சனி, 10 மார்ச், 2012

களை எடுப்பது மகா குற்றம்.


தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது என்று மனேகா காந்தி என்று ஒருவர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இப்போது நெரு நாய்களைக் கொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தெருநாய்கள் பொது ஜனங்களுக்குத் தொந்திரவாக இருந்தால் சாத்வீக முறையில் அவைகளைப் பிடித்து அவைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து விட்டால் அப்புறம் தெரு நாய்கள் இல்லாமல் போய்விடும். இப்படி ஒரு திட்டம் இருக்கிறது

அதாவது கொக்கை எப்படி பிடிக்கிறது என்று ஒருத்தன் கேட்டானாம். அதற்கு மற்றொருவன் சொன்னானாம், நல்ல வெயில் அடிக்கும்போது கொக்கு தலையில் ஒரு கை வெண்ணெயை வைத்து விட்டால், அந்த வெண்ணை உருகி, கொக்கின் கண்ணை மூடிவிடும். அப்போது போய் கொக்கை லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம் என்றானாம். அது மாதிரிதான் இந்தத் திட்டமும்.

ஆனாலும் தெரு நாய்கள் வருடாவருடம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே தவிர குறைந்த மாதிரி காணோம். நாம்தான் சிந்தனையாளராயிற்றே? இந்தப் பிரச்சினை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது சில பல கருத்துக்கள் தோன்றின. உலக நன்மையை முன்னிட்டு அந்தக் கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

ஜீவகாருண்யம் என்பது உயிர்களைக் கொல்லாமல் இருப்பது. சரிதானே? அதனால்தானே தெரு நாய்களுக்காக மனேகா காந்தி போராட்டம் நடத்தினார்கள். எனக்குத் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பல மனிதர்கள் இந்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் மாமிசங்களை உண்கிறார்களே, அவர்களுக்கு அந்த மாமிசம் எங்கிருந்து கிடைக்கிறது? அந்த ஆடு மாடு கோழிகளையெல்லாம் கொல்லாமலே அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா அல்லது அவைகளைக் கொன்றுதான் அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா? அப்படி அவைகளைக் கொல்கிறார்கள் என்றால் அது ஜீவகாருண்ய அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா?

இந்த எண்ணம் தோன்றிய நாளிலிருந்து என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. இப்படியே தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது வேறொரு எண்ணம் தோன்றியது.

நான் ஒரு விவசாயப் பட்டதாரி. செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்று நான் படிக்கும்போது சொல்லிக் கொடுத்தார்கள். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியானால் அந்த செடிகொடிகளைக் கொன்றுதானே நாம் சாப்பிடுகிற அரிசி, பருப்பெல்லாம் கிடைக்கிறது? எந்த உயிரானாலும் கொல்லாமலிருப்பதுதானே ஜீவகாருண்யம்? இதை ஏன் ஒருவரும் அந்த மனேக்காவுக்குச் சொல்லவில்லை?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம். அந்த செடிகளெல்லாம் இறந்த பிறகுதான் அதிலிருந்து அரிசி பருப்பெல்லாம் எடுக்கிறோம் என்று வைத்துக் கொளவோம். அப்போது வேறொரு எண்ணம் உதித்தது. உதாரணத்திற்கு நெல் பயிரை எடுத்துக் கொள்வோம். நெல் பயிர் வளரும்போது கூடவே வேறு செடிகளும் வளருகின்றன. விவசாயிகள் அவைகளை களைகள் என்று கூறி அவைகளைப் பிடுங்கி விடுகிறார்கள். அந்தக் களைச் செடிகள் உயிருள்ளவைதானே. அவைகளைப் பிடுங்கி எறிவது ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல்தானே?

இதை ஏன் இதுவரை ஒருவரும் எதிர்த்து பிரசாரம் பண்ணவில்லை? இனிமேல் யாரும் களை எடுக்கக்கூடாது என்று ஏன் மனேக்கா காந்தி சொல்லவில்லை? இந்த எண்ணம் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது. அதனால் நான் உடனடியாககளை பிடுங்க எதிர்ப்புகட்சி ஆரம்பித்து கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன். வெளிநாட்டுப் பணங்கள் அதிக அளவில் பெறும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மகத்தான ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

மேலும் நமது உயிருக்கும் மேலான பதிவுலகக் கண்மணிகளும் ஆதரவு கொடுத்தால், இந்தக் களை பிடுங்கா போராட்டம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி, உறுதி, உறுதி.

