திங்கள், 17 செப்டம்பர், 2012

ஆசிரியர் மாணவனுக்கு புத்தி புகட்டின கதை – பாகம் 1

ஆசிரியராகப் பணிபுரிவது ஒரு கலை. அதுவும் 18 முதல் 22 வயதுள்ள மாணவர்களைக் கையாள்வது ஒரு சிரமமான காரியம். காளைப் பருவம். நல்லது கெட்டது புரியாத வயது. இவர்களை வழி நடத்துவது ஒரு சவால். ஆசிரியரிடத்தில் மாணவர்களுக்கு பக்தியும் மரியாதையும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் கவனம் இருக்கும். இந்த பக்தியும் மரியாதையும் முதலிலேயே இருக்காது. நாளாவட்டத்தில்தான் வரும்.

அதற்கு முதல்படியாக ஆசிரியரிடத்தில் பயம் இருக்கவேண்டும். இந்த இரண்டும் கெட்டான் வயதில் அவர்களை அடிக்கவா முடியும்? அப்படியானால் வேறெப்படி பயத்தை உண்டு பண்ண முடியும்? பரீட்சை பயம்தான். அந்த வாத்தியிடம் குறும்பு பண்ணினால் பெயில் பண்ணி விடுவார் என்ற பயம்தான் மாணவர்களை வகுப்பில் ஒழுங்காக இருக்க வைக்கும். நாளாவட்டத்தில் ஆசிரியர் மாணவர்களின் நலத்தில் காட்டும் அக்கறையை வைத்து பக்தியும் மரியாதையும் வரும்.

நான் கடைசி வருட மாணவர்களுக்கு மண்ணியல் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தேன். அந்தக் காலத்தில் படிப்பு முடித்தவுடன் எல்லோருக்கும் விவசாய இலாக்காவில் வேலை கிடைத்து விடும். ஆதலால் மாணவர்கள் அனைவரும் தகராறு இல்லாமல் பாஸ் பண்ணினால் போதும் என்று அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள். அதுவும் என் மாதிரி கண்டிப்பான ஆசிரியர் என்றால் இன்னும் கவனமாக இருப்பார்கள்.

முதல் வகுப்பு ஆரம்பிக்கும்போது நான் ஒரு நன்னூல் சூத்திரத்தைச் சொல்லி ஆரம்பிப்பேன்.

அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர்
தலை இடை கடை மாணாக்கரே.

அன்னப் பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்துண்ணுமாம். அது போல் மாணவர்களும் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதில் வேண்டாததை விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

“ஆ”, அதாவது பசு, மனிதர்கள் சாப்பிட முடியாத புல்லையும் பருத்திக்கொட்டையையும் தின்று, மனிதர்கள் விரும்பும் பாலைக் கொடுக்கிறது. அது போல் மாணவர்களும் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களின் சாரத்தை எடுத்து மக்களுக்கு கொடுக்கவேண்டும். இப்படி இருப்பவர்களே நல்ல மாணாக்கர்கள்.

மண்ணில் எந்த அளவிற்கு உரம் போடுகிறீர்களோ அந்த அளவிற்குத்தான் பயிர்களின் விளைச்சல் இருக்கும். இந்த இடத்தில் எப்படி அந்தக் காலத்திலேயே மண்ணின் இயல்பு நன்னூலில் விளக்கப்பட்டிருக்கிறது பார்தீர்களா? நாம் படிக்கும் மண்ணியல் பாடத்திற்கும் நன்னூலின் இந்த சூத்திரத்திற்கும் உண்டான பொருத்தத்தை சிந்தியுங்கள் என்று மாணவர்களின் கவனத்திற்ககாக எடுத்துக் கூறுவேன். (மாணவர்கள் ஆசிரியரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியப்பார்கள்?!).

கிளி சொல்லிக்கொடுத்ததை மட்டுமே திருப்பிச் சொல்லும். சுயமாகப் பேசத்தெரியாது. இப்படி மண் போலவும் கிளி போலவும் இருப்பவர்கள் நடுத்தர மாணாக்கர்கள்.

