நான் ஒரு தானியங்கி பல்சக்கர மாற்றி (அதாங்க Auto Gear Change - நான் இனி பதிவில் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று சபதம் மேற்கொண்டுள்ளேன்.) கொண்ட சொகுசு உந்து (car) வாங்கிய விபரம் ஏற்கெனவே நண்பர்களுக்குத் தெரியும். அந்த சொகுசு உந்தில் பழனிக்குப் போய்வரலாம் என்று என் மனைவி வேண்டுகோள் விடுத்தாள்.
நான் அந்த வேண்டுகோளை பல காரணங்களுக்காக ஏற்றுக்கொண்டேன். முதல் காரணம் -அந்த சொகுசு உந்து வாங்கி ஒரு மாதத்தில் ஒரு இலவச பராமரிப்பு செய்யவேண்டும். அந்த காலக் கெடுவிற்குள் கொஞ்சமாவது அந்த சொகுசு உந்தை ஓட்டியிருந்தால்தானே அதில் ஏதாவது சில்லறைக் கோளாறுகள் இருப்பது தெரியும். அப்போதுதானே அதை முதல் பராமரிப்பில் இலவசமாக சரி செய்து கொள்ளலாம். பழனி போய் வருவது இதற்குத் தோதாக அமையும் என்று நினைத்தேன். (இந்த யோசனைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக என் மூளையில் உதிக்கும். இதற்கெல்லாம் விடுதி அறை - Hotel Room போட்டு யோசிக்கவேண்டியதில்லை)
இரண்டாவது காரணம் எங்கள் சொந்த ஊரில் இருந்து எங்கள் உறவினர்கள் தைப்பூசத்திற்காக பழனிக்கு காவடி எடுப்பது வழக்கம். இதற்காக ஒரு அமைப்பைத் தோற்றுவித்து கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நானும் சேர்ந்திருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் இரண்டு நாள் பழனியில் பூசை நடக்கும். ஒரு கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து ஆட்கள் வைத்து சமையல் செய்து தடபுடலாக சிற்றுண்டி, பேருண்டி முதலானவை தரப்படும்.
அவ்வப்போது நாங்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம். அந்த வழக்கப்படி இந்த வருடம் கலந்து கொள்ளலாமே என்றபடியால் பழனி போகும் என் மனையாளின் வேண்டுகோளுக்கு இணங்கினேன்.
மூன்றாவது காரணம் இந்த புது சொகுசு உந்தின் குணநலன்களை நன்கு புரிந்து கொண்டால்தானே அதனுடன் வாழ்க்கை நடத்த முடியும். இவ்வாறாக பல காரணங்களை உத்தேசித்து பழனி போவதென்று முடிவு செய்தேன்.
இரண்டு நாள் தங்குவதற்கான மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டிக்கொண்டு ஒரு நல்ல நேரம் பார்த்து பழனிக்குக் கிளம்பினோம். வழியில் ஏதும் பிரச்சினை இல்லாமல் பழனி போய்ச் சேர்ந்து ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். பழனியில் தைப்பூசத்திற்காக ஏறக்குறைய தமிழ் நாட்டின் பாதி மக்கள் - ஸ்ரீரங்கம் தொகுதி நீங்கலாக - வந்திருந்தார்கள். வீதியில் மக்கள் மேல் மோதாமல் நடக்கமுடியாது.
இதைப் பார்த்த நாங்கள் இரண்டு நாள் தங்கும் யோசனையைக் கைவிட்டோம். மறுநாள் காலையில் முருகனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படியே மறுநாள் காலையில் சென்று கயிற்றுந்தில் - Rope Car - மேலே சென்று 200 ரூபாய் சீட்டு வாங்கி சிறப்பு வழியில் சென்றோம். நாங்கள் முன்கூட்டியே முருகனிடம் சந்திக்கும் நேரம் பற்றி முன்பதிவு செய்யாததினால் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று.
நேரில் பார்த்தபோது என்னப்பா இப்படிப் பண்ணி விட்டாய் என்று கேட்டதற்கு ஆமாம் இன்று எத்தனை ஆயிரம் பேர் என்னைப் பார்க்க வரப்போகிறார்கள் தெரியுமா, அதற்குத் தகுந்தாற்போல் நான் அலங்காரம் செய்து கொள்ளவேண்டாமா என்றான். இது நியாயமாகப் பட்டதால் நான் அவனைக் கோபித்துக்கொள்ள முடியவில்லை.