வெள்ளி, 9 மார்ச், 2012

நிறைவேறின ஆசைகள்

கொஞ்சும் சலங்கை என்ற சினிமா வந்த புதிதில், 1962 என்று ஞாபகம், சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பிரபலமாகி பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது. திருமதி ஜானகி திரை உலகத்தில் பிரவேசித்த முதல் பாடல். ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல். திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையோடு பின்னிப்பிணைந்த பாடல். அதற்கு முன்பும் அப்படி ஒரு பாடல் வந்ததில்லை. அதற்குப்பின்பும் அந்த பாடல் மாதிரி வரவில்லை.

நான் அப்போதுதான் முதுகலை படிப்பு முடித்துவிட்டு வேலையில் சேர்ந்திருந்தேன். படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்கவேண்டும். குடித்தனம் நடத்தவேண்டும். அப்போது நான் பிரம்மச்சாரிதான். இருந்தாலும் பாட்டியுடன் தனிக்குடித்தனம். என் அம்மாவிற்கும் பாட்டிக்கும் ஆகாது. ஆனால் நான் பாட்டி செல்லம். ஆகவே என்னை பாட்டியுடன் தனிக்குடித்தனம் அனுப்பி விட்டார்கள்.

இந்த சிங்கார வேலன் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு ஏக்கம் தோன்றும். ஆஹா, இந்தப் பாட்டை கிராமபோன் ரிக்கார்டில் வீட்டில் போட்டு கேட்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்று ஏங்கியிருக்கிறேன். கிராமபோன் வாங்கும் அளவிற்கு என்னுடைய அன்றைய பொருளாதார நிலை இல்லை. இந்த ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

பல வருடம் கழித்து டேப் ரிகார்டர் வாங்கினேன். அதில் இந்தப் பாடல் கேசட் வாங்கி என் மனம் திருப்தியடையும் வரையிலும் இந்தப் பாடலைக்கேட்டேன். இப்போது கம்ப்யூட்டர், சி.டி.ப்ளேயர், ஐபாட், டேப் ரிகார்டர் என்று பலவித உபகரணங்களும் வீட்டில் இருக்கின்றன. இந்தப் பாட்டு பல வடிவங்களில் இந்த உபகரணங்களில் இருக்கின்றன. ஆனால் அன்று டீக்கடைகளில் ஓரமாக நின்று கேட்டு ஆனந்தித்த அனுபவம் இப்போது வரவில்லை.

ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.

வியாழன், 8 மார்ச், 2012

என் தன்னம்பிக்கை வளர்ந்த விதம்


அனுபவங்கள் இரு வகைப்படும். ஒருவகை நேர்மறை வழி. இந்த வழியில் போ, இந்த மாதிரி செய், இப்படிப் பேசு என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பது நேர் மறை வழி.

இன்னொரு வழி எதிர்மறை வழி. இப்படிப்போகாதே, இப்படி செய்யாதே, நீ செய்வது தப்பு, இப்படியெல்லாம் சொல்வது எதிர்மறை வழி.
இரண்டு வழிகளிலும் நன்மை-தீமை இரண்டும் உண்டு. இதுதான் சிறந்த வழி என்று எதையும் கூற முடியாது.

நான் இரண்டாவது வழியில் வளர்ந்தவன். எந்த காரியத்தையும் செய்து முடித்தபின் என் பெற்றோர்கள் குறை கூறுவார்களே தவிர, எந்தக் காரியத்தையும் முன்கூட்டியே இப்படி செய் என்று கூற மாட்டார்கள். ஆகவே நான் தனிக்காட்டு ராஜாவாகவே வளர்ந்தேன். எப்படி என்றால் எந்தக் காரியத்தையும் சொல்வதில்லை. நானாகவே செய்து கொள்வேன். அதனால் வரும் நன்மை தீமைகளை நானே ஏற்றுக் கொள்வேன்.

இப்படி வளர்ந்து கொண்டிருந்தபோது நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும்போது எனக்கென்று சிலபல அபிலாக்ஷைகள் தோன்ற ஆரம்பித்தன. பெரியதாக ஒன்றுமில்லை. ஒரு பென்சில் வாங்கவேண்டும் என்ற ஆசை வந்தது. சாதாரண பென்சிலாக இருந்தால் வீட்டில் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் புது பென்சிலை முழுதாகத் தரமாட்டார்கள். நான் தொலைத்து விடுவேனாம். அதனால் அந்தப் பென்சிலை இரண்டாகத் துண்டு பண்ணி ஒவ்வொரு துண்டாகத்தான் கொடுப்பார்கள்.

நான் ஆசைப்பட்டது இந்தப் பென்சில் அல்ல. அப்போது புதிதாக கடைகளில் ஒரு பென்சில் விற்பனைக்கு வந்திருந்தது. அது எப்படி என்றால், பென்சிலின் எழுதும் பகுதியான கருப்பு "லெட்" மட்டும், ஒரு பென்சில் சைசில், ஐந்து அங்குல நீளத்தில், வெளியில் பெயின்ட் அடித்து, பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வசதியாக ஒரு கிளிப்பும் சேர்த்து வந்திருந்தது. இதைப் பார்த்ததும் அதை நான் வாங்கி ஸ்டைலாக பாக்கெட்டில் குத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது.

ஆனால் அதன் விலையோ என் சக்திக்கு மீறியதாக இருந்தது. என் சக்தி அந்தக் காலத்தில் காலணாதான். அதாவது இந்தக் காலத்திய ஒன்றரை பைசா. அந்தப் பென்சிலின் விலை இரண்டணா அதாவது பனிரெண்டு பைசா. என்ன செய்வது என்று பல நாட்கள் இரவும் பகலும் யோசித்தேன். ஒரு வழியும் சிக்கவில்லை. வீட்டில் அம்மா வைத்திருக்கும் பணத்தில் திருடினால் அப்பா என் முதுகில் டின் கட்டி விடுவார். அது தவிர இதற்கு முன் அவ்வாறு காசு திருடிப் பழக்கமுமில்லை.

இப்படி இருக்கையில் ஆபத்பாந்தவனாக ஒரு நண்பன் காசு சம்பாதிக்க ஒரு வழி காட்டினான். அந்தக் காலத்தில் கடைக்காரர்கள் தாங்களே  காப்பிக் கொட்டையை வறுத்து பொடி பண்ணித்தான் விற்பார்கள். அந்தக் காலத்தில் காப்பிக்கொட்டையை வறுக்க ஒரு உபகரணம் உபயோகப்படுத்துவார்கள். இந்தக் காலத்தில் தார் ரோடு போடும்போது தாரையும் ஜல்லியையும் சேர்த்து ஒரு டிரம்மில் போட்டு கீழே தீ மூட்டி கலக்குவதற்கு ஒரு உபகரணம் இருக்கிறதல்லவா? அதை ஒரு ஆள் ஒரு கைப்பிடியினால் சுத்திக்கொண்டே இருப்பானல்லவா? அதே மாதிரி சிறிய அளவில் காப்பிக்கொட்டை வறுப்பதற்கு ஒரு உபகரணம் இருந்தது. இதை 40 நிமிடம் சுற்றினால் காப்பிக்கொட்டை வறுபட்டுவிடும்.

இந்த வேலைக்கு தினக்கூலியில் ஆள் போட்டால் கட்டுப்படியாகாது. ஆகவே கான்ட்டிராக்ட் முறையில் இந்த வேலையைக் கொடுப்பார்கள். ஒரு பேட்ச் காப்பிக்கொட்டையை வறுப்பதற்கு ஐந்து அணா கூலி. அதாவது முப்பத்தியொரு பைசா. இந்த வேலை சரியான போர் வேலை. இடைவிடாமல் அந்த டிரம்மை சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். சற்று நேரம் சுற்றாமல் விட்டால் கீழ்ப்பகுதி கொட்டைகள் கறுகிவிடும். ஆகவே இந்த வேலைக்குப் பெரிய ஆட்கள் வரமாட்டார்கள். சிறுவர்களைத்தான் இந்த வேலைக்கு உபயோகப்படுத்துவார்கள். ஸ்கூல் லீவு தினங்களில் ஸ்கூல் சிறுவர்கள் இந்த வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பாக்கெட் மணி (Money)  கிடைக்கும்.

இந்த வாய்ப்பைப் பற்றி என் நண்பன் சொன்னான். உடனே என் மூளை ஆஹா, நம் ஆசை நிறைவேறும் நாள் வந்து விட்டது என்று அங்கே போனேன். ஒரு பேட்ச் காப்பிக்கொட்டை வறுக்கும் வேலை கொடுத்தார்கள். வறுத்து முடித்ததும் கையில் ஐந்தணா கொடுத்தார்கள். உடனே நான் என்ன செய்திருப்பேனென்று நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆம், உடனே ஓடிப்போய் அந்தப் பென்சிலை வாங்கி சட்டைப் பையில் குத்தி அழகு பார்த்தேன். தலை நிமிர்ந்து விட்டது. 

