சனி, 15 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 1

                                       Image result for chemistry lab
நான் மண்ணியல் துறையில் முதுகலைப் படிப்பு (1959-61) படித்து முடித்தவுடன் இரண்டு வருடங்கள் பரம்பிக்குளம் - ஆளியார் பாசனப் பகுதியில் மண் ஆய்வுத்திட்டத்தில் பணி புரிந்தேன். அந்த ஆய்வுத்திட்டம் முடியும் வரை அதில் இருந்து அதன் இறுதி அறிக்கையையும் தயார் செய்தேன். அந்த அறிக்கை பலராலும் பாராட்டப்பெற்று, உலக வங்கிக்காரர்கள்  அந்த அறிக்கையின் பல பிரதிகளை வாங்கிப்போனார்கள். பரம்பிக்குளம் - ஆளியார் பாசனத் திட்டம் உலக வங்கியின் உதவியுடன்தான் செயல்படுத்தப் பட்டது.

பிறகு என்னை ஆசிரியப் பகுதிக்கு மாற்றினார்கள். முதலில் ஆய்வகத்தில் செயல்முறைப் பயிற்சி கொடுக்கும் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன்.
விஞ்ஞானப் படிப்புகளில் இந்த வேதியல் செயல்முறைப் பயிற்சிகள்தான் கடினமானவை மற்றும் ஆபத்து நிறைந்தவை. குறிப்பாக கந்தக அமிலம் பல சோதனைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டி வரும்.

அந்த கந்தக அமிலத்தை சோதனைக் குழாயில் அரை சிசி எடுத்து ஒரு சோதனை செய்யவேண்டும். அதற்குள் நாங்கள் கொடுக்கும் ஒரு ரசாயனத்தை ஒரு சிட்டிகை அளவு போட்டு அந்த சோதனைக்குழாயை "புன்சன்பர்னரில்" காய்ச்ச வேண்டும். காய்ச்சின பிறகு அதை வெளியில் எடுத்து முகர்ந்து பார்க்கவேண்டும். அதில் வரும் வாசனையை வைத்து அந்த ரசாயனம் என்னவாக இருக்கலாம் என்று யூகிக்கலாம்.  நிச்சயமாக அது என்ன ரசாயனம் என்று உறுதி செய்ய வேறு பல சோதனைகள் செய்யவேண்டும்.
                         
                                                          Image result for test tube

இப்படி செய்யும்போது பல மாணவர்கள் அரை சிசி கந்தக அமிலம் எடுப்பதற்குப் பதிலாக 2 அல்லது 3 சிசி எடுத்து விடுவார்கள். அதைக் காய்ச்சி முகரும்போது அந்த அமிலம் கொதித்து வெளியே சீறி அடிக்கும். அது நேராக அந்த முகரும் மாணவனின் கண்ணுக்குள் போகும்.

கந்தக அமிலத்தின் குணங்கள் தெரியாதவர்களுக்காக ஒரு வார்த்தை. அமிலங்களிலேயே வீரியம் மிகுந்ததுவும் மனித உடலுக்கு மிகவும் கேடு விளவிக்கக் கூடியதுவும் கந்தக அமிலமே ஆகும். உங்கள் உள்ளங்கையில் மூன்று சொட்டு கந்தக அமிலத்தை விட்டுவிட்டு அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு இரண்டு நிமிடம் நின்றீர்களேயானால், உங்கள் உள்ளங்கையை ஓட்டை போட்டுவிடும்.

இதே கந்தக அமிலம் ஒரு பங்கு, நைட்ரிக் அமிலம் மூன்று பங்கு சேர்த்து கலக்கினால் வரும் திரவத்திற்கு "ராஜ அமிலம்" (Aqua regia)  என்று பெயர். இதைத்தான் தெருவில் தங்க நகை பாலீஷ் போடுகிறவர்கள் கொண்டு வருவார்கள். உங்கள் மனைவியின் 10 பவுன் நகையை இதில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்தால் அந்த நகை அப்படியே பளபளக்கும். கூடவே அந்த நகை இரண்டு பவுன் எடை குறைந்திருக்கும். அந்த ஐந்து நிமிடங்களில் இரண்டு பவுன் தங்கத்தைக் கரைத்துவிடக்கூடிய ஆற்றல் அந்த அமிலத்திற்கு உண்டு.
                                      Image result for gold chain design images

