சனி, 5 பிப்ரவரி, 2011

வெற்றிச் சிந்தனைகள்


(ஒரு கல்யாண அழைப்பிதழில் அச்சடித்திருந்தது.)

  1. தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும்.   
  2. துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.
  3. புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும். வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும். பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.
  4. விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.
  5. நோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்.
  6. இளமையில் கல்வி கற்காமலும், பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில் கஷ்டப்பட நேரிடும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.
  7. உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.
  8. உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.
  9. யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம். நம் வருவாயில் வாழ்வது கௌரவம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவது கௌரவம்.
  10. ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
  11. பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது.
  12. ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன், தயவுதான் நண்பன், அடக்கம்தான் மனைவி, பொறுமைதான் மகன். இவர்களே உறவினர்கள்.
  13. வீரனைப் போரிலும், நண்பனைக் கஷ்ட காலத்திலும், மனைவியை வறுமையிலும், யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.
  14. பெருந்துன்பமும், பெருங்கவலையும் உற்ற காலத்திலும் ஒரு பெண் தன் ஆலோசனையால் கணவனின் உயிர் காப்பாள்.

 

திங்கள், 31 ஜனவரி, 2011

குட்டையர்கள்

மனுசங்க, நீங்க மட்டும்தான் குட்டையா இருப்பீங்களா? நாங்களும் குட்டையாவோம்ல.

எல்லா மரங்களும் ஒரு அடிக்கு குறைவானவைதான். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்திய மலர் கண்காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள்.
















வெள்ளி, 28 ஜனவரி, 2011

சமுதாய மாற்றம் – ஏன், எப்படி?



பதிவர்கள் சிலர் நாம் பதிவு எழுதி என்ன சாதித்தோம்? வெட்டியாக பொழுது போக்குக்காக எழுதுவதுதான் நமது நோக்கமா? சமுதாயப் பொறுப்பு வேண்டாமா? என்று பல சமயங்களில் கேட்கிறார்கள். எனக்கும் அவ்வப்போது இந்த எண்ணங்கள் வருகின்றன. நிஜ உலகில் தனி நபர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் பதிவுலகிலும் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் சாத்தியமானது. இதற்கு மேல் ஏதாவது செய்ய முடியுமா என்று என் சிறிய மூளையை உபயோகித்து சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன்.

முதலில் சமுதாய மாற்றம் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். நிச்சயமாக அரசும் அரசாங்கக் கொள்கைகளும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன. அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்படுத்துகின்றன. அவைகளை பயன்படுத்தி தனி நபர்கள் பல்வேறு தொழில்களோ வியாபாரமோ செய்து முன்னேறுகிறார்கள். ஆனால் எல்லோராலும் இவ்வாறு முன்னேற முடிவதில்லை. இதற்குண்டான காரண காரியங்களைப் பின்பு ஆராய்வோம்

இவ்வாறு முன்னேறியவர்கள் தங்கள் முன்னேற்றத்தை நிரந்தரமாகத்  தக்கவைத்துக் கொள்ள தங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். இது மனித இயற்கை. அப்போது அவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்காத அரசாங்கம் இருந்தால் அவர்களுக்கு நல்லதுதானே. ஆகவே அவர்கள் (பணக்காரர்கள் என்று ஒரு அடையாளச்சொல் வைத்துக் கொள்வோமே) அந்த மாதிரி அரசாங்கம் தொடர்ந்து இருக்க தங்களால் முடிந்த உதவி செய்வார்கள். என்ன உதவிபண உதவிதான். இன்றைய கால கட்டத்தில் பணம்தான் கண்கண்ட தெய்வம். அதனால் செய்ய முடியாதது உலகில் எதுவுமில்லை என்றாகிவிட்டது.

இவ்வாறு பணக்காரர்களின் (பண) உதவியால் அமைக்கப்பட்ட அரசு என்ன செய்யும்? பணக்காரர்களுக்கு வேண்டிய சலுகைகளை ஏற்படுத்தும். அப்படி உதவி பெற்ற பணக்காரர்கள் அரசுக்கு மீண்டும் உதவி செய்வார்கள். இப்படி தொடர்ந்து ஒரு வட்டம் அதாவது = உதவி-சலுகை-உதவி = இந்த வட்டம் இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது

சில சொற்களை உணர்ந்தே தவிர்த்து இருக்கிறேன். இப்பொழுதே கொஞ்சம் ரத்தவாடை அடிக்கிறது. இந்த வாடைக்கு சிங்கம், புலிகள் வரக்கூடும். ஆகவே இந்த சமுதாய விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உட்கொள்ள வேண்டும். மீதி நேயர் விருப்பம்போல்.