ஞாயிறு, 2 ஜூன், 2019

இந்தி எதிர்ப்பும் திராவிடக் கட்சிகளும்.

1950 களில் திராவிடக் கழகம் பெரியார் தலைமையில் இயங்கியபோது நாத்திகமும் பிராமணத் துவேஷமும்தான் அந்தக் கட்சிக் கொள்கையாயிருந்தது. பின்பு பெரியார் மணியம்மையைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தி.மு.க. தோன்றியது.

அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மட்டும் நம்பியிராமல் மாணவர்களைக் கவரும் பொருட்டு இந்தி எதிர்ப்பைத் தங்கள் முக்கிய கொள்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. போராடுவதற்கு ஏதாவது சாக்கு வேண்டும், அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைதான் இது.

இந்தப் போராட்டம் பல்வேறு கட்டங்களில் பலவிதமாக நடத்தப்பட்டு கடைசியில் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் இந்தி சொல்லிக்கொடுப்பது நின்று போயிற்று. இந்த நிலையினால் தமிழ் இளைஞர்கள் இந்தி படிக்காமல் மத்திய அரசு வேலைகளைக் கோட்டை விட்டார்கள். ஆனால் பிராமணர்கள் தனிப்பட்ட முறையில் இந்தி கற்றுக்கொண்டு டில்லிக்கோட்டையில் பல முக்கிய பதவிகளில் கோலோச்சினார்கள், கோலோச்சுகிறார்கள்.

இப்போது மத்திய அரசு இந்தியை பாடத்திட்டத்தில் சேர்த்தால் நல்லதாகப்போச்சு என்று இருக்காமல் அதை எதிர்த்து உயிர் தியாகம் செய்ய இந்த திராவிடக்கட்சிகள் கூவுகின்றன. இந்தத் திராவிடக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு இந்தி படிப்பிக்கிறார்கள். இந்த அடிமட்ட மக்கள்தான் அறிவு கெட்டுப்போய் இந்தி எதிர்ப்புக் கோஷம் போட்டுக்கொண்டு அழிந்து போகிறார்கள்.

தமிழன்தான் தமிழனுக்கு எதிரி.

வியாழன், 16 மே, 2019

சரித்திரம் தெரியுமா?

எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார் இந்தப் பாடத்தில் சுலபமாகப் பாஸ் செய்ய ஒரு வழி சொல்லிக் கொடுத்தார். ஏதாவது ஒரு ராஜா தன் ஆட்சியின்போது செய்த சாதனைகள் என்னவென்று கேட்டால் எதுவும் யோசிக்காமல் சாலைகள் போட்டார், சாலைகளின் ஓரத்தில் மரம் நட்டார், குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று இப்படி எழுதினால் போதும், நீ பாஸ் ஆகி விடுவாய் என்று சொல்லிக்கொடுத்தார்.

அது போலவே எழுதி சரித்திரம் பாஸ் செய்து மேல் படிப்புகளெல்லாம் படித்து மேலே வந்தது ஒரு பெரிய கதை.

ஆனால் என்னுடைய ஆயுள் காலத்திலேயே ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. நான் மேற்கூறியவாறு சரித்திரம் படித்துக்கொண்டு இருக்கும்போது தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை சினிமா பாணியில் பத்திரிக்கைக்காரர்கள் பிரசுரித்தார்கள்.

அதில் எனக்கு நினைவு இருப்பதெல்லாம் அந்த படு கொலையைச் செய்தவன் ஒரு தேசத்துரோகி என்றும் அவன் பெயரைச் சொன்னாலே ஏழேழு தலைமுறைக்கும் பாவம் வந்து சூழும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கும் அவன் பெயரைச் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது.

இது நடந்து ஒரு எழுபது வருடங்கள் ஆகியிருக்கும். இன்றைக்கு அவனை யாரோ ஒரு சினிமா நடிகர் என்னமோ சொல்லிவிட்டார் என்பதால் இந்த தேசமே அந்த நடிகரை கால்வேறு கைவேறு ஆக்கத்துடிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மகாத்மா காந்தி சிலைக்குப் பக்கத்திலேயே அவன் (அவர் என்று சொல்ல வேண்டுமோ) சிலையை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு எழுபது வருடத்திலேயே, என் வாழ்நாளில் நடந்ததையே மக்கள் மாற்றுகிறார்கள் என்றால், 1000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாய் சரித்திரத்தில் சொல்பவைகளை எவ்வாறு நம்பவது?

பின் குறிப்பு; இது ஒரு சரித்திர ஆராய்ச்சிப் பதிவுதானே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்று ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்படியும் இந்தப் பதிவிற்கு உள் நோக்கம் கற்பிப்பவர்கள் ஏழேழு ஜன்மத்திற்கும் இந்தியாவிலேயே பிறக்கக்கடவது என்று சாபம் கொடுக்கிறேன்.

17-5-2019  / 6.00 AM    இதையும் பாருங்கள்;

Bhopal candidate Pragya Thakur courted fresh controversy on  .. 

ஞாயிறு, 12 மே, 2019

காதல் விபத்துகள்


காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில்  பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.


தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.

ஏன் காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று பார்த்தால், சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

கல்யாணம் என்றால் என்ன, கல்யாணம் செய்துகொண்ட பிறகு அந்தக் கணவன் மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்னென்ன, இவைகளைப் பற்றி இன்றைய காதலர்கள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பம் அமைப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ஆனால் 21 அல்லது 22 வயது வேலையில்லாத ஒருவன் 18 வயது கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதல் கல்யாணம் செய்தால், அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் என்ன என்று தெரியுமா?

அதிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடைபெறும் கல்யாணங்களில் அவர்கள் தங்கள் சுய காலிலேயே நிற்க வேண்டும் என்றால் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகம் போற போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வியாழன், 4 ஏப்ரல், 2019

ஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்?

கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் வரவில்லை. கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் ஆச்சு. சரி, இப்ப என்ன திடீரென்று இந்தப் பக்கம் என்று சிலர் கேட்கக்கூடும். அதற்காக முன்னெச்சரிக்கையாக இதோ பதில்.

எனக்கு அதிகார பூர்வ வயசு 85. ஜாதக பூர்வமாக வயசு 84. இது எப்படி நேர்ந்தது என்பதை வேறொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன். இப்ப விஷயத்திற்கு வருவோம். இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நானும் இந்த விதிக்குள்தான் வருவேன் போலத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. உடலில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நெஞ்சில் லேசாக வலி தோன்றியது. என் டாக்டர் பெண்ணிடம் கூறினேன். அவள் உடனடியாக என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் அங்குள்ள இருதய நோய் நிபுணரிடம் விட்டாள்.


அவர் வழக்கமாகச் செய்யும் ECG, Echo Cardiogram எல்லாம் செய்து விட்டு, ஒரு  Angiogram செய்து பார்த்துடலாமே என்றார். என் பெண் அப்படியே செய்யுங்கள் என்று கூறி விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை இப்படி ஒரு சூழ்நிலையில் ஏன்ஜியோ செய்கிறேன் என்று டாக்டர் சொன்னபோது நான் சொன்னேன். இப்படி முதலில் ஏன்ஜியோ செய்கிறேன் என்பீர்கள், அப்புறம் இரண்டு அடைப்பு இருக்கிறது, ஒரு சின்ன (?) ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்பீர்கள். எனக்கு இந்த வித்தை எல்லாம் வேண்டாம், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து அனுப்புங்கள் என்று கறாராகச் சொல்லி மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண்ணோ பட்டு லேசாக நெஞ்சில் அவ்வப்போது வலி வர ஆரம்பித்தது. எனக்கும் வயதாகி விட்டபடியால், சரி உடல்நிலை எப்படியிருக்கிறது, இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்று தெரிந்து கொள்ளலாம் என்ற ஆசை வந்தது. அதனால்தான் என் பெண்ணிடம் கூறி இப்படி இந்த டாக்டரிடம் செல்ல வேண்டியதாகப் போயிற்று.

சரி, அதையும் பார்த்து விடுங்கள் என்றேன். ஒரு இரண்டு மணி நேரம் என்னென்னமோ செய்து ஒரு வழியாக ஏன்ஜியோ செய்து முடித்தார்கள். என்னைக் கொண்டு போய் தனியாகப் படுக்க வைத்தார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஒரு ரூம் கொடுத்து இன்று இரவு இங்குதான் தங்க வேண்டும் என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டுப் புளிய மரத்திற்குப் பயப்பட முடியுமா? எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன்.

மறுநாள் காலையில் என் பெண்ணும் வந்த பிறகு டாக்டர் அறையில் ஏன்ஜியோ ரிசல்டைப் பரிசீலித்தோம், இருதயத்திலுள்ள முக்கிய மூன்று இரத்தக் குழாய்களில் இரண்டில் 90 சத அடைப்பு இருக்கிறது. மீதி ஒரு ரத்தக்குழாயினாலும் புதிதாக உண்டான subsidiary ரத்தக்குழாய்களினாலும் இருதயம் ஓரளவு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் இப்போதைய நிலை என்று டாக்டர் சொன்னார்.

இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று மகள் கேட்டாள். ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யலாம், ஆனால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது என்றார். அப்படி சர்ஜரி செய்தால் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும் என்று கேட்டதற்கு அவர் சுமார் 10 % முன்னேற்றம் இருக்கும் என்றார்.

இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த நான் சொன்னேன். டாக்டர், எனக்கு 84 வயது ஆகிவிட்டது, இந்த ஆபரேஷனில் ரிஸ்க் அதிகம் என்று நீங்களே சொல்லுகிறீர்கள், தவிர ஆபரேஷனுக்குப் பிறகு வரும் முன்னேற்றமும் கணிசமாக இல்லை. இந்த நிலையில் இந்த ஆபரேஷனைத் தவிர்த்து மருந்து மாத்திரைகளினால் நான் சிரமப்படாத அளவிற்கு என்னைத் தயார் செய்தால் போதும், நானும் அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுகிறேனே என்று சொன்னேன்.

டாக்டர் அதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். உங்கள் நிலையில் நீங்கள் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்று ஒரு சர்டிபிகேட்டும் கொடுத்து விட்டார். ஆகவே மக்களே, டாக்டர்கள் சொல்லுகிறார்களே என்று எந்த ஆபரேஷனுக்கும் சம்மதித்து விடாதீர்கள். அந்த ஆபரேஷன் உங்களுக்கு அவசியம்தானா, அதனால் உங்கள் உடல்நிலை மேம்படுமா என்பதையெல்லாம் தீர யோசித்து அப்புறம் முடிவு எடுங்கள்.

மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை.