விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஜனவரி, 2015

மூடத்தனமான பதிவுகள்

சமீபத்தில் நான்  "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுதியது பதிவுலக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

பதிவுலகில் சில எழுதாத கோட்பாடுகள் உண்டு. இது அந்தந்தப் பதிவர்கள் தாங்களாகவே கடைப்பிடிக்கவேண்டியவை. நான் கடைப்பிடிக்கும் சில கோட்பாடுகள்.

1. பதிவில் எழுதும் கருத்துகள் அந்தந்தப் பதிவரின் சொந்தக் கருத்தானாலும், இரவல் கருத்தானாலும், அந்தக் கருத்துகளுக்கு அவர் பொறுப்பாளி ஆகிறார். அதற்கு எதிராக யாராவது பின்னூட்டம் போட்டால் அதற்கு பதிலளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு அவருக்கு உண்டு.

2. பதிவில் எழுதப்பட்ட அனைத்தும் பொதுச் சொத்தாகிறது. ஏனென்றால் இது ஒரு பொது வெளி. ஒருவர் தனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதிவிட்டு, இது என் சொந்தக் கருத்துகள். இதைப் பற்றி விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது.

2. அது மாதிரியே அந்தப் பதிவில் பின்னூட்டம் எழுதுபவர்களும் அவர்கள் கூறும் கருத்துகளுக்குப் பொறுப்பாளி ஆகிறார்கள். 

நான் எழுதிய "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்ற பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.

எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.
--
இந்தப் பின்னூட்டம் எனக்கு கோபத்தை வரவழைத்தது. (கோபம் வருவது குற்றம் அல்ல என்று நான் நினைக்கிறேன்.) அதனால் அந்தப் பின்னூட்டத்திற்கு நான் கொடுத்த பதில்.

  1. //தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.//

    அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?
    நீக்கு
  2. இந்தப் பதிலில் நான் யாரையும் குறை கூறவில்லை. இதைப் பார்த்து விட்டு திரு. தருமி அவர்கள் எழுதிய பின்னூட்டமும் அதற்கு நான் எழுதிய பதிலும்.
  3. மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
    இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்!
    உங்களுக்கும் இதைப் பற்றிக் கூறியதும் கோபம் வந்து விட்டது. உங்கள் படிப்பு, அறிவு, வயது வைத்துப் பார்க்கும் போது நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!??
    நீக்கு
  4. நண்பரே, அறிவியல் என்பதுவும் ஒரு மக்கள் இனத்தின் கலாச்சாரமும் வேறு வேறு என்று நான் கருதுகிறேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் என்பதில் நமக்குள் வேறுபாடுகள் இல்லை என்று நான் நம்புகிறேன். கலாச்சாரம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அந்தந்த இனங்களின் பழக்க வழக்கங்கள்தான். அவை அறிவியலுடன் ஒத்துப்போகவேண்டும் என்று எதிர் பார்ப்பதுதான் மூடத்தனம். அந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும். இதுதான் நான் உலக வரலாற்றிலிருந்து அறிந்து கொண்ட பாடம்.

    நான் அறிவியல் பூர்வமாக கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை உணர்கிறேன். ஆனாலும் தினமும் குளித்தவுடன் கடவுள் படத்திற்கு முன் நின்று விபூதி பூசிக்கொள்கிறேன். இது இரட்டை வாழ்வு அல்லது ஆஷாடபூதித்தனம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கையை இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிவியல் விளக்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். மனித மூளைக்கு அப்பாலும் ஏதோ ஒன்று இருக்கிறது, அது நம் வாழ்வோடு பிணைந்து இருக்கிறது என்றும் நம்புகிறேன்.

    கணவனை இழந்தவர்கள் தாங்கள் விதவைகள் என்று காட்டிக்கொள்ள விரும்பினால் காட்டிக்கொள்ளலாம். அது அவரவர்கள் விருப்பம்.

    தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை அறிவு இல்லாதவர்க்ள என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? என் கருத்துக்களை ஒத்துக் கொள்பவர்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமல்ல. அவர்களும் இனக் கலாச்சாரத்தைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்றுதான் அர்த்தம்.

    "...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? அல்லது அதற்கு வேறு ஏதாவது பொருளுடன் கிறிப்பிட்டீர்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒருவனை இன்னொருவன் அறிவில்லாதவன் என்று கூற அவனுக்கு உரிமை இல்லை. அப்படிக் கூறினால் கூறப்பட்டவனுக்கு கோபம் கொள்ள அதிகாரம் உள்ளது.
    நீக்கு
  5. திருத்தம் "கிறிப்பிட்டீர்களா" இதை "குறிப்பிட்டீர்களா" என்று திருத்தி வாசிக்கவும்.
    நீக்கு
  6. //"...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? //

    நீங்களே சொன்னீர்களே .. தெரியாத மூடனாக இருப்பதால்தானே .. அதைத் தான் நான் சொன்னேன். ஆனால் நீங்கள் //.."...க" என்பதை மசக்கவுண்டன் ..// என்றீர்களே... அது என்னங்க? ஏதோ சாதிப் பெயர் சொல்லி திட்ற மாதிரி இருக்கே... அப்படி எதுவும் மோசமாவா சொல்லியிருக்கப் போறீங்க..? இருக்காது .. இல்ல?
    நீக்கு
  7. //ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் //

    ஆஹா! இது ரொம்ப நல்லா இருக்கே... பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம். இதுவும் நம்ப கலாச்சாரம். பொம்பிளை விரதம் இருக்கணும்னா புருஷங்கிட்ட அனுமதி வாங்கணும். ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை. இதுவும் நமது கலாச்சாரம்...இப்படியே ‘நம்ப’ கலாச்சாரத்திற்குப்பெரிய பட்டியலே சொல்லலாம். ஆனா நீங்க சொல்றீங்க ...//இந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும்// அப்டின்றீங்க.... இது சரியான்னு கேட்டா கோபம் வரக்கூடாது; பதில் தான் தரணும்மய்யா.

