புதன், 12 செப்டம்பர், 2012

ரயில் எப்படி ஓடுகிறது? சில நடைமுறைகள்


ஒரு மாதத்திற்கு முன்னர்தான் எங்கள் கோவை கல்லூரியிலிருந்து இதே மாதிரி டூர், இரண்டு குழுவினர் வந்து சென்றுள்ளனர். அவர்கள் புறப்படும் தினத்தன்று அவர்களின் கோச், அவர்கள் செல்லவேண்டிய ரயிலில் இணைக்கப்படவில்லை. அவர்கள் கோச் இருக்கும் ஸ்பெஷல் லைனுக்குப் பக்கத்து லைனிலேயேதான் அவர்கள் செல்லும் ரயில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கோச்சை அந்த ரயிலில் சேர்க்க முடியவில்லை. மாணவர்கள் ரயிலுக்கு முன்னால் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். உங்களை எல்லாம் கைது பண்ணப் போகிறோம் என்றதும்தான் அவர்கள் ட்ரேக்கை விட்டு வெளியில் வந்தார்கள்.

என்ன பண்ணியும் அந்த ரயிலில் அவர்கள் கோச்சை இணைக்க முடியவில்லை. அடுத்த ரயிலில்தான் இணைக்க முடிந்தது. இதனால் அவர்கள் பயணத்திட்டம் சரியாக நிறைவேறவில்லை. இந்தச் செய்தியை நான் கேள்விப்பட்டு, நாம் போகும்போது இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும் என்று எல்லோரையும் தீர விசாரித்தேன்.

அப்படி விசாரித்ததில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால்:

   1.   எங்கள் கோச் டில்லியிலிருந்து ஹௌரா வரைக்கும் வருவதுவடக்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்டது. நாங்கள் செல்லவிருப்பது புவனேஸ்வரம். அதுகிழக்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்டது. ஹௌரா ஸ்டேஷனில் இந்த இரண்டு ரயில்வே பிரிவுகளும் இருக்கின்றன. பக்கத்துப் பக்கத்து ரூம்கள்தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஒரு எல்லைக்கோடு இந்த இரண்டு ரயில் பிரிவுகளுக்கு இடையில் இருக்கிறது. எங்கள் கோச்சை வடக்கு ரயில்வே, அதிகாரபூர்வமாக தெற்கு ரயில்வேக்கு ஒப்படைக்கவேண்டும். அப்போதுதான் எங்கள் கோச் புவனேஸ்வரம் செல்லும் ரயிலில் இணைக்கப்படும். இதற்குத் தேவையான கிரீஸ் போடவேண்டும்

   2.   இரண்டாவது, ஸ்டேஷன் வளாகத்தில் ஷண்டிங்க் வேலைகள் செய்ய முடியாது. ஷண்டிங்க் யார்டு 15 கி.மீ. தள்ளி இருக்கிறது. எங்கள் கோச் அங்கு சென்றால்தான் அதை நாங்கள் போகவிருக்கும் ரயிலில் சேர்த்து, பிறகு சரியான நேரத்திற்கு பிளாட்பாரம் வரும். இதற்கும் கிரீஸ் தேவை.

இந்த நுணுக்கங்களை நான் தெரிந்து வைத்திருந்ததினால், ஹௌராவில் பல சிரமங்களைத் தவிர்த்தேன். அங்கு நாங்கள் மொத்தம் ஐந்து நாட்கள் தங்கினோம். இரண்டாவது நாளே வடக்கு ரயில்வே ஆபீசுக்குச் சென்று நாங்கள் இங்கிருந்து புவனேஸ்வரம் போகவேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டேன். அவர்கள் நாங்கள் ஒரு கோச் டிரான்ஸ்பர் லெட்டர் கொடுக்கிறோம், அதைக் கொண்டுபோய் கிழக்கு ரயில்வே ஆபீசில் கொடுத்தால் மற்ற ஏற்பாடுகள் அவர்கள் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு உரிய தட்சிணை செலுத்திவிட்டு அந்த லெட்டரை கிழக்கு ரயில்வே ஆபீசுக்கு எடுத்துச் சென்றேன். அங்கு வாசலில் நிற்கும் பியூனிடம் விஷயத்தைச் சொன்னேன். அவன் 25 ரூபாய் கொடுங்கள் என்று வாங்கிக்கொண்டு, ஒரு கிளார்க்குடம் கூட்டிக்கொண்டு போய் விட்டான். அந்தக் கிளார்க்கிடம் இந்த பியூன் விபரங்களைச் சொல்லி நாங்கள் கொடுத்த பணத்தைக் கொடுத்தான். கிளார்க்குக்கு திருப்தியாகிவிட்டபடியால், சரி சார் நீங்கள் எப்போது எந்த ரயிலில் புவனேஸ்வரம் போகவேண்டும் என்று எழுதிக்கொடுங்கள். நான் மற்றவைகளைப் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போய்விட்டு புறப்படும் நாளைக்கு முதல் நாள் வந்து என்னைப் பாருங்கள் என்று சொன்னான்.
வெளியில் வந்து லெட்டரை எழுதி பியூன் கையில் கொடுத்துவிட்டு,  அவனுக்கு இரண்டு ரூபாயைக் கையில் திணித்துவிட்டு, எங்கள் வேலைகளைக் கவனிக்க சென்று விட்டோம்

இரண்டு ரூபாய் அந்தக் காலத்தில் ஒரு கணிசமான தொகை. இன்று இரண்டு ரூபாயை பிச்சைக்காரன்கூட வாங்கமாட்டான். இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த கவர்மென்ட ஆபீசிலும் இந்த பியூன்களுக்கு இருக்கும் இன்புளூயென்ஸ் அந்த ஆபீசின் ஜெனரல் மேனேஜருக்குக் கூட இருக்காது. அந்த ஆபீசில் என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இந்தப் பியூன்கள் அதைச் சாதித்துக் கொடுத்து விடுவார்கள்.  