ஆடு கண்ட தழைகளையெல்லாம் தின்னும். எருமை சேற்றை விரும்பி அதிலேயே உழலும். இல்லிக்குடம் (ஓட்டைக்குடம்) எதையும் தன்னிடம் வைத்துக் கொள்ளாது. நெய்யரி (பன்னாடை) கசடை வைத்துக்கொண்டு சாரத்தை (நெய்யை) விட்டுவிடும். அப்படி இருப்பவர்கள் கடை மாணாக்கராவர்.

இப்படி விளக்கம் கொடுத்துவிட்டுத்தான் முதல் வகுப்பை ஆரம்பிப்பேன்.
அடுத்து மாணவர்களின் மனதில் திகிலூட்டும் ஒரு எச்சரிக்கை சொல்லுவேன்.


நான் முதல் வகுப்பில் மாணவர்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை:

அன்புள்ள மாணவர்களே, நீங்கள் இப்போது உங்கள் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறீர்கள். இந்த வருடம் நன்றாகப் படித்து பாஸ் செய்து விட்டீர்களானால் அடுத்த வருடம் வேலையில் இருப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் அந்த நிலை மிக்க மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் என்னுடைய பாடத்தில் பாஸ் செய்ய ஒரு சுலபமான வழியைச் சொல்லிக்கொடுக்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.

என்னுடைய வகுப்புக்கு 95 சதம் நீங்கள் வந்திருக்கவேண்டும். தியரி பரீட்சைக்கும் பிராக்டிகல் பரீட்சைக்கும் வந்தால் போதும். அவ்வளவுதான். பரீட்சையில் நீங்கள் எப்படி எழுதியிருந்தாலும் நீங்கள் பாஸாவதற்கு நான் கேரன்டி. நீங்கள் அதிக மார்க் வாங்க பிரியப்பட்டால் அது உங்கள் சாமர்த்தியம். அதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ளவேண்டும்.

அப்படியில்லாமல் என் வகுப்பிற்கு 50 சத வகுப்புகளுக்கு குறைவாக வந்திருந்தாலோ அல்லது வகுப்பிலோ, மாணவர் விடுதியிலோ அல்லது வெளியிலோ ஏதாவது வம்பு வழக்கு செய்தாலோ, நீங்கள் என் பாடத்தில் பாஸ் செய்ய மாட்டீர்கள்.

இது கொஞ்சம் கொடுங்கோல் ஆட்சி மாதிரி தெரிந்தாலும் மாணவர்களை நேர் வழியில் கொண்டு செல்ல இம்மாதிரி எச்சரிக்கைகள் மிகவும் உதவியாக இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த எச்சரிக்கையையும் மீறி ஒரு மாணவன், தான் மாணவர் மன்றத்தின் செயலர் என்கிற எண்ணத்தில் ஒரு முறை என்னிடம் முறை தவறி நடந்து கொண்டான். அப்புறம் என்ன? அவன் கதி என்ன ஆயிற்று என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

நினைவுகளின் சங்கமம்


கோவை விவசாயக் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புத்தோழர்களுடன் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம் நான் பல வருடங்கள் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்த காரணத்தினால் எனக்கும் அழைப்பு வரும்.

அந்த வகையில் நேற்று ஒரு சந்திப்பு நடந்தது. ஆசிரியர்களுக்குத் தங்கள் பழைய மாணவர்களைச் சந்திப்பதிலும் மாணவர்களுக்குத் தங்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதிலும் எப்போதும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். அது தவிர நேற்று ஒரு மாணவரின் திருமண நாளாக அமைந்ததால் அந்த மகிழ்ச்சியையும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.




அந்த விழாவில் எடுத்த சில படங்கள். (நோக்கியா 5230 செல்போனில் எடுத்தது. ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது).


என்னைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்று நம்புகிறேன்.
இடமிருந்து மூன்றாவதாக இருப்பதுதான் நான்.

பழைய நினைவுகள் எப்பொழுதும் இனிமையானவை.

