புதன், 26 ஆகஸ்ட், 2009

பை, பைய, பைக்கட்டு

எனக்கு ஒரு சமயம் மதுரைக்கு மாற்றலாகி குடும்பத்துடன் அங்கே குடியேறினேன். எனக்கு விவசாயக்கல்லூரி வளாகத்திலேயே குவார்ட்டர்ஸ் கிடைத்தது. அங்கிருந்து மதுரை டவுன் சுமார் 10 கிலோ மீட்டர் இருக்கும். டவுனிலிருந்து வருபவர்களுக்காக ஆபீஸ் முடிந்த்தும் ஒரு கல்லூரி பஸ் புறப்படும். குவார்ட்டர்ஸில் கடியிருப்பவர்களும் சில சமயம் இந்த பஸ்ஸில் ஏதாவது வாங்க வேண்டியது இருந்தால் போவோம்.
அப்படி ஒரு முறை நான் போகவேண்டியிருந்தது. சாமான் வாங்க பை எடுத்து வரவில்லை. ஆகவே ஆபீஸ் பையனைக்கூப்பிட்டு ‘என் வீட்டிற்குப் போய் ஒரு பைய (பையை) வாங்கிக்கொண்டு வா’ என்று அனுப்பினேன். போனவன் போனவன்தான். ஆபீஸ் பஸ் புறப்படும் வரையிலும் வரவேயில்லை. சரி, கடையில் பை வாங்கிக்கொள்ளலாம் என்று நான் டவுனுக்கு போய்விட்டேன்.
மறுநாள் ஆபீஸ் வந்த்தும் அந்த பையனைக்கூப்பிட்டு ‘ஏன் நான் நேற்று பைய வாங்கிக்கொண்டு வரச்சொன்னேனே, ஏன் வரவில்லை’ என்று கேட்டேன். அதற்கு அவன் ‘நீங்கள்தான் வீட்டிற்கு போய்விட்டு பைய வரச்சொன்னீர்கள்’ என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த மதுரை நண்பர் என்ன ஏது என்று விசாரித்துவிட்டு சிரித்தார். ஏன் சிரிக்கிறீரகள் என்று கேட்டதற்கு ‘ஆமாம், நீங்கள் அவனை வீட்டிற்கு போய்விட்டு பைய வரச்சொல்லியிருக்கிறீர்கள். அவன் அது போல செய்திருக்கிறான்’ என்றார். அப்புறம்தான் மதுரையில் ‘பைய’ என்றால் ‘மெதுவாக’ என்று அர்த்தம் என்று விளக்கினார்கள்.
சரி. எனக்கு பை (bag) வேண்டுமென்றால் நான் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘பைக்கட்டு’ வாங்கி வா என்று கூறவேண்டும் என்றார். எங்க ஊரில் (கோவை) பைக்கட்டு வாங்கி வா என்று சொன்னால் ஒரு கட்டு பை வாங்கிக்கொண்டு வந்து நிற்பார்கள். இப்படியாக கொஞ்ச நாளில் நானும் மதுரைத்தமிழுக்கு பழக்கமானேன்.
இன்னும் வரும்....

