புதன், 21 ஏப்ரல், 2010

நான் வேலைக்குப் போன கதை-பாகம் 3


நான் வேலைக்குப்போன கதையில் பெட்டி வாங்கப்போய், அங்கிருந்து ஆளவந்தார் கதைக்குப்போய், பிறகு விக்கிரமாதித்தன் கதையில் கொஞ்சம் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். அரும்பாவூர் அவர்கள் நான் முதல் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று அறிய ஆவலாய்க் காத்துக்கொண்டு இருக்கிறார். அவரை மேலும் காக்க வைப்பதில் நியாயமில்லை. ஆகவே இந்தக்கதையை தொடருகிறேன். விக்கிரமாதித்தன் கதை என்ன ஆயிற்று என்று உங்களில் சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதையும் அவ்வப்போது நடுநடுவில் எழுதுகிறேன். ஒரு மாற்றம் இருந்தால்தானே சுவை இருக்கும்.
ஒரு சுபயோக சுபதினத்தில், அதாவது 1956 ம் வருடம் சுதந்திர தினத்தன்று வேலைக்குச் சேருவதற்காகப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு சென்றேன். என் அத்தை-மாமா, கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருக்கிறார் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் கோவையில் ட்ரிப் எடுக்கும் நேரத்தை முதலிலேயே கேட்டு வைத்திருந்தேன். சரியாக அரை மணி நேரம் முன்பாக பஸ் ஸ்டேண்ட் சென்றுவிட்டேன். மாமா பஸ் நின்றுகொண்டிருந்தது. ஒரு ஆளைப்பிடித்து பெட்டியை முன் சீட்டுக்குப்பக்கத்தில் வைத்தேன். சாதாரணமாக அவ்வளவு பெரிய பெட்டியை பஸ் டாப்பில்தான் ஏற்றவேண்டும். ஆனால் நான் டிரைவரின் மருமானல்லவா, அதனால் இந்த சலுகை. மாமா காபி குடித்துவிட்டு வந்தார். டைம் ஆனவுடன் பஸ் புறப்பட்டது.

சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து பொள்ளாச்சி போய் சேர்ந்தோம். அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஏறி ஆனைமலை போகவேண்டும். நான் இதற்கு முன் ஆனைமலை போனதில்லை. மாமா ஆனைலை போகும் பஸ்ஸின் டிரைவரைப் பிடித்து விவரம் சொல்லி என்னை அவர் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். என்ன விவரம் என்றால், பையன் ஆனைமலையில் வேலைக்கு சேரப்போகிறான். அவன் ஊருக்குப்புதிது. அங்கு யாரையாவது பிடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு ஏற்பாடு பண்ணுங்கள், என்கிற விவரம்தான்.
ஆனைமலை பஸ் புறப்பட்டது. போகும் வழியில் பெரும் மழை. எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. எப்படியோ ஆனைமலை வந்து சேர்ந்தோம். மழை விட்டுவிட்டது. பஸ் டிரைவர் ஒரு ஆளைக்கூப்பிட்டு என்னைக்காண்பித்து இவரை அந்த ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போய்க் காண்பி என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். அன்று சுதந்திர நாளானதால் ஆபீஸ் லீவு. இருந்தாலும் ஆபீசர் வீடும் ஆபீசும் ஒன்றாக இருந்ததால் அவரைப்பார்த்தேன். அவர், சரி, நாளைக்கு டூட்டியில் சேர்ந்து கொள்ளலாம், இன்று நீ தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனி என்று சொல்லி ஒரு பியூனைக் கூட அனுப்பினார். அந்த ஊரில் ஒரு விவசாய டெமான்ஸ்ரேட்டர் உண்டு. அவர் ஒரு வீட்டின் முன்புற அறையில் தங்கி இருந்தார். அந்த வீட்டிலேயே இன்னொரு அறையும் இருந்தது. பியூன் அதை எனக்குப்பேசி என்னைக்குடி வைத்தான்.

