சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் எதிர்காலம்


அவர்கள் -உண்மைகள் பதிவின் ஆசிரியர் "இந்தியாவின் எதிர்காலம்" என்பதைப் பற்றி என் கருத்துகளைக் கேட்டார்.
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html

என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன் என்கிற நிலையில் நான் இந்திய நாட்டின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வருகிறேன்.

இந்தியா சுதந்திரம் வாங்கியபோது இருந்த ஜனத்தொகை 33 கோடி. இன்று இருப்பது 120 கோடி. ஜனத்தொகை குறைவாக இருந்த காலத்தில் உணவுப் பஞ்சம் அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. கடைசியாக வந்த உணவுப் பஞ்சம் 1943 ம் வருடம் என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு ஜனத்தொகை பலமடங்கு பெருகியிருந்த போதிலும் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

இது விவசாயத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி. அதே போல் தொழில் துறையிலும் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டில் இருந்த கார்கள் இரண்டேதான், பியட் மற்றும் அம்பாசிடர் மட்டும்தான். இன்று எத்தனை வகை கார்கள், மற்ற கனரக வாகனங்கள், சிறு சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என்று அந்த துறையிலேயே இருப்பவர்களுக்கு கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஆடை உலகிலே நாட்டில் பெரும் புரட்சியே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பருத்தியிலிருந்து நூல் நூற்பதிலிருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாவது வரை, நடந்துள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்கதாகும்.

இவ்வாறே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் ஆகியவைகளும் பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானதாகும்.

தனி மனிதனின் பொருளாதார வசதிகள் பன் மடங்கு பெருகியிருக்கின்றன. நல்ல வீடு, நல்ல துணிகள், வாகன வசதி என்று ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறார்கள். ஜனத்தொகை இன்று பலமடங்கு பெருகியிருந்த போதிலும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தென்படுகிறது.

இந்த மாற்றங்களெல்லாம் நாடு முன்னேறுவதைக் குறித்தாலும் சில எதிர்மறை சக்திகள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன.

அதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் அரசியல். இதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

அடுத்தது ஊழல். இதற்கு முன்னோடிகள் யாரென்று தனியாகச் சொல்லவேண்டிதில்லை.

கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.

இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.