ஒரு நல்ல காட்சி

நான் ரசித்தது


Posted by Picasa

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

கொங்கு வட்டார வழக்குகள் – 1

கோயமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கொங்கு மண்டலம் என்று கூறுவதுண்டு. இந்த பகுதி மக்கள் பேசும் தமிழ் ஒரு மாதிரியாக இருக்கும். அது சினிமாவில் கோவை சரளா போன்றோர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது. புதிதாக கேட்பவர்களுக்கு தமாஷாகக்கூட இருக்கும்.
நான் விவசாயக்கல்லூரியில் படிக்கும்போது சிலர் ‘ஆஹா, கொங்கு தமிழ் எனக்கு நல்லா தெரியும் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதுண்டு. அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன். எங்கே இதன் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம் – அங்கராக்கு சோப்பிலே தொரப்புக்காய் இருக்குது எடுத்துட்டு வா புள்ளேய் – என்றால் முழிப்பார்கள். கொங்கு நாட்டிலேயே பிறந்திருந்தாலும் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் இந்த கேள்விக்கு முழிப்பார்கள்.
ஷர்ட் பாக்கெட்டில் சாவி இருக்கறது, எடுத்து வா – இதுதான் அர்த்தம்.
இங்கு பேசுபவர்களின் பேச்சில் மரியாதையும் பண்பும் நிறைந்திருக்கும். புதிதாக யாரையாவது பார்த்தால் – என்னங்க நம்ம வீட்டிலே எல்லோரும் நல்லா இருக்காங்களா – என்று நலம் விசாரிப்பார்கள். வேறு மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் – இவர் வீட்டிலே நல்லா இருக்காங்களா என்று எனக்கு எப்படி தெரியும் என்று முழிப்பார்கள். இதை மிகவும் நுணுக்கமாக யோசித்தால்தான் விளங்கும். உங்கள் வீடு வேறு என் வீடு வேறு என்று வேறுபடுத்தி பார்க்காமல் இரண்டு வீடும் ஒன்றுதான் என்ற எண்ணத்திலிருந்து வரும் வார்த்தைகள் அவை.
நம்ம வீட்டு அம்மா செளக்கியங்களா என்று முதன்முதலாக கேட்பவர்கள் கொஞ்சம் ஆடிப்போய்விடக்கூடும். இந்த அன்னியோன்யம் வேறு மாவட்டங்களிலே பார்ப்பது அரிது.
தொடரும்....

வியாழன், 16 ஜூலை, 2009

சென்னை தமிழும் கொங்கு கவுண்டரும்

எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ரொம்ப நாளாக சென்னையில் வசித்து விட்டு சமீபத்தில் கோவைக்கு வேலை மாற்றலாகி குடி வந்தார்கள். அந்த வீட்டிலுள்ள காலேஜ் போகும் பெண் என் மகளுக்கு பழக்கம். அந்த பெண் கோவையில் பேசும் தமிழைக்கேட்டு விட்டு ‘ இங்கே என்ன தமிழ் இப்படி பேசுகிறார்கள், இழுத்து இழுத்து பேசுகிறார்கள். அப்புறம் அது என்ன எதற்கெடுத்தாலும் ஒரு ‘..ங்க’ போட்டு, என்னங்ங்ங்ங்கேகேகே... என்று இழுக்கிறார்கள்’. கொங்கு தமிழ் ஏறக்குறைய சினிமாவில் கோவை சரளா வசனங்கள் மூலமாக அனைவரிக்கும் பரிச்சயமாயிருக்கும். சினிமா பார்க்காதவர்களுக்காக சில மாதிரி சம்பாஷணைகள்;

வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வரும் புருஷனிடம் மனைவி;
ஏனுங்க, வேலையிலிந்து ஊட்டுக்கு வர இத்தனை நேரம் ஏனுங்க, நீங்க வேலைக்கு போனதுக்கப்பறம் உங்க அம்மா பண்ற ரவுசு என்னாலெயெ தாங்க முடியலைங்க. அப்பறம் உங்க பசங்க பண்ற லொள்ளு மீறிப்போச்சுங்க, இதுக்கு என்னாச்சும் பண்ணுங்க’.
இந்த ரேஞ்சில் பேச்சு போகும்.

சென்னையில் எப்படியென்றால்;
‘என்னா நீ, வூட்ல சொல்லிகினு வந்த்ட்யா, கஸ்மாலம், நட்ரோட்ல போறயே, மண்டேலே மசாலா (க்)கீதா, எத்னாச்யும் லாரி கீரி பட்டா என்னா, ஆஸ்பத்ரிக்கு பூடுவே.’