பேட்டியை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தோம். பிறகு கல்யாண மண்டபத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது அங்கு வந்திருந்த என் பெரியம்மா பையன் தானும் எங்களுடன் கோவை வருகிறேன் என்றான். சொகுசு உந்தில்தான் இடம் இருக்கிறதே என்று நான் சரி என்று ஒத்துக்கொண்டேன். அவன் பின்னால் திருவாளர் சனி பகவான் ஒளிந்து கொண்டு இருந்ததை நான் கவனிக்கவில்லை.
அவன் தன்னுடைய உடமைகளைக் கையோடு எடுத்து வந்திருந்தான். நான், என் மனைவி, அவன் ஆகிய மூவரும் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். என் சொகுசு உந்தின் சாவி என் கையில் இருந்தது. சொகுசு உந்தின் பின்புறம் சாமான்கள் வைக்கும் பகுதியைத் திறந்தேன். அந்த இடத்திற்கு மேல் ஒரு தட்டு இருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். என் பெரியம்மா பையனின் பையை இரண்டு கைகளாலும் வாங்கவேண்டி இருந்ததால் சாவியை அந்தத் தட்டில் வைத்து விட்டு பையை வாங்கி உள்ளே வைத்தேன்.
சாமான் வைக்கும் பகுதிக் கதவைச் சாத்தினேன். அது பூட்டிக்கொண்டு விட்டது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த திரு. சனி பகவான் சிரிக்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்ததில் சாவியை நான் எடுக்காமல் கதவைச் சாத்திப் பூட்டி விட்ட மடத்தனம் மூளையில் பட்டது.
ஆகா, முருகன் நம்மைச் சோதிக்கிறான் என்று புரிந்தது. அங்கு சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். சொகுசு உந்தின் கதவில் இருக்கும் ரப்பர் பட்டையை எடுத்துவிட்டு ஒரு அடிக்கோலால் உள்ளே தள்ளினால் கதவு திறந்து விடும் என்றார்கள். அப்படி செய்து பார்த்ததில் அடிக்கோல் உடைந்ததே தவிர பலன் ஒன்றுமில்லை.
வாழ்க்கையில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால் எந்த சோதனைக்கும் முருகன் ஒரு தீர்வை வைத்திருப்பான் என்று நம்பினேன். அப்படியே முருகன் ஒரு வழி காட்டினான். விறுவிறுவென்று விடுதியை வெளியில் வந்தேன். வரிசையாக முச்சக்கர வாடகை உந்துகள் நின்றிருந்தன. அதில் ஒன்றின் ஓட்டுனரைக் கூப்பிட்டு என் பிரச்சினையை ச் சுருக்கமாகச் சொல்லி, இதைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல ஆள் வேண்டுமே என்றேன்.
உந்தில் ஏறுங்கள் என்று சொல்லி அங்குமிங்கும் அலைந்து ஒரு ஆளைப் பிடித்தோம். அந்த ஆள் எங்கள் பின்னாலேயே வந்தார். என் சொகுசு உந்தைப் பார்த்தார். ஐயா, நீங்கள்தான் இந்த வண்டியின் சொந்தக்காரரா என்று கேட்டார். ஆமாம் தம்பி, இப்பத்தான் சுளையாக நாலேமுக்கால் லட்சம் போட்டு வாங்கினேன் என்று சொன்னேன். சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
அப்படியா என்று கேட்டு விட்டு கதவு சந்தில் நான் கொண்டு வந்திருந்த இரும்பு அடிக்கோலை விட்டு ஏதோ செய்தார். மந்திரம் போட்டது போல் கதவு திறந்து கொண்டது. இரண்டே நிமிடம்தான் ஆயிற்று. ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. சரி, தம்பி, எவ்வளவு வேண்டும் என்றேன். அவர் தன்னுடைய முதலாளிக்குப் போன் போட்டுப் பேசினார் பிறகு 200 ரூபாய் கேட்டார்.
அப்போதுதான் நான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட விசயம் உறைத்தது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் அவர் கேட்ட ரூபாயைக் கொடுத்தேன். முச்சக்கர உந்தின் ஓட்டுனரிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன். அவர் சளைத்தவரா என்ன? 100 ரூபாய் வேண்டும் என்றார். பேசாமல் அதையும் கொடுத்தேன். எல்லாவற்றையும் திரு. சனி பகவான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அவ்வளவுதான். மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். மறுநாள் இலவச பராமரிப்புக்காக பணிமனையில் விட்டேன். அங்கு வழக்கமான என் வண்டியைப் பராமரிக்கும் பணியாளர் பிரிந்து கிடக்கும் ரப்பர் பட்டைகளைப் பார்த்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டார்.
