நாற்பது வயதுக்கு மேல் எழுத்துகளோடு வாழும் எவருக்கும் கண் கண்ணாடி போடுவது அவசியமாகி விடுகிறது. நான் என்னுடைய 43 வது வயதில் கண்ணாடி போட்டேன். அது வரை மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்த எழுத்துக்கள் எல்லாம் பளிச்சென்று இருந்தன. கண்ணாடி போடவேண்டியதின் அவசியம் அன்று புரிந்தது.
அப்போதெல்லாம் "பைஃபோகல்" எனப்படும் கண்ணாடிகள்தான் பிரபலமாக இருந்தன. (ஏன் இப்போதும் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்ட கண்ணாடிகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.) அப்போது கம்ப்யூட்டர்கள் வரவில்லை. அதனால் இந்தக் கண்ணாடிகள் போதுமானவையாக இருந்தன.
கம்ப்யூட்டர்கள் இன்று இருக்கும் மாதிரியில் வர ஆரம்பித்த உடன் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு கண்ணாடி போட்டவர்கள் கஷ்டப்பட்டார்கள். "பைஃபோகல்" கண்ணாடி புத்தகங்களைப் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு தலையைத் தூக்கித் தூக்கி பார்த்ததில் கழுத்து வலி வந்தது.
இந்த சிரமத்தைப் போக்குவதற்காக "பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் பாகத்தின் பவரில் ஒரு தனிக்கண்ணாடி தயார் செய்து உபயோகப் படுத்தினார்கள். இதனால் தலையைத் தூக்கி கம்ப்யூட்டர் திரையைப் பார்க்க வேண்டியதில்லை. சாதாரணமாகப் பார்த்தால் போதும்.
இது வரைக்கும் எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் எங்கள் சங்கத்திற்கு ஒரு கண் டாக்டர் வந்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு நுணுக்கம் அனைவருக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.
"பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் உள்ள பாகத்தின் பவர் புஸ்தகங்கள் படிப்பதற்காக நிர்ணயித்தது. புத்தகங்களை நாம் சாதாரணமாக ஒன்றரை அடி தூரத்தில் வைத்துப் படிப்போம். அதற்கு இந்த "பைஃபோகல்" கண்ணாடிகள் போதுமானவை. ஆனால் கம்ப்யூட்டர் திரையை நாம் இரண்டடி தூரத்தில் வைத்துப் பார்க்கறோம். அதற்கும் இந்த புத்தகம் படிப்பதற்கான பவர் உள்ள கண்ணாடியையே பயன்படுத்தினால் கண்ணிற்கு அசதி உண்டாகும்.
படிப்பதற்கு உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவரில் 0.5 பவரைக் குறைத்து ஒரு கண்ணாடி உபயோகப்படுத்தினால் இந்த அசதி வராது. இந்த நுணுக்கத்தை அந்த கண் டாக்டர் கூறினார்.
நான் அதற்கு முன்பிருந்தே அப்படியான ஒரு கண்ணாடியைத்தான் உபயோகப்படுத்தி வருகிறேன். சைனா கண்ணாடிகள் எல்லா பவர்களிலும் மிகவும் சலீசாகக் கிடைக்கின்றன. விலை 100 முதல் 150 க்குள்தான் இருக்கும். எனக்கு படிப்பதற்கான பவர் +3.0. கம்ப்யூட்டரைப் பார்ப்பதற்காக நான் உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவர் +2.5. இந்த முறையில் நான் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி வருகிறேன்.
பலரும் இந்த நுணுக்கத்தை அறிந்திருக்கலாம். ஆனாலும் சிலருக்குத் தெரியாமல் இருக்க க்கூடும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.