வியாழன், 3 ஜனவரி, 2013

பதிவில் வரியின் இடைவெளியை அதிகப்படுத்த



இது ஒரு மீள் பதிவு. பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் மாறியிருப்பதால் அவைகளுக்கு ஏற்ப குறிப்புகளை மாற்றியிருக்கிறேன்.


இந்த இரண்டு பதிவுகளையும் பாருங்கள்.(Screen shots)

ஒன்று:

இரண்டு:

இரண்டாவது பதிவு படிப்பதற்கு சௌகரியம். உங்கள் பதிவை இப்படி மாற்றவேண்டுமா? மேலே படியுங்கள்.


முதலில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அமெச்சூர். கம்ப்யூட்டரின் எல்லா தொழில் நுட்பங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவைகளில் ஒன்று பதிவில் வரிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தல். நான் எழுதியிருப்பவைகளை அப்படியே செய்தால் விரும்பிய விளைவுகள் ஏற்படும்.  பல முறை படித்துவிட்டு அப்படியே செய்யவும்.
  
1.   முதலில் பதிவின் டேஷ்போர்டுக்குப் போகவும்.
2.   அங்கு பென்சில் மார்க்குக்கு வலது பக்கத்தில் சதுரமாக கருப்பாக ஒரு பட்டன் இருக்கும். அதன் மேல் கர்சரை வைத்தால் Go to post list என்று  தோன்றும். அதை அழுத்தவும்.
3.   இப்போது தோன்றும் ஸ்கிரீனில் இடது பக்கம் Template என்று இருப்பதை அழுத்தவும்.
4.   இப்போது தெரியும் ஸ்கிரீனில் வலது பக்கம் Back up/Restore Template என்கிற இடம் தெரியும். அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்.
5.   இப்போது Back up/Restore Template என்று இருப்பதை அழுத்தவும்.
6.   இப்போது Template  ›  Backup / Restore  என்று ஒரு விண்டோ வரும்.
7.   அதில் Download full template என்று ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
8. இப்போது Save as………. என்று ஒரு ஸ்க்ரீன் வரும். அதில் Save ஐ செலக்ட் செய்யவும்.
9.   இப்போது உங்கள் டெம்ப்ளேட் பத்திரமாக உங்கள் Download folder இல் ஸ்டோர் ஆகியிருக்கும். இது எதற்கென்றால் நீங்கள் நான் சொன்னபடி செய்யாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்திருந்தீர்களென்றால் வம்பு வந்துவிடும் அப்போது அந்த வம்பிலிருந்து மீண்டு வர இது உதவியாயிருக்கும்.
10. இப்போது Template  ›  Backup / Restore  விண்டோவை close செய்யவும்.
11.   அடுத்து Edit Template ஐ அழுத்தவும்.
12. இப்போது Template  ›  Edit HTML ன்று ஒரு ஸ்கிரீன் வரும். அதற்கு கீழ் Expand Widget Templates என்று ஒரு கட்டம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
13. இப்போது தெரியும் ஒரு சதுரக் கட்டத்தினுள் என்னென்னவோ எழுதியிருக்கும். அதைப்பார்த்து பயப்படாதீர்கள். அந்தக் கட்டத்திற்குள் கர்சரை வைத்து ஒரு லெப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் ஒரு கோடாக உள்ளே கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.
14.  அப்படிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தால் இது வரை நீங்கள் செய்தது சரியென்று அர்த்தம். இப்போது Ctrl  என்று ஒரு கீ உங்கள் கீபோர்டில் இடது கோடியில் கீழே இருக்கும். அதை அழுத்திக்கொண்டு கூடவே F கீயையும் அழுத்தவும். அழுத்திவிட்டு கையை கீ போர்டிலிருந்து எடுத்து விடவும்.
15. இப்பொது ஸ்கிரீனில் வலது மேல் கோடியில் ஒரு நீள்சதுரக் கட்டம் தெரியும். அந்தக் கட்டத்தில் line-height  என்று டைப் அடிக்கவும். இப்போது இந்த எழுத்துக்கள் டெம்ப்ளேட்டில் ஹைலைட் ஆகித் தெரியும்.

முக்கிய குறிப்பு; இது வரையில் நீங்கள் செய்ததெல்லாம் உங்கள் பிளாக்கை ஒன்றும் செய்துவிடாது. இப்போது உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் ஸ்கிரீனின் வலது கோடி டாப்பில் ஒரு சிகப்பு x இருக்கிறதல்லவா, அதை கிளிக் செய்துவிட்டு ஓடி வந்து விடலாம். பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் கூகுளாண்டவர் துணை நிற்பார்.

16. இப்போது தெரிபவை:
       .post-body {
        Font-size 110%
        Line-height 1.2;

17. இதில் லைன் ஹைட் 1.2 என்று இருப்பதை 1.8 என்று மாற்றுங்கள். எப்படியென்றால், கர்சரை 2 க்கு முன்னால் வைத்து 2 ஐ டெலீட் செய்துவிட்டு 8 என்று டைப் செய்யுங்கள். அவ்வளவுதான். வேறு எந்த கீயையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
18.  இப்போது டெம்ப்ளேட் சதுரத்தை விட்டு வெளியில் வாருங்கள். கட்டத்துக்கு அடியில் SAVE TEMPLATE என்று இருப்பதை அழுத்தவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
19. இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். Your changes have been saved. View Blog என்று இருக்கும்.  View Blog ஐ அழுத்தவும். ஆஹா, உங்கள் பிளாக் இப்பொழுது அதிக இடைவெளியுடன் ஜ்வலிக்கும்.
20. இடைவெளியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமானால் திரும்பவும் இதே மாதிரி செய்து லைன் ஸ்பேசிங்க்கை 2.0 க்கு மாற்றலாம். இதே மாதிரி எழுத்துகளின் சைஸையும் 120, 130 % என்று உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம்.

    இவைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்த பின், உடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

10 கருத்துகள்:

  1. செய்யறோமோ இல்லையோ, தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி! மீள் பதிவு என்று போட்டு விட்டு ஸ்க்ரீன் ஷாட்டில் சமீபத்துப் பதிவுதான் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள தகவல்.எடுத்துக் காட்டுகளுடன் விளக்கி இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பதிவு! (அப்படி என்றால் இதுவரை வெளியிட்டவை பயனுள்ளவை இல்லையா என கேட்காதீர்கள்!) முயற்சித்துவிட்டு வந்து நன்றி தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. புதிய தொழில் நுட்பபதிவருக்கு வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் பயனுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  6. குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். இவ்ளவு கற்றிருக்கிறீர்களே பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  7. அய்யா,
    நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன்.
    அருமையாக புரிவது போல் எழுதியமைக்கு நன்றி
    ஒரு ஆசிரியர் எழுதினால் வேறு எப்படி இருக்கும்
    குரு சாபம் என்று பயமுறுத்தியமையால் பிரசண்ட்
    வணக்கமுடன்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் பயன்படும் தகவல்..

    அன்புடன் அமர்க்களம் கருத்துக்களம்
    http://www.amarkkalam.net/

    பதிலளிநீக்கு