இப்படிப்பட்ட கந்தக அமிலம் கண்ணில் பட்டால் கண் என்ன ஆகும்? அந்த மாதிரி யாராவது மாணவனுக்கு கண் பாதிக்கப்பட்டால் அந்த விளைவிற்கு யார் பொறுப்பு? அந்த வகுப்பில் இருக்கும் ஆசிரியர்தான் பொறுப்பாவார். கந்தக அமிலத்தை எச்சரிக்கையாக கையாள்வதற்கு மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வரும்.
இதனால் நான் என்ன செய்வேனென்றால் அப்படி யாராவது அரை சிசிக்கு மேல் கந்தக அமிலத்தை சோதனைக்குழாயில் எடுத்திருந்தால் உடனே அவனை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டு வருகைப் பதிவேட்டில் அவனுக்கு ஆப்சென்ட் போட்டு அவனை சோதனைச்சாலையிலிருந்து வெளியே அனுப்பி விடுவேன். இதை மற்ற மாணவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்தத் தவற்றை எப்போதும் செய்ய மாட்டார்கள். வெளியில் அனுப்பிய மாணவனும் ஆயுளுக்கும் இதை மறக்க மாட்டான்.

வெளியில் அனுப்பிய மாணவன் சோதனைச்சாலைக்கு வெளியில்தான் நான்று கொண்டிருப்பான். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவனை உள்ளே கூப்பிட்டு சோதனைகளைத் தொடரும்படி கூறுவேன். ஆனால் ஆப்சென்ட் போட்டது போட்டதுதான்.


மாணவர்களுக்கு ஒவ்வொரு செயல்முறை வகுப்பிலும் நான் சொல்வது. இங்கு நான் சொல்வது போல்தான் செய்யவேண்டும் மாற்றிச்செய்தால் உங்களை வகுப்புக்கு வெளியில் அனுப்பி விடுவேன் என்பதுதான்.

அந்தக் காலத்தில் நானும் என்னுடன் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்களும்
இவ்வாறு சர்வாதிகாரம் செலுத்திக் கொண்டு இருந்தோம். மாணவர்களும் எங்கள் கண்டிப்பின் பின் உள்ள மாணவர்களின் நலனை உணர்ந்திருந்தார்கள்.   பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேரும் மாணவர்கள் "சார், நீங்கள் அன்று அவ்வளவு கண்டிப்புடன் இருந்ததால்தான் நாங்கள் ஒழுங்காகப் படித்தோம், நீங்கள் சொல்லிக் கொடுத்தவைகள் இன்றும் மறக்காமல் இருக்கிறது" என்பார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன விருது வேண்டும்?

மாணவர்களின் குணங்கள் பற்றி நன்னூலில் சொல்லியிருப்பது.



கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்னவார் வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்.

இந்த நன்னூல் சூத்திரத்தை வருட ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சொல்லி இதன் பொருளையும் கூறுவேன். இதுதான் மாணவர்களுன் இலக்கணம். அப்புறம் நாங்கள் நடந்து கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் என் வகுப்புகளில் நான் சொல்வதுபோல்தான் நடக்கவேண்டும் என்று சொல்லி விடுவேன்.

பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரை டிராயரும் காக்கி அரைச் சட்டையும்தான் யூனிபார்ம். வேறு சட்டை, பேன்ட் போடுடக்கொண்டு வந்தால் அனுமதி இல்லை. சட்டையின் அனைத்து பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். மேல் பட்டன்களைப் போடாமல் திறந்த மார்புடன் வருகிறவர்களை வெளியே அனுப்பப்படும்.. வருகைப் பதிவேட்டில் பெயர்கள் வாசித்து முடித்தவுடன் பரிசாதனைச்சாலையின் கதவு மூடப்பட்டு விடும். அதற்குப் பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் அது அந்தக் காலம். இன்று அப்படியெல்லாம்  செய்தால் அடுத்த நொடியில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக வெளியில் போய் வாத்தியார் ஒழிக என்று கோஷம் போடுவார்கள். அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.

தொடரும்.

15 கருத்துகள்:

  1. நல்ல ஆசிரியர்! நல்ல மாணவர்கள்! உங்களிடம் படித்தவர்கள் இன்று நல்ல நிலைமையில்தான் இருப்பார்கள். (இன்றைய வலைப் பதிவர்களில் யாரேனும் ஒருவர் உங்கள் மாணவராகக் கூட இருக்கலாம்.)

