மாணவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 2

                               

இப்படி நான் கொடுங் கோலோச்சிக் கொண்டிருக்கையில் எனக்கு பதவி உயர்வு வந்தது. என்னை ஆசிரியர் பிரிவிலிருந்து மாற்றி ஆராய்ச்சிப் பிரிவில்
கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாக நியமனம் செய்தார்கள். அந்தக் காலத்தில் கெஜட்டட் ஆபீசர் என்றால் மதிப்பு வாய்ந்த பதவி. இன்று ஆபீஸ் அட்டெண்டர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கெஜட்டட் ஆபீசர்கள்தான்.  ஒரு வருடம் கழித்து நானாக கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் ஆசிரியப் பிரிவிற்கு மாற்றல் வந்தது.

இப்போது நான் விரிவுரையாளர் என்ற பதவியில் இருந்தேன். பாட வகுப்புகள் எடுப்பது, செயல்முறை வகுப்புகளை மேற்பார்வை செய்வது ஆகியவை என் பணிகள். அந்தக் காலத்தில் விவசாயக் கல்லூரிகளுக்கென்று தனியாக அச்சிட்ட பாட புத்தகங்கள் இல்லை. லைப்ரரி புத்தகங்களைப் பார்த்து விரவுரையாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் கொண்டு வரும் நோட்டுப் புத்தகங்களில் அந்தக் குறிப்புகளை எழுதிக் கொள்வார்கள்.

ஆகவே யாரும் கவனக்குறைவாக வகுப்புகளில் இருக்க முடியாது. நான் எடுத்த பாடம் மண்ணியல் பாடம்.

முதல் வகுப்பில் மாணவர்களுக்கு சில பொதுவான விஷயங்கள் சொல்வேன்.

முதலில் மாணவர்கள் மிகப் பழைய காலத்திலேயே எப்படி வகைப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வேன். அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட நன்னூல் சூத்திரத்தைச் சொல்வேன்.
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்


அன்னப்பறவை பாலையும் நீரையும் கலந்து குடிக்கக் கொடுத்தாலும் நீரை விட்டு விட்டு பாலை மட்டும் குடிக்கும் திறன் வாய்ந்தது. அதே போல் பசுமாடு (ஆ) தின்பதற்கு கொடுக்கும் வைக்கோலையும் தவிட்டையும் நாம் உண்ணக்கூடிய பாலாக மாற்றித் தருகின்றது. அது போல் மாணவர்கள் ஆசிரியர் கூறும் சொற்களிலிருந்து சாரத்தை மட்டும் பிரித்து மனதில் பதிக்கவேண்டும். அவன்தான் முதல் மாணாக்கனாவான்.

மண்ணையும் கிளியையும் அவைகளின் குணங்களைத் தெரிந்து இங்கு உவமானமாக நன்னூலில் அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பதை காணும்போது அந்தக்காலத்து தமிழர்களின் நுண்ணிய அறிவை நாம் பாராட்டவேண்டும். மண்ணில் நாம் என்ன போடுகிறோமோ அதுதான் விளையும். இதில் நாம் போடும் உரங்களும் அடக்கம். அது போல் கிளி நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தான் திருப்பிச்சொல்லும்.

அது போல் சில மாணாக்கர்கள் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை மட்டுமே நினைவில் கொள்வார்கள். அதன் உட்பொருளை மனதில் கொள்ளமாட்டார்கள். அவர்களை இடை மாணாக்கர்கள் என்பார்கள். மண்ணியல் என்பது எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்.

இல்லிக்குடம் = ஓட்டைக்குடம் இதில் எதுவும் நிற்காது.

நெய்யரி = பன்னாடை. தென்னை மரத்தில் மட்டைகளை மரத்தோடு இணைத்துப் பிடித்திருக்கும் ஒரு நார் வலை. இதை அந்தக் காலத்தில் நெய்யை வடிகட்ட ஒரு சல்லடை போன்று உபயோகித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சல்லடை என்ன செய்யும்? சாரத்தை எல்லாம் கீழே விட்டு விட்டு கசடுகளை மட்டும் தன் மேல் நிறுத்திக்கொள்ளும்.

ஆடு கண்டதை எல்லாம் தின்னும். எருமைக்கு மந்த புத்தி. எப்போதும் சோம்பித் திரியும்.

இந்தக் குணங்களைக் கொண்டவர்களை கடை மாணாக்கர்கள் என்று அந்தக் காலத்திலேயே வர்ணித்திருக்கிறார்கள்.

இவைகளை விளக்கி விட்டு நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிப்பேன்.