மறுநாள் பிற்பகலில் வேலையில் சேர்ந்தேன். என்னுடன் படித்த இன்னொருவனுக்கும் அதே ஆபீஸில் வேலைக்குச்சேர உத்திரவு வந்திருந்த து. அவனும் நானும் ஒன்றாகத்தான் வேலைக்கு சேர்ந்தோம். ஆபீசர் எங்களுக்கு வேலைகளைப்பற்றி சொல்லிவிட்டு, பண்ணையைச்சுற்றிக்காட்ட கூட்டிக்கொண்டு போனார். சொல்ல மறந்துவிட்டேன், என்னிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அதையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தேன். பண்ணை ஒரு கி.மீ. தூரத்தில் இருந்தது. மூன்று பேரும் சைக்கிளில் போனோம். பண்ணையை சுற்றிப்பார்த்தோம். செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி பொதுவாக சொன்னார்.

காலேஜில் படித்ததிற்கும் பண்ணை வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆட்களை வேலை வங்குவது, பண்ணை வேலைகளை மேற்பார்வையிடுவது, பயிர் பரிசோதனை விவரங்கள் சேகரித்தல், ரிக்கார்டுகள் பராமரித்தல், ஸ்டாக் கணக்குகள் பராமரித்தல், ஆபீஸ் கடிதங்கள், ஆபீஸ் கணக்கு வழக்குகள் என்று பல வேலைகளில் மூழ்கிப்போய், நாள் கிழமை கூட மறந்து போய் விட்டன. இந்த நடைமுறைகளை எல்லாம் பொறுமையாக கத்துக்கொடுக்கவும் யாரும் இல்லை. ஆபீசர் இதைச்செய்யவேண்டும் என்றுதான் சொல்வாரேயொழிய, எப்படிச்செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மாட்டார். அந்த வேலையை செய்து முடிக்காவிட்டால் டோஸ் விடுவார். அவ்வளவுதான்.
இப்படியாக வேலையிலேயே முழுகிப்போய் இருந்தபோது ஒன்றாம் தேதி வந்தது. சம்பள பட்டியல் போட்டு டிரெஷரிக்கு அனுப்பி பாஸ்பண்ணி, டோகன் வாங்கி, பிறகு அங்கிருந்து ஸ்டேட் பாங்க் போய் பணம் வாங்கவேண்டும். எனக்கும் சம்பளம் போட்டார்கள். என்னவோ பெரிய ஆபீஸ், பத்து பேர் அக்கவுண்ட்ஸ் பார்க்கிறர்கள் என்று கற்பனை செய்யாதீர்கள். ஒரே ஒரு கிளார்க் கம் டைப்பிஸ்ட் மட்டும்தான். நாங்கள் இரண்டு பேர் டெக்னிகல் ஸ்டாஃப். நாங்களும் கிளார்க்கும் சேர்ந்து சம்பள பட்டியல் தயார் செய்தோம்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு சம்பளம் நூறு ரூபாய், பஞ்சப்படி இருபத்தி நான்கு ரூபாய், ஆக மொத்தம் நூற்றி இருபத்திநான்கு ரூபாய். முதல் மாதம் இதில் 15 / 31 பங்கு அதாவது 60 ரூபாய் சம்பளம். ஆஹா, நானும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் வேலையோ நெட்டி முறிக்கின்றது.
இந்த நிலமையில் என்கூட சேர்ந்த என் வகுப்புத்தோழனுக்கும் ஆபீசருக்கும் ஒத்து வரவில்லை. அவனுக்கு ஒருநாள் திடீர் தந்தி. “பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உடனே வரவும்.” இந்த தந்தியைக் காண்பித்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு போய்விட்டான். போனவன் போனவனே. லீவை ஒரு மாத த்திற்கு நீட்டித்துவிட்டான். எல்லா வேலையையும் நானே பார்க்க வேண்டியதாயிற்று. இதன் இடையில் என் ஆபீசரும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று 15 நாள் லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார்.
அவ்வளவுதான். கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலத்தான். எப்படி சமாளித்தேன், என்ன ஆயிற்று ?
அடுத்த பதிவில் பார்ப்போம்….

வியாழன், 8 ஏப்ரல், 2010

யாருடைய சபதம் நிறைவேறிற்று?

 
தாசியும் கிளியும் தனித்தனியாக சபதம் போட்டதை போன பதிவில் பார்த்தோம். இப்போது யாருடைய சபதம் நிறைவேறியது என்று பார்ப்போம்.