கோயமுத்தூரிலிருந்து புதிதாக சென்னை செல்பவர்களுக்கு இந்த பாஷை ஒரு ஷாக்காக இருக்கும். யாரையும் ஒருமையில் அழைத்துப்பழக்கமில்லாத கோயமுத்தூர் கவுண்டர் ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போய் விடுவார். பிறகு கொஞ்சம் பழகின பிறகுதான் இதை சகித்துக் கொள்வார். ஊருக்கு திரும்பிப்போனதும் பல நாட்களுக்கு பார்த்தவர் எல்லோரிடமும் இந்த மெட்ராஸ் பாஷையைப்பற்றித்தான் பேசுவார். ‘’மெட்ராஸில ஒரு பயலுக்கும் மரியாதையே தெரியாது. அங்க பேசற மாதிரி நம்ம ஊர்லெ பேசினா எல்லாப்பயலும் நம்மை அடிக்க வந்த்ருவான்.’’ இப்படியே பல நாட்களுக்கு புலம்பிக்கொண்டு இருப்பார்.
தொடரும்....

ஞாயிறு, 17 மே, 2009

2009 தேர்தல் முடிவுகள்

ஆஹா, தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. முடிவுகள் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும். என்னைப்பொருத்த வரையில் இந்த முடிவுகள் எனக்கு சாதகமானவையே. எப்படியென்றால் மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அரசு ஊழியர்களின் சம்பள சீரமைப்பு நடக்கும். எனக்கும் அதனால் லாபம் உண்டு. ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை நான் வரவேற்கிறேன்.
இது சுயநலம் அல்லவா என்று கேட்கலாம். எனக்கு உரிமையானதைப் பெறுவது எப்படி சுயநலமாகும்? அடுத்தவனை ஏமாற்றி தன்னுடைய காரியத்தை செய்வதுதான் சுயநலம் என்று நான் நினைக்கிறேன். கருத்துக்கள் மாறுபடலாம்.
ஆக மொத்தம் தேவ.......யாக்களுக்கு இந்த தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றமாக இருக்கும். குறிப்பாக வன்னியர் தலைவர் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. இந்த ஆள் முக..வை விட்டு ஜெ. யைப்பிடித்தது முற்றிலும் தன் சுயநலத்திற்காகவே. கொள்கையாவது மண்ணாங் கட்டியாவது! இந்த ஆள் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் மண்ணைக்கவ்வியது பலருக்கு திருப்தி அளிக்கும். எனக்கும் அவ்வாறே.
‘’கொங்கு முன்னேற்றப் பேரவை’’ என்று புதிதாக ஒரு கட்சியை கவுண்டர்கள் சார்பில் ஆரம்பித்தார்கள். முதலில் இது ‘’கொங்கு வேளாளக்கவுண்டர்கள் முன்னேற்றப் பேரவை’’ என்றுதான் ஆரம்பித்தார்கள். நானும் போயிருந்தேன். ஆரம்பித்த நாளே பல்டி அடித்து வேளாளக்கவுண்டர்கள் பெயரை நீக்கி கொங்கு முன்னேற்றப் பேரவை என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். இதை எதற்காக ஆரம்பித்தார்கள், ஏன் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. இந்த மாதிரி ஜாதிக்கட்சிகளில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்த்தில்லை. இப்போதும் இல்லை. ஆகவே இந்த கட்சியும் மண்ணைக்கவ்வியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எப்படியோ, இன்னும் 5 வருடத்திற்கு வண்டி ஓடும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
தொடரும்......

வியாழன், 14 மே, 2009

மக்களவைத்தேர்தலும் மாக்களும்.

இன்னுமொரு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் நான் பார்த்தது என்னவென்றால் ஒருவரும் உண்மை பேசவில்லை. கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் வழி. ஏனென்றால் எல்லோரும் சொல்வது என்னவென்றால், இந்த கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே. தேர்தல் முடிந்த பிறகு நிலைமையைப் பொருத்து யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டு சேர்ந்து கொள்வோம் என்று. ஆக மொத்தம் யார் அதிகமாக காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முந்தி விரிக்க தயார். இப்படிப்பட்ட தே....யாக்கள் ஆட்சிக்கு வந்து நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்யப்போகிறார்கள்.