அந்தக் கிளார்க் சொல்லியபடி நாங்கள் புறப்படவேண்டிய நாளைக்கு முன்தினம் அவரைப்போய் பார்த்தோம். அவர் சொன்னார். சார் உங்கள் கோச் இங்கு நின்றுகொண்டிருந்தால் எக்காலத்திற்கும் புவனேஸ்வரம் போகாது. இது இங்கிருந்து 15 கி.மீ. தூரத்திலிருக்கும் ஷண்டிங்க் யார்டு போனால்தான் இன்று இரவு நீங்கள் போகவேண்டிய ரயிலில் இணைத்து, நாளைக்கு பிளாட்பாத்திற்கு வரும். ஆகவே இன்று இரவு இந்தக் கோச்சை ஷண்டிங்க் யார்டு கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டேன். நீங்கள் உங்கள் மாணவர்களை இரவு எட்டு மணிக்குள் கோச்சுக்கு வந்து விடச்சொல்லுங்கள் என்றார். அது போல மாணவர்களுக்குச் சொல்லிவிட்டோம்.

மறுநாள் எங்கள் கோச் நாங்கள் செல்லவேண்டிய ரயிலில் இணைக்கப்பட்டு பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. மாணவர்களும் நாங்கள் சொன்ன மாதிரியே இரவு எட்டு மணிக்குள் கோச்சுக்குப் போய்விட்டார்கள். இப்படியாக எங்கள் ஹௌரா புரொக்ராம் எந்தவித வில்லங்கங்களும் இல்லாமல் திருப்தியாக முடிந்தது. ஆனால் இதற்கு தண்டனை போல் புவனேஸ்வரத்தில் வில்லங்கம் வந்தது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

I have no powers


மும்பையில் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு டில்லி புறப்பட்டோம். கோச் மாறியிருக்கிறது என்ற விஷயம் மாணவர்களில் யாருக்கும் தெரியவில்லை.
 
டில்லியில் எந்தவித தொந்திரவும் ஏற்படவில்லை. அங்கும் எங்கள் வேலைகள் முடிந்த பின் கல்கத்தா (ஹௌரா) விற்கு பயணமானோம். ஹௌரா ஸ்டேஷன் சேர்ந்தவுடன், கோச்சை அதற்குண்டான ட்ரேக்கில் நிறுத்தவேண்டுமே. (ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இந்த மாதிரி டூர் வரும் கோச்சுகளை நிறுத்த ஒரு தனி ட்ரேக் ஸ்டேஷன் வாசலுக்குப் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கும். கோச்சை இங்கு நிறுத்தினால்தான் வெளியே போகவர சௌகரியமாக இருக்கும்). அதற்காக டெபுடி ஸ்டேஷன் சூப்பிரன்டென்டிடம் நானும் இரண்டு மாணவர்களும் போனோம். போய் விவரங்களைச் சொல்லி, கோச்சை ஸ்பெஷல் ட்ரேக்கில் நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டோம்.

அவர் “I have no powers”  என்று சொன்னார். திரும்பவும் தயவு செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். அப்போதும் அப்படியே “I have no powers”  என்று சொன்னார். இன்னொரு முறையும் கேட்டோம். இன்னொரு முறையும் அப்படியே “I have no powers” என்று சொன்னார். மொத்தம் மூன்று முறை ஆயிற்று. எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. நான் கொஞ்சம் குரலை உயர்த்தி சத்தமாக “How much it will cost?” என்றேன். இதைக்கேட்டு அந்த ஆள் கோபப்படுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த மனுஷனுக்கு துளிகூட கோபம் வரவேயில்லை. கூலாக “Fifty Rupees” என்றானே பாருங்கள்.

அடப்பாவி, இதற்காகவா எங்களை இப்படி டென்ஷன் படுத்தினாய் என்று நினைத்துக்கொண்டு ஐம்பது ரூபாயைக் கொடுத்தேன். அதை வாங்கினவுடன் அவன் செய்ததுதான் வேடிக்கை. உடனே சீட்டிலிருந்து எழுந்து ஒரே ஓட்டமாக ஓடினான். எங்கே ஓடுகிறான் என்று பார்த்தால், நாங்கள் வந்த ரயிலின் என்ஜினுக்கு ஓடினான். ஆமாங்க, ஒரு டெபுடி ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட் ஓடி அன்றுதான் பார்த்தேன்.

அங்கு சென்று அந்த இன்ஜின் டிரைவரிடம் ஏதோ சொன்னான். அந்த டிரைவரும் தலையை ஆட்டிவிட்டு, எங்கள் கோச்சை அந்த ஸ்பெஷல் ட்ரேக்கில் கொண்டு வந்து விட்டான். உலகில் மனிதர்களின் வேறுபட்ட குணாதசியங்களை அன்று நேரில் பார்த்தேன். ஆக ஐம்பது ரூபாய் செலவில் (லஞ்சத்தில்) எங்கள் கோச் சௌகரியமான இடத்தில் நிறுத்தப்பட்டது.