செவ்வாய், 17 நவம்பர், 2015

மனிதனும் சம்பிரதாயங்களும்

  

மனிதன் எக்காலத்திலும் சூழ்நிலைக்கு அடிமையே. இயற்கைச் சூழ்நிலை மட்டுமல்ல. சமூகச் சூழ்நிலைக்கும் அவன் அடிமையே. அடிமை என்ற வார்த்தை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படியானால் சூழ்நிலைக்கு அனுசரித்துப் போதல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒவ்வொருவரும் சுகமாகவே வாழ விரும்புகிறான். துக்கத்தை ஒருவரும் விரும்புவதில்லை. இது உலக வழக்கம். இதில் தவறு எதுவுமில்லை. அடுத்தவர்களைக் கெடுக்காமல் சுகமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

ஒருவனுக்கு எது சுகம் என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது. அவரவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அதே மாதிரி ஒருவன் சுகம் என்று அனுபவிப்பதை இன்னொருவன்  அது சுகம் அல்ல என்று சொல்லலாம். அது அவனுடைய கருத்து. எல்லோருடைய கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பழக்க வழக்கங்களும் அம்மாதிரியேதான். அவரவர்களுக்குப் பிடித்த எண்ணங்களுடன்தான் ஒருவன் தன்னுடைய பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவான். இதுதான் சரி, இது தவறு என்ற ஒரு பொது விதி சில செயல்களுக்குத்தான் பொருந்தும். வீதிகளில் வண்டிகள் ஓட்டுவது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அது எல்லோருக்கும் பொது. அதை மீறினால் சிக்கல்கள் வரும்.

ஆனால் கோயிலுக்குப் போவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நம்பிக்கையிருப்பவர்கள் போகலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் போகாமல் இருக்கலாம். ஆனால் கோயிலுக்குப் போவது தவறு என்று கோவிலுக்குப் போகாதவர்கள்  கோவிலுக்குப் போகிறவர்களைப் பார்த்து சொல்லுவது தேவையில்லை. அதே மாதிரி கோவிலுக்குப் போகாமல் இருப்பது தவறு என்றும் கோவிலுக்குப் போகிறவர்கள் சொல்லக் கூடாது.

எனக்குத் தெரிந்த தத்துவம் இதுதான்.