செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டு யோசிக்க வைக்கும் செய்திகள்.


ஒன்று.

திருநெல்வேலி ஆலங்குளம் அருகே ஒரு காரும் லாரியும் மோதினதில் எட்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு பேர் சீரியசாக இருக்கிறார்கள். மிகவும் பரிதாபமான செய்தி. படிப்பதற்கே கஷ்டமாக இருந்தது.

இந்தக் கஷ்டம், பரிதாபம் இவைகளை விட்டுவிட்டு செய்தியை அலசினால் தெரியக்கூடிய கருத்துகள்.
  
  1. ஒரு குடும்பத்தினர் பணத்தை மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இன்னொரு உறவினர் வந்த வாடகைக் காரில் ஏறியிருக்கிறார்கள். கார் சக்திக்கு மீறிய அதிக பாரத்தை ஏற்றியிருக்கிறது.
  2.   கார் கொண்டு வந்த உறவினர், எல்லோரும் ஏறினால் இட நெருக்கடி ஏற்படும் என்று சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
  3.   கார் டிரைவர் 22 வயதுப் பையன். அவன் இப்படி அதிக பாரம் ஏற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவில்லை.
  4.   கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும், காரில் அதிக பாரம் இருக்கும்போது காரை ஓட்டுவதும் வளைப்பதுவும் எவ்வளவு கடினம் என்று.
  5.   டிரைவருக்கு இரவு சீக்கிரம் ஊர் போய்ச் சேரவேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். ஆகவே வேகமாக காரை ஓட்டியிருக்கிறார்.
  6.   அதிக பாரத்தினாலும், அதிக வேகத்தினாலும் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வண்டிக்கு இடம் கொடுக்க முடியவில்லை.
  7.   லாரிக்காரனும் அதே மாதிரி வளவில் இடம் கொடுக்காமல் வந்திருக்கலாம்.
  8.   விபத்து நடந்துவிட்டது. 8 உயிர்கள் நஷ்டம். எத்தனை அழுது புரண்டாலும் உயிர்கள் மீளப்போவதில்லை.

காரில் போகும்போது சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர் ஓட்டினாலும் கூட செல்பவர்கள் கண்காணிப்பாக இருந்து செயல்படவேண்டும். அதிக வேகம் போகும்போது டிரைவரை கண்டிக்கவேண்டும். அதற்கு தைரியம் இல்லாவிடில் காரில் போகக்கூடாது. அதிக பாரம் ஏற்றுவதில் கண்டிப்பு வேண்டும். தயவு தாட்சண்யம் கூடாது. விபத்து ஏற்பட்டபின் வருத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை.

இரண்டு.

வேளச்சேரியில் மனித உரிமைக் கழகத்தினரை பொது மக்கள் நன்றாக மட்டம் தட்டியிருக்கிறார்கள். எப்போதும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. திருட்டுக் கொடுத்தவனுக்கு ஒன்றும் சொய்ய மாட்டார்கள். திருடனைப் பிடித்து தண்டித்தால் இவர்களுக்கு உடனே மனித நேய உணர்வு பொங்கிக்கொண்டு வரும்.

கொலை நடந்துவிட்டால் கொலையுண்டவனின் குடும்பத்தைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். கொலைகாரனுக்காக பரிந்து பேசிப் போராட்டம் நடத்துவார்கள். இவர்களை எல்லாம் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைக்கவேண்டும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

உலகமே ஒரு நாடக மேடை


நாடகத்தில் நடிகர்கள் பலப்பல வேஷங்கள் கட்டுகிறார்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் அந்த வேடத்திற்கும் சம்பந்தமிருக்காது. நல்ல குணசீலரான ஒருத்தர் வில்லனாக வேஷம் கட்டியிருப்பார். அவர் அப்படி நடிக்கும்போது, பார்க்கும் ரசிகர்கள் அவர் மீது அதீத வெறுப்பைக் காட்டினால் அது அவருடைய நடிப்புக்கு வெற்றி என்று கூறுகிறோம். பெரிய பணக்காரர் பிச்சைக்காரனாக வேஷம் போட்டிருப்பார். அவர் அந்த வேடத்திற்குப் பொருத்தமாக நடிப்பார்.

நிஜ வாழ்க்கையிலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நடந்து (நடித்து) கொண்டிருக்கிறோம். பல சமயங்களில் நாம் வேஷத்தை மாற்ற வேண்டியிருக்கிறது. வீட்டில் ஒரு வேஷம். அலுவலகத்தில் வேறொரு வேஷம். பஸ்சில் போகும்போது இன்னொரு வேஷம். இப்படியாக ஒரு நாளில் பல வேஷங்களில் நாம் உலா வருகிறோம். ஆனால் அதை நாம் வேஷம் என்று உணர்வதில்லை.

