திங்கள், 24 ஜனவரி, 2011

நான் ஏன் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை?



இதற்கெல்லாம் ஒரு பதிவா? இந்தப் பதிவினால் தேசத்திற்கு என்ன நன்மை? இல்லை, பதிவுலகத்திற்குத்தான் என்ன நன்மை? இப்படிக் கேட்பவர்கள் எல்லோரும் தனியாக ஒரு ஓரமாக உட்காரவும். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கடைசியில் சொல்லுகிறேன்.  மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

என்னுடைய ஒரு பதிவில் நான் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு ஒரு நண்பர் அப்படி என்ன பெருமை அதில் இருக்கிறது என்று கேட்டிருந்தார். பெருமைக்காக நான் அவ்வாறு சொல்லவில்லை. என்னுடைய கையாலாகாத தன்மையைத்தைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். ஏன் என்னால் சினிமா விமர்சனம் எழுத முடிவதில்லை என்று யோசித்ததில் பத்து காரணங்கள் புலப்பட்டன. அவைகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


1.   சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டும். இரண்டரை மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டும். அது என்னால் முடிவதில்லை.


2.   இப்போது நடிக்கும் நடிக நடிகைகளை எனக்கு அடையாளம் தெரிவதில்லை. டி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர் இவர்களுக்கு அப்புறம் சினிமாவில் யாரையும் எனக்குத் தெரியவில்லை.


3.   இப்போது சினிமாவில் பேசம் வசனங்கள் புரிவதில்லை. புரிந்தாலோ ஆபாசமாய் இருக்கிறது.


4.   சினிமா பார்த்துக்கொண்டு இருக்கும்போது நான் தூங்கி விடுவதால் நான் விடும் குறட்டைச் சத்தம் தொந்தரவாய் இருப்பதாக போலீஸ் வரையில் கம்ளெய்ன்ட் போய் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வேண்டியதாய் போய்விட்டது.


5.   ஒரு தடவை இப்படித் தூங்கி விழித்தபோது திரையில் ஆக்ரோஷமாக நடந்த ஒரு சண்டையைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கையை வீச அது பக்கத்து சீட்டுக்காரர் மூக்கில் பட்டு சீரியஸ் ஆகி அதற்காக ஒரு தரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன்.


6.   நடனக்காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றன. லலிதா-பத்மினி-ராகினி ஆடினதுதான் நடனம். மற்றவர்கள் ஆடுவது எல்லாம் ஆபாசம்.


7.   பாட்டுகளின் சொற்கள் புரிவதில்லை. மெட்டும் பிடிப்பதில்லை. எம.கே.டி அந்தக்காலத்தில் பாடியமன்மத லீலையை வென்றார் உண்டோமாதிரி ஒரு பாட்டு உண்டா?


8.   காதல் காட்சிகள் முதலிரவுக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப்போகாமல் என்ன செய்வார்கள்?


9.   இரவுக் காட்சிகளுக்குப் போனால் இருட்டில் தனியாக உட்கார்ந்திருக்க பயமாய் இருக்கிறது.


10. அந்தக்காலம் மாதிரி இப்போது சினிமா பாட்டுப் புஸ்தகங்கள் விற்பதில்லை.


இந்தக்காரணங்களினால் நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் சினிமா விமர்சனமும் எழுதுவதில்லை.

ஒரு நண்பர் சொல்லுகிறார் - சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டியதில்லையே - அப்படீங்கறார். எனக்கு அந்த வித்தை இன்னும் கைவரவில்லை.


பின்குறிப்பு: ஓரமாக உட்கார்ந்திருப்பவர்களெல்லாம் எழுந்து வீட்டுக்குப் போகவும். மற்றவர்களெல்லாம் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கவும்.






                                



 
இன்றைய சினிமா நடிகையின் நிலையைப்பாருங்கள். போட்டுக்கொள்ள         ஒரு கிழியாத துணி கூட இல்லை.

சனி, 22 ஜனவரி, 2011

பதிவுலகம் மூலம் தேச சேவை

பதிவர்களே ஒன்றுபடுங்கள், நம் நாட்டை வல்லரசாக்குவோம்.

சமீப காலமாக பதிவர்கள் சிலருக்கு நம் நாட்டை அமெரிக்கா போல ஒரு வல்லரசாக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. அதற்காக பதிவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் நாட்டுக்கு சேவை செய்யவேண்டுமென்று வேண்டுகோள் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் பார்த்த எனக்கும் இந்நாட்டுக் குடிமகன் என்ற முறையில் மனச்சாட்சி உறுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவாக என் மனதில் தோன்றிய எண்ண அலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ((எப்படி பதிவுத்தலைப்பைக் (சாமியின் மன அலைகள்) கோர்த்திருக்கிறேன், பார்த்தீர்களா?))