நான் நடந்தவைகளைச் சொன்னேன். சரீங்க, இனி மேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ( என் வயது காரணமாக என்ன மடத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை) என்று சொல்லி விட்டு எல்லா பராமரிப்பு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார். ரப்பர் பட்டைகளை மாற்ற ஆயிரம் ரூபாய் ஆயிற்று. எல்லாம் முருகனின் அருள் என்று எடுத்துக்கொண்டேன்.
இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், மடத்தனம் செய்வதில் தவறில்லை, ஆனால் ஒரு மடத்தனம் செய்தவுடன் அதை உணர்ந்து உடனே சரியான ஆளிடம் சென்று விடவேண்டும் என்பதுதான்.
சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் திறமை வெளிப்படும். அந்த வகையில் நான் கெட்டிக்காரன்.
சரியான நபரை தேர்ந்தெடுத்தற்கு காரணமான திரு. ச.பகவானுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்... ஹா... ஹா...
பதிலளிநீக்குநம் தவறுகளிலிருந்து மட்டுமல்ல, நண்பர்களின் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இன்று ஒரு பாடம் தெரிந்து கொண்டேன்!
பதிலளிநீக்கு:)))
நம் தவறுகளிலிருந்து மட்டுமல்ல, நண்பர்களின் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இன்று ஒரு பாடம் தெரிந்து கொண்டேன்!
பதிலளிநீக்கு:)))
தாங்கள் பெற்ற அனுபவம் எங்களுக்குப் பாடம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபதிவில் இனி முடிந்த வரை தமிழில் எழுத இருப்பதை அறிந்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள்! Car என்பதை மகிழுந்து என்றும் சொல்லலாம். அனுபவங்கள் தான் படிப்பினையைத் தருகின்றன என்பதை அறியாதவர் நீங்கள் அல்லர். ஒரு வேலை முருகனுக்கு உண்டியலில் நீங்கள் சரியாக காணிக்கை போடவில்லை போலும். அதுதான் இப்படி பழி வாங்கிவிட்டார். எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஆனாலும் சகலத்தையும் தாங்கள் தமிழ் படுத்தியது கண்டு தங்களின் தமிழ் பற்றை எண்ணி பெருமை கொண்டோம். இளையவர்கள் இதனை நோக்கி சிந்தித்து செயல்படவேண்டும்.
பதிலளிநீக்குபதிவு மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குமலர்
சிற்றுண்டி, தெரியும் அதென்ன ஐயா பேருண்டி புதுமையாக இருந்தாலும் ரசித்தேன் யதார்த்தமான சம்பவத்தை நகைச்சுவையாக விவரித்த விதம் அருமை
பதிலளிநீக்குஇதே சம்பவம் அபுதாபியில் எனக்கும் நடந்து இருக்கிறது தாங்களாவது சாதாரணமாகத்தான் அடைத்தீர்கள் நான் வண்டி இஞ்சின் ஓடிக்கொண்டு இருக்கும்போது கதவை அடைத்து விட்டேன் ஐந்து நிமிட வேலைதான் 250 திர்ஹாம்ஸ் அதாவது இந்திய ரூபாய் – 4250.00
தமிழ் மணம் 4
தமிழுக்கு என்ன பரிதாபமான நிலை பார்த்தீர்களா?
நீக்குஒரு ஊரில் புதிதாக வந்தவன் அந்த ஊர்க்காரனிடம் கேட்டானாம். ஐயா, இந்த ஊரில் புகைவண்டி நிலையம் எங்குள்ளது. என்றானாம்.அதற்கு அந்த ஊர்க்காரன் தெளிவாச் சொல்லுங்க, நீங்க கேக்கறது புரியலைங்க என்றானாம் இவன் அதுதாங்க ரயில்வே ஸ்டேஷன் அப்படீன்னானாம். அதற்கு அந்த உள்ளூர்க்காரன் மொதல்லயே இப்படி விவரமா தமிழ்ல கேட்டிருக்கலாம்ல, என்னைக் கொழப்பீட்டியே என்றானாம்.
ஆக மொத்தம் தமிழர்களுக்கு எதையும் ஆங்கிலத்தில் சொன்னாத்தான் புரியும். இது தெரியாமத்தான் பெருமாள் முருகன் தன் புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டு மாட்டிக்கொண்டார்.