தொடரும்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 1

                                       Image result for chemistry lab
நான் மண்ணியல் துறையில் முதுகலைப் படிப்பு (1959-61) படித்து முடித்தவுடன் இரண்டு வருடங்கள் பரம்பிக்குளம் - ஆளியார் பாசனப் பகுதியில் மண் ஆய்வுத்திட்டத்தில் பணி புரிந்தேன். அந்த ஆய்வுத்திட்டம் முடியும் வரை அதில் இருந்து அதன் இறுதி அறிக்கையையும் தயார் செய்தேன். அந்த அறிக்கை பலராலும் பாராட்டப்பெற்று, உலக வங்கிக்காரர்கள்  அந்த அறிக்கையின் பல பிரதிகளை வாங்கிப்போனார்கள். பரம்பிக்குளம் - ஆளியார் பாசனத் திட்டம் உலக வங்கியின் உதவியுடன்தான் செயல்படுத்தப் பட்டது.

பிறகு என்னை ஆசிரியப் பகுதிக்கு மாற்றினார்கள். முதலில் ஆய்வகத்தில் செயல்முறைப் பயிற்சி கொடுக்கும் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன்.
விஞ்ஞானப் படிப்புகளில் இந்த வேதியல் செயல்முறைப் பயிற்சிகள்தான் கடினமானவை மற்றும் ஆபத்து நிறைந்தவை. குறிப்பாக கந்தக அமிலம் பல சோதனைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டி வரும்.

அந்த கந்தக அமிலத்தை சோதனைக் குழாயில் அரை சிசி எடுத்து ஒரு சோதனை செய்யவேண்டும். அதற்குள் நாங்கள் கொடுக்கும் ஒரு ரசாயனத்தை ஒரு சிட்டிகை அளவு போட்டு அந்த சோதனைக்குழாயை "புன்சன்பர்னரில்" காய்ச்ச வேண்டும். காய்ச்சின பிறகு அதை வெளியில் எடுத்து முகர்ந்து பார்க்கவேண்டும். அதில் வரும் வாசனையை வைத்து அந்த ரசாயனம் என்னவாக இருக்கலாம் என்று யூகிக்கலாம்.  நிச்சயமாக அது என்ன ரசாயனம் என்று உறுதி செய்ய வேறு பல சோதனைகள் செய்யவேண்டும்.
                         
                                                          Image result for test tube

இப்படி செய்யும்போது பல மாணவர்கள் அரை சிசி கந்தக அமிலம் எடுப்பதற்குப் பதிலாக 2 அல்லது 3 சிசி எடுத்து விடுவார்கள். அதைக் காய்ச்சி முகரும்போது அந்த அமிலம் கொதித்து வெளியே சீறி அடிக்கும். அது நேராக அந்த முகரும் மாணவனின் கண்ணுக்குள் போகும்.

கந்தக அமிலத்தின் குணங்கள் தெரியாதவர்களுக்காக ஒரு வார்த்தை. அமிலங்களிலேயே வீரியம் மிகுந்ததுவும் மனித உடலுக்கு மிகவும் கேடு விளவிக்கக் கூடியதுவும் கந்தக அமிலமே ஆகும். உங்கள் உள்ளங்கையில் மூன்று சொட்டு கந்தக அமிலத்தை விட்டுவிட்டு அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு இரண்டு நிமிடம் நின்றீர்களேயானால், உங்கள் உள்ளங்கையை ஓட்டை போட்டுவிடும்.

இதே கந்தக அமிலம் ஒரு பங்கு, நைட்ரிக் அமிலம் மூன்று பங்கு சேர்த்து கலக்கினால் வரும் திரவத்திற்கு "ராஜ அமிலம்" (Aqua regia)  என்று பெயர். இதைத்தான் தெருவில் தங்க நகை பாலீஷ் போடுகிறவர்கள் கொண்டு வருவார்கள். உங்கள் மனைவியின் 10 பவுன் நகையை இதில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்தால் அந்த நகை அப்படியே பளபளக்கும். கூடவே அந்த நகை இரண்டு பவுன் எடை குறைந்திருக்கும். அந்த ஐந்து நிமிடங்களில் இரண்டு பவுன் தங்கத்தைக் கரைத்துவிடக்கூடிய ஆற்றல் அந்த அமிலத்திற்கு உண்டு.
                                      Image result for gold chain design images

இப்படிப்பட்ட கந்தக அமிலம் கண்ணில் பட்டால் கண் என்ன ஆகும்? அந்த மாதிரி யாராவது மாணவனுக்கு கண் பாதிக்கப்பட்டால் அந்த விளைவிற்கு யார் பொறுப்பு? அந்த வகுப்பில் இருக்கும் ஆசிரியர்தான் பொறுப்பாவார். கந்தக அமிலத்தை எச்சரிக்கையாக கையாள்வதற்கு மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வரும்.
இதனால் நான் என்ன செய்வேனென்றால் அப்படி யாராவது அரை சிசிக்கு மேல் கந்தக அமிலத்தை சோதனைக்குழாயில் எடுத்திருந்தால் உடனே அவனை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டு வருகைப் பதிவேட்டில் அவனுக்கு ஆப்சென்ட் போட்டு அவனை சோதனைச்சாலையிலிருந்து வெளியே அனுப்பி விடுவேன். இதை மற்ற மாணவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்தத் தவற்றை எப்போதும் செய்ய மாட்டார்கள். வெளியில் அனுப்பிய மாணவனும் ஆயுளுக்கும் இதை மறக்க மாட்டான்.