வியாழன், 13 செப்டம்பர், 2012

பயணத்தின் இறுதிக் கட்டம்


புவனேஸ்வரத்தில் விவசாய பல்கலைக் கழகம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்ப்பதற்காக அந்த ஊருக்குப் போனோம். புவனேஸ்வரம் ரயில் நிலையத்தில் நாங்கள் சென்ற கோச்சை நிறுத்துவதற்கான வசதிகள் இல்லை. அங்கிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளகுர்தா ரோடுஎன்னும் ஸ்டேஷனில்தான் நிறுத்தவேண்டும். இது எங்களுக்கு முன்பே தெரியுமாதலால் அதற்கு தகுந்தாற்போல் எங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்.

இரண்டு தினங்கள் அந்த ஸ்டேஷனில் தங்கியிருந்தோம். அங்கிருந்தே தனி பஸ்சில் நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து முடித்தோம். மூன்றாவது நாள் மாலையில் புறப்படவேண்டும். எங்கள் கோச்சை ரயிலில் இணைத்து ரயில் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. அப்போதுதான் மாணவர்கள் எங்கள் கோச்சில் கரன்ட் சப்ளை இல்லையென்று கவனித்தார்கள். ரயில்வே ஆட்களிடம் சொன்னபோது, அவர்கள் வந்து பார்த்துவிட்டு, எங்கள் கோச்சின் டைனமோ/ஜெனெரேட்டர் பெல்டை யாரோ அறுத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். இரவு மாணவர்கள் அத்தனை பேரும் கோச்சில்தான் படுத்திருந்தார்கள். பகலில் நாங்கள் வெளியே போயிருக்கும்போதுதான் இது நடந்திருக்கவேண்டும். இது அந்த ஊரில் வழக்கமாக நடக்கும் அக்கிரமம் என்று பின்னாளில் அறிந்தோம்.

மாணவர்கள் கூட்டம் பெரிதாக இருந்ததால் ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அந்த டைனமோ பெல்டைப் போட்ட பிறகுதான் ரயிலைப் புறப்பட அனுமதிப்போம் என்று ரகளை செய்தார்கள். அரை மணி நேரம் வாக்குவாதம் நடைபெற்ற பிறகு அந்த ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட் என்னிடம் வந்து, “சார் பெல்ட் மாற்றுவதற்கு இந்த ஸ்டேஷனில் வசதி இல்லை. நீங்கள் விஜயவாடாவில் சொன்னால் அவர்கள் மாற்றி விடுவார்கள். இன்று இரவு மட்டும் எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதற்கு மேலும் தகராறு செய்தீர்களானால், இந்தக் கோச்சைசிக்” (Sick) என்று சொல்லி, கழட்டி விட்டு விட்டு, ரயில் புறப்பட்டு விடும், வேறு வழியே கிடையாது, உங்கள் சௌகரியம் எப்படிஎன்று கேட்டார்.

அதுதான் எங்கள் பயணத்தின் கடைசி கட்டம். நாங்கள் அன்று அங்கிருந்து, அந்த ரயிலில் புறப்படாவிட்டால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டு விடும். நாங்கள் ஒழுங்காக ஊர் போய்ச் சேரமுடியாது. இதையெல்லாம் மனதில் கொண்டு மாணவர்களைச் சமாதானம் செய்து, இரவு முழுவதும் ஃபேன், லைட் இல்லாமல் பயணம் செய்து காலையில் விஜயவாடா வந்து சேர்ந்தோம். அங்கு நாங்கள் 6 மணி நேரம் எங்களுடைய அடுத்த ரயிலுக்காக காத்திருக்கவேண்டும். இந்த நேரத்தில் மாணவர்கள் அந்த ஸடேஷனில் யார் யாரையோ பிடித்து டைனமோ பெல்டை மாட்டி விட்டார்கள்.

அங்கிருந்து சுகமாக சென்னை வந்து சேர்ந்து, அந்த ஸ்டேஷன் சூப்பிரன்டென்டுக்கு நன்றி சொல்லிவிட்டு மதுரை ரயிலில் ஏறி கல்லூரி வந்து சேர்ந்தோம். டூர் புறப்பட்டுப் போன 80 பேரும் முழுதாகவும் எந்த உடல்நலக் குறைவும் இல்லாமலும் ஊர் திரும்பி வந்ததற்கு மதுரை மீனாட்சி அம்மனுக்கு நன்றி சொல்லி விட்டு, பழையபடி எங்கள் வழக்கமான வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தோம்.