ஞாயிறு, 6 மே, 2012

ஒரு அனுபவமும் அதன் நீதியும்



இரண்டு தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. நான் வசிக்கும் தெருவில் பாதாளச் சாக்கடை பதிப்பதற்காக குழிகள் தோண்டியுள்ளார்கள். தோண்டின மண் பூராவும் ஒரு புறம் குவித்து வைத்துள்ளார்கள். மண் குவிக்காத பக்கம் ஒரு ஐந்து அடி அகலம் மட்டுமே உள்ளது. அதில் நடக்கும் மக்களும் இரு சக்கர வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தன.

நான் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சி போய்விட்டு வரும்போது ஒரு கார்க்காரன் படு வேகமாக அந்த இடைவெளியில் சென்றான். நான் அதிசயப்பட்டேன். இதில் கார் செல்ல முடியாதே, இவன் என்ன செய்யப்போகிறான் என்று பார்த்துக்கொண்டே வந்தேன். கொஞ்ச தூரம் போன பிறகு மேலே செல்வதற்கு வழி இல்லை. குறுக்கே சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்தார்கள்.

அந்த கார் டிரைவர் இறங்கி பாதியாக இருந்த ஒரு சிமென்ட் மூட்டையைத் தூக்கி வீசினான். அது சாக்கடைத் தண்ணீரீல் விழுந்தது. அதைத் திரும்ப தூக்கப் போனவன், ஹூம், இது சர்க்கார் சிமென்ட்டுதானே என்று சொல்லிவிட்டு அதை அப்படியே விட்டு விட்டான். நான் அப்போது அந்த இடத்திற்கு வந்து விட்டேன்.

நான் அவனைப் பார்த்து சொன்னேன். சர்க்கார் சொத்தாயிருந்தால் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா, அதை எடுத்து தரையில் போடு என்று சொன்னேன். அவன் அதைக்கேட்க நீ யார் என்றான். நான் இந்த வீதியில் குடியிருப்பவன் என்று சொன்னேன். அதற்கு அவன் கண்ட மேனிக்கு சத்தம் போட ஆரம்பித்தான். நீ எங்கே வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் போய்க்கொள், எனக்கு கவலையில்லை என்று தாறு மாறாகப் பேச ஆரம்பித்தான். அப்போதுதான் கவனித்தேன், அவன் ஏகத்திற்கும் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.

இனி இவனிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று நான் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த இடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்ற கொண்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவராவது எனக்குத் துணையாக அவனைத் தட்டிக் கேட்க வரவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் எனக்கு நன்றாகப் பரிச்சயம் ஆனவர்களே. ஒரே தெருவில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள்தாம்.

இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் ஆபத்துக் காலங்களில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் தவறு என்பதுதான். பக்த்து வீட்டில் கொலை நடந்தாலும் கூட கதவைப் பலமாக சாத்திக்கொள்வார்களே தவிர உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.
இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களே, இந்த நீதியை மனதில் கொள்ளவும்.

சனி, 5 மே, 2012

உணர்ச்சி வசப்படுதலும் அதன் விளைவுகளும்


சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளியான ஒரு செய்தியை அநேகமாக அனைவரும் படித்திருப்பீர்கள்.

கயத்தாற்றில் ஒரு குடும்பம். தாய் தகப்பன், இரண்டு பையன்கள்,பெரியவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள். வெளியூரில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். மனைவி பெற்றோருடன் இருக்கிறாள். தம்பி ஒரு கழிசடை. குடித்துவிட்டு ஊர்ப்பெண்களை மேய்வதுதான் அவன் வேலை. யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் தம்பி அண்ணியிடமே வம்பு செய்திருக்கிறான். அவள் முடிந்த வரையில் பொறுமையாக இருந்திருக்கிறாள். முடியாமல் போகவே கணவனிடம் புகார் செய்திருக்கிறாள்.

அண்ணன்காரன் அதீத உணர்ச்சி வசப்பட்டு ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு இருந்த உணர்ச்சி வெறியில் விவேகம் அவனை விட்டுப் போய்விட்டது. தன் உறவினன் ஒருவனைத் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டான். தம்பியை நைச்சியமாய் பேசி தங்கள் தோட்டத்து பம்ப் செட் ரூமுக்கு கூட்டிப்போய் குடிக்க வைத்து 70 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டான்.

இதன்பிறகு என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ் கேஸ், சிறை வாசம், கோர்ட்டு விசாரணை, தீர்ப்பு. இந்தக் கூத்து எல்லாம் நடந்து முடிய ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். இந்த சமயத்தில் கேஸ் நடத்த, குடும்பம் நடத்த ஆகும் செலவுகளை எப்படி செய்வது? இருக்கும் சொத்துகளை விற்று செலவுகள் நடக்கும். முடிவில் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.