வெளியில் அனுப்பிய மாணவன் சோதனைச்சாலைக்கு வெளியில்தான் நான்று கொண்டிருப்பான். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவனை உள்ளே கூப்பிட்டு சோதனைகளைத் தொடரும்படி கூறுவேன். ஆனால் ஆப்சென்ட் போட்டது போட்டதுதான்.


மாணவர்களுக்கு ஒவ்வொரு செயல்முறை வகுப்பிலும் நான் சொல்வது. இங்கு நான் சொல்வது போல்தான் செய்யவேண்டும் மாற்றிச்செய்தால் உங்களை வகுப்புக்கு வெளியில் அனுப்பி விடுவேன் என்பதுதான்.

அந்தக் காலத்தில் நானும் என்னுடன் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்களும்
இவ்வாறு சர்வாதிகாரம் செலுத்திக் கொண்டு இருந்தோம். மாணவர்களும் எங்கள் கண்டிப்பின் பின் உள்ள மாணவர்களின் நலனை உணர்ந்திருந்தார்கள்.   பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேரும் மாணவர்கள் "சார், நீங்கள் அன்று அவ்வளவு கண்டிப்புடன் இருந்ததால்தான் நாங்கள் ஒழுங்காகப் படித்தோம், நீங்கள் சொல்லிக் கொடுத்தவைகள் இன்றும் மறக்காமல் இருக்கிறது" என்பார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன விருது வேண்டும்?

மாணவர்களின் குணங்கள் பற்றி நன்னூலில் சொல்லியிருப்பது.கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்னவார் வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்.

இந்த நன்னூல் சூத்திரத்தை வருட ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சொல்லி இதன் பொருளையும் கூறுவேன். இதுதான் மாணவர்களுன் இலக்கணம். அப்புறம் நாங்கள் நடந்து கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் என் வகுப்புகளில் நான் சொல்வதுபோல்தான் நடக்கவேண்டும் என்று சொல்லி விடுவேன்.

பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரை டிராயரும் காக்கி அரைச் சட்டையும்தான் யூனிபார்ம். வேறு சட்டை, பேன்ட் போடுடக்கொண்டு வந்தால் அனுமதி இல்லை. சட்டையின் அனைத்து பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். மேல் பட்டன்களைப் போடாமல் திறந்த மார்புடன் வருகிறவர்களை வெளியே அனுப்பப்படும்.. வருகைப் பதிவேட்டில் பெயர்கள் வாசித்து முடித்தவுடன் பரிசாதனைச்சாலையின் கதவு மூடப்பட்டு விடும். அதற்குப் பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் அது அந்தக் காலம். இன்று அப்படியெல்லாம்  செய்தால் அடுத்த நொடியில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக வெளியில் போய் வாத்தியார் ஒழிக என்று கோஷம் போடுவார்கள். அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.

தொடரும்.

சனி, 16 மார்ச், 2013

திசை திருப்பப்படும் மாணவர்கள்

இந்தப் பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களையும் படிக்கவும். அவை பதிவை விட மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன.


1965 ம் வருடம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் திரளான மாணவர்கள் பங்கேற்ற போராட்டம் அது. பின்னணியாக இருந்து இந்தப் போராட்டத்தை வழி நடத்தியவர்கள் அரசியல்வாதிகள்.

அன்றைய முதல் அமைச்சர் நிலைமையைத் தவறாக கையாண்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களில் ஓரிரண்டு பேரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் மாணவர்களல்ல. மாணவர்களின் பெயரில் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தார்கள்.

எது எப்படியோ, இந்தப் போராட்டத்தினாலும் அடுத்து ஓரிரண்டு ஆண்டுகளில் தொடர்ந்த இன்னொரு போராட்டத்தினாலும், அடுத்து வந்த தேர்தலில், அந்த முதலமைச்சரின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதுவரை தேர்தலையே சந்தித்திராத கட்சி ஆட்சிக்கு வந்தது. இது வரலாறு.

இந்த வரலாற்றின் மூலம் அரசியல் கட்சிகள் கற்றுக்கொண்டது என்னவென்றால் மாணவர்களை வைத்து நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. மாணவர்களுக்கு இது புரியாது. அவர்கள் தூண்டுதலுக்கு அடிமையாவார்கள். மாணவர்களுக்குள் சரியான ஒருவனைப் பிடித்து அவனுக்கு பல ஆசைகளைக் காட்டி, அவன் மூலமாக போராட்டத்தை நடத்துவது என்பது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இதை எப்படி தீர்ப்பது என்று ஒருவருக்கும் தெளிவான கருத்து இல்லை. ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் அமெரிக்கா ஏன் தீர்மானம் கொண்டு வருகிறது என்பதை மாணவர்களும் மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். அதை இந்தியா ஆதரிப்பதினால் ஈழத்தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றும் யோசிக்கவேண்டும்.