சேவை செய்வது என்பது ஒரு புனிதமான காரியம். போகிற வழிக்கு புண்ணியம் சேரும். அது தெய்வத்திற்காகினும் சரி, தேசத்திற்காகினும் சரி, மக்களுக்காகினும் சரி. அதில் உள்ள ஒரே கஷ்டம் என்னவென்றால் எந்த மாதிரி சேவை செய்யலாம் என்பதுதான். என்னுடைய கருத்து, இதற்காக ஒரு பதிவர் மகாநாடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்தவேண்டும். எலெக்ஷன் சமயத்தில் நடத்தினால் நன்கொடை வசூலிக்க தோதாக இருக்கும். என்ன, ஏது என்று கேட்காமல் கார்ப்பரேட்டுகள் செக் கொடுத்து விடுவார்கள். பிறகு அந்த மகாநாட்டில் விவாதிக்க விஷயங்கள் வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.

ஏழ்மையை ஒழிப்போம். இது ஒரு முக்கியமான சேவைதான். இந்த நோக்கத்தில் யாருக்கும் எந்த விதமான எதிர்ப்பும் இருக்க முடியாது. எப்படி ஏழ்மையை ஒழிக்கமுடியும்? இதற்கான திட்டம் ஒன்று தயாரிக்கவேண்டும். அதை செயல்படுத்த வேண்டும். அதற்கு ஆள் பலமும், பணபலமும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழ்மையில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

ஏழ்மையில் இருப்பவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. அவர்கள் அவ்வாறு வேஷம் போட்டால்தான் அரசு கொடுக்கும் இலவசங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்காகவே அவர்கள் ஏழைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். அரசும் அவர்களை பல காரணங்களுக்காக அவ்வாறே வைத்திருக்க விரும்புகிறது. ஆகவே ஏழ்மையை ஒழிக்கும் சேவை ஆரம்ப கட்டத்திலேயே அடிபட்டுப் போகின்றது.

அடுத்ததாக செய்யக்கூடியது எல்லோருக்கும் கல்விதருவது. இந்த முயற்சியில் அரசே ஈடுபட்டிருக்கிறது. மதிய உணவுத்திட்டம், இலவச உடை, காலணிகள், சைக்கிள், புத்தகங்கள், இன்னும் பலவற்றை இலவசமாகக் கொடுத்தும் மக்கள் தங்கள் மழலைச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டேனென்கிறார்கள். என்ன செய்ய?

வேறு என்ன சேவை செய்யலாம் என்று யோசித்தால் எல்லா சேவைகளையும் அரசே எடுத்து நடத்துகிறது. அதில் என்ன ஒரே நெகடிவ் சமாசாரம் என்னவென்றால், அந்த சேவைகள் அனைத்தும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையில் இருக்கின்றன. ஆனால் எது எப்படிப்போனாலும் அரசு அந்த சேவைகளை நிறுத்தப் போவதில்லை.

பதிவர்களோ எப்படியாவது, ஏதாவது சேவை செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டியாய் விட்டது. முன்வைத்த காலை பின் வைக்கலாமா? கூடாது. சரி, பதிவர்கள் என்ன சேவைதான் செய்யமுடியும் என்று பார்த்தால் ஒன்று எனக்குப் புலப்பட்டது. ஏழைகளின் சாபக்கேடு அவர்களின் குடிப்பழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் இந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டால் அவர்கள் அனைவரும் பணக்காரர்களாகி விடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.





இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் பதிவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு டாஸ்மாக் கடையைத் தத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டாஸ்மாக் கடை என்றால் அநேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். தெரியாதவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும். விலாவாரியான விவரங்கள் அனுப்பப்படும். பதிவர்கள் அங்கு சென்று அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் குடியின் தீமைகளை விளக்கிக் கூறவேண்டும். அதைக்கேட்டு அவர்கள் மனம் மாறி குடிப்பதை நிறுத்திவிடுவார்கள். பிறகு என்ன, அவர்களும் பணக்காரர்களாகி விடுவார்கள். நாடு வல்லரசாகிவிடும். எப்படீஈஈஈ!!!!

பதிவர்களில் சிலர் டாஸ்மாக்கின் நிரந்தர கஸ்டமர்கள் ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். இனிமேல்தானா ஆகப்போகிறார்கள், இப்போதே அப்படித்தான் என்று யாரோ முணுமுணுக்கிறார்கள். அவர்கள் பதிவர்களில் கருங்காலிகள். அவர்களின் ஊளையைக் கேட்காதீர்கள். அவர்கள் நாம் எங்கே இந்த சேவையை செய்து பிரபலமாகி விடுவோமோ என்ற வயித்தெரிச்சலில் புலம்புகிறார்கள். இதற்கெல்லாம் நாம் அசரக்கூடாது. நம் இலக்கை, அதாவது டாஸ்மாக்கை, நோக்கி போய்க்கொண்டே இருப்போம். வெற்றி நமதே.

