திங்கள், 5 ஜனவரி, 2015

ஆண்களுக்கான சில அறிவுரைகள்.

                                             

பொதுவாக ஆண்கள் யாரும் அடுத்தவர்கள் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். இருந்தாலும் ஏன் இந்தப் பதிவை எழுதுகிறேன் என்றால் பெண்களுக்கான அறிவுரைகள் சொன்னீர்களே, எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என்று சில ஆண்கள் கேட்டதால்தான். இந்தப் பதிவைப் பெண்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

1. ஆண்கள் என்றால் ஏதாவது ஒரு உத்தியோகம் செய்து வருமானம் ஈட்டவேண்டும். அது மாதச் சம்பளமாகவோ அல்லது வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ இருக்கலாம்.

2. வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் "ஒன் ஸ்டெப் பேக்". உங்களுக்கான அறிவுரை கடைசியில் இருக்கிறது.

3. சம்பளக்காரர்கள் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே முழுவதையும் மனைவி கையில் கொடுத்து விட்டு அவ்வப்போது தேவைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.

4. வீட்டில் அனைத்து முடிவுகளையும் ஆண்கள்தான் எடுக்கவேண்டும். ஆனால் முதலில் இல்லாளிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும்.

5. எந்தக் காரியமும் வெற்றியடைந்தால் புகழை மனைவிக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும். தோல்வியடைந்தால் பழியை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

6. ஆண்களுக்குப் பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்ய பெண்களே பொருத்தமானவர்கள். ஆகவே உங்கள் உடைகளை அவர்கள் வாங்குவார்கள். அதைக் குறை சொல்லாமல் போட்டுக்கொள்வது உங்கள் கடமை.

7. வெளியில் செல்லும்போது நீங்கள்தான் குடும்பத்தலைவர் என்று காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் எந்த முடிவுகளையும் நீங்களாக எடுக்கக் கூடாது.

8. நண்பர்கள் வந்தால் காப்பி கொண்டு வரச் சொல்லக்கூடாது. அப்படி அவருக்குக் காப்பி கொடுக்கவேண்டுமானால் வெளியில் கூட்டிக்கொண்டு போய் நல்ல காப்பிக்கடையில் காப்பி வாங்கிக் கொடுக்கவும். அப்படியே நீங்களும் ஒரு நல்ல காப்பி குடித்துக் கொள்ளலாம்  இதற்காக அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

9. மனைவி சமைக்கும் சாப்பாட்டில் எந்தக் குறையும் சொல்லக்கூடாது. உப்பு இல்லாவிட்டால் அப்படியே சாப்பிட வேண்டுமே ஒழிய உப்பு இல்லை என்று சொல்லக் கூடாது..

10. கடைசியாக வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டான ஆலோசனை. உங்கள் வியாபாரம் அல்லது தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதா? அப்படியானால் மேற்கண்ட எந்த யோசனைகளையும் கடைப்பிடிக்காதீர்கள்.

11. தொழிலோ அல்லது வியாபாரமோ சரியாக இல்லையா? மனைவியிடம் யோசனை கேட்டு அதன்படியே செய்யுங்கள். ஆறு மாதத்தில் தொழில் அல்லது வியாபாரம் முடிவுக்கு வந்து விடும். பிறகு மாதச்சம்பளத்தில் சேர்ந்து இங்கு சொன்ன அனைத்து அறிவுரைகளையும் கடைப்பிடிக்கவும்.

இன்னும் நிறைய யோசனைகள் கைவசம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இவ்வளவுக்குத்தான் பர்மிஷன் கிடைத்தது.