நாளுக்கு நாள் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சாலைகளை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டிருந்தாலும், அவை அதிகரிக்கும் வாகனங்களுக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. வாகன ஓட்டிகள் இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?
சூழ்நிலைக்கு ஏற்ப வாகனங்களை நிதானமாகவும் பொறுப்பாகவும் ஓட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு எய்கிறார்களா என்று பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சத வாகன ஓட்டிகள் அவ்வாறு செய்வதில்லை. அதனால் என்ன ஏற்படுகிறது என்றால் தினமும் செய்தித்தாள்களில் விபத்து பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதைப் படிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.
ஒரு வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி உட்கார்ந்தவுடன், அந்த வாகனத்தின் பலம் முழுவதும் தனக்கு வந்து விட்டதாக ஒவ்வொருவனும் நினைக்கிறான். சாலையில் செல்லும் மற்றவர்களை தூசிக்கு சமானமாக நினைக்கிறான். தான் தவறே செய்யமாட்டோம் என்று முழு மனதுடன் நம்புகிறான். இந்த மன நிலையே விபத்துக்களின் காரணம்.
நான் ஒரு நாள் முழுவதும் சலிப்பில்லாமல் வாகனம் ஓட்டுவேன். எனக்கு சோர்வு வராது. தூக்கம் வராது. பசி வராது. எப்போதும் வாகனத்தின் மீதே கவனம் வைத்திருப்பேன். நான் இதுவரை எந்த விபத்திலும் சிக்கியதில்லை. இப்போதும் அவ்வாறே இந்த வாகனத்தை ஓட்டுவேன். இப்படித்தான் ஒவ்வொரு வாகன ஓட்டியும் தற்பெருமை பேசுவான். ஆனாலும் அப்படிப்பட்ட வாகன ஓட்டிகள்தான் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்.
விபத்து ஏற்பட முக்கிய காரணங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
முதல் காரணம் - ஓய்வு இல்லாமல் வாகனம் ஓட்டுவது. மனித உடம்பிற்கு சில வரையறைகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட மனிதனானாலும் அவனுக்கும் சில வரையறைகள் உண்டு. தூக்கமில்லாமல் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கூட இருக்கலாம். ஆனால் அவனால் முழு கவனத்துடன் வேலை செய்ய இயலாது. விழித்திருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அவன் மூளை அவ்வப்போது அவனை அறியாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்.
இவ்வாறான நிலையில் இருக்கும் ஒருவன் வாகனம் ஓட்டும்போது பல தவறுகள் செய்வான். நின்றிருக்கும் வாகனத்தை அவனால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அதன் மீது தான் ஓட்டும் வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்துவான். அல்லது கட்டுப்பாடான வேகத்தில் செல்லாமல் அதிக வேகத்தில் சென்று, ஒரு நிலையில் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலைத் தடுப்பில் மோதுவான் அல்லது சாலை ஓர மரத்தில் மோதுவான்.
இந்த மாதிரி விபத்துகளுக்கு ஓட்டுனர் மட்டும் காரணமல்ல. அந்த வாகனத்தில் பயணிப்பவர்களும் காரணமே. அவ்வாறு சரியான ஓய்வு எடுக்காத ஓட்டுனரை வாகனம் ஓட்டப் பணிப்பது தவறென்று அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இந்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் தவறு செய்து அதற்கான விலையாகத் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள்.
அடுத்த தவறு - வாகனம் ஓட்டுவதில் தாங்கள் மிகவும் வல்லவர்கள் என்ற ஆணவம் காரணமாக சாலை விதிகளைப் புறக்கணித்து வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு மூன்று மணி நேரத்தில் வாகனத்தை ஓட்டுவேன் என்று பெருமை பேசுவார்கள். இவர்கள் எதிரே வரும் வாகனங்களைக் கவனிக்காமல் மற்ற வாகனங்களை முந்துவார்கள். சாலை நிலையைக் கண்டுகொள்ளாமல் அதி வேகத்தில் செல்வார்கள். இவர்கள் கட்டாயம் விபத்துகளை ஏற்படுத்துவார்கள்.
இன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு பொறுமை குறைந்து கொண்டே வருகிறது. எதிலும் அவசரம். எங்கும் அவசரம். இவ்வாறு பொறுமை இல்லாமல் இருந்து யமபுரம் போவதற்கும் அவசரப்பட்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுதான் பரிதாபம்.