இப்படியெல்லாம் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தால் வீட்டில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்களா என்று கேட்கிறீர்களா? அதுதான் முதலிலேயே சொன்னேன் அல்லவா? என் காரியங்களுக்கு நானே பொறுப்பு. சாப்பாட்டு நேரத்திலும் தூங்கும் நேரத்திலும் வீட்டில் இருந்தால் போதும். மற்ற நேரத்தில் எங்கு போனாலும் யாரும் கவலைப்படமாட்டார்கள். அப்படி ஒரு சுதந்திரத்தை அந்தக் காலத்தில் அனுபவித்தேன். பையன் எங்கே என்று யாராவது வீட்டிற்கு வருபவர்கள் கேட்டால், "கழுத, எங்கயாவது ஊர் சுத்திக்கிட்டு இருக்கும், சோத்து நேரத்துக்கு வந்துடும்" என்று சொல்வார்கள்.

இப்படியாக நான் முதன் முதலில் தனியாக என் உழைப்பில் பணம் சம்பாதித்ததில் என் தன்னம்பிக்கை வளர ஆரம்பித்தது. நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு (ஹைஸ்கூல் படிக்கும்போது) இன்னும் பல வகைகளில் பணம் சம்பாதித்தேன். அதைப் பற்றி தனியாக பதிவு போடுகிறேன்.

புதன், 7 மார்ச், 2012

நிர்வாணபுரியில் ஒரு பைத்தியக்காரன்


பழமொழியைப் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எங்க ஊர்ல கடைவீதிக்குப் போனால் ஒவ்வொரு ஜவுளிக்கடை வாசலிலும் ஒரு பையன் அல்லது ஆள் இருப்பான். அந்த வழியில் போகிறவர்களையெல்லாம் " அம்மா வாங்க, ஐயா வாங்க, நல்ல துணிகள் சலீசாக இருக்கு" என்று கூவி அழைத்தவாறே இருப்பான். அவனுக்கு அதுதான் வேலை. சம்பளம் அதுக்காகத்தான்.

பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்கள் வைத்து தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள்.

இதே டெக்னிக்கை சோப்புக் கம்பெனிகள் எப்படி உபயோகப்படுத்தினார்கள் என்றால், தங்கள் சோப் சுற்றிவரும் காகிதத்தை நல்ல வர்ணத்துடனும் ஒரு சினிமா நடிகை போட்டோவுடனும் போட்டார்கள். பிறகு ஏறக்குறைய எல்லாப் பொருட்களின் பேக்கிங்க்குகளும் மிகவும் கவர்ச்சிகரமாக மாறின.

சரக்கு எப்படியிருந்தாலும் அது நல்ல முறையில் கவர்ச்சிகரமாக பேக் செய்தால்தான் விறபனை ஆகும் என்ற நிலை வந்து விட்டது. எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் கல்யாண தினத்தில் பல ஆயாரம் செலவழித்து மேக்கப் போடுகிறார்கள்.

இந்த நிலை வந்த பிறகு விளம்பரக் கம்பெனிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. விளம்பரத்துக்காக பெரும் தொகையை கம்பெனிகள் செலவிடுகின்றன.

நிஜ உலகில் இருக்கும் இந்த நிலை பதிவுலகத்திலும் எதிரொலிக்கிறது. ஆள் வைத்துக் கூவுவதற்குப் பதிலாக ஈமெயில் ஆனுப்புகிறார்கள். கவர்ச்சி பேக்கிங்க்குக்குப் பதிலாக கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இந்த டெக்னிக்குகளெல்லாம் தேவைப்படுகின்றன. என்னுடைய சரக்கு அருமையான சரக்காக்கும், எனக்கு இந்த கவர்ச்சிகளெல்லாம் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் சரக்கு விலை போவதில்லை.

என்னுடைய பதிவில் இந்தத் தத்துவத்தை பரிசோதனை செய்து பார்த்தேன். கவர்ச்சிகரமான தலைப்பு நிச்சயமாக அதிக வாசகர்களைக் கொண்டு வருகிறது. ஆனாலும் எனக்கு அந்த மாதிரி தலைப்புகள் வைக்க கஷ்டமாக இருக்கிறது. ஆகவே நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

திங்கள், 5 மார்ச், 2012

மட ஆசிரியனும் மணியான மாணவனும்.


