இந்தியாவில் உணவுப்புரட்சி
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட அரசியல், சமூக, மதக் குழப்பங்கள் தீர்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1960 களின் கடைசியில் ஒரு குழு தெய்வாதீனமாக அமைந்தது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் பொறுப்பேற்றார். திரு.சி.சுப்பிரமணியம் மத்திய விவசாய அமைச்சராக இருந்தார். இருவரும் கலந்து ஆலோசித்து இந்திய உணவுப் பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். டாக்டர் எம்.எஸ். ஸ்வாமிநாதனுக்குத் தெரிந்த ஒரு அமெரிக்க விவசாய விஞ்ஞானி, நோபல் பரிசு வாங்கியவரான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரை இந்தியாவிற்கு வரவழைத்தார்கள்.
அவர் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள விவசாய தொழில் நுட்பங்களை ஆராய்ந்து இங்குள்ள விவசாய நிபணர்களிடமும் கலந்தாலோசித்து சில முடிவுகளைச் சொன்னார். இந்திய விவசாயத்தை மேம்படுத்த முக்கியமாக மூன்று அபிவிருத்திகள் செய்ய வேண்டும் என்றார். ஒன்று - நல்ல விதை. இரண்டு – நல்ல உரம். மூன்று – நல்ல பயிர் பாதுகாப்பு. நல்ல விளைச்சல் தரக்கூடிய கோதுமை விதைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உரங்களும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும் பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. இவைகளை உபயோகப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதில் விளைச்சல் பலமடங்கு அதிகமாக விளைந்தது. இந்திய நாடு உணவு வகையில் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொண்டது.
“பசுமைப்புரட்சி” என்றழைக்கப்பட்ட இந்த விவசாயப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களினால் இந்திய மக்கள் பஞ்சத்திலிருந்து விடுபட்டார்கள். ஆனாலும் இந்திய மக்கள் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்தார்கள். அதாவது எலிகள் போல் பெருகினார்கள். முப்பது கோடியாய் இருந்தவர்கள் அறுபது வருடங்களுக்குள் நூற்று இருபது கோடியாய் பெருகி இருக்கிறார்கள். இந்தியாவின் சாபக்கேடே இந்த மனித உற்பத்திப் பெருக்கம்தான். சரி, இருக்கிற ஜனங்களாவது ஒழுங்காக, தேசப்பற்றுடன், நாடு முன்னேற பாடுபடுகின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஏறக்குறைய தரை மட்டமாக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்கர்களே பயப்படும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசப்பற்று இருக்கிறது. நமக்கு?????
இந்தியர்களின் பசியைப் போக்கியதில் உரங்களும் பயிர்பாதுகாப்பு மருந்துகளும் முக்கிமான பங்கை ஆற்றியிருக்கின்றன. இவைகளின் உபயோகம் வருடாவருடம் அதிகரித்து வந்துள்ளது. இந்த உண்மையை மனதில் கொள்ளாமல் திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.