என்ன சேவை தெரியுமா? மக்களின் தலையை மொட்டை அடிக்கும் சேவைதான். இந்த மகத்தான சேவையில் யார் கூட்டுக்கு வந்தாலும் சரியே, நாங்கள் கூட்டு வைத்துக்கொள்வோம். இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கை. இது தவிர இன்னுமொரு சேவை கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் செய்யப்போவது என்னவென்றால், தேசசேவை. தேசசேவை என்றால் என்னவென்று சிலருக்கு புரியாமல் இருக்கலாம். அது என்னவென்றால் நம் நாட்டை எதிரிகள் ஆக்ரமிப்பு செய்வதை தடுப்பது. எப்படி என்றால் எங்கு எல்லாம் பூமிகள் கேட்பாரற்று கிடக்கிறதோ அவைகளையெல்லாம் காபந்து பண்ணுவது. எப்படி? அந்த பூமிகளை அப்படியே விட்டு வைத்திருந்தால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் படையெடுத்து வந்து அவைகளை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். ஆகவே அவைகளை தன் சொந்தப்பொருப்பில் வைத்திருந்து காப்பாற்றி வருங்கால சந்த்தியின்றுக்கு கொடுப்பார்கள். வருங்கால சந்த்தியினர் என்றால் யாரென்று தெரியாதவர்கள் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளலாம்!

புதன், 6 மே, 2009

தங்கத்தமிழும் அரசியலும்

‘’தமிழுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.’’
‘’தமிழ் மொழிதான் என் மூச்சு, அதைக்காப்பற்றத்தான் நான் உயிரோடு இருக்கிறேன்’’
இந்த வசனங்களை கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளும் அடிக்கடி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். குறிப்பாக பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாதபோது இந்த விஷயம் அலசப்படும். ஒருவர் இதைப்பற்றி பேசிவிட்டால் மற்றவர்கள் எல்லோரும் நான் என்ன அவனுக்கு சளைத்தவனா என்று ஒவ்வொருவரும் இந்த தமிழனின் தன்மானத்தைப் பற்றி பேசுவார்கள்.
அடுத்த அரசியல்வாதியை கேவலப்படுத்த இந்த தமிழை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தும் கட்சிகளும் உண்டு. ‘’அவன் தமிழனே அல்ல, அவன் பக்கத்து மாநிலத்திலிருந்து குடி பெயர்ந்தவன், அவன் வீட்டில் ..... மொழி பேசுகிறான் தெரியுமா?’’ இந்த தாக்குதலுக்கு பதிலே கிடையாது.
அந்த வகையில்தான் ஈழத்தமிழனின் பிரச்சினையும். ‘’நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு’’. இந்த வகையில் ஈழத்தமிழனுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் சேவை செய்து அவனைக்காப்பாற்றி வருகிறார்கள். 13ம் தேதி எலக்சன் முடிந்து 16ம் தேதி முடிவுகள் வெளியானவுடன் நடக்கப்போகும் குடுமிப்பிடி சண்டையில் ஈழப்பிரச்சினை காணாமல் போகும்.
தொடரும்.......