நான் சுமார் பத்து வருடம் விவசாய இளங்கலை மாணவர்களுக்கு ஆசிரியனாக இருந்தேன். அதனால் பல இடங்களில் என் பழைய மாணவர்கள் என்னைப்பார்த்து வணக்கம் சொல்லி நலம் விசாரிப்பார்கள். மனதுக்கு இதமாகவும் பெருமையாகவும் இருக்கும். இந்த மாதிரி பல சமயங்களில் நடக்குமாதலால் கொஞ்சம் தலைக்கனம் வந்துவிட்டது. (அந்தக் காலத்தில் ஆகாயத்தைப் பார்த்துத்தான் நடப்பேன். தரையைப் பார்த்து நடக்கும் வழக்கம் இல்லை).

ஒருவர் அனுபவம் பெறப்பெற, அவருக்கு பதவி உயர்வு கொடுப்பது அரசு முறைமை. அப்படி நான் ஆசிரியப்பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று ஆராய்ச்சிப்பணி மேற்பார்வையாளராக (Professor and Head) தஞ்சாவூருக்கு மாற்றலானேன். அங்கு எங்கள் ஆராய்ச்சிப் பண்ணை நாகப்பட்டினம் ரோடு மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. எங்கள் பண்ணை வளாகத்திலேயே விவசாய இணை இயக்குநர் அலுவலகமும் இருக்கிறது.

இந்தப் பண்ணையின் ஆபீஸ் தஞ்சாவூரில் இருக்கிறது. பண்ணை தஞ்சாவூர் டவுனிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. டவுன் பஸ்கள் அடிக்கடி இல்லை. வரும் பஸ்களும் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த ஸ்டாப்பில் நிறுத்தமாட்டார்கள். நான் காலையில் பண்ணைக்குப் போய்விட்டு 12 மணி வாக்கில் ஆபீஸ் திரும்புவேன். அப்போது அந்த பஸ் ஸ்டாப்பில் யாராவது நின்றிருந்தால் அவர்களை என் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்து டவுனில் இறக்கி விடுவது உண்டு. பொதுவாக விவசாய இணை இயக்குநர் ஆபீசுக்கு வரும் ஆட்கள் அப்படி நிற்பார்கள்.

ஒரு நாள் அப்படி ஒருவரை ஏற்றிக்கொண்டேன். ஜீப்பில் வரும்போது அவர் என்னைத் தெரிகிறதா, சார் என்று கேட்டார்.

நான்தெரியவில்லையே, நீங்கள் யார்என்று கேட்டேன்.

அவர் : நான் உங்களிடம் படித்த மாணவன் சார். என்றார்.

எனக்கு கர்வம் தலைக்கு ஏறி விட்டது. நம் மாணவர் ஒருத்தர் நம்மை ஞாபகம் வைத்திருக்கிறார், ஆஹா, என்னே நம் மகிமை என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு மேலும் விசாரித்தேன். எந்த வருஷம் படித்தீர்கள், பெயர் என்ன என்றெல்லாம் விசாரித்த பிறகு அவர் சொன்னார்.

சார், நீங்கள் கெமிஸட்ரியில் என்னை பெயில் பண்ணிவிட்டீர்கள், என்றார். அப்போது நான் கெமிஸ்ட்ரி அசிஸ்டன்ட் புரொபசராக இருந்தேன்.

நான்: ஐயையோ, அப்படியா, வருந்துகிறேன், வேண்டுமென்று நடந்திருக்காது, என்றேன்.

அவர்: பரவாயில்லை, சார், அப்படி பெயிலானதினால்தான் பிரைவேட் கம்பெனியில் சேர்ந்து இப்போது நன்றாக இருக்கிறேன், என்றார்.

நான்: அப்படியா, ரொம்ப சந்தோஷம் என்றேன்.

இதற்கு அப்புறம்தான் கிளைமாக்ஸ். போட்டாரே ஒரு போடு.
இல்லையென்றால் நான் உங்கள் மாதிரி அசிஸ்டென்ட் புரொபசர் ஆகி லோல்பட்டுக் கொண்டிருந்திருப்பேன், என்றார்.

நான் காற்றுப் போன பலூன் மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆனேன்.