அதை விட்டு விட்டு வேறு ஏதோ அரசியல் காரணங்களுக்காக இந்த மாணவர் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார்கள். மாணவ சமுதாயத்தை இந்த மாயையிலிருந்து யார் காப்பாற்றுவார்களோ, தெரியவில்லை.

ஒரு முன்னாள் ஆசிரியன்.
__________________________________________________________________________

17-3-2013 பின் சேர்க்கை:


மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.


____________________________________________________________________________________________________


இதையும் படியுங்கள் அன்பர்களே:

http://vivasaayi.blogspot.in/2013/03/blog-post_18.html

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஆசிரியர் மாணவனுக்கு புத்தி புகட்டின கதை – பாகம் 2


விவசாயக்கல்லூரியில் அந்தக் காலத்தில் “ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்” (Pure Science Graduate) என்று சொல்லப்படுகின்றவர்கள் பலர் பல துறைகளில் வேலையில் இருந்தார்கள். அக்ரி கிரேஜுவேட்டுக்களுக்கும் இந்த ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்டுக்களுக்கும், யார் உயர்ந்தவர்கள் என்று ஒரு வித பனிப்போர் நடந்துகொண்டிருந்தது.

இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த வேளை. அதற்கு அமெரிக்க விதைகளும், அமெரிக்கத் தொழில் நுட்பங்களும் இறக்குமதியாகிக் கொண்டிருந்த நிலை. அமெரிக்கா விவசாயத்தில் உயர்ந்து நிற்கக் காரணம், அந்நாட்டில் விவசாயம் கற்பிக்க தனிப்பட்ட விவசாய பல்கலைக்கழகங்கள் இருந்ததுதான் என்று நம் அரசியல்வாதிகள் கருதினார்கள். அதே மாதிரி நம் நாட்டிலும் விவசாயப் பல்கலைக் கழகங்களை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க ஒரு உயர்மட்ட கமிட்டி அமைத்தார்கள்.

அந்தக் கமிட்டியில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த உயர்அதிகாரி ஒருவரும் உறுப்பினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட். கல்லூரியில் இருக்கும் அக்ரி கிரேஜுவேட் ஆசிரியர்கள், அந்த ஆபீசர் இந்தக் கமிட்டியில் இருந்தால் ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்களுக்கு ஆதரவாக சிபாரிசுகள் செய்வார், நம்முடைய எதிர்கால முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று கருதினார்கள். 
என்ன செய்ய முடியும்? ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள். எந்தப் போராட்டமும் நடத்த முடியாது. ஆகவே மாணவர்களைத் தூண்டிவிட்டு ஒரு போராட்டம் நடத்தினார்கள். அந்த உயர் ஆபீசர் கமிட்டியில் கலந்து கொள்ளச் செல்லவேண்டிய நாளுக்கு முந்தைய நாளில் மாணவர்கள் ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்தார்கள். கல்லூரி அலுவலர்கள் ஒருவரையும் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு ஆபீசையும் திறக்க முடியவில்லை. ஒரு வேலையும் நடக்கவில்லை.

நான் அப்போது மாணவர் விடுதி வார்டன். இந்த டூர் போகும் ஆபீசர்தான் என்னுடைய நேரடி உயர் ஆபீசர். என்னுடைய குணம், நான் எந்த வேலை பார்த்தாலும், அந்த வேலைக்கு உண்மையாக இருப்பது. அன்று இரவு அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் வீடு கல்லூரி வளாகத்தினுள்ளேயே இருந்தது. மறுநாள் காலை அவர் அந்த உயர்மட்டக் கமிட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்று, அங்கிருந்து டில்லி செல்லவேண்டும். பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் எல்லாம் தயார். மாணவர்கள் அவரை அந்தப் பயணம் மேற்கொள்ளாதவாறு தடுக்க காலையில் அவர் வீட்டை முற்றுகை இடுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அவர் டூர் போகாவிட்டால் அவருடைய அந்தஸ்த்திற்கும் கல்லூரிக்கும் பெரும் அபவாதம் வரும். என்ன செய்வதென்று யோசித்தோம். அவரை தான் கேட்டேன்.

“சார், டவுனில் உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இருக்கிறார்களா?”

“இருக்கிறார்கள்” என்றார்.

“அப்படியானால் இன்று இரவே நீங்கள் அங்கு சென்று விடுங்கள். நான் நாளைக் காலையில் ஆபீஸ் வண்டியுடன் அங்கு வருகிறேன். அங்கிருந்து அப்படியே விமான நிலையம் சென்று விடலாம்” என்றேன்.