திங்கள், 4 மே, 2009

தேர்தலும் சாதாரண பிரஜையும்

2009 பாராளுமன்ற தேர்தல்களின் கடைசி கட்ட வாக்குப் பதிவுகள் தங்கத்தமிழ் நாட்டில் வருகின்ற 13ந்தேதி நடைபெறப்போகின்றது. பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள். எனக்கு அவ்வளவாக அரசியலில் ஈடுபாடு இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாளனும் இல்லை. ஆனால் சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு வருகிறேன்.
நான் கொஞ்சம் படித்திருக்கிறேன் (அதாவது Ph.D. விவசாயம்). இந்த அரசியல்வாதிகளுக்கு படித்தவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை என்பது என் எண்ணம். காரணம் இந்த படித்தவன் பேசிப்பேசியே காரியத்தைக் கெடுத்து விடுவான். அடுத்தவன் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டான். காசு வேண்டுமென்று கேட்க மாட்டான். காசு கொடுத்தாலும் வாங்கமாட்டான். அவன் யாருக்கு ஓட்டு போடுவான் என்று கணிக்க முடியாது. இப்படிப்பட்டவனை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் பண்ண முடியும்?
அரசியல்வாதிக்கு வேண்டியது, கேள்வி கேட்காமல் அவன் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு, அவன் போடும் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அவன் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடவேண்டும். அவ்வளவுதான். கூட்டங்கள் போட்டால் பேட்டா வாங்கிக்கொண்டு லாரியில் ஏறிக் கொண்டு போய் கோஷம் போட வேண்டியது. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி கூட்டத்தில் போய் கலாட்டா செய்து கூட்டத்தைக் கலைப்பது.
இந்தக்காரியங்கள் எதிலும் இந்த படித்த முட்டாள் இருக்கிறானே, அவன் உபயோகப்படமாட்டான். பிறகு அவனை வைத்துக்கொண்டு என்ன அரசியல் செய்து உருப்படியாவது? அது மட்டுமா! தேவையில்லாத (அதாவது அரசுயல்வாதிக்கு தேவையில்லாத) கேள்விகளைக்கேட்டு மக்களை குழப்புவான். ஒரு வேட்பாளர் சொல்கிறார்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் மும்மாரி பொழிய வைப்போம், தபிழ்நாட்டின் ஆறுகளில் பாலாய் ஓடும், எல்லோருக்கும் சாப்பாடு அவரவர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும், யாரும் வேலைக்கு சென்று கஷ்டப்பட வேண்டியதில்லை. இப்படி எல்லாவேட்பாளர்களும் தங்களுக்கு முடிந்தவரை எல்லோர் காதிலும் பூ சுற்றுகிறார்கள். இதைக்கேட்கும் இந்நாட்டு குடிமகன்கள் (?) ஆகா, இவரல்லவோ நம்மை வாழவைக்க வந்த தெய்வம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
இந்த படித்தவன் என்ன செய்வான். அரசியல்வாதி கூறுவதில் சொத்தை சொள்ளை கண்டு பிடித்து, மேலும் புள்ளி விவரங்கள் சேகரித்து, இந்த வேட்பாளர் சொல்வது போல் செய்யமுடியாது என்று பேசுவான். ஆனால் நம் நாட்டு குடிமக்கள் விவரமானவர்கள். இந்த படித்த முட்டாள்கள் பேச்சைக்கேடகக்கூடாது, அவர்கள் தாங்களும் பிழைக்க மாட்டார்கள், அடுத்தவனையும் பிழைக்க விடமாட்டார்கள் என்று முடிவு செய்து யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
எனக்குத்தெரிந்து 1968 லிருந்து இப்படித்தான் நடைமுறை. நடப்பவை நடந்தே தீரும்.
தொடரும்.......