அரசில் பெரிய பதவியில் எல்லோரையும் கிடுகிடுக்க வைக்கும் அதிகாரி, தன்னுடைய மேலதிகாரி முன் கூழைக் கும்பிடு போடுவார். அலுவலகத்தில் கீழ்மட்ட நிலை ஊழியர் வீட்டுக்குப் போனவுடன் பெரிய தர்பார் பண்ணுவார்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பவை. இணையம் வந்த பிறகு, ஒரு காலகட்டத்தில் பிளாக்குகள் வந்தன. பிளாக்குகள் இன்னொரு மாதிரியான நாடகமேடை. நம் ஒவ்வொருவருடைய எண்ணங்களுக்கும் வடிகாலாக இந்த பிளாக்குகள் அமைந்தன. மனித இயல்பு என்னவென்றால், நம்மை யாரும் பார்க்காதபோதுதான் அவரவர்கள் இயற்கைக் குணங்கள் வெளிவரும். இந்த பிளாக்குகளில் யாரும் தங்கள் சொந்த விவரங்களைக் கூறவேண்டிய அவசியம் இல்லை. அதனால் என்ன வேஷம் கட்டிக்கொண்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள். இது ஒரு மாபெரும் சௌகரியம். பிளாக்குகள் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்யாரும் எதைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இதுதான் மிகச்சிறந்த நடிப்பு ஆகும். எவ்வளவு சௌகரியம் பாருங்கள்

இதனால்தான் உலகமே ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போது நமது ஆன்மீகவாதிகளின் மிகப் பிரியமான கேள்விக்கு வருவோம்.

நான் யார்?” என்று கண்டுபிடித்தால் முக்தி அடையலாம் என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள்இந்த நாடக உலகில் எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் போது நான் யாரென்று எப்படி சொல்வது? என் மனைவிக்கு புருஷன் என்று சொல்வதா? என் மகனுக்கு நான் தகப்பன் என்று சொல்வதா? நான் ஒரு ஆபீசர், பியூன் இப்படி எதைச்சொன்னாலும் அது ஒரு பகுதி உண்மைதானே தவிர முழு உண்மையும் ஆகாது. ஆனால் நான் யார் என்று தேடு, நீ முக்தி அடைவாய், அல்லது ஞானம் பெறுவாய் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தக் கருத்துகளினால்தான் இந்து சமயம் சாதாரண நிலையில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

சுத்தம் சோறு போடுமா?



நாம் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போது கற்றுக் கொடுக்கப்பட்ட வாக்கியம் இது. சுத்தமாக இருக்கவேண்டும் என்பது நமது கலாசாரத்தில் ஒன்றிப்போன ஒரு குணம்.

தினமும் குளிக்கவேண்டும். சுத்தமான ஆடைகளை அணியவேண்டும். சாப்பிடும் முன்பும், பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். இத்தியாதிகள். கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ, இவைகளை நாம் அறிவோம்.

சமீபத்தில் ஒரு விசேஷத்திற்குப் போய் காலை டிபன் சாப்பிட்டேன். நான் இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடுவது என்றால் அரை வயிறு மட்டுமே சாப்பிடுவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டுவிட்டு வந்தேன். இதைத் தவிர வெளியில் வேறு ஒன்றும் சாப்பிடவில்லை. அன்றெல்லாம் ஒன்றும் தொந்திரவு இல்லை. மறு நாள் காலையிலிருந்தே நெஞ்சுப் பகுதியில் ஒரு மாதிரி இருந்தது. சரிதான், மிருத்யுவின் ஓலை வந்துவிட்டது போல் இருக்கிறது, பரவாயில்லை, அதனால் என்ன ? நாமதான் ரெடியாகத்தானே இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். மாலையில் இரண்டு தடவை லூஸ் மோஷன் போயிற்று. கை, கால்கள் எல்லாம் சோர்ந்து விட்டன.

மாலை 7 மணிக்கே படுத்துவிட்டேன். அப்படியே துங்கி விட்டேன். சுமார் 9 மணி வாக்கில் விழிப்பு வந்துவிட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னை அறியாமல் வயிற்றுப் போக்கு ஆகியிருக்கிறது. உடனடியாக எழுந்து பாத்ரூம் சென்று துணி மாற்றிவிட்டு அசுத்தமான துணிகளை அலசி, பாத்ரூமைக் கழுவி, என்னையும் கழுவி எல்லாம் முடிக்க அரை மணி நேரம் ஆயிற்று. மனைவியும் ஒத்தாசைக்கு வந்தாள். நான் நிஜமாகவே கொடுத்து வைத்தவன்.

வயதான காலத்தில் ஒருவனுக்கு இந்த நிலை வரக்கூடாது. வந்தால் அதை விடக் கேவலமான சூழ்நிலை ஒன்றும் இல்லை. ஏனென்றால் இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் நலம் விசாரிக்கும் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் தொடுக்கும் கண்டனக்கணைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு வந்திருக்கும் வியாதியை விட அந்தக் கண்டனங்கள்தான் அதிகம் வருத்தத்தைத் தரக்கூடியவை. “வயதான காலத்தில் கண்டதையும் தின்றுவிட்டு இப்படிப் பண்ணினால் யாரால் பார்த்துக் கொள்ள முடியும்?”
இதுதான் மிகவும் அன்பான கண்டனம். இந்த ரீதியில் சுருதி படிப்படியாக ஏறும். வேறு வழியில்லாமல் இந்தக் கண்டனங்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும்.