சிற்றுண்டி = Tiffin
பேருண்டி = Full Meals
இப்பத் தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு அரபி தெரியாது. தெரிந்திருந்தால் அதிலும் சொல்லியிருப்பேன். இந்தி ஓரளவு தெரியும். சிற்றுண்டி என்றால் नाबठा பேருண்டி என்றால் बठा खाना
Hope now you are clear?
இன்னும் எதாச்சும் கேட்டீங்கன்னா அப்புறம் ஒரு தனிப்பதிவு போட்டிடுவேன். ஜாக்கிரதை!
ஐயா பேருண்டி என்பதை புரிந்து கொண்டேன் ஆனால் முதல் முறையாக படிக்கின்றேன் ஆகவே கேட்டேன்
நீக்குதங்களின் கிந்தி புலமை கண்டு சந்தோஷம் நானும் முடிந்த அளவு தமிழ் வார்தைகளைத்தான் எழுதுவேன் மேலும் கேள்வி கேட்கிற புள்ளைகளைத்தானே வாத்தியார்களும் விரும்புவார்கள்.
விளக்கவுரைக்கு நன்றி.
அன்பு நண்பருக்கு,
நீக்குசிற்றுந்து, பேருந்து என்கிற வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றன அல்லவா? அந்தத் தாக்கத்தில் சிற்றுண்டி, பேருண்டி என்று எழுதிவிட்டேன். எழுதும்போது பெரிதாகச் சிந்திக்கவில்லை. நீங்கள் கேட்டபோதுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் எழுதினதை நானே ஆதரிக்காவிட்டால் எப்படி? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று மார் தட்டும் ஆம்பிளையல்லவோ? ஆகவே ஒரு சப்பைக்கட்டு கட்டினேன்.
இதுவரைக்கும் இந்த பேருண்டி வார்த்தையை யாரும் உபயோகித்ததாகத் தெரியவில்லை. இனிமேல் உபயோகப் படுத்தட்டுமே. தமிழ்த் தாய்க்கு ஏதோ நம்மாலான சிறு தொண்டு.
வணக்கம் ஐயா தங்களின் விளக்கவுரை அருமை சீறூந்து, பேரூந்திலிருந்து சிற்றுண்டி, பேருண்டி என்று எழுதிய தங்களின் யோசனை அருமை நானும் புலக்கத்தில் இல்லாத வார்த்தைகளை புதிதாக அறிமுகப்படுத்துவதில் விருப்பம் உள்ளவன் தங்களைப்போலவே...
நீக்குஒரு வார்த்தை நம்மால் வெளியானது என சரித்திரம் சொன்னால் (சொல்லுமா ?) சந்தோஷம் தானே...
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட விடக்கூடவே கூடாது உண்மை உண்மை.
எனது இந்த வருடத்தின் முதல் பதிவு (எமனேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்) இதில் ‘’விபச்சாரன்’’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கின்றேன் தங்களுக்கு நேரமிருப்பின் படித்தால் மகிழ்ச்சி எனக்கு.
நன்றியுடன்
கில்லர்ஜி
கண்டிப்பாகப் பார்க்கிறேன்.
நீக்கு1300 ரூபாய் செலவு செய்து ஒரு பாடத்தைக் கற்று வந்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குதம +1
அனுபவத்தில் இருந்துதான் பாடம் கற்க முடிகிறது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குபதிவு அருமை....
பதிலளிநீக்குமுருகன் இப்படிப்பண்ணிட்டானே....
ஐயா
பதிலளிநீக்குஇனிமேலாவது கவனமாக இருக்கவும்.நாலாவது பொண்டாட்டி ஒன்னாவது பொண்டாட்டியைக் கூட்டிக் கொண்டு வந்ததற்கு கோபம் வந்து உங்களை வெளியே தள்ளி கதவைச் சாத்தி விட்டாள்.
--
Jayakumar
இனி சர்வ ஜாக்கிரதையாக இருக்கப்போகிறேன், ஜெயகுமார். எதையும் மூடமாட்டேன். உடம்பைத்தான் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறேன்?
நீக்குசுவாரசியமாக இருந்தது பதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅனுபவம் தந்த பாடம். இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பீங்க!
பதிலளிநீக்குயானைக்கும் அடி சறுக்கும் .அனுபவமே பாடம் . மறுபடியும் கருத்து பெட்டி மீண்டு வந்ததில் மகிழ்ச்சி 😁😆😊
பதிலளிநீக்கு