வியாழன், 23 ஏப்ரல், 2009

அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள்

மனிதன் இயற்கையில் மிகவும் நல்லவன். ஆனால் சூழ்நிலை அவனைப்பலவாறாக மாற்றுகிறது. குறிப்பாக அவன் அரசு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்த பின் அவன் வெகுவாக மாறிப்போகிறான்.
நேற்று வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு வேலை. ஒன்றுமில்லை. என்னுடைய மகளின் கார் பேங்க் லோனில் வாங்கியிருந்தாள். காரின் RC புத்தகத்தில் அந்த காரின் மேல் கடன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்த்து. கடன் கட்டி முடிந்தாகிவிட்டது. இந்த விபரம் அந்த காரின் RC புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு ஒரு படிவம் இருக்கிறது. அந்த படிவத்தைப்பூர்த்தி செய்து அதனுடன் காரின் புகை சான்று, காரின் RC புத்தகம், இன்ஷூரன்ஸ் சான்று, பாங்கிலிருந்து கொடுத்த NOC, ஒரு ரிஜிஸ்டர் தபால் கவர் (30 ரூபாய்) இவைகளையெல்லாம் சேர்த்து பின் பண்ணி ரூபாய் 125 பணம் கட்டி அதற்கு உண்டான எழுத்தரிடம் கொடுக்கவேண்டும்.
ரொம்பவும் எளிதாக தோன்றுகிறதல்லவா! நேரில் அனுபவித்தால்தான் அதனுடைய சிரமம் தெரியும். பணம் கட்டுவதற்கு மட்டும் சுமார் பத்து பேரைக் கேட்டிருப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவுன்டரைக்காட்டினார்கள். எல்லா கவுன்டர்களிலும் கூட்டம். இதனிடையில் கம்ப்யூட்டர் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை இவ்வாறு அலைந்த பின்பு ஒரு கவுன்டரில் ஒருவாறாக பணத்தைக்கட்டி முடித்தேன். பின்பு இந்த பாரங்களை தபால் செக்சனில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கு சொன்றால் தபால் வாங்குபவர் அங்கு இல்லை. வேறு அலுவல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். எப்போது வருவார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த போது அந்த ஆபீஸை சேர்ந்த ஒருவர் அந்த வழியில் போய்க்- கொண்டிருந்தார். அவரை வழிமறித்து ஒரு பெரிய வணக்கம் போட்டு ‘’சார், இந்த பாரத்தை தபால் செக்ஷனில் கொடுக்க வேண்டும். அங்கு அவரைக்காணவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்று அழாக்குறையாக சொன்னேன். அவர் இந்த உலகில் தப்பிப்பிறந்தவர். என்னுடைய பார்த்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து ‘’சார், நீங்கள் நாளை மாலை 4 மணிக்கு வந்து ஈ.4 செக்ஷனில் ஆனந்த் என்பவரிடம் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவருக்கு மிகுந்த நன்றி சொல்லிவிட்டு அடுத்த நாள் மாலை 4 மணிக்கு ஈ.4 ஆனந்தைப்பார்த்தேன். அவர் பேரைக்கேட்டுவிட்டு ஆமாம், பாரம் இங்கேதான் இருக்கிறது, காலையில் பார்த்தேன், கொஞ்சம் உட்காருங்கள், தேடி எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன மாதிரியே 2 நிமிடத்தில் பாரத்தை எடுத்து விட்டார். ஆனால் அதில் ஒரு வேலையையும் செய்யவில்லை.
சார், கொஞ்சம் இருங்கள், என்று சொல்லிவிட்டு உடனே பழைய ரிஜிஸ்டரைத்தேடி எடுத்து என்ட்ரி போட்டு ஒரு 5 நிமிடத்தில் பாரத்தை என்னிடம் கொடுத்து ‘’ சார், இதை மேலே உள்ள தபால் செக்ஷனில் கொடுத்து என்ட்ரி போட்டு வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். அதை வாங்கிக்கொண்டு தபால் செக்ஷனுக்கு போனேன். அவர் இருந்தார். அவருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு இந்த பாரங்களைக்கொடுத்தேன். அவர் அதில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு காரின் RC புத்தகத்தையும் இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டையும் கொடுத்தார். ஒரு பெரிய சலாம் போட்டுவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தேன்.
Ph.D. படித்து ஒரு அரசுப் பணியில் 38 வருடங்கள் வேலை பார்த்த எனக்கே இந்த RTO ஆபீஸ் வேலையில் இவ்வளவு அலைச்சல் பட வேண்டியிருந்ததென்றால் சாதாரண படிப்பு அதிகமில்லாத மக்கள் எப்படி இந்த மாதிரி காரியங்களைச் செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது ஒரு உண்மை தெரிந்தது. RTO ஆபீசுக்கு வெளியே சின்ன சின்னதாக டேபிள் போட்டுக்கொண்டு பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பலவிதமான பாரங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த பாரங்களை நிரப்பிக்கொடுத்தும் RTO ஆபீஸ் விவகாரங்களில் அனுபவம் இல்லாதவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருக்கிறார்கள். மேலும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இவர்கள் உதவி செய்கிறார்கள். செய்யும் உதவிக்காக உதவிபெற்றவர்கள் கொடுக்கும் நன்றியை (பணம்) வைத்துக்கொண்டு ஜீவனம் செய்கிறார்கள். இவர்களின் பணி மகத்தானது. ஆனால ஜனங்களும் அதிகாரிகளும் இவர்களை ‘’புரோக்கர்கள்’’ என்று கேவலமாக சித்தரித்து இவர்கள் ஏதோ தீவிரவாதிகள் என்பது போல் நடத்துகிறார்கள். என்னுடைய பார்வையில் இவர்கள் செய்வது உண்மையான மக்கள் சேவை. வாழ்க இவர்கள் தொண்டு.
தொடரும்.....