இதன் பிறகு அவன் மனைவி குழந்தைகள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய எதிர்காலம் எப்படி ஆகும்? உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியத்தினால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? இந்த நிகழ்வில் எங்கு தவறு நேர்ந்தது?

அந்தக் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மூத்த மகனை அவன் மனைவியைத் தன்னோடு அழைத்துப் போகச் சொல்லியிருக்க வேண்டும். அது முதல் தவறு. அந்த மூத்த மகனாவது நிலைமையைப் புரிந்துகொண்டு தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அந்த மனைவியாவது நல்ல யோசனை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அவளுடைய தாய் தகப்பனாவது ஏதாவது மாற்றுத் திட்டங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

இவைகளெல்லாம் நடக்கவில்லை. கடைசி காலத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவன் செய்த கொலையினால் ஒரு குடும்பம் சீரழிந்து நடுத்தெருவில் நற்கும் நிலை உருவாகிவிட்டது.

இது மாதிரி சம்பவங்கள் இப்போது அதிகமாக நடக்கின்றன. காரணம் பொறுமையின்மை. ஒரு நிமிடம் விளைவுகளைப் பற்றி யோசித்திருந்தால் இந்த செயல்கள் நடந்திருக்குமா?

இதைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்தப் பிரச்சினை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நேரலாம். அப்படி நேரும் பட்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அந்தப் பிரச்சினையை கையாள்வது எப்படி என்று இப்போதே யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 4 மே, 2012

மனச்சோர்வும் தற்கொலைகளும்



வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதைத் தவிர காரணமே இல்லாமலும் மனச்சோர்வு ஏற்படலாம். காரணம் எதுவாயினும், இது ஒரு நோய் என்று அறியவேண்டும். பொதுவாக இந்த நோய் தாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது என்று உணர மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முனைவார்கள். சுற்றி உள்ளவர்கள்தான் சில அறிகுறிகளை வைத்து ஒருவர் இந்த நோயினால் தாக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து அதற்கான முறையான வைத்தியம் செய்ய வேண்டும்.

இந்த நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்:

  1.   தனிமையை விரும்புதல்: கலகலப்பாக இருக்கும் ஒருவர் தனிமையை விரும்புகிறார் என்றால் அவருக்கு மனக்கலக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறியலாம்.
  
  2.   நண்பர்களிடம் தொடர்பு இல்லாமை: ஒருவர் வழக்கமாக பழகி வரும் நண்பர்களை விட்டு விலகி இருப்பாரேயானால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.

  3.   போதை மருந்துகள்/பானங்கள்: இவைகளை உபயோகப்படுத்துதலும் இவைகளுக்கு அடிமையாதலும் நிச்சயமான மன நோய்க்கு அறிகுறிகள்.
  
  4.   பசியின்மை/அதிகப்பசி: இவை இரண்டும் நல்ல அறிகுறிகள் அல்ல. சாதாரணமாக இருக்கும் ஒருவர் சாப்பிடாமலோ அல்லது அதிகமாகச் சாப்பிட்டாலோ அது மனச்சோர்வாக இருக்கலாம்

  5.   எரிந்து விழுதல்/கோபப்படுதல்: வழக்கத்துக்கு மாறான கோபம் அல்லது எரிச்சல் ஒருவரிடம் காணப்படுமாயின் அது மன நோயாக இருக்கலாம்
.
இவ்வகையான மன நோய்க்கு காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நோய் பீடித்தவருக்கு சரியான கவனிப்பு இல்லையானால் பல விளைவுகள் ஏற்படும். பொதுவாக பலர் தற்கொலை செய்யக் காரணம் மனச்சோர்வே.

குறிப்பாக இளைஞர்களிடத்திலும் வயதானவர்களிடத்திலும் இந்த மனச்சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. சூழ்நிலை மாற்றம், எதிர்பாராத துக்கங்கள், தீராத நோய்கள், பரீட்சையில் தோல்வியடைதல் அல்லது மதிப்பெண்கள் குறைவாக வாங்குதல் போன்ற காரணங்களினால் இந்த சோர்வு ஏற்படலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்கள் கவனமாக இருந்து அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் யாராவது இந்த சோர்விற்கு ஆளாகி உள்ளார்களா என்று கவனிப்புடன் இருப்பது அவசியம்.

மனச்சோர்வு ஆரம்ப நிலையில் இருந்தால் குடும்ப அங்கத்தினர்களே இதை சரி செய்து விடலாம். நல்ல ஆறுதல், கவனிப்பு, கண்காணிப்பு, ஆலோசனைகள் மூலம் ஒருவரின் மனச்சோர்வைப் போக்கலாம். கொஞ்சம் தீவிரமாக இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இளைஞர்களும், முதியவர்களும் தங்கள் மன வலிமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பொறுத்தது. குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்தக் குடும்பத்தில் யாருக்கும் மனச்சோர்வு வராது.