வியாழன், 20 ஜனவரி, 2011

கொஞ்சம் குழம்பலாமா?


ஒரே மாதிரியான பதிவுகள் சலிப்புத்தட்டும். அதற்காக நான் சினிமா விமரிசனம் எழுத முடியுமா? ஆகவே ஆன்மீகத்தில் கொஞ்சம் நம் சரக்கை விற்கலாமென்ற முடிவின் பயனே இந்தப் பதிவு.

நான்  யார்?



இதைத் தெரிந்து கொண்டால் முக்தியடையலாம் என்று காலம் காலமாக ஆன்மீக குருமார்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் முக்தியடையலாம் என்று ஆசைப்பட்டு இந்த சோதனையில் இறங்கினேன்.

கேள்வி: நீ யார்?
பதில்:   நான் கந்தசாமி.

கே:   அது உன் பெயர். நீ யார்?
:     நான் ஒரு மனிதன்.

கே:   அது உன் உருவத்தின் பெயர். அது நீயல்ல.
:    அப்படியானால் நான் யார் என்று நீங்களே சொல்லுங்கள்

கே:   இல்லை. நீதான் உன்னை அறிய வேண்டும்.
:    எனக்குத்தான் தெரியவில்லையே ஸவாமி, நீங்களே சொல்லப்படாதா?

கேநீயாகத் தெரிந்து கொண்டால்தான் உனக்கு ஞானம் வரும்.
:    என்னால் முடியவில்லையே?

கே:   உன்னால் முடியும். தீவிரமாக முயற்சி செய்.
:    ஆகட்டும், முயற்சிக்கிறேன்,  ஸ்வாமி.


இப்படியாகப் பேசிப் பேசியே நம் கழுத்தை அறுப்பவர்கள்தான் ஆன்மீகக் குருக்கள். ரமண மகரிஷி என்பவரின் உபதேசங்கள் எல்லாம் இப்படியே இருக்கும். நானும் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு இந்த ஆன்மீகப் பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். இந்தக் கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு என்னுடைய ஆராய்ச்சி மூளையைப் பயன்படுத்திக் கண்டு பிடித்தது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் ஆத்மாவின் ஸ்வரூபம். அதனால் எல்லோரும் ஒருவரை ஒருவர் வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது.

ஆஹா, என்ன ஒரு பரோபகாரத் தத்துவம் என்று நானும் முதலில் மயங்கி விட்டேன். பிறகுதான் உண்மையைப் புரிந்து கொண்டேன். எல்லோரும் சமம் என்பது உண்மைதான். ஆனால் அதில் சில வரைமுறைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன். என்னவென்றால் குருவிற்கு அதிக காணிக்கை கொடுப்பவர்கள் அவர்களுக்குள் சமம். ஆனால் குறைவாக காணிக்கை கொடுப்பவர்களுக்கும் அவர்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. குருவே அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடுவார். அருகில் அமர்த்திக்கொள்வார். மற்றவர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தால் கூட ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். இன்னும் பல காரணங்களினால் மக்கள் வேறுபடுகிறார்கள். அவைகளை விவரித்தால் பதிவு முடிவு பெறாது.

குரு என்பவர் சாதாரண லௌகீக விவகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களும் காவி கட்டிய சம்சாரிகள்தான் என்று புரிந்து கொண்டேன். உண்மையான துறவிகள் இருக்கலாம். அவர்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.


புதன், 19 ஜனவரி, 2011

யானை, யானை

சமீபத்தில் குருவாயூர் போயிருந்தேன். கூட்டமோ கூட்டம்.  ஐயப்ப சாமிகள் ஆயிரக்கணக்கில் க்யூவில் நின்றிருந்தார்கள். என்னைப்பார்த்ததும் என்ன தோன்றியதோ தெரியவில்லை, க்யூவில் நடுவில் என்னையும் குடும்பத்தையும்  விட்டு விட்டார்கள். பதினைந்து நிமிடத்தில் கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு வந்தோம்.

கிருஷ்ணனைப் போட்டோ எடுக்க விடவில்லை. ஆபத்பாந்தவன், நம் கணேசன் அந்தக் கவலையைப் போக்கிவிட்டார். தேவஸ்தான யானைத் தாவில் சுமார் ஐம்பது யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

அனைத்து யானைகளையும் பார்க்க இங்கே செல்லவும்.
அறிவுப்பு: முதலில் ஆல்பத்தை Private  என்று தெரியாமல் போட்டுவிட்டேன். இப்போது அதை Public என்று மாற்றிவிட்டேன். இப்போது சரியாகத்தெரியும்.