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல்

கோடை விடுமுறையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அப்போது தங்கள் வீட்டைப்பூட்டி விட்டு செல்வார்கள். இப்படி பூட்டியிருக்கும் வீடுகளை திருடர்கள் நோட்டம் போட்டு, அந்த வீடுகளில் இரவு நேரங்களில் (பல சமயங்களில் பகலிலேயே கூட) பல வகைகளில் உள்ளே புகுந்து திருடுகிறார்கள். தினமும் இந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன.
குறிப்பாக திருட்டு போகும் பொருட்கள் நகைகளும் பணமும்தான். அதுவும் அதிக அளவில். இதில் புரியாதது என்னவென்றால், வெளியூர் போகிறவர்கள் ஏன் அவ்வளவு நகைகளையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டுப் போகிறார்கள் என்பதுதான்.
வடநாட்டில் வீடுகளை வெளியில் பூசுவதில்லை. வெறும் செங்கல் சுவர் மட்டும்தான் வெளியில் தெரியும். வீட்டுக்குள் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் வெளியில் ஒன்றும் தெரியாது. இது ஏனென்றால் அங்கே பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் படையெடுத்து எல்லோருடைய சொத்துக்களையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். ஆகவே அங்குள்ள மக்களின் மனோபாவம் மிகவும் மாறுபட்டது. சொத்துக்களைச் சேர்த்து திருட்டுக்கொடுப்பதை விட அதை நாமே அனுபவித்து விட்டுப்போகலாமே என்ற எண்ணம் வலுவாக ஊறியிருக்கிறது. ஆகவே அவர்கள் தாங்கள் சம்பாதிப்பதை தாங்களே அனுபவிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தன் மகனுக்கு, தன் பேரனுக்கு, தன் கொள்ளுப்பேரனுக்கு என்று சேர்த்து வைக்கிறார்கள். அப்படி சேர்த்து வைத்ததை எவனோ கொள்ளையடித்துக்கொண்டு போகிறான்.
ஓரளவிற்கு சேமிப்பு அவசியம்தான். ஆனால் பலரும் செய்வது என்னவென்றால் தான் சரியாக சாப்பிடாமல் கூட வருங்கால சந்ததியினருக்கு சேமிக்கிறார்கள். இது தேவையில்லாதது. ஆனால் மக்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று செரியவில்லை.
தொடரும்...

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

விபத்துகளின் எண்ணிக்கை

கோவையில் மட்டும் கடந்த மாதம் தெரு விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 என்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருந்தது. இது தமிழ்நாட்டிலேயே அதிக பட்ச இறப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்களுக்கு காரணம் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான். நல்ல சேவை.
இந்த விபத்துக்களை செய்தித்தாள்களில் காலையில் படித்து மாலையில் மறந்து போகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைப் பற்றி நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ரோடில் செல்லும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நாமும் ஒரு நாள் இந்த மாதிரி செய்தியாகலாம்.
வேகம், வேகம், வேகம். இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம். எதிலும் வேகம். எல்லாவற்றிலும் வேகம். யமலோகத்திற்கு போவதற்கும் வேகம். என்ன செய்ய முடியும்? மக்கள் சிந்தக்க வேண்டும்.
தொடரும்....