    நீங்க ஏறக்குறைய காந்தி மாதிரியே பேசுறீங்க. அவர் சொன்னது இந்த மேற்கோள் :”சாதிகளை ஒழித்து, மேற்கத்திய சமுதாயக் கருத்துகளை நாம் மேற்கொண்டால் பிறப்பின் அடிப்படையினால் ஒவ்வொரு சாதியினரும் பரம்பரையாகத் தொடரும் வேலை அமைப்பினை விட்டொழிக்க வேண்டும். ஆனால் இதுவே சாதிகளின் அடிப்படை. பரம்பரையாக வரும் இவ்வழக்கம் அழிக்க முடியாத நிலையான ஒன்றாகும். இதனை மாற்றுவதால் எல்லாமே முரண்பட்டுப் போகும்”.
    நீக்கு

  8. திரு.தருமி ஒரு மூத்த பதிவர். எனக்கு நன்கு அறிமுகமானவர். 
  9. அவர் எழுதிய 
  10. நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!?? 
  11. என்கிற வாக்கியத்திற்கு எனக்கு இன்னும் பொருள் தெரியவில்லை.

  12. இரண்டாவதாக அவர் செய்யும் வாதத்தில் குறிப்பிட்டவை. நான் எழுதாதவற்றை எல்லாம் சொல்லி என்னை கொம்பு சீவி விடுகிறார்.

  13. உதாரணம்.
  14. 1. பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம்
  15. 2. ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை.
  16. இந்த வார்த்தைகளை நான் என் பதிவில் எங்கும் சொல்லவில்லை. இப்படி சொல்லாத வார்த்தைகளை ஒருவர் வாயில் போட்டு பிடுங்குவதுதான் கொம்பு சீவும் உத்தி.
  17. இந்த கொம்பு சீவும் உத்தி காலம் காலமாக வருவதுதான். அந்த வலையில் பலரும் விழுந்து தங்கள் நடுநிலையை இழந்து வேண்டாத வார்த்தைகளை சொல்லிவிடுவார்கள். கொம்பு சீவுபவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்.
  18. அதன் பிறகு விவாதம் திசை மாறி, முதலில் எதற்காக விவாதம் ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட்டு வெகு தூரம் போய்விடும்.
  19. முக்கிய குறிப்பு:
  20. இந்த வாதங்களை நான் ஒரு தனிப்பதிவாகப் போடுவதன் காரணம், இந்தப் பதிவுலகில் உள்ள ஒரு குறைபாடுதான். பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அதை எழுதியவர்கள், எழுதிய பிறகு அழித்து விடமுடியும். நான் அப்படி எழுதவேயில்லை என்று பின்னாளில் சொல்லவும் முடியும். அதனால் இந்த வாதங்களை யாரும் அழிக்காமல் என் நினைவில் வைத்துக் கொள்வதற்காகவும், மற்ற பதிவர்கள் பதுவுலகில் என்னென்ன நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளவும்தான்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

விவாதமும் வாக்கு வாதமும்


விவாதம் வரவேற்பிற்குரியது. ஏனெனில் இதன் மூலம் ஒரு சிந்தனைத்தெளிவு ஏற்படும். அவ்வாறு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டுமானால், பல கருத்துக்களை விவாதித்து அவைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, பிறகுதான் ஒரு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டும். 

ஆனால் பெரும்பாலான சமயங்களில் விவாதம் வாக்குவாதமாக மாறிவிடுகிறது. ஏன் இப்படி என்றால், ஒரு கருத்தை பட்சபாதமில்லாமல் விவாதிப்பதை விட்டுவிட்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வாதத்தில் வெளிப்படுத்துவதுதான். 

எந்தக் கருத்தைப்பற்றி விவாதிப்பதானாலும் அந்தக் கருத்து என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்ளவேண்டும். நிறைய சர்ந்தப்பங்களில் நாம் எதைப்பற்றிப் பேசுகிறோம் என்ற தெளிவு இல்லாமலேயே பலர் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

விவாதத்தில் பங்கு கொள்பவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை அல்லது அடுத்தவர்கள் பேரில் இருக்கும் கோபதாபங்களை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. 
எப்போது விவாதம் வாக்குவாதமாக, தனிப்பட்டவர்களை பாதிக்கும் எல்லையைத் தொடுகிறதோ அப்பொழுது அந்த விவாதத்தை நிறுத்தி விட வேண்டும். இதை அந்தக் குழுவின் மூத்த அங்கத்தினர் செய்யவேண்டும்.