அவருக்கும் வேறு வழி தோன்றாததால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டார். அதன்படியே அவரை இரவு பத்து மணிக்கு மேல் டவுனில், அருக்குத் தெரிந்தவர் வீட்டில் விட்டுவிட்டு, டிரைவரிடம் காலையில் 7 மணிக்கு என் வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு, நான் வீட்டில் இறங்கிக்கொண்டேன். மறு நாள் ஏற்பாட்டின்படி வீட்டிற்கு ஆபீஸ் ஜீப் வந்தது. அதில் போய் ஆபீசரை, அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏற்றிக்கொண்டு ஏர்போர்ட் சென்று அவரைப் பிளேனில் ஏற்றிவிட்டு, கல்லூரிக்கு வந்தேன்.

அந்த ஆபீசர் வீட்டுக்கு முன்பு ஒரே மாணவர் கூட்டம். அவர் இன்னும் வீட்டிற்குள்தான் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, மாணவர்கள் அவர் வீட்டை முற்றுகையிட்டிருந்தார்கள். பத்து மணிக்கு மேல்தான் பட்சி பறந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.

அவர்களுக்கு ஏமாற்றத்தினால் கடும் கோபம். அந்த ஆபீசருக்கு ஒரு கொடும்பாவி கட்டி அவர் வீட்டிற்கு முன்பாக அதை எரித்து விட்டு கலைந்து போனார்கள். நான் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது எப்படியோ அவர்களுக்குத் தெரிந்து விட்டது.

அடுத்த நாள், இந்த ஸ்ட்ரைக்கைத் தூண்டிவிட்ட குழுவின் தலைவரை, கல்லூரித் துணைத்தலைவராக நியமனம் செய்து அரசு ஆணை தந்தி மூலம் வந்துவிட்டது. இப்போது அவர்தான் எனக்கு உயர் அதிகாரி. இந்த அரசு ஆணை விவரம் தெரிந்தவுடன் அவரைப்போய்ப் பார்த்தேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு இருவருமாக ஆபீசுக்குப் போனோம்.

ஆபீஸ் வாசலில் ஒரு நூறு மாணவர்கள் வழியை அடைத்துக்கொண்டு இருந்தார்கள். இந்தப் புது உயர் அதிகார், மாணவர்களிடம் சொன்னார். இப்படியே ஒருவரையும் உள்ளே போகவிடாமல் இருந்தால், உங்கள் பிரச்சினை எப்படித் தீரும். நாங்கள் யாராவது உள்ளே சென்று சென்னையிலுள்ள பெரிய ஆபீசர்களிடம் பேசி விவரங்களைச் சொன்னால்தானே உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார். அவர்கள் சரி, சார், நீங்கள் உள்ளே செல்லுங்கள் என்று சொன்னார்கள். அவர் பிறகு, நான் மட்டும் உள்ளே போய் என்ன செய்ய முடியும்? எனக்கு உதவிக்கு யாராவது வார்டன் இருந்தால்தானே சௌகரியமாயிருக்கும் என்றார்.

சரி சார், ஒரு வார்டனை அழைத்துச் செல்லுங்கள் என்றனர். அந்த ஆபீசர் பின்னால் திரும்பி என்னைப் பார்த்து, “வா, கந்தசாமி, உள்ளே போகலாம்” என்று கூப்பிட்டார். நான் முன்னே செல்ல ஆயத்தமானேன். அப்போதுதான் அந்த மாணவர்கள் என்னைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த மாணவர் மன்றத் தலைவர் என்னைப் பார்த்ததும், இந்த வார்டனை விடமாட்டோம் என்றான். நிலைமையைப் பார்த்ததும், “சார், நான் வரவில்லை, நீங்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, மனதிற்குள் நினைத்தேன்.

“மகனே, இன்று உன் நாக்கில் சனி இருந்து உன்னை இப்படி சொல்ல வைத்திருக்கிறது. வா, உன்னுடைய இறுதிப் பரீட்சைக்கு என்னிடம்தானே வரவேண்டும், அப்போது உன்னைக் கவனித்துக்கொள்கிறேன் என்று முடிவு செய்து கொண்டு போய்விட்டேன்.”

அவர்கள் முதல் நாள் அந்த ஆபீசர் வீட்டிற்கு முன்பாக கொடும்பாவி கட்டி எரித்தார்கள் அல்லவா? அவர்கள் அந்த அதிகாரிக்கு எதிராகத்தான் கொடும்பாவி கட்டி எரித்தார்கள். ஆனால் போலீஸ் அந்த சம்பவத்தை மாற்றி, கருணாநிதிக்கு கொடும்பாவி கட்டி எரித்தார்கள் என்று ரிப்போர்ட் அனுப்பிவிட்டார்கள். கருணாநிதி அப்போது முதல்மந்திரி. சும்மா இருப்பாரா? உடனே ஸ்ட்ரைக் செய்யும் மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்திரவு போட்டுவிட்டார். மறு நாள் விடிவதற்குமுன் மாணவர் விடுதிக்குள் போலீஸ் புகுந்து எல்லா மாணவர்களையும் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் சிறையில் அடைத்து விட்டார்கள். மொத்தம் 800 மாணவர்கள். மூன்று நாட்கள் சிறையில் வாடின பின் அவர்களை 50, 50 பேர்களாக வெளியில் விட்டு விடுதிக்கு கூட்டிக்கொண்டுவந்து அவர்களின் உடமைகளை எடுத்துக்கொள்ளச் செய்து, பஸ் ஸ்டேண்ட் அல்லது ரயில் நிலையத்தில் விட்டார்கள். வழிச் செலவிற்கு ஹாஸ்டலில் இருந்து பணம் கொடுத்தோம்.