    பதிலளிநீக்கு
  2. மதுரை சரவணன் (அவர் ஒரு [தலைமை] ஆசிரியர்) ஃபேஸ்புக்கில் இது சம்பந்தமாகக் கருத்துகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்வது போலத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இதனை சர்வாதிகாரம் என நினைக்கவேண்டியதில்லையே. மாணவனது நல்லதுக்குத் தானே செய்தீர்கள். அந்த மாணவர்களும் உங்களை நினைத்துப் பார்த்திருப்பார்கள். சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஐயா நீங்கள் ஒரு சனநாயக வல்லாட்சியராக (Democtaric Dictator) இருந்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். ஆசிரியர்கள் என்றால் அவ்வாறு தான் இருக்கவேண்டும். இல்லாவிடில் பதின்ம வயதில் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கண்டிப்பு இல்லாவிடில் திசை மாறிப் போக வாய்ப்புண்டு. எனக்கு இருந்த ஆசிரியர்களும் அவ்வாறு தான் இருந்தார்கள்.நாங்களும் படிக்கும்போது அது குறித்து ஆசிரியர்கள் மேல் வெளியே சொல்லவொணா கோபம் கொண்டிருந்தாலும் பின்னாட்களில் அவர்கள் எங்களை அவ்வாறு நடத்தியது சரியே என்று உணர்ந்திருக்கிறோம். இல்லாவிடில் தரிசு நிலங்கள் போல் இருந்த நாங்கள் விளை நிலங்களாக மாறியிருக்கமுடியாதல்லவா? (வேளாண்மை மொழியில் சொல்லியிருக்கிறேன் ஐயா. சரிதானே?)

    பதிலளிநீக்கு
  5. Freedom is not about giving largely, but wisely !!
    நீங்கள் செய்திருப்பதும் அது தான்.
    அது எக்காலத்துக்குமே தேவை.
    ( என்னுடைய ஆரம்பப்பள்ளி டாப்ஸிலிப்-ல் துவங்கியது)
    வந்தனம் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு தகவல் தொடர்கிறேன் ஐயா.
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் ஓர் ஆசிரியர் என்று அறிந்து வியந்தேன்! இது போன்ற கண்டிப்பு மாணவர்களிடம் காட்டவேண்டியது அவசியமே! நீங்கள் சொல்வது போல இன்று அந்த கண்டிப்பை காட்டமுடியாது என்பதும் உண்மை!

    பதிலளிநீக்கு
  8. நல்லாசிரியர்.... இப்படி கண்டிப்பாக இருப்பதும் பல சமயங்களில் அவ்சியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் செய்தது தண்டிப்பு அல்ல;
    அது கண்டிப்பு!

    .

    பதிலளிநீக்கு
  10. அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.
    முற்றிலும் உண்மை

    பதிலளிநீக்கு
  11. அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.
    உண்மை ஐயா
    உண்மை
    எக்காலத்தும் அதிகாரிகள்ஆசிரியர்களுக்கு சாதகமாக பேசியதேயில்லை
    தம +1

    பதிலளிநீக்கு
  12. என் ஆசிரியர் இதை கவனிக்காமல் விட்டு கந்தக அமில சோதனைக்குழாய் வெடித்து எனது நடுவிரல் முன் பகுதியை நனைத்துச் சிதறியது. ஓடும் குளிர் நீரில் வெகு நேரம் வைத்திருந்தும் சரியாகவில்லை. உடனே என்னை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டார்கள். மருத்துவ உதவி கூட கிடைக்க வில்லை. கடைசியில் கடவுள் புண்ணியத்தில் ஒன்றுமாகவில்லை. ஆனால் விரலில் காயம் ஆறுவதற்கு வெகுநாட்களாயிற்று. அது மட்டுமல்ல விரலின் முன் பகுதியில் விட்டிலிகோ வந்ததைப்போல அந்தத் தழும்பு மறைய 40 வருடங்களுக்கு மேலாயிற்று.

    நீங்கள் செய்தது மிகச் சரியானது.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டப்படிப்பில் உள்ள அனைத்துப் பாடங்களிலும் வேதியல் செய்முறைப் பயிற்சியே மிகவும் ஆபத்து நிறைந்தது. ஆசிரியர் மிகவும் கண்காணிப்புடன் வகுப்பை நடத்தாவிட்டால் இந்த மாதிரி விபத்துகள் ஏற்பட்டு விடும். இதே கந்தக அமிலம் கண்ணில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்.

      மாணவர்களின் நலன் கருதி எங்களுக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று மிக்க கண்டிப்புடன் இருந்திருக்கிறோம். என்னுடைய வகுப்பில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை.

      நீக்கு
  13. கந்தக அமிலம் மிகவும் ஆபத்தானது..பள்ளியில் சோதனை செய்யும் போது நண்பருக்கு கையில் பட்டு அதன் விளைவு இப்போது நினைத்துப் பார்த்தாலும் பயமாக இருக்கின்றது. மேலை நாடுகளில் இது போன்று சோதனைகள் செய்யும் போது கையில் பாதிக்காத அளவு கை யுறைகளும். கண்ணில் அதற்கென்ற கண்ணாடியும் அணிந்து , ஏப்ரான் போட்டுக் கொண்டு செய்வது வழக்கம் ஐயா...

    பதிலளிநீக்கு