தாசி அபரஞ்சியிடம் மாமூலாகப் போய் வருபவர்கள் ஏழு பேர்களுண்டு. அவர்கள், அந்த ஊர் ராஜா, முக்கிய மந்திரி, சேனாதிபதி, ஒற்றர் படைத்தலைவன், கோவில் தர்மகர்த்தா, மாணிக்கஞ்செட்டியார் ஆகியோர். இவர்கள் வாரத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொருத்தராக முறை வைத்துக்கொண்டு, வாரந்தோறும் அவள் வீட்டுக்கு, இரவு மூன்றாம் ஜாமத்தில் போயிருந்து, விடிவதற்கு ஒரு ஜாமம் முன்பாகவே தங்கள் வீட்டுக்குத்திரும்பி விடுவார்கள். தாசியின் வழக்கு நடந்த அன்று மாணிக்கஞ்செட்டியாரின் முறை. தாசி வழக்கு முடிந்து வீட்டுக்குப்போனதும் வேலைக்காரிகளைக் கூப்பிட்டு, இன்று பொழுது சாய்ந்ததும் வாசற்கதவைச் சாத்தி தாள்போட்டு பந்தனம் பண்ணிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு படுக்கப்போய் விட்டாள்.

அன்று இரவு வழக்கம்போல் மாணிக்கஞ்செட்டியார் தாசி வளவுக்குப்போக, என்றுமில்லாதபடி வாசற்கதவு பந்தனம் பண்ணியிருந்தது. செட்டியார் கதவைத்தட்ட, யாரது என்ற குரல் கேட்டது. செட்டியார், நான்தான் மாணிக்கஞ்செட்டியார் என்று சொல்ல, தாசி கதவுக்குப்பின்னால் இருந்துகொண்டு, நீர் உமது கடையில் இருக்கும் கிளியைக்கொண்டுவந்து கொடுத்தால் கதவு திறக்கப்படும், இல்லையேல், நீர் அப்படியே உமது வீட்டுக்குப் போய்க் கொள்ளலாம் என்று சொன்னாள். செட்டியாருக்கு மோகம் தலைக்கேறி- யிருந்தபடியால், யாதொன்றும் ஆலோசிக்காமல் நேரே கடைக்குப்போய் கடையைத் திறந்து கிளிக்கூண்டை எடுத்துக்கொண்டு தாசி வீட்டுக்கு நடக்கலானான்.

செட்டியார் அர்த்தராத்திரியில் கடையைத்திறந்து கூண்டை எடுத்துப்போவதைக்கண்ட கிளி யோசனை செய்தது. ஆஹா, இன்று இந்தச்செட்டி தாசி வீட்டுக்குப்போயிருக்காற்போல் தெரிகிறது. தாசியானவள் நம்மை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் இந்தச்செட்டி இந்நேரத்தில் நம்மை எடுத்துக்கொண்டு போகிறான். இப்போது இவனுக்கு மோகம் தலைக்கேறி இருப்பதால் நாம் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான், விதிப்படி நடக்கட்டும் என்று ஒன்றும் பேசாமலிருந்தது.

செட்டியார் தாசி வீட்டுக்குப் போய் கதவைத்தட்டினவுடன் தாசி கிளி கொண்டுவந்தீரோ என்றாள். இவன் ஆம் என்று சொல்ல, தாசியானவள் உடனே கதவைத்திறந்து கிளிக்கூண்டை வாங்கி தாதியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்லிவிட்டு, செட்டிக்கு கைலாகு கொடுத்து அழைத்துப்போய், கைகால் கழுவ நீர் மொண்டு ஊற்றி, பின்பு அம்சதூளிகா மஞ்சத்திற்கு கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து, குடிப்பதற்கு ஏலம், பனங்கற்கண்டு, குங்குமப்பூ போட்டுக்காய்ச்சிய பால் கொடுத்து, வெற்றிலை, பாக்கு மடித்து, அத்துடன் வாசனைத் திரவியங்களும் சேர்த்து வாயில் ஊட்டி, விடியும்வரை சரச சல்லாபமாக இருந்தாள்.

விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும்போது செட்டி எழுந்திருந்து அவன் வீட்டிற்குப்போனான். தாசியும் எழுந்திருந்து போய் கிளியைப்பார்த்தாள். “ஏ கிளியே, உன்னுடைய நிலையைப் பார்த்தாயா? இன்று மதியம் நீ என்னுடைய வயிற்றுக்குள் போகப்போகிறாய், அதற்குள் எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினாய் என்று பலவிதமாக ஏசினாள். கிளி இவளுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? என்று வாளாவிருந்தது. பிறகு தாசியானவள் வழக்கமான காலைக்கடன்களை முடித்து, குளித்து, ஆடை அலங்காரங்கள் செய்து கோவிலுக்குப் புறப்பட ஆயத்தமானாள். போகுமுன் வீட்டு வெள்ளாட்டியைக் கூப்பிட்டு இதோ பார், இன்று மதியத்திற்கு இந்தக்கிளியைக்கொன்று தலையை ரசமாகவும், உடலைக்கறியாகவும் சமைத்து வை, ஜாக்கிரதையாக செய், என்று திட்டப்படுத்திவிட்டு கோவிலுக்குப் போனாள். தாசி அன்றாடம் அந்த ஊர் பெருமாள் கோவிலுக்குப் போகும் வழக்கமுண்டு.

தாசி கோவிலுக்குப் போனவுடன் வெள்ளாட்டி கிளியைச் சமைக்கத் தேவையான மசாலெல்லாம் அரைத்து வைத்துவிட்டு, கூண்டைத் திறந்து கிளியைப்பிடிக்கப்போனாள். கிளி இந்த சமயத்தை விட்டால் தமக்கு வேறு சமயம் கிடைக்காது என்று யோசித்து வெள்ளாட்டி தன்னைப்பிடிக்க வரும்போது படபடவென்று இறகுகளைப்பலமாக அடித்து, மூக்காலும், கால் நகங்களாலும் கை, முகம் ஆகியவைகளில் பிராண்ட, வெள்ளாட்டி பயந்துபோய் கிளியைப்பிடித்த பிடியை விட்டுவிட்டாள். உடனே கிளி பறந்து போய் வெளியில் சென்று பெருமாள் கோவிலில் வாழும் பல கிளிகளுடனே ஒன்றாய்ச் சேர்ந்துவிட்டது. வெள்ளாட்டி பதறிப்போனாள். அய்யோ. எஜமானிக்குத் தெரிந்தால் நம் உயிர் உடலில் தங்காதே, என்ன செயவேன் என்று கொஞ்ச நேரம் பிரலாபித்துவிட்டு, மனம் தேறி, உடனே கடைத்தெருவுக்கு ஓடிப்போய் இரண்டு காசு கொடுத்து ஒரு கவுதாரியை வாங்கி வந்து, கொன்று, தலையை ரசமாகவும், உடலைக் கறியாகவும் சமைத்து வைத்துவிட்டு, அந்தக் கவுதாரியின் சமைக்காத பாகங்களனைத்தையும் கண்காணாத இடத்தில் புதைத்து விட்டு, வீட்டுக்கு வந்து எப்போதும் போல இருந்தாள்.

தாசி கோயில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடன் வெள்ளாட்டியைக்கூப்பிட்டு, கிளியை சமைத்தாயிற்றா? என்று விசாரித்தாள். வெள்ளாட்டி ஆம் என்று சொல்ல அப்படியானால் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லி, கைகால் முகம் கழுவி, சாப்பிட உட்கார்ந்தாள். வெள்ளாட்டி, உடனே தலைவாழை இலை போட்டு சோறு வைத்து, பண்ணின கறியையும் இலையில் வைத்து, ரசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பக்கத்தில் வைத்தாள்.

தாசியானவள், ரசத்தை சோற்றில் ஊற்றிப்பிசைந்து, ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, கறியில் ஒரு துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் தலையை மொட்டை அடிப்பேனென்றாய் என்று சொல்லி அந்தக்கறியை ஒரு கடி கடிப்பாள். அதை சோற்றுடன் விழுங்கிவிட்டு, பின்னும் ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, ஒரு கறியைக்கையில் எடுத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துகிறேனென்றாய் என்று சொல்லி அந்தக்கறியைக்கடித்து, அந்த வாய்சோற்றை முழுங்குவாள். இப்படியாக அந்தச்சோறு, கறி, ரசம் முழுவதையும் சாப்பிட்டு முடித்து கை கழுவி, தாம்பூலம் போட்டுவிட்டு திருப்தியாக, தன் சபதம் நிறைவேறியது என்ற எண்ணத்துடன் படுத்து தூங்கினாள்.