இப்படியாக அந்த ஸ்ட்ரைக் முடிவிற்கு வந்தது. மாணவர்களைத் தூண்டி விட்ட ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களை எக்காலத்திலும் ஆசிரியர் பதவியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆராய்ச்சி நிலையங்களுக்கு மாற்றப்பட்டார்கள்.

கதையின் கிளைமேக்ஸ்சுக்கு வருவோம். ஒரு மாதம் கழித்து கல்லூரி திறந்தது. மாணவர்களின் இறுதிப் பரீட்சையும் வந்தது. அந்தப் பரீட்சைக்கு நான் எக்ஸ்டேர்னல் எக்சாமினர். தியரி பேப்பர் நான்தான் திருத்த வேண்டும். நமது கதாநாயகனின் பேப்பரையும் எப்போதும் போல் திருத்தினேன். பாஸ் மார்க்கிற்கு மூன்று மார்க் குறைந்தது. சாதாரண மாணவனாக இருந்தால் இங்கும் அங்குமாக அரை மார்க், கால் மார்க் போட்டு பாஸ் லெவலுக்கு கொண்டு வந்திருப்பேன். ஆனால் கதாநாயகனுக்கெல்லாம் அப்படி செய்யலாமா? அப்படியே விட்டுவிட்டேன்.

நான் வேண்டுமென்றே அந்த மாணவனைப் பெயில் செய்து விட்தாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்டு நான் வருந்தவில்லை. நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனை இவ்வாறு வேண்டுமென்று பெயில் செய்திருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் நமது கதாநாயகன் அடி மட்ட மாணவன். தவிர அவர் மாணவர் மன்றத் தலைவர். படிப்பதற்கு அவருக்கு நேரம் ஏது? என்ன, நான் அவருக்கு கருணை காட்டவில்லை. அவ்வளவுதான். அதனால் அவர் பாஸாகவில்லை. ஆகையால் என் மனச்சாட்சி என்னை ஒன்றும் செய்யவில்லை.

அவர் அடுத்த முறை பரீட்சை எழுதி பாஸ் செய்தார். அப்போதும் மார்க் குறைவுதான். இருந்தாலும் இரண்டாவது முறையாதலால் கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணவைத்தேன்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

ஆசிரியர் மாணவனுக்கு புத்தி புகட்டின கதை – பாகம் 1

ஆசிரியராகப் பணிபுரிவது ஒரு கலை. அதுவும் 18 முதல் 22 வயதுள்ள மாணவர்களைக் கையாள்வது ஒரு சிரமமான காரியம். காளைப் பருவம். நல்லது கெட்டது புரியாத வயது. இவர்களை வழி நடத்துவது ஒரு சவால். ஆசிரியரிடத்தில் மாணவர்களுக்கு பக்தியும் மரியாதையும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் கவனம் இருக்கும். இந்த பக்தியும் மரியாதையும் முதலிலேயே இருக்காது. நாளாவட்டத்தில்தான் வரும்.

அதற்கு முதல்படியாக ஆசிரியரிடத்தில் பயம் இருக்கவேண்டும். இந்த இரண்டும் கெட்டான் வயதில் அவர்களை அடிக்கவா முடியும்? அப்படியானால் வேறெப்படி பயத்தை உண்டு பண்ண முடியும்? பரீட்சை பயம்தான். அந்த வாத்தியிடம் குறும்பு பண்ணினால் பெயில் பண்ணி விடுவார் என்ற பயம்தான் மாணவர்களை வகுப்பில் ஒழுங்காக இருக்க வைக்கும். நாளாவட்டத்தில் ஆசிரியர் மாணவர்களின் நலத்தில் காட்டும் அக்கறையை வைத்து பக்தியும் மரியாதையும் வரும்.

நான் கடைசி வருட மாணவர்களுக்கு மண்ணியல் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தேன். அந்தக் காலத்தில் படிப்பு முடித்தவுடன் எல்லோருக்கும் விவசாய இலாக்காவில் வேலை கிடைத்து விடும். ஆதலால் மாணவர்கள் அனைவரும் தகராறு இல்லாமல் பாஸ் பண்ணினால் போதும் என்று அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள். அதுவும் என் மாதிரி கண்டிப்பான ஆசிரியர் என்றால் இன்னும் கவனமாக இருப்பார்கள்.

முதல் வகுப்பு ஆரம்பிக்கும்போது நான் ஒரு நன்னூல் சூத்திரத்தைச் சொல்லி ஆரம்பிப்பேன்.

அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர்
தலை இடை கடை மாணாக்கரே.

அன்னப் பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்துண்ணுமாம். அது போல் மாணவர்களும் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதில் வேண்டாததை விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

“ஆ”, அதாவது பசு, மனிதர்கள் சாப்பிட முடியாத புல்லையும் பருத்திக்கொட்டையையும் தின்று, மனிதர்கள் விரும்பும் பாலைக் கொடுக்கிறது. அது போல் மாணவர்களும் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களின் சாரத்தை எடுத்து மக்களுக்கு கொடுக்கவேண்டும். இப்படி இருப்பவர்களே நல்ல மாணாக்கர்கள்.

மண்ணில் எந்த அளவிற்கு உரம் போடுகிறீர்களோ அந்த அளவிற்குத்தான் பயிர்களின் விளைச்சல் இருக்கும். இந்த இடத்தில் எப்படி அந்தக் காலத்திலேயே மண்ணின் இயல்பு நன்னூலில் விளக்கப்பட்டிருக்கிறது பார்தீர்களா? நாம் படிக்கும் மண்ணியல் பாடத்திற்கும் நன்னூலின் இந்த சூத்திரத்திற்கும் உண்டான பொருத்தத்தை சிந்தியுங்கள் என்று மாணவர்களின் கவனத்திற்ககாக எடுத்துக் கூறுவேன். (மாணவர்கள் ஆசிரியரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியப்பார்கள்?!).

கிளி சொல்லிக்கொடுத்ததை மட்டுமே திருப்பிச் சொல்லும். சுயமாகப் பேசத்தெரியாது. இப்படி மண் போலவும் கிளி போலவும் இருப்பவர்கள் நடுத்தர மாணாக்கர்கள்.

ஆடு கண்ட தழைகளையெல்லாம் தின்னும். எருமை சேற்றை விரும்பி அதிலேயே உழலும். இல்லிக்குடம் (ஓட்டைக்குடம்) எதையும் தன்னிடம் வைத்துக் கொள்ளாது. நெய்யரி (பன்னாடை) கசடை வைத்துக்கொண்டு சாரத்தை (நெய்யை) விட்டுவிடும். அப்படி இருப்பவர்கள் கடை மாணாக்கராவர்.

இப்படி விளக்கம் கொடுத்துவிட்டுத்தான் முதல் வகுப்பை ஆரம்பிப்பேன்.
அடுத்து மாணவர்களின் மனதில் திகிலூட்டும் ஒரு எச்சரிக்கை சொல்லுவேன்.


நான் முதல் வகுப்பில் மாணவர்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை:

அன்புள்ள மாணவர்களே, நீங்கள் இப்போது உங்கள் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறீர்கள். இந்த வருடம் நன்றாகப் படித்து பாஸ் செய்து விட்டீர்களானால் அடுத்த வருடம் வேலையில் இருப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் அந்த நிலை மிக்க மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் என்னுடைய பாடத்தில் பாஸ் செய்ய ஒரு சுலபமான வழியைச் சொல்லிக்கொடுக்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.

என்னுடைய வகுப்புக்கு 95 சதம் நீங்கள் வந்திருக்கவேண்டும். தியரி பரீட்சைக்கும் பிராக்டிகல் பரீட்சைக்கும் வந்தால் போதும். அவ்வளவுதான். பரீட்சையில் நீங்கள் எப்படி எழுதியிருந்தாலும் நீங்கள் பாஸாவதற்கு நான் கேரன்டி. நீங்கள் அதிக மார்க் வாங்க பிரியப்பட்டால் அது உங்கள் சாமர்த்தியம். அதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ளவேண்டும்.

அப்படியில்லாமல் என் வகுப்பிற்கு 50 சத வகுப்புகளுக்கு குறைவாக வந்திருந்தாலோ அல்லது வகுப்பிலோ, மாணவர் விடுதியிலோ அல்லது வெளியிலோ ஏதாவது வம்பு வழக்கு செய்தாலோ, நீங்கள் என் பாடத்தில் பாஸ் செய்ய மாட்டீர்கள்.

இது கொஞ்சம் கொடுங்கோல் ஆட்சி மாதிரி தெரிந்தாலும் மாணவர்களை நேர் வழியில் கொண்டு செல்ல இம்மாதிரி எச்சரிக்கைகள் மிகவும் உதவியாக இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த எச்சரிக்கையையும் மீறி ஒரு மாணவன், தான் மாணவர் மன்றத்தின் செயலர் என்கிற எண்ணத்தில் ஒரு முறை என்னிடம் முறை தவறி நடந்து கொண்டான். அப்புறம் என்ன? அவன் கதி என்ன ஆயிற்று என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.

