சமீப காலமாக பதிவர்கள் சிலருக்கு நம் நாட்டை அமெரிக்கா போல ஒரு வல்லரசாக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. அதற்காக பதிவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் நாட்டுக்கு சேவை செய்யவேண்டுமென்று வேண்டுகோள் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் பார்த்த எனக்கும் இந்நாட்டுக் குடிமகன் என்ற முறையில் மனச்சாட்சி உறுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவாக என் மனதில் தோன்றிய எண்ண அலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ((எப்படி பதிவுத்தலைப்பைக் (சாமியின் மன அலைகள்) கோர்த்திருக்கிறேன், பார்த்தீர்களா?))
சேவை செய்வது என்பது ஒரு புனிதமான காரியம். போகிற வழிக்கு புண்ணியம் சேரும். அது தெய்வத்திற்காகினும் சரி, தேசத்திற்காகினும் சரி, மக்களுக்காகினும் சரி. அதில் உள்ள ஒரே கஷ்டம் என்னவென்றால் எந்த மாதிரி சேவை செய்யலாம் என்பதுதான். என்னுடைய கருத்து, இதற்காக ஒரு பதிவர் மகாநாடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்தவேண்டும். எலெக்ஷன் சமயத்தில் நடத்தினால் நன்கொடை வசூலிக்க தோதாக இருக்கும். என்ன, ஏது என்று கேட்காமல் கார்ப்பரேட்டுகள் செக் கொடுத்து விடுவார்கள். பிறகு அந்த மகாநாட்டில் விவாதிக்க விஷயங்கள் வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.
ஏழ்மையை ஒழிப்போம். இது ஒரு முக்கியமான சேவைதான். இந்த நோக்கத்தில் யாருக்கும் எந்த விதமான எதிர்ப்பும் இருக்க முடியாது. எப்படி ஏழ்மையை ஒழிக்கமுடியும்? இதற்கான திட்டம் ஒன்று தயாரிக்கவேண்டும். அதை செயல்படுத்த வேண்டும். அதற்கு ஆள் பலமும், பணபலமும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழ்மையில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
ஏழ்மையில் இருப்பவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. அவர்கள் அவ்வாறு வேஷம் போட்டால்தான் அரசு கொடுக்கும் இலவசங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்காகவே அவர்கள் ஏழைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். அரசும் அவர்களை பல காரணங்களுக்காக அவ்வாறே வைத்திருக்க விரும்புகிறது. ஆகவே ஏழ்மையை ஒழிக்கும் சேவை ஆரம்ப கட்டத்திலேயே அடிபட்டுப் போகின்றது.
அடுத்ததாக செய்யக்கூடியது “எல்லோருக்கும் கல்வி” தருவது. இந்த முயற்சியில் அரசே ஈடுபட்டிருக்கிறது. மதிய உணவுத்திட்டம், இலவச உடை, காலணிகள், சைக்கிள், புத்தகங்கள், இன்னும் பலவற்றை இலவசமாகக் கொடுத்தும் மக்கள் தங்கள் மழலைச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டேனென்கிறார்கள். என்ன செய்ய?
வேறு என்ன சேவை செய்யலாம் என்று யோசித்தால் எல்லா சேவைகளையும் அரசே எடுத்து நடத்துகிறது. அதில் என்ன ஒரே நெகடிவ் சமாசாரம் என்னவென்றால், அந்த சேவைகள் அனைத்தும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையில் இருக்கின்றன. ஆனால் எது எப்படிப்போனாலும் அரசு அந்த சேவைகளை நிறுத்தப் போவதில்லை.
பதிவர்களோ எப்படியாவது, ஏதாவது சேவை செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டியாய் விட்டது. முன்வைத்த காலை பின் வைக்கலாமா? கூடாது. சரி, பதிவர்கள் என்ன சேவைதான் செய்யமுடியும் என்று பார்த்தால் ஒன்று எனக்குப் புலப்பட்டது. ஏழைகளின் சாபக்கேடு அவர்களின் குடிப்பழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் இந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டால் அவர்கள் அனைவரும் பணக்காரர்களாகி விடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் பதிவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு டாஸ்மாக் கடையைத் தத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டாஸ்மாக் கடை என்றால் அநேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். தெரியாதவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும். விலாவாரியான விவரங்கள் அனுப்பப்படும். பதிவர்கள் அங்கு சென்று அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் குடியின் தீமைகளை விளக்கிக் கூறவேண்டும். அதைக்கேட்டு அவர்கள் மனம் மாறி குடிப்பதை நிறுத்திவிடுவார்கள். பிறகு என்ன, அவர்களும் பணக்காரர்களாகி விடுவார்கள். நாடு வல்லரசாகிவிடும். எப்படீஈஈஈ!!!!
பதிவர்களில் சிலர் டாஸ்மாக்கின் நிரந்தர கஸ்டமர்கள் ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். இனிமேல்தானா ஆகப்போகிறார்கள், இப்போதே அப்படித்தான் என்று யாரோ முணுமுணுக்கிறார்கள். அவர்கள் பதிவர்களில் கருங்காலிகள். அவர்களின் ஊளையைக் கேட்காதீர்கள். அவர்கள் நாம் எங்கே இந்த சேவையை செய்து பிரபலமாகி விடுவோமோ என்ற வயித்தெரிச்சலில் புலம்புகிறார்கள். இதற்கெல்லாம் நாம் அசரக்கூடாது. நம் இலக்கை, அதாவது டாஸ்மாக்கை, நோக்கி போய்க்கொண்டே இருப்போம். வெற்றி நமதே.