தற்காலத்திய சிறுவர்களிடம் கோந்து தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள், கோந்தா, அப்படீன்னா என்னங்க, என்று கேட்பார்கள். அது வந்து Gum அப்படீன்னு நீங்க உபயோகிக்கிறீங்களே அதுதான் என்றால், மொதல்லயே ஒழுங்கா Gum னு கேட்டிருந்தா சொல்லியிருப்போம்ல என்று பதில் வரும்.
நான் சின்னப் பையனா இருக்கறப்ப கோந்து வேணும்னா வேப்ப மரத்தைத் தேடிப்போவோம். அதில் ஏற்பட்டுள்ள சிறு காயங்களிலிருந்து வேப்பம் பிசின் வழிந்து காய்ந்து இருக்கும். அதை எடுத்து வந்து தொட்டாங்குச்சியில் (அதாங்க தேங்காய் தொட்டி அல்லது சிரட்டை) போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் மூன்று நாளில் கோந்து தயார்.
அந்தக் தொட்டாங்குச்சி சாய்ந்து விடாமல் பக்கத்தில் சிறு கற்களினால் அணைப்பு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தொட்டாங்குச்சி சாய்ந்து கோந்து சிந்திப்போகும். இந்தக் கோந்தை எடுக்க ஒரு பென்சில் தடிமனான குச்சியை அதில் போட்டு வைக்கவேண்டும்.
இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் கோந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தோம். அந்தக் காலத்தில் கோந்தின் முக்கியமான உபயோகம் என்னவென்றால் பட்டம் விடுவதற்கான நூலுக்கு மாஞ்சா போடுவதுதான். நூலுக்கு மாஞ்சா போடுவது என்பது ஒரு கலை. அதைப்பற்றி பிறகு தனியாக ஒரு பதிவு போடுகிறேன். மாஞ்சா நூல் ஒரு கொலைக் கருவியாக தற்காலத்தில் மாறிவிட்டது காலத்தின் கோலம்.
தற்காலத்தில் கோந்து பல விதங்களில் வந்து விட்டன. செயற்கை கோந்துகள் ஏறக்குறைய இயற்கை கோந்துகளை மறக்கடிக்க வைத்துவிட்டன. ஆனாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அந்தக் காலத்து பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
இப்போது நகர வாழ்க்கையில் வேப்ப மரங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நாட்டு மருந்துக் கடைகளில் இப்பொழுதும் கோந்து கிடைக்கிறது. 100 கிராம் 15 ரூபாய். அதை வாங்கிக்கொண்டு வந்து பழைய மருந்து பாட்டிலில் ஊறவைத்துப் பயன்படுத்திக்கொண்டு வந்தேன். இப்போது ஒரு பழைய காலி கேம்லின் கோந்து பாட்டில் என் பேரனின் தயவால் கிடைத்தது. அதை உபயோகப் படுத்துகிறேன். கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கோந்துகள் இதை விட விலை குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோந்தை உபயோகப்படுத்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி, ரெடிமேட் கோந்துகளினால் கிடைப்பதில்லை.
பழைய ஆட்களைத் திருத்துவது மகாக் கடினம்.