புதன், 27 ஜூன், 2012

இந்திப் பாட்டு போடாதே

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் 1968 ல் நடந்தது. நான் அப்போது கோவை விவசாயக் கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக இருந்தேன். மாணவர்களின் கேன்டீன் என் பொறுப்பில் இருந்தது. கேன்டீனில் பாட்டுப் போடுவதற்கு உண்டான வசதிகள் இருந்தன. அக்காலத்தில் சினிமாப் பாட்டுகள் இசைத்தட்டு வடிவில்தான் இருந்தன. மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த இசைத்தட்டுகளை வாங்கி வந்து போடுவார்கள். (பொது செலவுதான்). அதில் பல இந்தி சினிமா பாட்டுகளும் உண்டு.

1968 இந்திப் போராட்டத்தில் எங்கள் கல்லூரி மாணவர் தலைவன் ஒரு முக்கியப் பங்கு வகித்தான். அதாவது கோவையைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கு அவர்தான் போராட்ட இணைப்பாளர். அது என்ன என்றால் மேலிருந்து இவருக்கு ஆர்டர்கள் வரும். அதை இவர் மற்ற கல்லூரிகளுக்கு அனுப்பவேண்டும். இந்தப் பொறுப்பு வகித்ததினால் அவருக்கு ஒரு மவுசு ஏற்பட்டுவிட்டது. தான் ஒரு குறுநில மன்னர் என்ற நினைப்பு ஏற்பட்டுவிட்டது.

ஒரு நாள் அவர் என்னிடம் வந்தார். சார், கேன்டீனில் இந்திப்பாட்டு போடுகிறார்கள். அது கூடாது என்றார். நானும் சூழ்நிலையை அனுசரித்து கேன்டீன் மேனேஜரிடம் இனிமேல் இந்திப்பாட்டு போடாதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.

இந்தி எதிர்ப்பு களேபரங்கள் எல்லாம் ஒரு மாதிரி முடிந்து பரீட்சைகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தன. அந்த சமயத்தில் கேன்டீன் மேனேஜர் என்னிடம் வந்து, "சார், பசங்க (மாணவர்களை வாத்தியார்கள் இப்டித்தான் குறிப்பிடுவார்கள்) எல்லாம் இந்திப் பாட்டு வேணும்னு கேட்கறாங்க, சார், என்ன செய்யட்டும்?" என்றார். நான் பசங்க கேட்டாப் போடுங்க என்றேன். இந்திப்பாட்டு அமர்க்களமாக பாடிக்கொண்டிருந்தது.

நமது கதாநாயக்கருக்குப் பொறுக்குமா? என் ரூமுக்கு வந்து, என்ன சார், இந்திப்பாட்டு போடக்கூடாதுன்னு சொல்லியிருந்தோமே, இப்போது போடுகிறீர்களே" என்றார். ஆமாம், மாணவர்கள் கேட்கிறார்கள் என்று கேன்டீன் மேனேஜர் சொன்னார். அதனால்தான் போடுங்கள் என்று சொன்னேன், என்று பதில் சொன்னேன்.

அதற்கு அவர், மாணவர்கள் கேட்டால்கூட இந்திப் பாட்டுக்களைப் போடக்கூடாது சார் என்றார்.

நான் சொன்னேன். அப்படியானால் எல்லா மாணவர்களிடமும் இந்திப்பாட்டு போடக்கூடாது என்று கையெழுத்து வாங்கி வா. பாதி பேருக்கு மேல் அப்படி கையெழுத்து போட்டால் கேன்டீனில் இருக்கும் இந்தி பாட்டு ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்துப் போடச் சொல்லி விடுகிறேன், என்றேன்.

அதற்கு அவர் அது எப்படி முடியும் சார் என்றார். அப்போது நான் ஒன்றும் செய்வதற்கில்லை என்றேன். அவர் கொஞ்சம் குரலை உயர்த்தி எப்படியும் நீங்கள் இந்திப் பாட்டு போடக்கூடாது என்றார்.

அப்போது எனக்கு வயது 35. இளமை முறுக்கு. என் மூளையில் திடீரென்று ஒரு பொறி தட்டியது. அதற்கு முந்தின தினம் அவருடைய பரீட்சைகள் அனைத்தும் முடிந்து விட்டன. அவர் படிப்பது இறுதி ஆண்டு.

நான் சொன்னேன். இத பாரு மிஸ்டர். நேற்றோடு உன் பரீட்சைகள் எல்லாம் முடிந்து விட்டன. இன்று நீ இந்தக் கல்லூரியின் மாணவன் இல்லை. "கெட் அவுட் ஆப் மை ரூம்" என்று ஓங்கிய குரலில் சொன்னேன்.

அவர் கல்லூரித் தலைவரிடம் போய் முறையிட்டிருக்கிறார். அவர், வார்டன் சொன்னது சரிதான், உன்னுடைய மூட்டை முடிச்செல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னுடைய ஊருக்குப் போய்ச்சேர் என்று சொல்லிவிட்டார்.

அதற்கப்புறம் பல ஆண்டுகள் கழித்து அவரைப் பார்த்தேன். ஒரு தனியார் எருக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பழைய வீராப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.


போட்டோக்கள் நன்றி கூகுள்