தியா முழுவதும் உள்ள மாகணங்கள் அனைத்தும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. பிறகு ஒவ்வொரு மாகாணத்திலும் விவசாயக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனால் கோயமுத்தூர் விவசாயக் கல்லூரியில் நான் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தமிழ் நாட்டு மாணவர்கள் மட்டும்தான் இருந்தார்கள்.

      அதனால் மாணவர்களைத் திட்டுவது, அறிவுரை வழங்குவது எல்லாம் தமிழில்தான் நடைபெறும். பாடம் மட்டும் ஆங்கிலத்தில் நடக்கும்.

      நீக்கு
  11. அருமையான ஆசிரியர் நீங்கள் ஐயா...வகுப்புகளும் போரடிக்காமல் சென்றிருக்கும் போல மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள் தான்...நன்னூல் விளக்கம் அருமை ஐயா..

    பதிலளிநீக்கு