உணவு ரசாயனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு ரசாயனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மாவுச்சத்து உடலில் சக்தியாக மாறும் அதிசயம்

இது ஒரு மீள் பதிவு


மாவுச்சத்து சக்தியாக மாறும் அதிசயம்


இந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை பார்ப்போம்.

அனைத்து மாவுச்சத்துக்களும் அடிப்படையில் சர்க்கரையே. நூற்றுக்கணக்கான சர்க்கரை மூலகங்கள் பிணைந்து மாவுச்சத்தாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாவுச்சத்து திரும்பவும் சர்க்கரையாக மாறினால்தான் மனிதனுக்கு உபயோகமாகும். இந்த மாற்றம் மனிதனுடைய இரைப்பையிலும் சிறுகுடலிலும் ஏற்படுகிறது. இவ்வாறு மாவுச்சத்து சர்க்கரையாக மாறியபின் அந்த சர்க்கரை இரத்தத்தினால் உறிஞ்சப்பட்டு உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கிறது.


சாப்பிட்டவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது இதனால்தான். வெறும் சர்க்கரையைச் சாப்பிட்டால்தான் இரத்தத்தில் சர்க்கரை கூடும், இட்லி, தோசை, சாதம் முதலானவை சாப்பிட்டால் அவ்வாறு சர்க்கரை கூடாது என்று இன்றும் பல சர்க்கரை நோயாளிகள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று அவர்கள் உணரவேண்டும்.


சர்க்கரை சக்தியாக மாறுவது எப்படி?

(இந்தத் தலைப்பை Ctrl + click செய்தால் இதைப் பற்றிய விரிவான ஆங்கிலக் கட்டுரைக்கு செல்லலாம்.) 


மாவுச்சத்து இரைப்பையை அடைந்தவுடன் பல என்சைம்களினால் ஜீரணமாகத் தொடங்குகிறது. இந்த ஜீரணம் சிறுகுடலிலும் தொடர்கிறது. இதன் காரணமாக மாவுச்சத்து குளுகோஸ் ஆக மாறி, இரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது. சாப்பிட்டவுடன் இந்த சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிக அளவில் இருக்கும். அத்தனை சர்க்கரையும் உடலுக்கு உடனடியாகத் தேவைப்படுவதில்லை. ஆகவே அதிக அளவில் இருக்கும் சர்க்கரையை, உடல் கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. பிறகு இரத்தத்தில் குளுகோஸ் குறையும்போது கல்லீரலில் இருந்து சர்க்கரை இரத்தத்திற்கு வருகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை முழுவதும் குறைந்து போனால் அப்போது பசி ஏற்படுகிறது. இது "உடலில் சர்க்கரை குறைந்து விட்டது, நீ உணவு சாப்பிடவேண்டும்" என்று இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாகும். இது இயற்கை மனிதனுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்.

இந்த மாதிரி குளுகோஸ் கல்லீரலுக்குள் போவதற்கும் திரும்ப வெளியில் வருவதற்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டால் இந்த வேலை நடை பெறாது. அப்போது சாப்பிட்டவுடன் இரத்தத்தில் அதிகமாக சேரும் குளுகோஸுக்கு தேவை இல்லாததினால், இந்த அதிகப்படியான குளுகோஸை உடல் வெளியேற்றி விடும். ஏனென்றால் அந்த அதிக அளவு குளுகோஸ் இரத்தத்தில் இருந்தால் பல அவயவங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். குறிப்பாக கண்கள் பாதிப்படையும். தேவைக்கு அதிகமாக எது இருந்தாலும் உடல் அதை கழிவுப்பொருள் என்றே எடுத்துக்கொள்ளும்.