கோயிலில் கிளிக்கூட்டத்துடன் இருந்த விக்கிரமாதித்தன் இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான. இப்படி இருக்கையில் தாசி அபரஞ்சிக்கு நெடுநாளாய் ஒரு அபிலாக்ஷை உண்டு. அது என்னவென்றால், தான் எப்படியாவது கூண்டோடே வைகுந்தம் போகவேண்டும் என்கிற ஆசைதான். இதற்காகத்தான் அவள் அனுதினமும் பெருமாள் கோயில் சென்று வேண்டிக்கொள்வது. இதைப்பார்த்த விக்கிரமாதித்தன் ஒரு நாள் கோவிலுக்குள் சென்று பெருமாள் சிலைக்குப்பின்னால் மறைந்து கொண்டான். அன்று கோவிலில் யாரும் இல்லை. தாசி வந்து பெருமாளைக் கும்பிட்டுவிட்டு தன் வேண்டுதலைச்சொன்னாள். “பெருமாளே, நான் எத்தனை நாளாக கூண்டோடு வைகுந்தம் போகவேண்டுமென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன், இதற்காக எத்தனை தானதருமம் செய்திருக்கிறேன், நீ மனமிரங்க மாட்டாயா என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள். அப்போது பெருமாள் சிலைக்குப்பின்னால் இருந்த விக்கிரமாதித்தன், பெருமாள் பேசுவதுபோல் பேசினான்.



“அகோ வாரும் அபரஞ்சியே, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்என்றது. அபரஞ்சி மெய் சிலிர்த்து, வாய் குழறி, “நாராயணா, கோவிந்தா, மதுசூதனா, உன் திருவடியை அடைவதைத்தவிர வேறென்ன வேண்டும், என்னை இந்தக்கூண்டோடே உன் வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள், அதைத்தவிர வேறொன்றும் வேண்டேன் என்று பெருமாளைப் பலவாறாகத் துதித்து நின்றாள். அப்போது கிளியாகிய விக்கிரமாதித்தன் கூறலுற்றான். “ஆஹா, உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். இன்று முதல் உன் சொத்துக்களை முழுவதும் தானதருமம் செய்துவிட்டு, இன்றைக்கு எட்டாம் நாள் உச்சிப்பொழுதில் நீ உன் தலைமுடியை முழுதுமாக நீக்கிவிட்டு, முகம் முழுவதும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இங்கு வரவேண்டும். அது ஏனென்றால் நீ இந்த ரூபத்திலேயே தேவலோகம் வந்தாயென்றால் உன்னைப்பார்க்கும் தேவர்களெல்லாம் உன் அழகில் மயங்கி உன் பின்னாலேயே வர ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான். நீ தேவலோகம் வந்து அங்குள்ள ஆகாய கங்கையில் மூழ்கி எழுந்தாயானால் உன் கேசம் இன்னும் பன்மடங்காக வளர்ந்து, உன் தேக காந்தியும் இன்னும் அதிகமாக ஜொலிக்கும்.

பிறகு இங்கு நீ இந்தக்கோலத்தில் வந்த பிறகு, ஒரு கழுதை மேல் ஏறி இந்தக்கோவிலை நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை வலம் வந்து கொடிமரத்தின் கீழ் நிற்பாயாகில் நாம் உனக்கு தேவலோகத்திலிருந்து புஷ்பகவிமானம் அனுப்பிவைக்கிறோம். நீ அதில் ஏறி நம் லோகத்திற்கு வந்து சேர்வாயாக என்று சொல்லி முடித்தது.

தாசியும் நம் நெடுநாள் வேண்டுதலுக்கு பெருமாள் இன்றுதான் செவி சாய்த்தார் என்று சந்தோஷப்பட்டு, நேராக அரச சபைக்கு சென்று, ராஜாவிடம் கோவிலில் நடந்த விசேஷங்களையெல்லாம் சொல்லி, “இன்றைக்கு எட்டாம் நாள் பெருமாள் என்னைக்கூண்டோடே வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள்வதாக அருள் புரிந்திருக்கிறார். ராஜா அவர்கள் 56 தேசத்து அரசர்களுக்கும் ஓலை அனுப்பி இந்த வைபவத்தைக்காண வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டும் என்று சொன்னாள். ராஜாவும் சரியென்று ஒத்துக்கொண்டு எல்லா தேசத்திற்கும் ஓலை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