பிறகு என் டாக்டர் மகள் கொடுத்த மருந்துகளினால், வேறு தொந்திரவு இல்லாமல் நலமானேன். இதனால் நான் கற்ற படிப்பினை என்னவென்றால், இனிமேற்கொண்டு விசேஷங்களுக்குப் போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை, அவசியம் போகவேண்டுமானால், போய் தலையைக் காட்டிவிட்டு எதுவும் சாப்பிடாமல் வந்து விட வேண்டும். ஒன்றும் சாப்பிடாமல் வந்தால் உறவினர்களின் கண்டனம் இருக்கிறதே, அவை இன்னும் மோசம். அதைக் கேட்பதை விட போகாமல் இருப்பதே உத்தமம்.

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்என்று ஒரு சினிமாவில் ரங்காராவ் பாடியிருக்கிறார். அந்த உணவு தற்காலத்தில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பாருங்கள்.

எவ்வளவு பேர் கல்யாண மண்டப சமையல் அறையைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அடுத்த முறை போனால் அவசியம் சென்று பாருங்கள். பல உண்மைகள் புரியும். எனக்குப் பட்ட சில விஷயங்களை மட்டும் இங்கே எழுதுகிறேன்.

  1.   சமையலுக்கு எந்தக் காயையும் கழுவும் வழக்கம் இல்லை. காலிபிளவர், முள்ளங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலிய காய்களுக்கு எவ்வளவு பூச்சி மருந்துகள் அடிக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் அப்புறம் ஆயுளுக்கும் அந்தக் காய்களை சாப்பிடமாட்டீர்கள்.
  2.   மளிகை சாமான்களை அப்படியே பாத்திரங்களில் போடுவார்கள். குப்பை ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கும் வழக்கம் இல்லை.
  3.   மிளகாய்த்தூள், சாம்பார்ப் பொடி, மஞ்சட்பொடி, மல்லிப்பொடி இவைகள் கடைகளில் வாங்கப்பட்டு அப்படியே உபயோகிக்கப்படும்.
  4.   சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் தண்ணீருக்கு எந்த மரியாதையும் இல்லை.
  5.   அங்கு வேலை செய்யும் ஆள்காரர்களில் 90 சதம் பேர் குளிக்காமல், அழுக்கு ஆடைகளுடன் பீடி குடித்துக் கொண்டு இருப்பார்கள். பல சமயங்களில் பீடித்துண்டு காய்கறிகளில் இருக்கும்.
  6.   சாமான்கள் லிஸ்ட்டில் இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணை எழுதியிருப்பார்கள். அது இந்த ஆட்கள் தலைக்குத் தேய்ப்பதற்காகத்தான். அவர்கள் தலைக்கு எண்ணை அடுத்த கல்யாணத்தில்தான்.
  7.   மாஸ்டர் குக்குகளின் மேல் துண்டை அடுப்பில் போட்டாலும் எரியாமல் அப்படியே இருக்கும்.
  8.   இந்த ஆட்கள் பாத்ரூம் போய் விட்டு வந்து அப்படியே வேலை பார்ப்பார்கள்.
  9.   காயகறிகளை வெறும் தரையில் கொட்டித்தான் வெட்டுவார்கள்.
  10. சப்பாத்தி தேய்ப்பது கழுவாத டைனிங்க் டேபிளின் மேல்தான்.
  11. தோசை சுடும் இரும்புக்கல்லை கழுவும் வழக்கமே இல்லை.
  12. சுட்ட எண்ணை, சுடாத எண்ணை என்கிற வேறுபாடுகள் எல்லாம் சமையல்காரர்களுக்கு இல்லை.

இன்னும் பல கொடுமைகள் உள்ளன. விசேஷம் நடத்துபவர்கள் அஜினோ மோட்டோ போடக்கூடாது என்று சொன்னால் சமையல்காரர் அதை லிஸ்ட்டில் எழுதமாட்டார். ஆனால் தனியே வாங்கி வந்து சமையலில் சேர்ப்பார். ஜிலேபிக்கு குங்குமப்பூ வாங்கிக்கொடுத்தால் அதை திருடுபவர்கள்தான் அதிகம்.

இதையெல்லாம் பார்த்தும் விசேஷங்களில் சாப்பிட வேண்டுமானால் தனி மனோதைரியம் வேண்டும். அதைத் தவிர அந்த உணவை ஜீரணம் பண்ணக்கூடிய உடல்நிலையும் வேண்டும். எனக்கு இந்த இரண்டும் காலியாகி விட்டன.

இந்த தர்ம சங்கடத்திலிருந்து விடுபட சரியான வழிமுறைகளை யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் பதிவர்கள், தங்களுக்குத் தெரிந்த யோசனைகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.