இந்த அதிக குளுகோஸை வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகங்களின் மேல் சுமத்தப்படுகிறது. உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் எதுவானாலும் அவைகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். தன்னுடைய வழக்கமான பொறுப்புகளுடன் இந்த சர்க்கரையை வெளியேற்றும் பொறுப்பும் கூடினால் சிறுநீரகங்கள் என்ன செய்யும்? ஸ்ட்ரைக் செய்யும். டாக்டர்கள் சர்வ சாதாரணமாக "கிட்னி பெயிலியர்" என்று சொல்லி விடுவார்கள். சரியான சமயத்தில் இதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்தால் தப்பிக்கலாம். நோய் முற்றிய பிறகு வைத்தியம் செய்தால் குணம் காண்பது சற்று கடினம். இதுதான் நீரிழிவு நோய் என்று கூறப்படுகிறது.


இரத்தத்தில் சேரும் குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.  

என்ன, இந்த ஆள்  இந்தப் பதிவை 
டிவிக்களில் வரும் மெகாத் தொடர்கள் போல் நீட்டிக்கொண்டு போகிறானே என்று சலிப்படைய வேண்டாம். ஒரு பதிவில் ஒரு செய்தியை மட்டும் கொடுத்தால்தான் அது மனதில் நன்றாகப் பதியும். அதனால்தான் இந்த ஜவ்வு மிட்டாய் விவகாரம். 

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மிளகாய் ஊறுகாய் செய்யும் முறை.



முதலில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மிளகாய் என்றதும் காய்ந்த மிளகாயை நினைத்தவர்கள் அனைவரும் "ஒன் ஸடெப் பேக்". ஊறுகாய் போடுவதற்கு உகந்தது பச்சை மிளகாயே.

போன பதிவில் "நான் படித்த படிப்பென்ன" என்று எம்ஜியார் பாணியில் பாடினேன் அல்லவா? அப்படி நான் என்ன படித்தேன் என்று அறிய ஆவல் கொண்டிருப்பீர்கள் என்று அறிவேன். ஆகவே நான் படித்த பெருமைகளைச் சிறிது கூறிவிட்டுப் பிறகு ஊறுகாய் சமாச்சாரத்திற்குப் போவோம்.

நான் படித்தது விவசாய வேதியல் படிப்பு அதாவது "கெமிஸ்ட்ரி".  இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பீர்கள். சினிமாவில் குறிப்பாக "கெமிஸ்ட்ரி" வொர்க்அவுட் ஆகலைன்னு இப்ப அடிக்கடி சொல்றாங்களல்லவா? அதுக்கு அர்த்தம் அவுங்க எதிர்பார்த்த மாதிரி அந்தப் படம் வெற்றி பெறவில்லை அல்லது அந்தக்காட்சி எதிர் பார்த்த மாதிரி வரவில்லை, இப்படி பல அர்த்தங்கள்.

உலகம் முழுவதும் இந்த "கெமிஸ்ட்ரி" யினால்தான் இயங்குகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். "கெமிஸ்ட்ரி" இயங்காத இடமே இல்லை. ஊறுகாய் போடுவதும் சுத்தமான "கெமிஸ்ட்ரியே" தவிர வேறு ஒன்றும் இல்லை.

இப்போது மிளகாய் ஊறுகாய்க்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

1. நல்ல புதிதாகப் பறித்த பச்சை மிளகாய் -
       நன்றாக கழுவி  ஒரு வெள்ளைத் துணிமேல் பரப்பி
       பேஃனுக்கு அடியில் வைத்து ஈரம் போகும் அளவிற்கு             உலர்த்தியது                                                               -  500 கிராம்.
2. தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி                -   250 கிராம்.
3. தோல் நீக்கிய பூண்டு                                        -    250 கிராம்
4. பொடித்த கல்லுப்பு                                             -   100 கிராம்
5.  பெருங்காயப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
6.  நல்ல நல்லெண்ணை - 100 மில்லி
7.  கடுகு   - ஒரு டேபிள் ஸ்பூன்
8. சீரகம்  - அரை டேபிள் ஸ்பூன்
9. கருவேப்பிலை - ஒரு இணுக்கு
10. இரண்டு எலுமிச்சம்பழத்திலிருந்து எடுத்த சாறு.