பிறகு தாசியானவள் வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்திலுள்ளோருக்கு சேதி சொல்லிவிட்டு, மறுநாளிலிருந்து தன் சொத்துக்களையெல்லாம் தானதருமம் பண்ண ஆரம்பித்தாள். ஏழு நாட்கள்களில் இவ்வாறு தன் சொத்துக்களைப்பூராவும் தானம் செய்து முடித்துவிட்டாள். இந்த ஏழு நாட்களுக்குள் அபரஞ்சி கூண்டோடு வைகுந்தம் போகப்போகிறாள் என்கிற செய்தி எல்லா ஊர்களுக்கும் காட்டுத்தீ போல பரவி ஜனங்கள் கூட்டம்கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். ராஜா அனுப்பிய ஓலையும் எல்லா தேசங்களுக்கும் போக, சகல தேசத்து ராஜாக்களும் இந்த அதிசயத்தைப்பார்க்க கூடிவிட்டார்கள். உச்சினிமாகாளிபுரத்திற்கும் இந்த ஓலை போய்ச்சேர்ந்தது. அதைப்பார்த்த பட்டி, இதென்ன நாம் இதுவரை கேளாத அதிசயமாக இருக்கிறது, யாரும் கூண்டாடே வைகுந்தம் போவது கிடையாதே, இதில் நம் ராஜாவின் லீலை ஏதாகிலும் இருந்தாலும் இருக்கலாம் என்று அவனும் இந்த அதிசயத்தைப்பார்க்க வந்து சேர்ந்தான்.



எட்டாம் நாள் பொழுது விடிந்தது. அபரஞ்சி எழுந்திருந்து நாவிதனை வரச்சொல்லி தன் தலைமுடியை நீக்கினாள். வண்ணானிடம் சொல்லி அவன் கழுதையைக் குளிப்பாட்டி பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரச்சொல்லி ஏற்பாடு செய்தாள். பிறகு முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு, கோவிலுக்கு வேலைக்காரிகள் துணைக்கு வர, வந்து சேர்ந்தாள். கோவிலில் எள் போட்டால் எள் கீழே விழமுடியாத அளவிற்கு கூட்டம் ஜேஜேவென்று அலை மோதியது. பட்டியும் வந்து ஒரு ஓரமாக நின்றிருந்தான். வண்ணான் கழுதையைத் தயாராக வைத்திருந்தான். தாசியும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று வணங்கி விடை பெற்றுக்கொண்டு, கழுதை மேல் ஏறி, நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து, கொடிமரத்தினடியில் வந்து நின்றாள். அப்போது சரியாக உச்சிப்பொழுதாகியது.



எல்லோரும் புஷ்பக விமானம் வருவதை எதிர்பார்த்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். (நியாயமாக இங்கு தொடரும் போடவேண்டும். ஆனால் எல்லோருடைய வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து தொடருகிறேன்). அப்போது விக்கிரமாதித்தனாகிய கிளி கொடிமரத்தின் மீது வந்து உட்கார்ந்து பின்வருமாறு சொல்லத்தொடங்கியது.

“அகோ வாரும் சகல தேசத்து ராஜாக்களே, பொதுஜனங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். இதோ நிற்கிறாளே இந்த தாசிக்கும் எனக்கும், ஒரு விவகாரம் ஏற்பட்டது. அது என்னவென்றால், இவள் கொண்டுவந்த ஒரு வழக்கில் நான் ஆகாயத்திற்கும் பூமாதேவிக்கும் பொதுவாக ஒரு தீர்ப்பு சொன்னேன். அதை இவள் ஒப்புக்கொள்ளாமல் என்னைக்கொன்று கறி சமைத்து தின்கிறேனென்று சபதஞ்செய்தாள். அதற்கு நான் இவளை இந்தக்கோலம் செய்கிறேனென்று சபதம் செய்தேன். யாருடைய சபதம் ஜெயித்தது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியது. கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கைகொட்டி சிரித்தார்கள். இதைப்பார்த்த தாசிக்கு அவமானம் தாங்கமாட்டாமல் அங்கேயே கீழேவிழுந்து பிராணணை விட்டாள். கிளியும் பட்டியின் தோள்மீது சென்று உட்கார்ந்து கொண்டது. பட்டியும் ஓகோ, இது நம் ராஜனின் லீலைதான் என்று புரிந்துகொண்டு, ராஜனைக்கூட்டிக்கொண்டு தன் ஊருக்குப்போனான்.

ஊருக்குப்போனபின் விக்கிரமாதித்தன் தன் உடம்பிற்குள் எவ்வாறு பிரவேசம் செய்தான் என்பது ஒரு தனிக்கதை.

முற்றும்.