செய்முறை.

முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து  
ஈரம் இல்லாமல் துடைத்து வைத்த ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் இஞ்சியையும் பூண்டையும் அரைத்து அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நன்றாக கலக்கவும். உப்பைச் சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். (எலுமிச்சை இல்லாவிட்டால் 100 மில்லி வினிகர் சேர்த்துக்கொள்ளலாம்)

பாத்திரத்தை மூடி மூன்று நாட்கள் வைத்திருக்கவும். மூன்றாம் நாள் அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு பாதி பொரிந்து கொண்டிருக்கும்போது சீரகத்தைப் போடவும். உடனே கருவேப்பிலையைப் போடவும். பத்து செகன்ட் கழித்து வாணலியை இறக்கி வைத்து பெருங்காயத்தைப் போடவும், பிறகு தாளித த்தை மிளகாய் அரைத்து வைத்திருப்பதின் மேல் கொட்டி நன்றாக கிளறி விடவும்.

ஊறுகாயை உங்களுக்கு விருப்பமான (நன்கு கழுவி, வெயிலில் இரண்டு மணி நேரம் காயவைத்த) ஜாடி அல்லது பாட்டிலில்  போட்டு வைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான். சுவையான காரசாரமான மிளகாய் ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, தயிர் சாதம் அமிர்தமாய் சுவைக்கும். ஒரு குறிப்பு - பொரியல் சாப்பிடுகிற மாதிரி வழித்து நாக்கில் வைக்காதீர்கள். ஒரு விரலால் நொட்டு நாக்கில் வைத்தால் போதும்.

ஒரு எச்சரிக்கை; வயிற்றில் அல்சர் இருப்பவர்கள் தங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகு இந்த ஊறுகாயை உபயோகிக்கவும். அப்படிச்செய்யாமல்   இந்த ஊறுகாயைச் சாப்பிட்டால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பில்லை.

பிற்சேர்க்கை: இதோ நான்கு மாதங்களுக்கு முன் நான் போட்ட மிளகாய் ஊறுகாய்.




செவ்வாய், 10 நவம்பர், 2015

மேக்கி நூடுல்ஸ்

                                               Image result for மேக்கி நூடுல்ஸ்

ஆறு மாத த்திற்கு முன் 10-6-2015 அன்று மேக்கி நூடுல்ஸ் பற்றி நான் போட்ட பதிவு.

லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_10.html

அதில் கடைசி பாரா;

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

இன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்தி. 100 நகரங்களில் மேக்கி நூடுல்ஸ்சுக்கான தடை நீக்கப்பட்டது. ஜிங்க் மற்றும் எம்எஸ்ஜி, ஜீபூம்பா என்று காணாமல் போயிற்று. எல்லோரும் தீபாவளிக்கு மேக்கி நூடுல்ஸ் சாப்பிட்டு ஆனந்தமாக இருக்க நரகாசுரனை வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க மேக்கி.

புதன், 16 ஜூலை, 2014

அத்தியாவசிய உணவு பகுப்புகளும் அவற்றிலுள்ள உண்மைகளும்.


இது ஒரு தொடர் பதிவு. நாம் உண்ணும் உணவில் உள்ள தத்துவங்களை எளிமையாக விளக்க முனைகிறேன். விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் விளக்குகிறேன்.

மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அவனுடைய உடல் பராமரிப்புக்கும் அவன் வேலை செய்ய சக்தி கிடைக்கவும் உணவு பயன்படுகிறது. ஆனால் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவைகளின் வகைகள் யாவை என்று உணர்ந்து நாம் சாப்பிடுவதில்லை. வயிறு நிறைந்து பசி தீரவேண்டும் என்பதே சாப்பிடுபவரின் குறிக்கோளாக இருக்கிறது.

அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. விளம்பரங்களில் சொல்லப்படும் உணவுக் கருத்துகள் யாவும் வியாபாரத்திற்காக சொல்லப் படுபவை. அவைகளில் உண்மை இருக்கிறது. ஆனால் உண்மையின் அளவு 1 சதம் இருக்கலாம். யாராவது கேஸ் போட்டால் கோர்ட்டில் சொல்வதற்காக இதை வைத்திருக்கிறார்கள். ஆகவே விளம்பரங்களை முழுமையாக நம்பாதீர்கள்.

உணவுகளில் மனிதனுக்குத் தேவைப்பட்ட அத்தியாவசியச் சத்துகள் எவையென்றால்:

1. மாவுச்சத்து. 

இதுதான் மனிதனுக்கு வேலை செய்வதற்கான சக்தியைக் கொடுக்கிறது.

உதாரணங்கள்:

 *  அரிசி  * கோதுமை  *  ராகி  * சோளம் முதலானவை.

இவைகளில் இரண்டு வகை இருக்கிறது.

ஒன்று - மென்மையானவை.

இரண்டு - மென்மையில்லாதவை.

அரிசியில் கைக்குத்தலரிசி மென்மையில்லாதது. ஆனால் அதில் மனிதனுக்கு தேவையான சத்துகள் வீணாகாமல் அப்படியே இருக்கின்றன. அதை இயந்திரத்தில் கொடுத்து பல முறை மேல் தோலை உரித்து (தோல் உரிப்பது என்பது இதுதான்) வெறும் சக்கையான உள்புற அரிசியாக்கி கிடைப்பது மென்மையான அரிசி.

கடைகளில் அரிசி வாங்கும்போது நன்கு வெண்மையாக இருப்பதைத்தான் வாங்குகிறோமே தவிர அதன் சத்துகளின் தரத்தை நாம் பார்ப்பதில்லை. இன்றைய நாட்களில் சிறுவர்களுக்குக் கூட நீரிழிவு நோய் வருவது இதனால்தான்.

காரணம் என்னவென்றால் இத்தகைய வெண்மைப்படுத்தப்பட்ட அரிசி ரகங்களில் மாவுச்சத்தைத் தவிர மற்ற சத்துக்கள் எதுவும் இல்லை. இத்தகைய அரிசி உணவு எளிதாக ஜீரணம் ஆகி விடும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு இதுதான். ஆனால் கடின உடல் உழைப்பாளிகளுக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் இது தீமையே விளைவிக்கும்.

அதே போல் நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவைகளும் தரம் குறைந்தவைகளே. ஆனால் விளம்பரங்களில் இத்தகைய சுத்தம் செய்து, நல்ல சத்துக்களை நீக்கிய, பொருட்களுக்கு அதிக விளம்பரம் செய்து அதன் விலையை ஏற்றுகிறார்கள். சரி, இனி நாம் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு நிச்சயம் போக முடியாது. இப்போது இந்த சிக்கலிலிருந்து விடுபடுவதைப் பற்றி யோசிப்போம்.

இந்த மாவுச்சத்துதான் மனித உழைப்பிற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. அதனால் இதைத் தவிர்க்க முடியாது. ஒரு கிராம் மாவுச்சத்து நான்கு கலோரி சக்தியைக் கொடுக்கிறது. ஒரு கிலோ அரிசி 50 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு கிராம் அரிசி  ஐந்து பைசாதான் ஆகிறது. ஐந்து பைசாவில் நான்கு கலோரி சக்தி கிடைக்கிறது. ஏறக்குறைய ஒரு கலோரிக்கு ஒரு பைசாதன் ஆகிறது. மனிதனின் உணவில் மிகவும் சலீசான உணவு இதுதான். அதனால்தான் இத்தகைய உணவுகளை வசதி குறைந்தவர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள்.

இந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.